உளவியல்-பழந்தமிழர் உளவியல்

 

                          உளவியல்

உளவியல் கலைத் துறையாக இருந்து பின்னர் அறிவியல் துறையாக

மாற்றம் பெற்ற ஒன்று .  உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) 

என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் 

முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு 

முறையாகும். உளவியல் என்ற சொல், கிரேக்க மொழியின் 'சைக்

(வாழ்க்கை) மற்றும் 'லோகோக்கள்' (விளக்கம்) ஆகிய சொற்களிலிருந்து 

உருவானது.

தமிழ்ச் சான்றோர்  இதனை  ‘முன்னம்’ என்றும் அழைக்கின்றனர் .  

‘உளவியல் சார்ந்த சான்றுகளாக சங்கப் பாடல்கள் விளங்குகின்றன.

ஆறறிவதுவே அவற்றோடு மனனே :

பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் தொல்காப்பியர் ஆறாவது அறிவு

என்பதனை “ ஆறறிவதுவே அவற்றோடு மனனே ” அதாவது மனம்

என்று குறிப்பிடுகிறார்.

மனத்தின் கண் தோன்றும் உணர்வுகளையும் அதனால் முகத்தில்

தோன்றும் உணர்ச்சிகளை மெய்ப்பாடு என்று கூறுகிறார்.

எண்வகை  மெய்ப்பாடும் உளவியலும் :

தொல்காப்பியர்  மெய்ப்பாடுகள் எட்டினைக் கூறிவிட்டு அது

தோன்றுவாதற்கான காரணங்களாக  32  கூறுகிறார்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்ப.”

தொல்காப்பியர் கூறும், சிரிப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, பயம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடு என வரையறை செய்துள்ளார்.

அந்தவகையில் உணர்வுக்கும் அது தோன்றுவதற்கும்  காரண

காரியத் தொடர்புபடுத்தி உளவியல் பார்வையைக்  

காட்டுகிறார்..

அச்சம்

பிறராலும், பிற பொருளாலும் தோன்றும் அச்ச உணர்வானது

எழும் சூழலைத் தொல்காப்பியர்,

“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே.”

அணங்கு என்பது தெய்வம் . விலங்கு என்பது சிங்கம் , புலி முதலிய 

அஞ்சத்தக்க விலங்குகள், கள்வர் என்பார் தீத்தொழில் புரிவார் , இறை 

எனப்படுவது பெரியோர், தந்தையர், ஆசிரியர், அரசர் முதலானோரைக் 

குறிக்கும். இந்த நான்கின் காரணமாக ஒருவனுக்கு ஏற்படும் அச்சத்தை 

உளவியல் நோக்கில் கூறுகிறார்.

அகவன் மகளே , பாடுக பாட்டே!
 

அகவன் மகளே , அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே , பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!’
என்ற ஒளவையார் பாட்டானது , ‘உளவியல்’ அமைப்புக்குச் சிறந்த  சான்று 

தோழி பாடுவதாக அமைந்தது .

பாட்டுப்பாடுகிற கட்டுவிச்சியை , நீ மேலும் மேலும்பாடு. தலைவனுடைய 

குன்றம் பற்றிய பாடலை நீ மறுபடியும் பாடு’ என்று தோழி கேட்கிறாள். 

ஐந்தே  அடிகள் கொண்ட குறுந்தொகைச் பாட்டில், தோழி, தலைவனுடைய 

மலையைப்பற்றி மறுபடியும் பாடு என்று தோழி ஏன் கேட்கிறாள்? இக் 

கேள்வி சிந்திக்கத் தக்கது . ‘தோழி, இடைப்புகுந்து உரைக்கிறாளே, ஏன்? 

கேட்கிறாள்  தோழி ஏன் அவர் மலையைப்பாடுக என்று கேட்கிறாள்?என்று 

தாய் சிந்திக்கத் தொடங்கிவிடுவாள்’  . ‘அவர்’ என்ற சொல்லைக் கேட்டகும்  தாய்க்கு நிச்சயம் ஏதோ ஒன்று புலப்படத்  துவங்கும்.

அன்னாய்  வாழி, வேண்டு அன்னை:
அன்னாய் , வாழி, வேண்டு, அன்னை, நம்படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய –அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ்
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே!’

தலைவனோடு தலைவி உடன்போய், அவனை மணம் செய்துகொண்டு

தாய்வீட்டுக்கு வருகிறாள்.அப்போது  அவளைப் பார்த்த தோழி,  நீ உன் 

தலைவனோடு போய்விட்டாய், அவனுடைய நாட்டில் கிணற்று நீர் நன்றாக 

இல்லையாமே, இலைகளும், தலைகளும் விழுந்து அழுகிப்போன 

தண்ணீர்தான் கிடைக்கின்றதாமே. ஆனால் நமது நாட்டில், தோட்டத்தில்

தேனும் பாலும் கலந்தது போன்ற தண்ணீர் குடித்தாய்! அப்படியிருக்க, உன் 

தலைவனுடைய ஊரின் கிணற்று நீரை எப்படி அருந்தினாய்?’ என்று கேட்க 

 அவளுக்குத் தலைவி சொன்ன மறுமொழிதான் இப்பாடலில் இடம் 

பெற்றிருக்கும் உளவியல்.‘நீ சொல்வதுபோல, அவர் நாட்டில் கிடைக்கும் 

தண்ணீர் இலை மக்கியதும், விலங்குகள் கலக்கியதுமாக இருக்கலாம். 

ஆனால் அதுதான், எனக்கு இனிமை தந்த தண்ணீர் ‘ என்று தலைவி 

சொல்கிறாள்.  இன்ப உணர்வுக்கும், துன்ப உணர்வுக்கும் அவரவர்  உள்ளம் 

தான்  என்பதைப் பதிவு செய்கிறது.

நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

சமூகம்  ஒழுக்கம் பண்பாடு போன்ற வாழ்வியல் விழுமியங்களில்  நட்பு 

முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. உன் நண்பன் யாரென்று சொல் 

உன்னை யாரென்று சொல்கிறேன் என்பது ஒரு பழமொழி. அந்தவகையில் 

நண்பர்களைத் தெர்ந்தெடுப்பது பற்றியும், நட்புப்பாராட்டும் தன்மை 

குறித்தும் சங்கச் செய்யுட்கள்காட்சிப்படுத்துகின்றன .

“அரிய வாழி தோழி பெரியார்

நாடி நட்பின் அல்லது

நட்டு நடார்தம் ஒட்டியோர் திறத்தே.”

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்”

என்பதன் மூலம் நட்பின் ஆழம் குறித்தும்  உளவியல் குறித்தும்

ஒருவரிடம் ஆராய்ந்து நட்புக் கொண்டபின் நண்பன் நஞ்சைக் 

கொடுத்தாலும் அதை மகிழ்வோடு பருகும் நிலையையும் சமூக 

மதிப்பீட்டு  உளவியல் எனக் கருதலாம். 

திருமண உறவும் உளவியலும்:

திருமணம், குடும்பம் பற்றிய உளவியல் சிந்தனை சங்கத் தமிழரிடத்தும் 

இருந்துள்ளமையைக்  காணலாம்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐய்யர் யாத்தனர் கரணம் என்பது 

தொல்காப்பியம்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உடன் போக்கிற்கு உதவும் 

தோழியின்  பயம் சார்ந்த உளவியலும் திருமணங்கள் எவ்விடத்திலும் 

குறிப்பாக அழகின் காரணமாக முறிந்து விடக் கூடாது என்பதனை 

இப்பாடல்  தெளிவாக உணர்த்துகிறது.

 அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்

பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த

பிழையா நன்மொழி தேறிய இவட்கே.”

என்று கூறும் செய்யுளிலே தலைவியின் மார்புகள் தளர்ந்து இளமை போய் 

முதுமை வந்த நிலையிலும், கருங்கூந்தல் நரைகூடிப் போன போதும் 

உன்னை நம்பி வந்த அவளைக் கைவிடாதே என அறிவுரை கூறிநிற்பது 

உளவியலின் வெளிப்பாடு.

ஒழுக்கம் சார்ந்த  உளவியல்:

ஒரு பெண்ணின் மனதில் ஆண் சார்ந்த பிம்பம்  எப்படி இருக்க வேண்டும். 

எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதனைப் பெண்ணின் இடத்தில்நின்று 

கூறும் உளவியல் வெளிப்பாட்டை கீழ்க்கண்ட பாடலில் காண முடியும், 

நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்

என்றும் என்தோள் பரிபுஅறி யலரே…

நறுநுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ செய்புஅறி யலரே.” 

என்று தோழிக்குத்  தலைவி , தலைவனின் பண்புகளைக் கூறுவதிலிருந்து 

ஒருவரைப் பற்றிய புரிதலுக்குரிய  உளவியல்சிந்தனை    விளங்குகிறது .

பெண்ணின் உள்ள வெளிப்பாடு 

இன்னொரு ஒளவையார் பாடல் தலைவன் பிரிந்த காலத்தில் 

தலைவிபடும் வேதனையை அவள் கூற்றாகவே எடுத்துரைக்கும்.

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் ஓரேன் யானும் ஓர் பெற்றி 

மேலிட்டு ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல் அலமரல் அசைவளி 

அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே. (குறுந்தொகை 28)

அசைந்து வரும் தென்றல் காற்று என்னைத்துன்புறுத்த, எனது 

காமநோயை உணர்ந்து கொள்ளாமல் கவலையின்றித் தூங்கும் ஊரில் 

உள்ளவர்களை நான் முட்டுவேனோ (சுவரில் முட்டிக்கொள்வேனோ), 

தாக்குவேனோ (என்னையே தாக்கிக் கொள்வேனோ), ஆவென்றும் 

ஒல்லென்றும் ஒலியெழுப்பிக் கூவுவேனோ? இன்னது செய்வது என்று 

அறியாதவள் ஆயினேன் என்று தலைவி வேதனையோடும் சினத்தோடும் 

பேசுவாள். தன் துயரைத் தன் அன்னை முதலியோர் புரிந்து 

கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவியின் ஆற்றாமையைத் தான் 

தூங்க இயலாதபோது ஊராரெல்லாம் கவலையற்றுத் தூங்குகிறார்களே 

என்று அழுது அல்லல் உறுவதாகக் காட்டுவது ஔவையாரின் உளவியல் 

அறிவைப் புலப்படுத்தும்.

முட்டுதல் என்பது உடலால் தீண்டுதல் என்றும் தாக்குதல் என்பது கோல் 

முதலிய ஆயுதத்தால் தீண்டுதல் என்றும் பொருள்படும். தலைவி 

கூவுதலால் ஊரார் தூங்க இயலாது கண்விழித்து அலர் தூற்றுவர். 

அவ்வலரால் தலைவன் அவளை விரைவில் மணம் செய்துகொள்வான் 

என்ற எண்ணத்தில் கூவுதலையும் ஒருசெயலாகக் குறிப்பிடுவாள். 

இவற்றைப் போல பல சங்கப் பாடல்களை நம்மால் எடுத்துக் கூற இயலும் . 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்