பொருள் செயல் வகை – விளக்கம்

 

 

         பொருள் செயல் வகை – விளக்கம்

குறள் 1: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

       பொருளல்ல தில்லை பொருள்

உரை: மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பொருளைத் தவிர வேறு எதுவும் இல்லை

குறள் 2:  இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

        எல்லாரும் செய்வர் சிறப்பு

உரை: பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக வழக்காக உள்ளது.

 குறள் 3: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்    

         எண்ணிய தேயத்துச் சென்று

 உரை: பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

குறள் 4: அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

        தீதின்றி வந்த பொருள்

உரை: தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.

 குறள்  5: அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்                     

         புல்லார் புரள விடல்

 

உரை: பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்

 

 குறள் 6: உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்  

         தெறுபொருளும் வேந்தன் பொருள்

உரை: வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.

 குறள் 7: அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

        செல்வச் செவிலியால் உண்டு

கலைஞர் விளக்க உரை: அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.

 குறள் 8: குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்  

         றுண்டாகச் செய்வான் வினை

 உரை: தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது .

குறள் 9: செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

        எஃதனிற் கூரிய தில்

உரை: பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.

 குறள் 10: ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்

 ஏனை இரண்டும் ஒருங்கு

உரை: அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்