நாயக்கர்-விசுவநாத நாயக்கர்-திருமலை நாயக்கர்-மூக்கறுப்புப் போர்

 

                                 நாயக்கர்

நாயக்கர் என்ற சொல்  நாயக் என்னும் வடசொல்லின்  திரிபாகும்.

இச்சொல் முதலில் தலைவன் என்னும் பொருளிலும்  பின்பு

படைத்தலைவனையும்  குறிக்கலாயிற்று.

 

விசயநகரப் பேரரசில் இச்சொல், அப்பேரரசின் பகுதிகளாய் இருந்த

தஞ்சை, செஞ்சி, இக்கேரி, வேலூர், மதுரை ஆகியவற்றை அரசச்

சார்பாக  இருந்து ஆட்சி செய்தவர்களைக்  குறித்தது .

மதுரை நாயக்கர்கள்

மதுரை நாயக்கர்கள் ஆட்சி கி.பி. 1529இல் விசுவநாத

நாயக்கர் என்பவரால் தொடங்கப்பட்டது.  

கி.பி. 1736 இல் மீனாட்சி அரசியுடன் முடிவடைந்துள்ளது.

நாயக்கர் பரம்பரை மதுரை நாட்டில் 207 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது.

மீனாட்சி அரசியின் ஆட்சியோடு விசுவநாத நாயக்கர்

பரம்பரையோடு  விசயநகரப் பேரரசே முடிந்துவிட்டது.

விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 – 1564)

விசயநகரப் பேரரசின் பெருமைக்குரிய   

மன்னர்   கிருஷ்ணதேவராயர் ஆவார்.

இவரது ஆட்சியில் தமிழ்நாட்டு  பொறுப்பை ஏற்றவர்    நாகம

நாயக்கர் என்பவர் ஆவார்.

இவருக்கு வாரிசு இல்லாததால் காசிக்குச் சென்று அங்கு

எழுந்தருளியுள்ள விசுவநாதப் பெருமானை வணங்கி மகப்பேறு

அருளுமாறு வேண்டினார்.

காசி விசுவநாதப் பெருமான் திருவருளால் கி.பி.1495இல் நாகம

நாயக்கருக்கு  விசுவநாத நாயக்கர் பிறந்தார்  .

விசுவநாத நாயக்கர் ஏறக்குறையப் பதினாறு வயதினராய்

இருந்தபோதே  கிருஷ்ணதேவராயரிடம் அரசருக்கு வெற்றிலை

மடித்துக் கொடுக்கும் அரசாங்க ஊழியராக இருந்தார்.

 இளமையிலே பல மொழிகளிலும், கணிதத்திலும், போர்ப்

பயிற்சியிலும், பிறவற்றிலும் சிறந்து விளங்கினார். இதன்

காரணமாகக் கிருஷ்ணதேவராயர் இவரிடம் மிகவும் அன்பு

கொண்டிருந்தார். எனவே விசுவநாத நாயக்கரை மதுரை நாட்டுக்கு

ஆளுநராக நியமித்தார். கி.பி.1529இல் விசுவநாத நாயக்கர்

மதுரையின் ஆட்சியை மேற்கொண்டார்.

தளவாய் அரியநாதர் 

விசுவநாத நாயக்கர் மதுரைக்கு

வரும்போது தளவாய் அரியநாதர் என்பவருடன் வந்தார். 

கிருஷ்ணதேவராயர்  இறந்ததும் விசுவநாதர் மதுரை நாட்டைச்

சீர்திருத்த வேண்டும் சீர்படுத்தினார். பாண்டிய நாட்டுக்கு

உரியதாயிருந்த வல்லத்தை  தஞ்சையுடனும்  திருச்சிராப்பள்ளியை 

மதுரை நாட்டுடன் இணைத்தார்.

இதனால் தஞ்சை நாட்டிற்கும், மதுரை நாட்டிற்கும் திட்டவட்டமான

எல்லை வகுக்கப்பட்டது.

சீர்த்திருத்தங்கள்

திருச்சிராப்பள்ளியில் தெப்பக் குளத்தை வெட்டினர்.

 தாயுமானவர் கோயிலைச் செப்பனிட்டனர்.

காவிரி ஆற்றின் இருமருங்கிலும் கள்ளர்களின் உறைவிடமாயிருந்த

காடுகளை அழித்துச் சாலைகளை அமைத்துக் கள்ளர்

தொல்லைகளை ஒழித்தனர்.

திருவரங்கக் கோயிலைச் சுற்றித்  தெருக்களை அமைத்து, வீடுகளைக் கட்டி அங்கு மக்களை குடியேற்றினர்.

இதனால் மதுரை நாட்டின் வடபகுதியாகிய திருச்சிராப்பள்ளியில் ஒழுங்கும் அமைதியும் நிலவலாயின.

தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் இருந்த காடுகள்

அழிக்கப்பட்டுச் சாலைகள் அமைக்கப்பட்டன.

இதனால் கள்ளர்களின் தொல்லை ஒழிந்தது.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் பழுது

பார்க்கப்பட்டது.

திருநெல்வேலி நகரமும் விரிவாக்கப்பட்டது.

நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டன. பயிர்த்தொழில் இதனால்

வளர்ச்சியுற்றது.

பாளையப்பட்டு முறையை கொண்டுவந்தனர்.

இவர் சுமார் 35 ஆண்டுகள் ஆட்சி செய்தார். தமது 69ஆம் வயதில்

மறைந்தார்.

இவரின் மறைவுக்குப் பின் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் , வீரப்ப

நாயக்கர்  இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் , முத்துக் கிருஷ்ணப்ப

முதலாம் முத்துவீரப்ப நாயக்கர்  ஆகியோர் மதுரையை ஆட்சி

புரிந்தனர்.

திருமலை நாயக்கர் (கி.பி.1623-1659)

மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும்

புகழ்பெற்றவர் திருமலை நாயக்கர் .

திருமலை நாயக்கரின் முழுப்பெயர் திருமலை சவுரி நாயுனு

அய்யுலுகாரு என்பதாகும்.

திருமலை நாயக்கர் முதலில் தம்முடைய அண்ணனான முதலாம்

முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சியில் சில ஆண்டுகள் சின்ன துரையாக

இருந்து ஆட்சி புரிந்து வந்தார்.

முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் சந்ததியின்றி மறைந்தார். வாரிசு

ஏதும் இல்லாததால் அவரது உடன்பிறந்தவரான திருமலை நாயக்கர்

ஆட்சியை ஏற்றார்.

தலைநகரம் மாற்றம்

விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரையே மதுரை நாட்டின்

தலைநகராய் இருந்தது.

முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் மதுரை நகரிலிருந்து தலைநகரைத்

திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார்.

திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆட்சி

புரிந்து வந்தார்.

திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியில்

அமைந்திருந்த தலைநகரை மதுரைக்கு மாற்றினார்..

திருமலை நாயக்கரின் போர்கள்

திருமலை நாயக்கர் ஆட்சிப் பீடத்தில் ஏறியதும் மதுரை நாட்டைப்

பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வதில் முற்பட்டு இரண்டு

கோட்டைகளைக் கட்டினார். பின்பு சுமார் 20,000 வீரர்களைக் கொண்ட

படையைத் திரட்டினார்.

மைசூர் மன்னர் மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கர்

அவரை எதிர்த்துப் போராட வேண்டியவரானார்.

திருவாங்கூர் மன்னர் கேரளவர்மா  மீது படையெடுத்துச் சென்றார் .

விசயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுவுரிமை

மன்னராக விரும்பி, விசயநகரப் பேரரசை எதிர்க்க வேண்டிப் போர்

தொடுத்தார்.

இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதியுடன் போர் செய்தார்.

மூக்கறுப்புப் போர்

 மைசூர் மன்னர் படைகள் மதுரை நாட்டைத் தாக்கி மதுரைக்

குடிமக்களின் மூக்குகளை அறுத்து அவமானப்படுத்தியதால்,

இரண்டாம் முறை பழிக்குப் பழி வாங்க மைசூரின் மீது மூக்கறுப்புப்

போரை நடத்தினார்.

நாயக்கரின் படைவீரர்கள் மைசூர் நாட்டு எல்லைக்குள் புகுந்து,

அங்குள்ள மக்களின் மூக்குகளை அறுத்து மூட்டையாகக் கட்டி

மதுரைக்குக் கொண்டுவந்தனர்.

கலைப் பணிகள்

திருமலை நாயக்கர் மகால் இவர் கட்டிய கட்டடங்களுள்

புகழ்பெற்றது.

புதுமண்டபம், இராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள

வண்டியூரில் அழகிய மையமண்டபத்துடன்

உருவாக்கிய தெப்பக்குளம் ஆகியன அவருடைய புகழை நிலை

நிறுத்துவன .

பொதுநலத்திற்குரிய சாலைகள் அமைப்பதிலும், சத்திரங்கள்

கட்டுவதிலும்  ஆர்வம் செலுத்தினார்.

பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்கள் பலவற்றைக் கட்டிவைத்தார்..

சொக்கநாத நாயக்கர் (கி.பி.1659-1682)

திருமலை நாயக்கர் இறந்தவுடன் அவரது மகன் இரண்டாம்

முத்துவீரப்ப நாயக்கர்  ஆட்சிக்கு வந்தார். இவர் சுமார் நான்கு

மாதங்களே ஆட்சி புரிந்து உயிர் நீத்தார். அவருக்குப் பின்

அவருடைய மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார்.

போர்கள்

தஞ்சை மீது போர் தொடுத்தது, சேதுபதியுடன் போர் புரிந்தது, தஞ்சை

மன்னர் விசயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்தமைக்காகப்

போர் புரிந்தது என்பன.

மங்கம்மாள் (கி.பி. 1689-1706)

இவள் சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவாள்.

சொக்கநாத நாயக்கருக்கும் மங்கம்மாளுக்கும் பிறந்த

மகன் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் ஆவார்.

இவர் தன் தந்தை சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின்

பட்டத்திற்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

இவருடைய மகன் விசயரங்க சொக்கநாதன் ஆவார். இவர்

பிறந்தபோது இவரது தந்தையார் உயிருடன் இல்லை.

எனவே மூன்றாம் திங்களிலேயே குழந்தை விசயரங்க

சொக்கநாதனுக்குப் பட்டம் சூட்டி 

பாட்டி  மங்கம்மாள்  ,குழந்தையின் சார்பாக ஆட்சிப் பொறுப்பை

ஏற்று நடத்தினாள்.

மங்கம்மாளின் ஆட்சி

ஔரங்கசீபு என்னும் மொகலாய அரசனை எதிர்த்த சிவாஜி என்ற

மன்னர் மறைந்து விட்டார்.

இவரது மறைவின் காரணமாகத் தென்னகத்தில் ஔரங்கசீபின்

ஆட்சி ஏற்படலாம் என எண்ணிப் பல அரசர்கள் அவனுடன்

உடன்படிக்கை செய்து கொண்டனர்.  இவற்றையெல்லாம் அறிந்து

கொண்ட மங்கம்மாளும் காலநிலை, மாற்றான் வலிமை அறிந்து

ஔரங்கசீப்புக்குத் திறைப் பணம் செலுத்தி மதுரையைத்

தக்கவைத்துக் கொண்டாள்.

 கிறிஸ்தவம்

மதுரையை ஆண்ட மங்கம்மாள் கிறித்தவ சமயத்தைப் போதித்தவர்களுக்கும், அச்சமயத்தைத் தழுவியர்களுக்கும் பாதுகாப்பளித்தாள்.

 அவர்கள் மீது பரிவு காட்டினாள். மறவர் நாட்டுச் சிறையில் அடைபட்டுச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியாரை விடுதலையடையும்படி செய்தாள்.

இசுலாமும்

மங்கம்மாள் இசுலாமியரின் பள்ளிவாசல் மற்றும் தர்க்கா

கட்டுவதற்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்ததைச் செப்பேட்டுச்

சாசனங்கள் தெரிவிக்கின்றன.

தர்க்காவுக்காகத் திருச்சிக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களை

விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது..

மீனாட்சி அரசி (கி.பி. 1732-1736)

மங்கம்மாளுக்குப் பிறகு அவருடைய பேரன் விசயரங்க சொக்கநாத

நாயக்கர் ஆட்சிக்கு வந்தார்.

இவருடைய மனைவி மீனாட்சி அரசி ஆவாள். இவர்களுக்குக்

குழந்தைப் பேறு இல்லை.

 எனவே தன் கணவர் இறந்ததும் திருமலை நாயக்கரின்

தம்பி குமாரமுத்துவின் வழிவந்த பங்காரு திருமலையின்

மகனாகிய விசயகுமாரன் என்பவனை மகன்மை செய்துகொண்டு

மதுரை நாட்டின் ஆட்சியை மேற்கொண்டாள்.

மீனாட்சி அரசிக்கு நாடாளும் ஆசையிருந்தாலும், மங்கம்மாளுக்கு

இருந்தது போன்ற ஆற்றல் இல்லை.

ஆனால் சந்தாசாகிபு கி.பி.1736இல் மீண்டும் மதுரையைக்

கைப்பற்றும் திட்டத்தோடு திருச்சிக்கு வந்தான்.

மீனாட்சியோடு சாதுர்யமாகப் பேசி ஆட்சிப் பொறுப்பையும், படைப்

பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். பின்பு மதுரையை முழுக்கத்

தன் வசமாக்கிக் கொண்ட சந்தாசாகிபு திருச்சி சென்று மீனாட்சி

அரசியைச் சிறை செய்தான். மீனாட்சிக்கு அப்போதுதான்

சந்தாசாகிபுவின் வஞ்சகம் தெரிந்தது  நஞ்சு குடித்து உயிர் துறந்தாள்.

மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்தது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்