தொழில்நுட்ப மேலாண்மை- சங்க இலக்கியம் - தொழில் நுட்பம் - மேலாண்மை

 

                        தொழில்நுட்ப மேலாண்மை

காலம்தோறும் மக்கள் தங்களுக்கு கடினமான ஒன்றை அல்லது அதிகம் தேவைப்படும் ஒன்றை எளிமையாக்கும் வழியை, தொழில் நுட்பத்தை அறிந்திருந்தனர்.

நெசவுப் பெண்டிர்

சங்க இலக்கியத்தில் பெண்கள் நெசவுத்தொழில் செய்பவராகப் காணப்படுகின்றனர். கணவனை இழந்த பெண் தன் வாழ்வாதாரத்திற்கு நூல் நூற்ற செய்தி   காணப்படுகின்றது. இப்பெண்களைக் குறிக்க பருத்திப்பெண்டிர், ஆளிற்பெண்டிர் போன்ற சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த
நுணங்கு நுண்பணுவல் போல” (நற். 353)

“பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன”
(புறம். 125)

சங்க கால மக்கள் பருத்திப் பஞ்சை அதனுடைய கொட்டையிலிருந்து பிரித்தெடுக்க வில்லினைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் பின் பருத்திக் கொட்டையை நீக்கிப்  பஞ்சின் புறத்தோலினையும் எஞ்சிநிற்கும் கொட்டை­யினையும், தூசுகளையும் நீக்குவதற்காக நன்றாகப் புடைத்த செய்தியும் காணப்படுகின்றது.

ஆடைகளில் தொழில்நுட்பம்

பாம்பின் தோல் போன்ற தன்மையுடைய ஆடைகள், மூங்கிலின் உள்பக்கத்தில் உள்ள தோலைப் போன்ற ஆடைகள் , நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசை அறிய முடியாத, பூ வேலைப்பாட்டுடன் கூடிய  ஆடைகளை நெய்யும் தொழில்நுட்பம் அறிந்திருந்தனர்.

"இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்"-கலித்தொகை

உடைகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழில்நுட்பத்தினையும்  பழந்தமிழர் அறிந்திருந்தனர்.ஒருசேர நெய்யப்பட்ட உடையில் நீலநிற வண்ணம் ஏற்றியிருந்ததை,மேற்கண்ட பாடல் வாயில் மூலம் அறியலாம்.

இரும்புத் தொழில்நுட்பம்

இரும்புத்தொழிலுக்கு  இன்றியமையாதது உலைக்களம். இரும்பினைக் காய்ச்சி, அடித்து  பின் பொருட்கள் செய்வதற்கு உலைக்களம் பயன்படுகிறது. உலைக்களம், துருத்தி, உலைமூக்கு, குறடு, கரி போன்ற செய்திகள்  காணப்படுகின்றன.

 தமிழர்கள் இரும்புத் தாதுக்களைச் சேகரித்துச் சிறிய களிமண் உலையில் தோல் துருத்தியின் உதவியால் இரும்பை உருக்கி வந்திருப்பதை இலக்கியங்கள் கூறுகின்றன .

இதற்கு  கொல்லுலைகள் என்று பெயர்.

துருத்தி

துருத்தி பொதுவாகக் கை அல்லது கால்களினால் இயங்கும் தன்னமை உடையது என்பர். காலால் இயக்கப்பட்ட துருத்தி பற்றிய செய்தி காணப்படுகின்றது. புலியுடன் போரிட்டு வெற்றி பெற்ற யானை பெருமூச்சு விடும்பொழுது, வேங்கை மலர்கள் காலால் இயக்கப்படும் துருத்தியால் ஊதப்படும் உலைத்தீயினின்று சிதறும் தீப்பொறி போலச் சிதறியதாகக் கூறப்படுகின்றது.

புலிப்பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பிற் கையெடுத் துயிர்ப்பின்
நல்லிணர் வேங்கை நறுவீ கொல்லன்
குருகூது மிதியுலைப் பிதிர்விற் பொங்கி”
(அகம். 202)
“ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும்” (நற். 125)

 

குறடு

கொல்லர்கள் கரியை உலையில் எடுத்துப் போடுவதற்கும், உலையிலிருந்து சூடாக்கப்பட்ட இரும்பை வெளியில் எடுப்பதற்காகவும் பயன்படுத்தும் ஒருவகைக் கருவி ‘குறடு’ என்றழைக்கப்படும்.

தினைப் புனத்திலுள்ள தினைக்கதிர்கள் வளைந்து காணப்படுவது போல கொல்லர்கள் பயன்படுத்திய குறடும் வளைந்து காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து குறடின் அமைப்பையும், சங்க காலத்திலேயே குறடு பயன்பாட்டில் இருந்நமையையும் அறிய முடிகின்றது. சங்க காலத்திலிருந்த உலை,குறடு போன்ற பொருட்கள்  இன்றளவும் பயன்பாட்டில் இருப்பதைக் காணமுடிகிறது.


கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரல்” (குறுந். 198; 1-3)
“மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன

வில், வேல், அம்பு போன்ற கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அணிகலன் தொழில்நுட்பம்

சங்க இலக்கியக் காலத்தில் பொன், இரும்பு முதலியவற்றால் பொருள் செய்வோர் கம்மியர், கொல்லர் என்று அழைக்கப்பட்டனர். பொற்கொல்லர்கள் அணிகலன்கள் செய்வதற்கு ‘அரம்’ என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.  வளையலையும், அகன்ற தொடியினையும் கூர்மையான அரத்தால்  செய்த குறிப்பு காணப்படுகின்றது.

முத்து, மாணிக்கம், பொன் போன்றவற்றால் செய்த அணிகலன்களில் குறை இருந்தால் அதைத்திருத்தியும் அமைத்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

வாளரம் பொருத கோள்நேர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை” (நற். 77)
“முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குறைய கலம்கெடின் புணரும்” (குறிஞ். 13 -14)

பொன்னுக்கு மெருகேற்றி மிக்க ஒளியூட்டி வட்டம், பூத்தொழில், மகரமீன் போன்ற மிக நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய அணிகலன்களைச்  செய்யும் திறன் பெற்றிருந்தனர். பொன் மட்டுமின்றி வெள்ளியாலும் அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளன.

அழலவிர் மணிப்பூ ணனையப்” (ஐங். 232)
“பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகிழிகை” (கலி. 54)
“பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி”
(குறிஞ். 224)

மாற்றுக் குறையாத பொன் ‘நன்பொன்’ என்றழைக்கப்பட்டது. நான்கு

வகையான பொன் வகைகள் பற்றி சிலம்பு கூறுகிறது.

தாவில் நன்பொன் தைஇய பாவை”

ணிகலன்களை அணியுமிடங்களைக் கொண்டு தலையணிகள், காதணிகள், கையணிகள், இடையணிகள், விரலணிகள், காலணிகள் எனப் பலவகையாகப் பிரித்துள்ளனர். சங்க காலத்தில்  எல்லோரும் கைகளில் கடகம், தொடி ஆகிய அணிகளை அணிந்தமையை காணமுடிகிறது.

முத்துக் குளித்தல்

முத்துக்கள்  கிடைக்கக்கூடிய இடமாகக் துறை முகங்கள் இருந்துள்ளன. அதிலும் கொற்கை முக்கிய இடத்தைப் பெற்றது. கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த பரதவர்கள் முத்துக்குளித்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததை இலக்கியங்களில் காணமுடிகிறது. அதோடன்றி  கொடுமணம், பந்தர் ஆகிய ஊர்களில் முத்துக்களைக் கொண்டு அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளன.

முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச்
” (நற். 23)
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” (பதிற். 67)

அணிகலன்களில் பொன்னின் தரத்தை அறிவதற்குக் கட்டளைக்கல் எனப்படும் உரைகல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இத்திறன் எல்லோருக்கும் கை வருவதில்லை. பொன்னின் திறமறிவார் ‘பொலந்தெரி மாக்கள்’ என்றழைக்கப்பட்டனர்.

நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன்னுரை கல்லின் நல்நிறம் பெறூஉம்”
(நற்.25)

“பொலந்தெரி மாக்கள் கலங்கஞ தொழித்தாங்கு”
(சிலப். ஊர் காண் காதை)

ஓவியத்தொழில்நுட்பம்

சங்க கால மக்கள் இயற்கையோடு ஐவகை நிலங்களில் வாழ்ந்தமையால் விலங்குகள், பறவைகள், மரங்கள்  உயிரினங்களின் உருவங்களை ஓவியங்களாக வரைந்துள்ளனர். வீடுகளிலும், அரண்மனைச் சுவர்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

ஓவத்தன்ன வினைபுனை நல்லில்” (அகம். 98)

“நெடுமண் இஞ்சி நீள்நகர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதி”
(பதிற். 68)

தொய்யில் எழுதுதல்

சங்க கால மக்கள் உடல் பாகங்களில் ஓவியங்களை எழுதியுள்ளனர். இவ்வாறு உடலில் ஓவியங்களை எழுதுதல்  தொய்யில் ‘என்றழைக்கப்படுகின்றது.

ஓவியம் வரைபவர்கள் கண்ணுள் வினைஞர் என்றழைக்கப்பட்டனர்.

நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி”
(மதுரை)

புனையா ஓவியம்

புனையா ஓவியம், புனைந்த ஓவியம் என ஓவியம் இருவகையாகக் கொள்ளப்பட்டன. கோடுகள் மட்டும் காணப்படும் ஓவியம் புனையா ஓவியம் எனப்படும்.

புனையா ஓவியம் கடுப்ப புனைவுஇல்
தளிர் ஏர்மேனி தாய சுணங்கின்”
(நெடு. அடி. 147-148)

இசைக்கருவிகள் செய்தல்

திணைக்கு ஏற்ப மக்கள் இசைக்கருவிகள் செய்துள்ளனர். இதனையேத் தொல்காப்பியம் கருப்பொருளில் ஐந்திணைக்குமுரிய யாழ், பண், பறை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.

இசைக்கருவிகளைத்  தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

கேணி

அந்தக்கேணியும் வந்துபெயர் கூவி

-பெருங்கதை

நிலத்தை அகலமாக அகழாமல் சிறிதாகத் துளையிட்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் முறை அன்று வழக்கில் இருந்தது . இத்தகைய ஆழ்துளைக் கிணற்றை, அந்தக்கேணி என்றே இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்தக்கேணி என்பதற்குஉள்ளே மறைந்த நீரையுடைய கிணறு, கரப்பு நீர்க்கேணி என்று பொருள் கூறுவர்.

கறும்புச்சாறு பிழியும் இயந்திரம்

அறைநர் தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த” -பதிற்றுப்பத்து

தீம்பிழி எந்திரம் என்பது இனிய சாற்றை எடுக்கும் கரும்பாலை எந்திரமாகும். பத்தல் என்பது கரும்பு சாறு விழும் பாத்திரமாகும்.

அம்பு உமிழும் இயந்திரம்

நெடுமதில் நிறை ஞாயில் அம்பு உமிழ் அயில் அருப்பம்-மதுரைக்காஞ்சி

உயர்ந்து வளர்ந்த அரண்மணை கோபுரங்களிடையே, வில்விசையை விட உயர்ந்தும்,தாழ்ந்தும் செல்லும் அம்பு உமிழ்கின்ற பொறிகள் இருந்ததைக் காட்டுகிறது.

 தளம்பு- வேளாண் தொழில்நுட்பம்

மலங்குமிளிர் செறுவில் தளம்புதடிந் திட்ட பழன வாளை

-புறநானூறு

உழுகின்ற நிலத்திலுள்ள சேற்றில் வாழும் வாளை மீனை தளம்பு எனும் நிலத்தினை சமன்செய்யும் கருவியில் மாட்டி வெட்டுவதனை அறியமுடிகிறது.

கப்பல் தொழில் நுட்பம்

பிற்காலச் சோழர்களான இராஜராஜ சோழனும், இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதனை வரலாறுகள் பதிவு செய்துள்ளன. கப்பல் கட்டும் கலையைக்,
“கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” (மணிமேகலை, 25 : 24)
என மணிமேகலை கூறுகின்றது.
காற்றின் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர் எனும் உண்மையை,
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!” (புறம் 66)
என்று வெண்ணிக்குயத்தியார் குறிப்பிடுகின்றார்.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்