தொழில் நுட்ப வளர்ச்சி

 

                    தொழில் நுட்ப  வளர்ச்சி

 

நெசவு ஆலைகளே பெருந்தொழிலாக விளங்கி வந்த நிலைமை  மாறி

சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும்

தொழில்களும் தொழிற்சாலைகளும்  பெருகின.

மத்திய, மாநில அரசுகள் இவற்றைவிடப் பெரிய தொழில்களாகத்

துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்குகள் கட்டும் தொழிற்சாலை, இரயில்

பெட்டித் தொழிற்சாலை என்று புதிய கனரகத் தொழிற்சாலைகளை

உருவாக்கின.

தொழில் பேட்டைகள்

தொழில் வளர்ச்சியில் தொழில் பேட்டைகள்,

அரசு நிதி உதவி நிறுவனங்கள், புதிய நகர அமைப்புகள்

குறிப்பிடத்தக்கன.

அம்பத்தூர், கிண்டி, இராணிப்பேட்டை, கப்பலூர், அரக்கோணம்,

மார்த்தாண்டம்,  திருச்சி,  காரைக்குடி,   ஓசூர் முதலிய இடங்களில்

உருவான தொழில் பேட்டைகள் குறிப்பிடத்தக்கன. இவற்றுள்

அம்பத்தூரும் கிண்டியும் மிகவும் பெரியன.

பஞ்சாலைத் தொழில் கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்குகிறது.

மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களிலும் பஞ்சாலைகள் உள்ளன.

கூட்டுறவு நூற்பாலைகள் பல தோன்றியுள்ளன. சர்க்கரை உற்பத்தியும்

புதிய வேளாண்மை முறைகளின் விளைவாகப் பெருகியுள்ளது. கரும்பு

ஆலைத் தொழில் கிராமப்புற முன்னேற்றத்திற்குச் சாலைவசதி,

மின்வசதி, வேலைவாய்ப்பு அளிப்பது ஆகியவற்றில் முன்னேற்றம்

கண்டுள்ளது.

 

டால்மியாபுரம், தாழையூத்து, துலுக்கப்பட்டி, சங்ககிரி துர்க்கம் போன்ற

இடங்களில் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

1976இல் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஏற்பட்டது.

 

போக்குவரத்து ஊர்திகள், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில்

அசோக் லேலாண்டு, ஸ்டாண்டர்டு மோட்டர்ஸ் லிமிடெட் ஆகிய

இரண்டும் குறிப்பிடத்தக்கன.

 

தோல் தொழிலைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சுமார் 400க்கும்

மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்பட்டன. முதன்முதலில் 1964இல்

சென்னையை அடுத்த மாதவரத்தில் தோல் தொழில் வளர்ச்சிக்கு என

முதல் தொழில்பேட்டை உருவாயிற்று.

 

மத்திய அரசு நிறுவனங்கள்

 

சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மத்திய

அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவற்றுள் இணைப்புப் பெட்டித்

 

தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான்

டெலி பிரிண்டர்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், பாரத

கனரகத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்,

உரத்தொழிற்சாலை, எண்ணூர், சேலம் போன்ற இடங்களில் எஃகு

தொழிற்சாலை, பாய்லர் துணைத் தொழிற்சாலை, ஆவடி டாங்க்

தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியன

குறிப்பிடத்தக்கனவாகும்.

 

மின்உற்பத்தி

 

தொழில் வளர்ச்சிக்கு மின்வசதி இன்றியமையாதது. சுதந்திரத்திற்குப்

பின் தமிழகத்தில் 1947இல் பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம்,

1948இல் மேட்டூர் நீர்மின் நிலையம் முதலியன உருவாயின. 1957இல்

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்பட்டது.

 

இவைகளைத் தொடர்ந்து கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி

அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து பெருத்த முன்னேற்றம் அடைந்துள்ளது.

1947இல் சென்னை நகரப் பேருந்துகள் தேசியமயமாக்கும் திட்டம்

தொடங்கி 1948இல் முடிவுற்றது. 1972இல் பல்லவன் போக்குவரத்துக்

கழகம் உருவாயிற்று. அதன்பின் பல புதிய போக்குவரத்துக் கழகங்கள்

உருவாகிப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.

புகைவண்டிப் போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப்

பெற்று வருகிறது. இந்தியா விடுதலை அடைந்த பின்பு நெல்லை-

நாகர்கோயில் இடையேயும், திண்டுக்கல்-கரூர் இடையேயும், சேலம்-

தருமபுரி-பெங்களூரு இடையேயும் புதிய இரயில் பாதைகள்

அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள்

அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன. இதனால் புகைவண்டியில் பயணம்

செய்வோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாயிற்று.

 

 

நன்றி : தமிழ் இணையக்  கல்விக்  கழகம்

இக்கருத்துகள் அனைத்தும்  தமிழ்  இணையக்  கல்விக்   கழகத்திலிருந்து  எடுக்கப்பட்டது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்