கத்தியின்றி ரத்தமின்றி- நாமக்கல் கவிஞர் - பொருள்- விளக்கம்

 

கத்தியின்றி ரத்தமின்றி- நாமக்கல்  கவிஞர் 

பொருள்- விளக்கம்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி)

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி)

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி)

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி)

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே . .(கத்தி)

பொருள்: மகாத்மா காந்தியின் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு பல பாடல்களை எழுதிய காந்தியக்  கவிஞர் என்றழைக்கபடும் நாமக்கல்  கவிஞர் எழுதியப் பாடல் இது. 

கத்தியும்  ரத்தமும்  இல்லாமல் ஒரு யுத்தம் வருகின்றது. 

சத்தியத்தை நம்புகின்ற யாவரும் இதில் கலந்து கொள்ள வாருங்கள் என்கிறார். 

ஓடி  ஒளிந்து குண்டுகளை எறிந்து மற்றவர்களின் உயிரைப் பறிக்காமல் நடக்கும் யுத்தம் ஆகும்.  

இதுவரை யாரும் பார்க்காத புதுமை ஆகும். 

குதிரை யானை என்று எந்த வித படையும் இல்லாத ஒரு போர் ஆகும்.  

எதிரிகள் என்று யாரும் இலாததால் இதில் கொல்லும் ஆசையும் இல்லை. 

யார் மீதும் கோபமும் வெறுப்பும் சாபமும் கூறாமல் போடப்படும் யுத்தம் ஆகும்.

பாவமான செயல்களை செய்யும் ஆசை இல்லாமல் நடக்கக் கூடியதும்    ஆகும் . 

இப்படி ஒரு யுத்தத்தை யாரும் இதுவரை கண்டோ கேட்டோ இருக்க மாட்டார்கள். 

நாம் முன் செய்த புண்ணியத்தின் பலனாகவே இப்போது இதனைப்  பார்க்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறோம. 

காந்தி என்னும் சாந்த மூர்த்தி மக்களுக்குள்  தீமை குன்றி நன்மை பெருகக் கண்டு அடைந்த செம்மையான நெறி என்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்