பழந்தமிழர் உலோகவியல்

 


                               பழந்தமிழர்   உலோகவியல்

தொடக்ககால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டு பழைய கற்காலம், புதிய கற்காலம்  எனவும் புதிய கற்கால நாகரிகத்திற்குப் பிறகு உலோகக் காலம் நாகரிகமானது  உருவானது.

தமிழகத்தில், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் இரும்புக்கால கட்டத்தை வரையறுக்கிறது.சங்க இலக்கியங்களிலும் உலோகங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன .

பொன் - இரும்பு

தமிழர்கள் குறிப்பிட்ட சில தனிமங்களைப் பொன் அல்லது மாழை என்னும் சொல்லால் குறித்தனர்.

 Metal என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பொன் என்றனர். பொன் எனப் பொதுவாகவும் இரும்பொன் என்று இரும்பையும் குறித்துள்ளனர்.  "தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று" , "அரம் பொருத பொன் போலத் தேயும்" இந்த குறளடிகளில் இடம்பெற்றுள்ள பொன் என்ற சொல் இரும்பைக் குறிப்பன."

பொன் -தங்கம்

சுடச்சுடரும் பொன் போல்" (குறள் 267) என்பதில் பொன் என்பது 2.9 தங்கத்தைக் குறிக்கும். பொன்னை உருக்கி அணிகலன்கள் செய்யும் தொழிலாளர்கள் பொற்கொல்லர், கம்மியர், தட்டார் எனப் பெயர் பெற்றிருந்தனர்.

மாண உருக்கிய நன்பொன் மணியுறீ (கலி 114) என்ற அடியில் பொன்னை நெருப்பில் உருக்கி அதனுள் மண்வைத்துக் கலைநயத்துடன் அணிகலன்கள் செய்தனர் என்ற செய்தி காணப்படுகிறது.  

சாதரூபம், கிளிச்சிறை ,ஆடகம், சாம்பூநதம் என நான்கு வகையான தங்கம் பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது.

தங்கத்தைக் கொண்டு அக்காலத்தில் குழந்தைகள் , பெண்கள், ஆண்கள் என அனைவரும் பயன்படுத்தும் ஆபரணங்கள் செய்யப்பட்டன. 

கைதேர்ந்த கம்மியர்கள் இவ்வணிகளைச்  செய்தனர்

சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் பற்றிய செய்தியும்

காணப்படுகிறது.

மகளிர் அணிந்த அணிகலன்கள் சிலவற்றை சிலப்பதிகாரம்

கூறுகின்றது.  கால் விரல் மோதிரம், பரிகாரம், நூபுரம், அரியகம்,

பாடகம், சதங்கை, குரங்குசெறி,  இடையில்  அணியும் முத்துவடம்,

32 வடத்தால் ஆன முத்துமேகலை ,  மாணிக்கமும் முத்தும்

இழைத்த தோல் வளையல்கள், மாணிக்கமும் வைரமும் அழுத்திய

சூடகம், செம்பொன் வளை ,  நவமணி வளை, சங்கு வலையல்கள்

பவள வளையல்கள், வாலை மீன் போன்ற மாணிக்க மோதிரம்

ஆகியவை பெண்களுக்கான அணிகலன்களாக சிலம்பு கூறுகிறது.  

இவை மட்டுமின்றி மோசை எனும் மரகதத்தால் ஆன அணிகலனும்  

கழுத்தில் அணியும் வீரச்  சங்கிலி, நேர்ச்  சங்கிலி, பொன்ஞாண்,  

அரை நெல்லிக்காய் மணிமாலை, வைரம் இழைத்த குதம்பை எனும்

காதணி,  சீதேவியார் வலம்புரிச் சங்கு, பூரப்பாளை  தென்பல்லி  

வடபல்லி  ஆகிய அணிகலன்களையும் பெண்கள் அணிந்ததாக

இலக்கியங்கள் கூறுகின்றன.

வெண் பொன் - வெள்ளி

பிற்காலத்தில் வெண்ணிற  உலோகத்திற்கு வெண் பொன் என்று பெயரிட்டனர். அதுவே இக்காலத்தில் வெள்ளி என்று அழைக்கப்படுகிறது . இதன் பின்னரே கருமையான நிறத்துடன் இருந்த இரும்பைக் கரும்பொன் என்றனர்.

"கரும்பொனியல் பன்றி (சீவக சிந்தாமணி/104)

"உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும்"(சீறாபுராணம் 570)

இரும்பைக் கரும்பொன் , இரும்பொன் என்றும் அழைத்தனர். இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்" (அகம்: 199)19) "இரும்பொன் மலைவில்லா எரியும் (தேவாரம்:சம்பந்தர்:1182)

மருத்துவத்தில் உலோகம்

தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் இவர்கள் இரும்பை, இரும்பொள் என்றும், அயம் என்றும் இரு பெயர்களில் குறித்தனர்.   சித்தர்களில் ஒருவரான போகர், தான் இயற்றிய போகர் ஏழாயிரம் என்ற நூலில் கரலோகம், கரஞ்ச உலோகம், ஓராள உலோகம், தாரபட்ட உலோகம், பசார உலோகம், காள உலோகம் ஆகிய ஆறு வகை இரும்பின் பண்புகள் பற்றியும் தனித்தனியாகச் செய்யுள்கள் இயற்றியுள்ளார்.

இரும்பைச் சித்தர்கள் கருந்தாது என்று அழைக்கின்றனர்.

பழந்தமிழர் இலக்கியத்தில் இரும்பு, எஃகு தொழில் நுட்பம்

தொல்காப்பியம், பொருளதிகாரம் புறத்திணையியலில், வாள், வேல், கணை போன்ற படைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. ஆனால்  இந்தக் படைக்கலன்கள் செய்யப்பட்ட உலோகம் எது என்பது பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை .

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும் வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தாது உதிர. (நற்றிணை: 24911-4)

இப்பாடலில் உலோகங்கள் பற்றிய உவமைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது புன்னை மரத்தின் சூரிய கிளைகள் இரும்பு, நீலம் மரத்தின் பசுமையான இலைகள்-இரும்பு, மரத்தின் இலைகளின் நடுவில் உள்ள நரம்புகள் வெள்ளி, மரத்தின் நறுந் தாதுக்கள் பொன் என உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

கொல்லர்

இரும்பை உருக்கி எஃகாக உருமாற்றி அதனைக் கொண்டு பல கருவிகளைச் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது தொழிற்கூடம் 'உலை' என அழைக்கப்பட்டது.

'இரும்பு செய் கொல் எனத் தோன்றும்' (அகம்)

'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே' (புறம்)

'இரும்பு பயன்படுக்கும் கருங்கைக் கொல்லன் விசைத்து எறி கூடமொடு பொருஉம் உலைக்கல் அன்ன வல்லாளன்னே' (புறம்)

மேற்கண்ட பாடலில் இரும்புத் தொழில் புரிவதால் கருத்த வலுவான கைகளை உடைய கொல்லன் தன் சம்மட்டியால் ஓங்கி வேகமாக உலைக்கல்லின் மேல் அடிக்கிறான். அந்த உலைக்கல்லை போன்று வலிமையானவன் என்று கூறுகிறான்.

எஃகு

எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து" (குறுந்)

'ஒளிறு இளையே எஃகு ஏந்தி' (புறம்)

போன்றவர்கள் எஃகின் வலிமையை விளக்குகின்றன.

எஃகினால் செய்யப்பட்ட கத்தரிக்கோலால் கத்தரித்து ஒழுங்கமைப்பட்ட குதிரையின் பிடறி மயர்

கொல்லன் உலைக்களம்

கொல்லன் உலைக்களத்தின் அமைப்பை உவமையாக அகநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகின்றன.

புல்அளைப் புற்றின் பல்கிளைச்சி தலை ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு இரும்பு ஊது குறுகின் இடந்து இரை தேரும்” (அகம்)

எனவும்

கொல்லன் குருகு ஊது மிதி உலை” (அகம்)

இரை தேர் என்கின் பகுவாய் ஏற்றை கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி நல்அரா நடுங்க உரறி கொல்லன் ஊது உலைக் குருகின் உள் உயிர்க்கு அகழும் நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் (நற்)

அகன்ற வாயையுடைய ஆண் கரடி தனக்கு வேண்டிய இரையை நாடுகிறது. வளைந்த வரிகளையுடைய புற்றைப் பெயர்த்து எறிகிறது. அப்போது அந்தப்புற்றில் வாழும் நல்ல பாம்பு பெரும் மூச்சுவிட்டுப் பயந்து நடுங்கியதைக் கொல்லன் ஊதுகின்ற உலை மூக்குப்போல உள்ளதாக உவமைப்படுத்துகிறது. ஆண்கரடி புற்றைப் பெயர்ப்பதை நிறுத்தி விடுகிறது.

கொல்லனின் சூடான உலையில் பழுக்க இரும்பைக் காய்ச்சு போது தண்ணீரைத் தெளித்துக் குளிர வைத்தது போல உன் இஸ் சொற்கள் வலி நிறைந்த என் நெஞ்சிற்கு ஆறுதல் அளித்தது, பனை ஒலைக் காம்பில் செய்த கை விசிறியால் விசிறிக் குளிர்வித்தது போலவும் உள்ளது என்பதன் மூலம் இரும்பைக் குளிர வைக்க நீர் பயன்பட்டமையை அறியலாம்.

துருத்தி

தேரில் பூட்டப்பெற்ற குதிரைகள் கொல்லன் வலித்து இருக்கும்

துருத்தியைப் போல வெப்பமாகப் பெருமூச்சு விட்டன.

ஊருக்கு ஆலை

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை என்ற இடத்தில் செம்பாறைக் கற்படுகைகளில் குழி அமைப்புகள் உள்ளன இவற்றைச் செந்நாக்குழி என்று குறிப்பிடுவர். இதனை சங்ககாலத்தைச் சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாகக் கருதப்படுகிறது.

வெள்ளி பற்றிய குறிப்புகள்

வெள்ளி, செம்பு, வெண்கலம், பித்தளை போன்ற இரும்பைத் தவிர பிற உலோகங்கள் பற்றிய பதிவையும் சங்க இலக்கியங்கள் கொண்டுள்ளன.

'வெள்ளி விழுத்தொடி மென் கரும்பு உலக்கை' (அகம்)

"வெள்ளிப் பூண் இட்ட கருப்பு உலக்கை மாசில் வெள்ளிச்

 சூர்ப்புறு கோல் வளை....." (அகம்)

கனமாக வளைந்து காணப்படுகின்ற வெள்ளி வளையல் பற்றிய

செய்திகள் பதிவாகியுள்ளன.

செம்பு

செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்" நெடுநல் அடி 112) செம்பில் செய்யப்பட்டது போலக் கட்டப்பட்ட நெடிய சுவர் பற்றிய செய்தி காணப்படுகிறது.

காசு

சங்க காலத்தில் காசுகள்  தங்கம் மற்றும் தங்கம் அல்லாத பிறவற்றாலும் செய்திருந்தனர். ஆனால் காணம் என்பது தங்கத்தால் செய்யப்பட்ட காசு ஆகும். பொலம் செய் பல் காசு , பொலங் காசு நிரைத்த என்ற பாடலடிகள்  காணப்படுகின்றன. பொலம் என்ற சொல்லுக்கு பொன் என்று  பொருள்.  

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்