பழந்தமிழ் இலக்கியத்தில் உயிரினங்கள் – விலங்குகள்

 

       பழந்தமிழ் இலக்கியத்தில்  உயிரினங்கள் – விலங்குகள்

தொல் காப்பியர்  ஆறறிவு உயிர்களை மட்டும் வகைப் படுத்தாமல்  அவை எவை எவை என்று வகைப் படுத்தி யுள்ளார்.

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

ஆடு:
சங்க இலக்கியத்தில் ஆடு  வெள்ளாடு, செம்மறி ஆடு, வருடை ஆடு, தகர், துருவை என்றெல்லாம் அழைக்கபட்டு இருக்கிறது . முருகன் மயிலையும் கோழிக் கொடியோடு ஆட்டுக்கிடாவையும் கொடியாகக்கொண்டவன் என்பதனை,

தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன்”        திருமுருகு.210

என்கிறார் நக்கீரர்.

ஆளி
ஆளி என்னும் விலங்கை பழம்பெரும் சிற்பங்களில் காணமுடியும். இவ்விலங்கு சிங்கத்தை ஒத்த துதிக்கை உடையது. யாளி குருளைத் தலைமை பொருந்திய வலிமை உடையமையால் செருக்கு கொண்டு தாய்ப்பால் உண்ணுதலை கைவிடாத இளம்பருவத்தில் தனது கன்னிவேட்டையின் முதல் நாளில் களிற்று யானையை பாய்ந்து கொன்று வீழ்த்தியது. இதனை,

ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள விடாமாத்திரை ஞெரேரெனத்
தலைகோள் வேட்டம் களிறட்டாங்கு”
    பொறுநர்.139-142.

ஒட்டகம்
எயில் பட்டினத்தில் கடல் நீரின் அலைகளால் கொணர்ந்து ஒதுக்கிய அகில் மரம் ஒட்டகம் உறங்கி கிடப்பது போன்று காட்சியளித்ததை,

ஓங்குநிலை ஒட்டகந் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்”
        சிறுபாண்.154-155

என்று நத்தத்தனார் பாடுகிறார்.

சிங்கம் :

விலங்குகளில் வலிமையானது . புலியின் குருளையை வீழ்த்தும் சிங்கத்தின் காட்சியை, பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளைகொள வேட்டாங்க” (பெரும்பாண்.448) என்று பெரும்பாணாற்றுப்படை காட்டுகிறது.

நாய்
சங்க இலக்கியத்தில் நாய் செந்நாய், நீர்நாய், வீட்டுநாய், வேட்டை நாய் என்று வகைப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பெற்றுள்ளது. வேட்டை நாய் பிளந்த வாயுடன் இருக்கும். எயினர்கள் வீட்டுக் காவலுக்கு கட்டுதற்கரிய சங்கிலிகளால் நாயை கட்டிவைத்திருந்தனர் என்ற செய்தியை, தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர்” (பெரும்பாண்.125)  என்ற வரிகள் உணர்த்துகின்றன

பன்றி
சங்க இலக்கியத்தில் பன்றி கேழல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரர்,

“………….. …………….. ……….கேழலொடு
இரும்பனை வெளிற்றின் பன்சாயன்ன
குருஉமயிர் யாக்கை குடவாடி உளியம்”
    திருமுருகு.311-313

என்று திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்கிறார்.

புரவி/குதிரை
குதிரையின் சங்கப்பெயர் புரவி.

ஊட்டுளை துயல்வர வோரி நுடங்க

பால்புரை புரவி நன்குடன் பூட்டி”        பொருநர்.164-165

என்ற முடத்தாமக்கண்ணியாரின் பாடல் எடுத்துக்காட்டுகிறது.

புலி
சங்க இலக்கியம் புலியை வீரமுள்ள விலங்காகக் காட்டுகிறது.

காட்டில் புலியின் வருகையினால் கலைமான் அதன் விருப்பத்திற்கு உரிய பிணையை விட்டு ஓடியதனை,

புலியுற வெறுத்த தன் வீழ்பிணை யுள்ளி”    மலைபடுகடாம்.404 என்று பாடுகிறது.

மான்
சங்க இலக்கியம் ஐவகை மான்களைக் கூறுகின்றது. மானின் கொழுவிய தசையை குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்கள் சமைத்து உணவாக உட்கொண்டதனை,

வருவிசை தவிர்த்த கடமான் கொழுன்குறை”    மலைபடுகடாம்.175

அன்மையில் பிள்ளையை ஈன்ற எயிற்றி மான் தோலாகிய படுக்கையில் இருந்ததை,

மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பின வொழியப் போகி”
    பெரும்பாண்.89-90

யானை   வெண்கோட்டு யானை, வயக்களிறு, பெருங்களிறு, வேழம், மா, பைங்கண் யானை, பரும யானை, ஒருத்தல், மடப்பிடி, புகர்முகவேழம் என நன்றினைப் பாடல்களில் குறிக்கப்படுகிறது.

          இருந்செறு ஆடிய கொடுங்கவுள், இயவாய்,

          மாரி யானையின் மருங்குல் தீண்டி”  (நற்:141:1-2)

          செம்மை நிறமுடைய தலையையும், வளைந்த கொடுமை தன்மையுள்ள துதிக்கைகளை உடையனவும், ஏந்திய தந்தங்களை கொண்டதும், அகன்ற வாயையும் உடைய கரிய மேகம் போல் இருக்கும் யானைகள் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும் யானைகள் மதத்தால் செருக்குண்டு கடிய சினமும் வலிமையையும் உடையது (நற்-103) என நன்றிணைப்  பாடல் குறிப்பிடுகின்றது.

 தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள் 115

இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்

பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து

சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன் (நெடுநல்வாடை)

அரசியின் கட்டிலின் கால்கள் 40 ஆண்டுகள் நிறைந்த யானையின் தந்தத்தால் செய்யப்பட்டவை. யானைகள் உணர்வில் மாறுபட்டு ஒன்றோடொன்று போரிடும்போது முரிந்த தந்தங்கள் அவை. அவற்றில் கலைவல்லவன் உளியால் தோண்டி வேலைப்பாடுகளைச் செய்திருந்தான் என்று கூறுகிறார் நக்கீரர்.

குரங்கு

மந்தி கடுவன் கலை முசு ஊகம் என்று அழைக்கப்படுகிறது.

கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி – புறம் . 200

சிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்கு – புறம் . 378.

கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை – நற்றினை , 334 .

தாயுடன் பிணித்திருந்த கைகள் நழுவிவிட்டதால் குரங்குக் குட்டியானது தவறிப்போய் ஒரு குறுகிய மலைப்பிளவில் விழுந்துவிட, அதனைக் காப்பாற்ற வேண்டி தாய்க்குரங்கானது தனது சுற்றத்துடன் கூடிநின்று கத்திக் கதறி ஓசையெழுப்பிய செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன .

கைக்கோள் மறந்த கரு விரல் மந்தி

அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு

முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி

சிறுமையுற்ற களையா பூசல் - மலை. 311

கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி

ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்

குறுந்தொகைப் பாடல் எண் 69.

கரிய கண்ணையுடைய தாவித் திரியும் ஆண் குரங்கு இறந்தது. அதனால் கைம்மை நிலை கொண்டு வாழ்வதை விரும்பாத பெண் குரங்கு இன்னும் மரத்துக்கு மரம் தாவக் கூட கற்றிராத தன் சிறு  குட்டியைத் தன்  உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலை உச்சியிலிருந்து பாய்ந்து உயிர் துறந்தது என்னும் செய்தி காணப்படுகிறது.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்