பாரதிதாசன் - முதியோர்க் காதல் -பொருள் - விளக்கம்

 

                                                        பாரதிதாசன் - முதியோர்க்காதல்

பாரதிதாசன்  (29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் புதுச்சேரியில் பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். 

இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால்,

"புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். 

இவர் குயில் என்னும்  ஒரு  திங்களிதழை நடத்தி வந்தார் .

 நூல்கள்:

இருண்ட வீடு, குடும்ப விளக்கு,அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம்,சஞ்சீவி பர்வதத்தின் சாரல் .

சாகித்ய அகாதமி விருது:

 பிசிராந்தையார் எனும் நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

குடும்ப விளக்கு: 

குடும்ப விளக்கு 5 பகுதிகளைக் கொண்டது. 
1.ஒருநாள் நிகழ்ச்சி 
2.விருந்தோம்பல்
3.திருமணம்
4.மக்கட்பேறு
5.முதியோர் காதல் எனும் பிரிவுகளைக் கொண்ட குறுங்காவியம்.

மூத்த பிள்ளை முதியவரோடு

வேடப்பன் தம்பி யான

வெற்றிவேல், மனைவி யோடு

வேடப்பன் வாழ்ந் திருந்த

வீட்டினில் வாழு கின்றான்,

வேடப்ப னோ தன் தந்தை

 வீட்டினிற் குடும்பத் தோடு

 பீடுற வாழு கின்றான்.

பெற்றவர் முதுமை பெற்றார்!

பொருள் : மணவழகர் , தங்கம் தம்பதியருக்கு  வேடப்பன்  வெற்றிவேல் என இரண்டு ஆண் பிள்ளைகள் .மூத்த பிள்ளையான  வேடப்பன்  முதியவரோடு  வாழ்ந்து வருகிறார். வேடப்பன் தம்பி யான வெற்றிவேல், அவர் மனைவி யோடு  வேடப்பன்  வாழ்ந்திருந்த வீட்டினில் வாழ்ந்து வருகிறான் . வேடப்பன்  தன் தந்தை வீட்டில்  குடும்பத்தோடும் தாய் தந்தையோடும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறான் . வேடப்பனின் பெற்றவர்கள் முதுமை அடைந்து விட்டனர் .

முதியோருக்கு மருமகள் தொண்டு

 வேடப்பன் மனைவி யான

நகைமுத்து மிகவும் அன்பாய்

வேடப்பன் தந்தை தாய்க்கு

வேண்டுவ தறிந்தே அன்னார்

வாடுதல் சிறிதும் இன்றி

 வாய்ப்புறத் தொண்டு செய்வாள்;

ஆடிய பம்ப ரங்கள்

அல்லவா அம்மூத் தோர்கள்?

பொருள் : வேடப்பனின் மனைவி பெயர் நகைமுத்து. தான் மாமியார் மாமனார் இருவருக்கும் முகம் கோணாமல் தொண்டுகள் செய்பவள் . அந்த மூத்தவர்கள் ஆடி அடங்கிய பம்பரம் போன்றவர்கள் .  

தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம்

தலைக்கடை அறைக்குள் அந்தத்

தளர்மண வழகர் ஓர்பால்

 இலக்கியம் படிப்பார்!

இன்பத் துணைவியார் கேட்டிருப்பார்!

 உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து)

அம்மையார் ஒருபால் குந்திப்

 பலஆய்வார்; துணைவர் கேட்பார்;

துயிலுவார்; பழங்கா லத்தார்.

பொருள் : தான் அறையில் ஒருபுறம் உட்கார்ந்து மணவழகர் இலக்கியம் படிப்பார். அவர் படிப்பதை அவரது மனைவியான தங்கம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருப்பார் .காய்ந்து போன பூங்கொடிபோல தங்கம் பல கதைகள் பேசுவார் அவர் கணவர் அதைக்  கேட்டு அமர்ந்திருப்பார். பின் தூங்குவார் .

 மணவழகர் உடல்நிலை

 மணவழ கர்க்கு முன்போல்

வன்மையோ தோளில் இல்லை!

துணைவிழி, ஒளியும் குன்றக்

 கண்ணாடித் துணையை வேண்டும்;

 பணையுடல், சருகு! வாயிற்

 பல்லில்லை! மயிர்வெண் பட்டே!

உணவெலாம்! பாவின் கஞ்சி;

 உலவுதல் சிறிதே ஆகும்.

பொருள் : மணவழகருக்கு முன்பு போல உடலில் வலிமை இல்லை. கண்களிலும் பார்வை மங்கி  விட்டது. எனவே கண்ணாடியின் துணையோடு வாழ்கிறார் . அவர் உடல் சருகு போல ஆகிவிட்டது. வாயில் பல்  இல்லை . தலையில் முடி நாரைத்து வெண்பட்டு போல ஆகிவிட்டது. பால் கஞ்சியே அவர் உண்ணும் உணவு . அவ்வப்போது சிறுது நேரம் உலாவுவார்.

 தங்கத்தம்மையார் உடல்நிலை

 நன்னிலாக் கதிர்போல் கூந்தல்

 நரைத்தது. கொண்டை யிட்டு

முன்னிலா முகில்உண் டாற்போல்

 முகத்தொளி குறைய லானார்!

அன்புடல் அறத்தால் தோய்ந்த

 ஆயிரம் பிறைமூ தாட்டி

மன்னுசீர் அன்னாள் மெய்யோ

 வானவில் போற்கூ னிற்றே!

பொருள் : தங்கத்து அம்மையார் கூந்தலும்  வெண்ணிலவின் கதிர் போல்  நரைத்து விட்டது. அவரது முகத்தில் ஒளி குன்றி விட்டது . அவரது உடல் இத்தனைக்  கால வாழ்வில் தேய்ந்து விட்டது. வானவில் போன்று அவளது உடல் கூன் விழுந்து விட்டது .  

முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள்

 இருபெரு முதியோர் தம்மைத்

தலைக்கடை அறைசு மந்து

பெரும்பேறு பெற்ற தன்றோ!

பிள்ளைகள், அவர்ம னைமார்

வருவார்கள்; அறங்கேட் பார்கள்.

 மற்றுள பேர்த்தி பேரர்

வருவார்கள் அளவ ளாவி

மணியோடு பள்ளி செல்வார்.

பொருள் : அவர்கள் வாழ்ந்திருக்கும் அந்த அறை அவர்களால் சிறப்பு பெற்றது . அவர்களது பிள்ளைகள் அந்த அறைக்கு வந்து போவார்கள்.  அவரிடம்  நல்ல சொற்களைக் கேட்டுச் செல்வார்கள் . பேரன் பேர்த்திகளும் வந்து நன்றாக பேசி பின்னர் பள்ளிக்குச்  செல்வார்கள் .

இரு முதியோர் நிரம்பிய உள்ளம்

மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்

 மகள்மார்க்கும் அவ்வா றேயாம்

 எம்தக்க கடன்மு டித்தோம்

இனிதாக வாழு கின்றோம்;

முந்துறச் சுற்றத் தார்க்கும்

 செய்வன முழுதும் செய்தோம்;

 இந்தநாள் வரைக்கும் வாய்மை

 இம்மியும் மறந்த தில்லை.

பொருள் : அவர்கள் இருவரும் தன்  ஆண் குழந்தைகள் பெண்குழந்தைகள் இருவருக்கும் நன்றாகக் கல்வி அறிவு ஊட்டினார்கள் . உறவினர்  உற்றாருக்கும்  சிறப்பாகச் செய்ய வேண்டியவற்றை செய்துவிட்டார்கள். அவர்கள்  எல்லா கடமைகளையும் முடித்து விட்டு வாய்மை வழி நின்று வாழ்ந்து வருகிறார்கள்.  

நாட்டுக்கு நலம் செய்தோம்

 இந்நாட்டின் நலனுக் காக

நல்லறம் இயற்றி வந்தோம்.

 எந்நாளும் பிறர்க்குத் தீமை

எங்களால் நடந்த தில்லை.

 சின்னதோர் நன்று செய்தார்

திறம்மறந் தறியோம் என்றே

இன்னிசை பாடும் அன்னார்

இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.

பொருள் : நாடு நலமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் நலமாக இருக்க வேண்டும். அதன்படி நல்ல  குடும்ப வாழவினால் நாட்டுக்கு நல்லது செய்தார்கள் . அவர்களால் ஒரு நாளும் யாருக்கும் எந்த தீங்கும் நிகழ்ந்தது இல்லை . சிறிய அளவில் உதவி செய்தவர்களுக்குக்  கூட  அவர்களை மறவாமல்  வாழ்பவர்கள் . அவர்கள்  இருவர்  இத்தகு வாழ்வினால்  இன்பம் கண்டவர்கள் .

முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில்

விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்

 என்றனை! நேற்றோ? அல்ல;

 இதற்குமுன் இளமை என்ப

தென்றைக்கோ அன்றைக் கேநான்!

கதையாகிக் கனவாய்ப் போகும்

நிகழ்ந்தவை; எனினும் அந்த

முதியோளே வாழு கின்றாள்

என்நெஞ்சில் மூன்று போதும்.

 பொருள் : என் நினைவை அவள் நெஞ்சில் இன்றோ நேற்றோ நான் விதைக்கவில்லை. இளம் வயதிலேயே நான் விதைத்து விட்டேன் . நடந்த அனைத்தும் கதையாக்கிக் கனவாய்ப் போனவை . ஆனாலும்      அவள் மட்டுமே என் நெஞ்சில்  எப்போதும் வாழுகின்றாள்.

இருக்கின்றாள் அது எனக்கின்பம்

புதுமலர் அல்ல; காய்ந்த

புற்கட்டே அவள்உ டம்பு!

சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி!

மதியல்ல முகம்அ வட்கு

 வறள்நிலம்! குழிகள் கண்கள்!

எதுஎனக் கின்பம் நல்கும்?

இருக்கின்றாள் என்ப தொன்றே!

பொருள் : புதுமலரைப் போல அல்ல அவள் உடல் . அவள் உடம்பு காய்ந்த புல்  கட்டைப் போல ஆகிவிட்டது. அவளால் நன்றாக நடக்க இயலாது. தள்ளாடி விழும் அளவிற்கு வயோதிகம் ஆட்கொண்டு விட்டது . நிலவு போன்று இல்லை அவள் முகம். வறண்ட நிலம்  போன்றாகி விட்டது முகம். கண்கள் குழி விழுந்து விட்டது . ஆனாலும் எனக்கு அவள் இருக்கின்றாள் என்பதே இன்பம் என்கிறார் மணவழகர் .

நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்

இனிக்கின்ற தமிழை அன்னாள்

 இசைக்கின்ற ஆற்றல் இல்லை.

 தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள்

தனித்துள்ளாள் மறுபு றத்தே!

எனைக்கண்டும், என்னைத் தொட்டும்

 பயில்கிலாள்; எனினும் என்னை

நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்;

நிலைக்கின்ற தென்பால் இன்பம்!

பொருள் : இனிமையான தமிழில் அவளால் பேசமுடியவில்லை . நானும் அவளும் தனித் தனியாகவே இருக்கின்றோம் . எனைப் பார்த்தும் தொட்டும் பேச இயலாது அவளால் . ஆனாலும் அவள் என்னை நினைக்கின்றாள் . நான் அவளை நினைக்கின்றேன் . எங்களுக்குள் இன்பம் நிலைத்து இருக்கிறது.

அன்புள்ளம் காணுகின்றேன் - அகத்தின்பம் காணுகின்றேன்

என்பும்நற் றோலும் வற்ற,

 ஊன்றுகோல் இழுக்கி வீழத்

 தன்புது மேனி, காலத்

 தாக்கினால் குலைய லானாள்.

 என்முது விழிகா ணற்கும்

இயலாதே! எனினும் அன்னாள்

அன்புள்ளம் காணு கின்றேன்!

அகத்தி ன்பம் காணு கின்றேன்

பொருள் : எழும்பும் தோலும் வற்றி ஊன்றுகோல் கூட ஊன்ற முடியாத நிலையில் இருக்கிறாள் அவள். அவளது இளமையான மேனி வயதானதால் குலைந்து விட்டது. என விழியைக் காணக்  கூட அவளால் முடியாது. எனினும் அவளது அன்பு உள்ளதைக் காணுகிறேன் என உள்ளத்தில் இன்பம் காணுகிறேன் .  

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்