கீழடி அகழாய்வில் புலப்படுகின்ற செய்திகள்
கீழடி அகழாய்வில் புலப்படுகின்ற செய்திகள்
1. தமிழக வரலாற்றில் வரையறுக்கப்பட்ட கருதுகோளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
2. சங்க காலத்தின் கால வரையறையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
3. கீழடியில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றது.
4. கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை உணர்த்துகின்றது.
5. சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதை காட்டுகின்றது.
6. வேளாண்மைத் துணைத் தொழிற்கூடங்கள், பானைத் தொழிற்கூடங்கள், ஆடைகள் தயாரிக்கும் நெசவுக்கூடங்கள் ஆகியவை இருந்துள்ளமையை அடையாளம் காட்டுகின்றது.
7. செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு 97 சதவீதம் சுண்ணாம்புச் சாந்தினைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகின்றது.
8. தொழிற்கூடங்களுக்கு அருகில் குடிநீர்ப் பயன்பாட்டிற்கு உறை கிணறுகள் அமைத்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது.
9. எளிய மக்கள் தங்களுக்குரிய பானைகளில் தங்களின் பெயர்களைத் தாங்களே தமிழி எழுத்துகளில் பொறித்துக் கொண்டனர் என்பதற்கு 1001 பானை ஓடுகள் சான்றுரைக்கின்றன. இதன் மூலமாக இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எழுத்து முறையை அறிந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.
10. கீழடி மக்கள் தங்கம், செம்பு, தந்தம், பளிங்கு கல், கண்ணாடி, பவளம் போன்றவற்றை அணிகலன்களாக அணிந்துள்ளனர். இது அவர்களின் பொருளாதார தன்னிறைவைக் காட்டுகின்றது.
11. கீழடியில் கிடைத்துள்ள பானைகள், மணிகள் போன்ற தொல்பொருட்கள் யாவும், தமிழக மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உரோம நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. இச்சான்றுகள் சங்க காலப் பண்பாட்டு வரலாற்று ஆய்வில் முக்கிய திருப்புமுனையாகும்.
12. திமில் உள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களின் எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. இவை வேளாண்மைக்குப் பயன்பட்டிருக்கலாம் என்றும், உணவிற்காகக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கருத முடிகின்றது.
13. இரண்டாம் கட்ட அகழாய்வில் சிறிய அளவிலான 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுவரில் 38 x 23 x 6 அளவு மற்றும் 38 x 26 x 6 அளவு கொண்ட இரண்டு விதமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
14. தூண்கள் மரத்தால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரும்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டதால் மரச்சட்டங்களை இரும்பு ஆணியால் பொருத்தி இருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது.
15. மேற்கூரை மீது விழும் மழைநீர் எளிதில் கீழே வரும் வகையில் கூரை ஓடுகளில் நீர் வடியும் பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த கட்டுமான அமைப்புகள் சங்ககாலத்தின் வளர்ந்த சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன.
16. நூல் நூற்கப் பயன்படும் அச்சுகள், தூரிகைகள், தரையில் தொங்கும் கருங்கற்கள், சுடுமண் பாத்திரம், செம்பு ஊசி ஆகியவை, மக்களின் நெசவுத்தொழிலின் மேன்மையை உறுதி செய்கின்றன.
17. பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் தங்கத்திலான ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், மதிப்புமிக்க மணிகள், 4000க்கும் மேற்பட்ட கல் மணிகள், சீப்பு ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.
18. பகடைக்காய், 601 வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள் ஆகியவை மக்களின் வாழ்க்கை முறையையும், பொழுதுபோக்கையும் பிரதிபலிக்கின்றன.
19. ரௌலட்டட் என்ற பானை ஓடுகள் ரோம் நாட்டைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டது. ஆனால் அவை இந்திய நாட்டுப் பானை வகையைச் சேர்ந்தவை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
20. கீழடியில் கிடைத்துள்ள மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றில் மனிதனின் கைவிரல்களே கருவியாக இருந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.
21. வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லை என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.
22. தமிழர்களின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் நோக்கில் தமிழக அரசு மதுரையில் கீழடி அருங்காட்சியகம் ஒன்று அமைத்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக