மீன்கள்- வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ- தமிழ்ஒளி- பொருள்
மீன்கள்- வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ-
தமிழ்ஒளி
(இயற்பெயர்: விசயரங்கம், 21
செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித்
தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.
கவிஞனின் காதல்
நிலை பெற்ற சிலை
வீராயி
மே தின ரோசா
விதியோ வீணையோ
கண்ணப்பன் கிளிகள்
புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்)
கோசலக் குமாரி
வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ-ஏழை
வாழும் குடிசையின் பொத்தல்களோ?
மாநில மீதில் உழைப்ப வர்கள்-உடல்
வாய்ந்த தழும்புக ளோஅவைகள்?
செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம்-அங்குச்
சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ?
சொந்த உரிமை இழந்திருக்கும்-பெண்கள்
சோக உணர்ச்சிச் சிதறல்களோ?
இரவெனும் வறுமையின் கந்தல்உடை-தனில்
எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?
அருந்தக்கூ ழின்றியே வாடுபவர்-கண்ணீர்
அருவித் துளிகளோ வான்குன்றிலே?
காலம் எழுதும் எழுத்துக்களோ-பிச்சைக்
காரர் இதயத்தின் விம்மல்களோ?
நீலக் கண்ணாடியின் கோட்டையிலே-மின்னல்
நெளிவை இறைத்திட்ட அற்புதமோ?
வெய்யில் அரசாங்கம் வாட்டிடினும்-இருள்
வேலிகட்டி யிங்கு வைத்திடினும்
பொய்யில் தொழிலாளர் எண்ணமெலாம்-அங்குப்
பொங்கிக் குமுறி இறைத்தனவோ ?
பொருள்: வானம் என்னும் கடலில் தோன்றும் முத்துக்களா இந்த விண்மீன்கள்.
ஏழை எளிய மக்களின் குடிசைகளில் காணப்படும் ஓட்டைகளா இந்த நட்சத்திரங்கள்.
இந்த பெரிய நிலத்தில் உழைப்பவர்களின் உடலில் ஏற்பட்ட தழும்புகள் தான் அங்கே நட்சத்திரங்களாகி விட்டதா என்கிறார் .
விண்மீன்கள் அங்கே மின்னிக்கிடப்பது பார்ப்பதற்கு நம் நாட்டு மக்களின் கண்கள் எல்லாம் சேர்ந்துத் துடிப்பது போல் இருக்கிறது எனக் கூறுகிறார்.
தங்களின் உரிமைகளை இழந்து காலம் காலமாக தவித்திருக்கும் பெண்களின் உணர்ச்சிகளின் சிதறல்கள் தான் விண்மீன்கள் ஆகி விட்டதா என்கிறார்.
இரவு என்னும் வறுமையின் கந்தல் உடையில் இருக்கும் கண்கள் போல் காட்சி அளிக்கிறதாம் விண்மீன்கள்.
ஏழை எளிய மக்கள் அருந்தக் கூழ் இன்றி வடிக்கும் கண்ணீர்த் துளிகள் அருவியாகி வானம் என்னும் குன்றில் இருந்து வழிவது போன்று காட்சி அழிக்கிறதாம் நட்சத்திரங்கள்.
கால தேவனின் எழுத்துகளா பிச்சைக் காரர்களின் இதயத்தில் இருந்து வெளிப்படும் விம்மலகளா எனக் கேள்வி எழுப்புகிறார்.
வானம் என்னும் நீல நிறக் கண்ணாடியில் மின்னல் இரத்த அற்புதங்கள் தான் இந்த விண்மீன்களாம்.
வெயில் என்னும் அரசாங்கம் மக்களை வாட்டி வதைத்தாலும் இருளால் வேலியைக் கட்டி வைத்தாலும்
தொழிலாளர்களின் உண்மையான எண்ணங்கள் அங்கு இறைந்து
கிடக்கிறதா என்று முடிக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக