ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும் - முல்லை - குறிஞ்சி - சிறுபொழுது -பெரும்பொழுது
ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்
சங்கத் தமிழர் நிலப் பகுப்பை ஐந்தாகப் பிரித்துத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதிலிருந்து
அம்மக்களின் சூழலியல் அறிவை நம்மால் உணர முடியும்.
தொல்காப்பியர்:
தொல்காப்பியர் நிலங்களையும் அவற்றிற்குரிய கடவுளர்களையும் குறிப்பிட்டு
கூறியுள்ளார். அதில் நான்கு திணைகளை
மட்டும் கூறிவிட்டு பாலைத்திணையை அடுத்ததாகக் கூறியுள்ளார். பாலைத்திணைக்கான நிலம் எதுவென்று தொல்காப்பியர்
கூறவில்லை.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
(தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்)
அன்பொடு புணர்ந்த ஐந்திணை
ஐந்திணைகள் அகத்திணை ஏழிலும் மிகுந்த சிறப்பை உடையது. எனவே இது ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’
(தொல்.கள.1) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலை - நடுவண்
ஐந்திணைகளில் பாலை எனும் திணை நடுவண் எனும் சொல்லாலேயே அகத்திணையியலில்
குறிக்கப்படுகிறது. அகத் திணையியலில் பாலை எனும் சொல் குறிப்பிடப்பட வில்லை.
ஆனால் சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதையில் குறிஞ்சியும்
முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்னும் பாலை
நில அமைப்பு கூறப்பட்டுள்ளது.
சங்க காலம்
சங்க காலம் என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு சமுதாயம் ஆகும். திணை என்பது நிலத்தையேக் குறிக்கும். திணை என்பதற்கு ஒழுக்கம் என்றொரு பொருளும் உண்டு.
கருப்பொருள்
தொல்காப்பியர் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்று மூன்றாகப் பிரித்துள்ளார் .
அதில் கருப்பொருள்களாக எட்டைக் கூறியுள்ளார் தொல்காப்பியர். அதற்கு பின்வந்தோர் 14 கருப்பொருள்கள் வரை
கூறியுள்ளனர். அதில் ஒவ்வொரு
நிலத்திற்கும் அந்த நிலத்தைச் சார்ந்த தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி போன்ற அனைத்து செய்திகளும் கூறப்பட்டுள்ளன
இதையே ஐந்திணைகளும் மிகத் தெளிவாக விளக்கி கூறியுள்ளன.
கருப்பொருள் அட்டவணை
![]() |
(இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)
முதற்பொருள்
நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும் (குறிஞ்சியும் முல்லையும் இயற்கை வளம்
சிதைந்த தன்மையை குறிப்பிடுகின்றது).
எனப் பழந்தமிழர் நிலத்தை அதன் தன்மையைக் கொண்டு வகைப்படுத்தியுள்ளனர்.
பொழுது - காலம்
பொழுது இரண்டு வகைப்படும்.
1. பெரும்பொழுது
ஓராண்டினை ஆறு கூறாகப் பிரித்து அதனைப் பெரும் பொழுது என்றனர்.
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற
ஆறு பொழுதுகளும் பெரும்பொழுது ஆகும்
இரண்டு மாதங்களுக்கு ஒரு பருவம் எனப் பிரித்துள்ளனர்.
2. சிறுபொழுது
ஒரு நாளை ஆறு கூறுகள் சிறுபொழுது
ஆகும்.
வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்பன
சிறுபொழுதாகும்.
ஐந்திணையும் பொழுதுகளும்:
குறிஞ்சி பெரும்பொழுது - கூதிர்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம்.
சிறுபொழுது - யாமம் (விடியற்காலை)
முல்லையின் பெரும்பொழுது: கார் காலம்
சிறுபொழுது: மாலைக் காலம்.
மருதத் திணையின்
பெரும்பொழுது – கார்காலம்,
கூதிர் காலம், இளவேனில் காலம்,
முதுவேனில்
காலம், முன் பனிக் காலம், பின் பனிக் காலம்.
சிறுபொழுது – வைகறை
நெய்தல் பெரும் பொழுதுகள்:
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதுவேனில் என்னும் சிறுபொழுது:
வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும்
நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
பாலை பெரும்
பொழுதுகள்:
இளவேனில்,
முதுவேனில், பின்பனி
சிறுபொழுது:
நண்பகல்

கருத்துகள்
கருத்துரையிடுக