ஈரோடு தமிழன்பன் -வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரட்டும்

 

    ஈரோடு தமிழன்பன் -வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரட்டும் 

இயற்பெயர் ந.ஜெகதீசன். ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் 

வாழ்ந்த செ.இரா.நடராஜன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக 

செப்டம்பர் 28, 1933 அன்று பிறந்தார்.

       நூல்கள்

    காத்த குமரன் (சிறார் வில்லுப்பாட்டு),

 தமிழன்பன் கவிதைகள் (கவிதைகள்

தோணி வருகிறது (கவிதைகள்),

   தீவுகள் கரையேறுகின்றன (கவிதைகள்),

   அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்.

   நிலா வரும் நேரம்

   சூரியப் பிறைகள்

வணக்கம் வள்ளுவ எனும் நூலுக்காக சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் .

அரிமா நோக்கு என்னும் கலை- பண்பாட்டு இதழை ஈரோடு தமிழன்பன் நடத்தி வந்தார்.

                                                     

               வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரட்டும்

மதச்சார்பற்ற எமது நாட்டில்

எல்லோர்க்கும் உரிய

மாபெரும் பண்டிகை

தேர்தல்!

ஐந்தாண்டுக்கு

ஒருமுறை சிலவேளை

காலக்கணக்கு பிசிகி

முன்னதாகவும் முகம் காட்டும்

தேர்தல் கன்னியின் கண்சிமிடல்களே

வாக்குச்சீட்டுகள்!

ஜாதி விலங்குகளுக்குப்

புதுமுலாம் பூசும் நாள்கள்!

குப்பென்று மனிதநேயம்

பூத்து..அம்மா, தங்கச்சி,

அண்ணே என்று உறவு மொழிகள்

தோரணம் கட்டும் பருவம்!

சேரிகள் ஒரு

சின்னச் சிங்காரத்தில்

கிறங்கிடும் காலம்!

வாக்குச்சீட்டுகள் ஒருநாள் ரொட்டிக்கு

டோக்கன்களாக ஏழை இந்தியர்

எல்லோர்க்கும் வழங்கப்படும்!

தாய்க்குலத்துக்குத் தனி மவுசு

எவரெஸ்டுக்கும் அவர்களது

உயரம் காண

அன்றைக்கு ஏணி தேவைப்படும்!

இறுதிவரை மனிதராகமலேயே

மரணமாகும் சிலரை இடையில்

தலைவர்களாய் ஆட்சித்

தவிசிலேற்ற குடியாட்சி முறை

கண்டெடுத்த அரிய சாதனம்

வாக்குச்சீட்டு!

நாக்கின் பகட்டு

நாட்டியத்தில் உதிர்ந்துவிடும் இது

சத்திய கீதத்திற்குத் தலையசைக்கின்றதா?

இங்கே வயதுகளைக்கூடத்

தேர்தல்களாலேயே கணக்கிடுவர்!

ஓட்டுப்போடுவதற்கென்றே

பிறந்தவர் நாம்.!

பின் வாழ்வதற்கா?

ஜனநாயகப் புறாவின் சிறகுகள்

என்று வாக்குச் சீட்டுகளை

வருணித்து வரவேற்றோம்.

ஆனந்தக் கண்ணீரால்

அவற்றை முழுக்காட்டியபோது

உள்ளிருந்த உண்மை நிறம்

 பீறிட்டது.

வாக்குச் சீட்டுகள் ஜனநாயக மங்கையின்

புன்னையாக இருந்தால் சரிதான்!

அவளது அதரத்தை அரிக்கும்

புழுக்களானால்?

இமைகளை விழிகளுக்குக்

காவலாக நிறுத்தினோம்.

அவை விழிகளைக்

 கொத்தும் கழுகுளானால்?

வாக்குச் சீட்டுகள் மட்டும்

ஜனநாயகத்தின் மூச்சுக்கு

அத்தாட்சிகள் அல்ல..

அவை அதன் மூக்குத் துளைகளை

மூடியடைக்கும் அபாயம் உண்டு!

பிறகு வாயால் சுவாசித்து

ஜனநாயகம் எத்தனை நாள்கள் வாழும்!

ஜனநாயகம் ஒரு

பூப்பின்னலாகச் சர்வாதிகாரத்தின்

சாளரத் திரைகளிலும் காணப்படும்!

பணநாயகத்தின் படிக்கட்டுகளிலும்

இந்தப் பூக்கோலம் போடப்படுவதுண்டு.

வாழ்க்கை சமமாகாத நாட்டில்

வாக்குரிமை சமமாகும்!

ஜனநாயகம் ஜனங்களோடு

ஏதோ மனம்விட்டுப் பேச

விரும்பும் வேளை..

குரங்குச் சின்னம்

பார்த்துப் போடுங்கம்மா ஓட்டு

என்ற வீங்கிய சத்தம்

மேல் வந்து விழுந்து

அந்தப் பேச்சில் விரிசல்களை

உண்டாக்குகின்றது.

கொடி மரங்களைப் போலவே

கட்சிகளுக்கும் இங்கே

இலட்சிய வேர் இல்லை.

தெருவில் மூலை முடுக்கெல்லாம்

விறைத்து நிற்கும்

அஃறிணைப் பிணங்கள்!

உச்சியில் மரணம், அவற்றின்

பொய்மை நாக்கைப் புறத்தே

தள்ளியது போலக் கொடிகள்! காற்று

அவற்றை அசைத்துப் பார்த்து

மரணத்தை உறுதிப்படுத்துகிறது!

அழுக்குச் சுவரொட்டிகளை

ஆபாசச் சுவர் வாக்கியங்களைச்

சுவாசித்து வாழும் ஜனநாயகத்திற்கு

ஆரோக்கியம் ஏது? ஜனங்களைக்

காப்பதற்குரிய நிதி ஜனநாயகத்தின்

ஊதாரித்தனத்தால் கரைந்து போகிறது!

எமது பாரதத்திற்கு எப்போதுமே பாலகாண்டம் தான்

சின்னப் படம் போடாமல்

விளங்காத சின்ன வயசு!

தேர்தல் சுயம்வரம் சுயத்தில்

இல்லை பணத்தின்

வரத்தில் இருக்கிறது!

மற்றவர் குனியும்போது

ஆகாயத்தையும்

நிமிரும்போது நிலத்தையும்

சுருட்டிக்கொள்ள வல்லமை

படைத்த அரசியல்வாதிகள்..

இந்த வாக்குச் சீட்டுகளை

வழிப்பறி செய்வது கடினமானதல்ல..

திருட்டு ஒட்டுப்பெட்டி ஜனநாயகத்தின்

கருவறையா? கல்லறையா?

நாடு நடத்த வேண்டிய

வழக்காடு மன்றம்

எமது பாரத ஜனநாயகம்

பரந்த நோக்கம் உடையது

செத்தவர்கள் எல்லோரும்

கூட அன்று வந்து

வாக்களித்துவிட்டுப் போகலாம்

காந்தி காமராஜ்

அண்ணா பெரியார்

இவர்கள் கட்சிகளுக்குச்

செத்தும் கொடுத்த சீதக்காதிகள்!

ஒவ்வொரு வாக்குச் சீட்டுக்கும்..

இவர்கள் கல்லறையிலிருந்து

இது வருகிறது!

இனி

இனி, இனியேனும் ஜனநாயகம்

கட்சிகளை விவாகரத்து செய்துவிட்டு

ஜனங்களுக்கு மாலை சூட்டட்டும்!

வாக்குச் சீட்டுகளுக்கு ஒரு அர்த்தம் வரட்டும்!

 

மாபெரும் பண்டிகை

மதச்சார்பற்ற நமது நாட்டில் எல்லோர்க்கும் உரிய மாபெரும் பண்டிகை 

தேர்தல் ஆகும்  

ஐந்தாண்டுக்கு  ஒருமுறை

தேர்தல் ஐந்தாண்டுக்கு  ஒருமுறையும்   சிலவேளைகளில் 

காலக்கணக்குத்  தவறி  முன்னதாகவும் வந்து  முகம் காட்டும். 

தேர்தல் கன்னியின் கண்சிமிட்டல்கள்

வாக்குச்சீட்டுகள் என்பது தேர்தல் கன்னியின் கண்சிமிட்டல்கள் ஆகும்.

புதுமுலாம்

ஜாதி விலங்குகளுக்குப் புதுமுலாம் பூசும் நாள்கள் எதுவெனில் இத்தேர்தல் 

நாள்களே .

மனிதநேயம்

தேர்தல் வரும் போது தான் மனிதநேயம்  குப்பென்று  பூத்து அம்மா, 

தங்கச்சி, அண்ணே என்று உறவு மொழிகள்  தோரணம் கட்டும் .

டோக்கன்

தேர்தல் வரும் போது தான் சேரிகள் ஒரு சின்னச்

சிங்காரத்தில் கிறங்கிடும் .    வாக்குச்சீட்டுகள்  என்பவை  தேர்தல் வரும் 

போது ஒருநாள் ரொட்டிக்கு டோக்கன்களாக ஏழை இந்தியர் 

 எல்லோர்க்கும் வழங்கப்படுகிறதாம் .

தனி மவுசு   

தாய்க்குலத்துக்குத் தனி மவுசு  வந்துவிடும் .  எவரெஸ்டு மலைக்குக் 

கூட அவர்களது உயரம் காண  அன்றைக்கு ஏணி தேவைப்படுகிறது.

மனிதராகும்  தகுதி இல்லாத   சிலர்  

மரணமாகும் வரை மனிதராகும்  தகுதி இல்லாத   சிலர் தேர்தல்களாலும் 

பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதாலும்  இடையில் 

தலைவர்களாய் ஆட்சியில் அமர்ந்துவிடுகிறார்கள்.  

அதற்குக் காரணம் குடியாட்சி முறை  கண்டெடுத்த அரிய சாதனம் ஆகிய  

வாக்குச்சீட்டு.  நாம் நாட்டில்  வயதுகளைக்கூடத் தேர்தல்களாலேயே 

கணக்கிடுகிறார்கள். வாழ்வதற்காக நாம் பிறக்கவில்லை 

ஓட்டுப்போடுவதற்கென்றே பிறந்தவர்கள் என்னும் நிலையேக் 

காணப்படுகிறது.  

ஜனநாயகப் புறாவின் சிறகுகள்  

ஜனநாயகப் புறாவின் சிறகுகள்  இந்த வாக்குச் சீட்டுகள்  என்று 

வருணித்து வரவேற்றோம். அது  நாம் ஆனந்தக் கண்ணீரால் நனைந்த 

பொழுது  உள்ளிருந்த உண்மை நிறம்  வெளிப்பட்டது.

ஜனநாயக மங்கையின் புன்னகை  

வாக்குச் சீட்டுகள் என்பவை  ஜனநாயக மங்கையின் புன்னகையாக 

இருக்க வேண்டும் . மாறாக அவளது உதடுகளை அரிக்கும்  புழுக்களாக 

இருக்கக் கூடாது .  

விழிகளைக்  கொத்தும் கழுகுள்

 இமைகள்  விழிகளுக்குக் காவலாக இருக்க வேண்டும் .  ஆனால் அவை 

விழிகளைக்  கொத்தும் கழுகுளாக மாறக்கூடாது . வாக்குச் சீட்டுகளும் 

அப்படித்தான் .

வாக்குச் சீட்டுகள்  ஜனநாயகம்  மூச்சு விடுவாதற்கான

சாட்சிகள் .  மாறாக  ஜனநாயகத்தின் 

மூக்குத் துளைகளை   மூடியடைக்கக்  கூடாது.

பிறகு வாயால் சுவாசித்து  ஜனநாயகம் எத்தனை நாள்கள் வாழ முடியும் .

பூப்பின்னல்  

ஜனநாயகம் ஒரு பூப்பின்னலாகச் சர்வாதிகாரத்தின்  ஜன்னல் 

திரைகளிலும்  காணப்படும்.  பணமே பிரதானம் என்பவர்களின்  

படிக்கட்டுகளில்  ஜனநாயகம் ஒரு பூக்கோலம்ஆகிவிடும்.

வாக்குரிமை சமம்

வாழ்க்கை சமமாகாத நமது  நாட்டில் வாக்குரிமை சமமாக இருக்கிறது.

ஜனநாயகம் ஜனங்களோடு ஏதோ மனம்விட்டுப் பேச விரும்பும் 

வேளையில் எல்லாம் குரங்குச் சின்னம் பார்த்துப் போடுங்கம்மா ஓட்டு 

என்ற வீங்கிய சத்தம் வந்து மேல் விழுந்து  அந்தப் பேச்சில் விரிசல்களை 

 உண்டாக்குகின்றது.

கொடி மரங்கள்

கொடி மரங்களைப் போலவே  கட்சிகளுக்கும் இங்கே இலட்சியம் என்னும் 

 வேர் இல்லை.

தெருவில் மூலை முடுக்கெல்லாம்  விறைத்து நிற்கும் அஃறிணைப் 

பிணங்கள் இந்தக் கொடி மரங்கள். இறந்தவர்களின் நாக்கைப் போல கட்சிக்  

கொடிமரங்களும் கொடி எனும்  நாக்கைப் புறத்தே  தள்ளுகின்றன . காற்று 

அதை அசைத்துப் பார்த்து மரணத்தை உறுதிப்படுத்துகிறது.  

பாலகாண்டம்

அழுக்குச் சுவரொட்டிகளையும் ஆபாசச் சுவர் வாக்கியங்களையும்

சுவாசித்து வாழும் இம்மக்களுக்கு ஆரோக்கியம் என்ற  ஒன்று இல்லை.  

ஜனங்களைக் காப்பதற்குரிய நிதியும்  ஜனநாயகத்தின் ஊதாரித்தனத்தால் 

கரைந்து போகிறது. எமது பாரதத்திற்கு எப்போதுமே பாலகாண்டம் தான்

சின்னப் படம் போடாமல் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள 

முடியாத சின்ன வயசு.  

தேர்தல் சுயம்வரம்  

தேர்தல் சுயம்வரம்  என்பது தேர்தலில் நிற்பவரைப்  பார்த்து 

தகுதியானவரா எனபதில் இல்லை. அவர் மக்களுக்கு  கொடுக்கும் 

பணத்தின் வரவில்  இருக்கிறது.

மற்றவர் குனியும்போது  ஆகாயத்தையும் நிமிரும்போது நிலத்தையும்

வல்லமை

சுருட்டிக்கொள்ள வல்லமை  படைத்தவர்கள் இந்த அரசியல்வாதிகள். 

அதாவது நாம்  ஏமாற்றப் படுகிறோமே என்பதே தெரியாமல் நம்மை 

ஏமாற்றுகிறார்கள் .  இந்த வாக்குச் சீட்டுகளை  வழிப்பறி செய்வது 

கடினமானதல்ல.

கருவறை அல்ல  கல்லறைகள்  

திருட்டு ஒட்டுப்பெட்டிகள்  ஜனநாயகத்தின்  கருவறை அன்று 

கல்லறைகள்  என்பதே நாடு நடத்த வேண்டிய  வழக்காடு மன்றம் 

ஆகும்.  

நமது பாரத  நாடு  பரந்த நோக்கம் உடையது  செத்தவர்கள் எல்லோரும் 

கூட அன்று  வந்து  வாக்களித்துவிட்டுப் போகலாம்.

செத்தும் கொடுத்த சீதக்காதிகள்

காந்தி காமராஜ் அண்ணா பெரியார்  இவர்கள் கட்சிகளுக்குச்  செத்தும் 

கொடுத்த சீதக்காதிகள்.

ஒவ்வொரு வாக்குச் சீட்டுக்கும் இவர்கள் கல்லறையிலிருந்து  எல்லாம் 

வருகிறது. இவர்கள்

பெயரைக் கேட்டே மக்கள் வாகக்ளிக்கிறார்கள்.   இனியேனும் ஜனநாயகம் 

கட்சிகளுக்காக ஓட்டுப் போடுவதை  விவாகரத்து  செய்துவிட்டு 

ஜனங்களுக்கு மாலை சூட்டட்டும்

நாம் வாக்குச் சீட்டுகளுக்கு ஒரு அர்த்தம் வரட்டும்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்