அணிகலன்கள்
அணிகலன்கள்
பெண்களின் ஆடை
பண்டைத் தமிழகத்துப் பெண்கள் ஆடைகளினால் முழுவதும் மறைக்கப்படாத தம் உடலை அணிகலன் கொண்டு மறைத்தனர்.
மகளிர் பல்வேறு அணிகலன்களினால் தம்மை ஒப்பனை செய்து கொண்டனர்.
பொன்
யவனர் ஏற்றி வந்து இறக்கிய பொன், மன்னர்கள் பகைவரிடமிருந்து கவர்ந்து கொணர்ந்த பொன், நாட்டில் மண்ணைத் தோண்டியும் அரித்தும் எடுத்த பொன் என தமிழகத்தில் எங்கும் பொன் மலிந்து கிடந்துள்ளன.
முத்தும்,பவளமும் இதரமணி வகைகளும் இழைத்துப் பலவகையான அணிகலன்கள் செய்யப்பட்டன.
இவ்வணிகளைக் கைதேர்ந்த கம்மியர்கள் செய்தனர்.
சிலப்பதிகாரத்தில் அணிகலன்கள்
கால்விரல் மோதிரம், பரியகம் நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, அரையில் அணியும் முத்துவடம், 32 வட்டத்தாலான முத்து மேகலை,மாணிக்கமும், முத்தும் இழைத்த தோள் வளையல்கள், மாணிக்கமும் வைரமும் பதிக்கப்பட்ட சூடகம், செம்பொன் வளை, நவமணி வளை, சங்கு வளை, பவழ வளை, வாளைமீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட மாணிக்க மோதிரம், ஆகியன பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
பிற அணிகலன்கள்
மோசை எனப்படும் மரகதகடைச் செறி. கழுத்தில் அணியும் வீரச்சங்கிலி, நேர்ச் சங்கிலி, பெண்ஞாண், அரிநெல்லிக்காய் மணிமேகலை, முகப்பில் கட்டின இந்திரநீலத் திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணி, சீதேவியார், வலம்புரிச் சங்கு, பூரணப்பாளை, தென்பல்லி, வடபல்லி ஆகிய அணிகளையும் பெண்கள் அணிவதுண்டு.
இடை அணி வகை
பெண்கள் இடையில் அணிந்த பட்டிக்கையான மேகலையானது, காஞ்சி, கபாலம், பருமம், விரிசிகை என வகைப்படுத்தப்பட்டிருந்தது.
குதம்பை
பெண்கள் தம் காதுகளைத் தொங்கத் தொங்க வளர்க்கும்போது அணிந்து கொள்ளும் காதணிக்குக் குதம்பை என்று பெயர்.
கடிப்பினை
வளைந்த காதில் அணியும் காதணிக்குக் கடிப்பினை என்று பெயர்.
வளையலில் வேலைபாடுகள்
கை வளையல்களில் பலவகையான பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவகை முத்தால் இழைக்கப்பட்டன.
கால் விரல் மோதிரம்
பெண்கள் கால் விரல்களில் மோதிரம் அணியும் வழக்கம் பண்டைய காலந்தொட்டே இருந்துள்ளது.
குழந்தைகளுக்கான அணிகலன்கள்
குழந்தைகளுக்கான அணிகலன்கள் பல காணப்பட்டன.
நெற்றிச் சுட்டி பிறை, மூவடம் கொண்ட பொன் சங்கிலி, கழுத்தில் ஐம்படைத் தாலி புலிப்பல் தாலி, விரல்களில் சுறாமீனைப் போன்றும் காளைமாடு போன்றும் இலச்சினை பொருத்தப்பட்ட மோதிரங்கள், மணிகள் உள்ளிடப் பட்ட சதங்கை, பொன் இரட்டை சரிகள் கால்களிலும் மணியும் பவளமும் கோத்த அரைஞாண், இடையிலும் சதங்கைகளின் பூட்டுவாய்கள் தேரையின் வாய்போலும் அமைக்கப்பட்டன.
பரல்கள்
பெண்கள் அணிந்த சிலம்புகளுக்குள் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவதுண்டு.
குழையும் கோழியும்
நெல்லைத் தின்ன வரும் கோழிகளின் மேல் பெண்கள் தம் குழைகளைக் கழற்றி கழற்றி எறிந்து விரட்டினர்.
ஆண்களின் ஆபரணங்கள்
ஆண்கள் மதாணி, முத்து மாலை, வெள்ளிக் கம்பியில் கோர்த்த பொற்றாமரை மலர்கள், கை வளைகள் ஆகிய அணிகலன்களை அணிந்திருந்தனர்.
கொடுமணம்
தமிழ்நாட்டில் செய்யப்பட்ட அணிகலன்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக கொடுமணம் என்ற ஊரில் செய்யப்பட்ட பொன்னணிகள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
தலையலங்காரம்
தலைக்கோலம் என்னும் தலை அலங்காரம் செய்துகொள்வதில் பண்டைய தமிழகப் பெண்கள் ஆர்வம் கொண்டிருந்தனர் .
கூந்தலின் வகைகள்
கருத்த நீண்ட கூந்தல் வளர்ப்பதை விரும்பினர்.
கொண்டை, குழல், பணிச்சை,சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்துகொண்டனர்.
இது அவர்களது பருவத்திற்கேற்ப அமைவதுண்டு.
பூக்கள் -தலையணைகள்
தலையில் பலவகையான மலர்களைச் சூடிக்கொள்வர். இதற்குச் சுமார் 100 வகையான பூக்கள் பயன்பட்டு உள்ளன.
மகரவாய், வகிர், போன்ற தலையணிகளையும் அணிவதுண்டு. மாணிக்க மணிகளுடன் மலர்களையும் வெண்ணூலில் கோர்த்து அணிந்துள்ளனர்.
கூந்தல் பாதுகாப்பு
மகளிர் தம் கூந்தலுக்கு அகிர் புகையூட்டுவர்.
கூந்தலைக் கை விரல்களால் கோதி உலர்த்துவர்.
அதனை இரு தொகுதியாகப் பகிர்ந்து பின்னிவிடுவர்.
அக் காலத்தில் களிமண்ணைத் தோய்த்து, தலைகுளித்தனர்.
கண்ணுக்கு மை தீட்டிக்கொள்வர்.
நறுமணப்பாக்கு வெற்றிலை போட்டுக் கொள்வர்.
ஆண்கள் சிகை அலங்காரம்
ஆடவர் தம்தலை முடியை நீண்டு வளர்த்திருந்தனர்.
அதைச் சுருட்டி பின்புறம் முடித்துக் கொள்வர்.
நெற்றிக்கு மேல் சிறிய குடுமி போட்டிருப்பர்.
ஆண்மக்களும் தலையில் பூச்சூடிக் கொள்வதுண்டு.
கண்ணி
தலையில் சூடும் பூமாலைக்குக் கண்ணி என்றுபெயர்.
ஆண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்வதும் உண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக