சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம் -பொருள் – விளக்கம்

 

   சீறாப்புராணம் -  மானுக்குப்  பிணை நின்ற படலம் -பொருள் – விளக்கம்

தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி , அபுல்காசிம் ஆகியோரின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும். இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 45 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் என நூல் முழுவதும் 92 படலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன.

 

1.   குயினிழல் பரப்பச் செவ்விக் கொழுந்தொடை நறவஞ் சிந்தும்

     வயிரவொண் வரையின் விம்மி வளர்ந்ததிண் புயத்து வள்ளல்

     செயிரறு மறையின் றீஞ்சொற் செழுமழை பொழிந்து தீனின்

     பயிர்வளர்ந் தேறச் செய்து பரிவுட னிருக்கு நாளில்.

 

பொருள் : மேகங்கள் குடையாக நின்று நிழலைக் கொடுக்கும் சிறப்பை உடையவர் நபிகள் நாயகம். அழகிய செழிய பூக்கள் தேனைச் சிந்தும் வயிரம் போன்ற  மலையை விட  வலிமையான தோள்களையுடையவர்  வள்ளலான நமது நாயகம் .அவர் வேதத்தினது இனிய சொற்களை மழையைப்போல  பொழிந்து (தீன்) இஸ்லாம்  மார்க்கப் பயிரை வளர்ந்து உயர்வடையச்  செய்து அன்புடன் இருந்து வந்தார். அத்தகைய ஒரு நாளில் (கீழ்க் கண்டவாறு நிகழ்ந்தது) .

 

2.. அரியினஞ் செறிந்த போன்ற அறபிகள் குழுவி னாப்ப

     ணொருதனிச் சீய மொப்ப வுடையவன் றூதர் செல்வத்

     திருநகர்ப் புறத்து நீங்கிச் செழுமுகின் முடியிற் றாங்கி

     மருமலர் செறியுஞ் சோலை சூழ்ந்ததோர் வரையைச் சார்ந்தார்.

 

பொருள் : செம்மறி யாட்டுக் கூட்டம் நெருங்கியதைப் போன்ற அறபிகளின் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற சிங்கத்தைப் போன்று காட்சி அளித்தார். இறைவனின்  தூதுவராகிய நாயகம்  அழகிய மக்கமா நகரத்தினது எல்லையை விட்டு நீங்கினார். அவர்  மேகங்களைத் தனது சிகரத்தின்கண் சுமந்து வாசனை தங்கிய பூக்கள்  சூழப்  பெற்ற சோலைகள் நிறைந்த மலையைச் சென்று  சேரந்தார்.

3 . கொன்றையுங் குருந்துங் கார்க்கோற் குறிஞ்சியும் வேயுந் தெற்றித்

     துன்றிய நிழலு நன்னீர் சொரிதரு மிடமுஞ் செந்தேன்

     மன்றலொண் மலரு நீங்கா வனந்திகழ் வரையின் கண்ணே

     சென்றன ரெறிக்குங் காந்திச் செவ்விமெய் முகம்ம தன்றே.

 

 பொருள் : அவ்வாறு மலையைச்  சார்ந்து நான்கு  பக்கங்களிலும் பிரகாசிக்கும் அழகைப் பொருந்திய தமேனியை உடைய நாயகம் கொன்றை மரங்களும், எலுமிச்ச மரங்களும், கரிய கொம்புகளையுடைய குறிஞ்சி மரங்களும், மூங்கில்களும்,  தம்மில் ஒன்றோடொன்று நெருங்கி வளர்ந்து  நிழலையும் , நல்ல நீரைப் பொழிகின்ற இடங்களையும் சிவந்த தேனினது வாசனையைக் கொண்ட பூக்களையும்  மாறாத சோலைகள் நிறைந்த  அந்த மலையினிடத்துப் போனார்கள்.

 

4. வனந்திரி விலங்கு மாய்த்து வன்றசை வகிர்ந்து வாரித்

     தினந்தொறுங் கோலிற் கோலித் தீயிடை யமிழ்த்திக் காய்த்தித்

     தனந்தனி யிருந்து தின்று தன்றசைப் பெருக்க லன்றி

     யனந்தலிற் பொழுதும் வேறோ ரறிவென்ப தறிந்தி லானே.

 

பொருள்: அங்கு  தினமும் காட்டின்கண் திரிகின்ற மிருகங்களைக் கொன்று வலிமையான  அதன் மாமிசத்தை அறுத்து கொம்புகளில் குத்தி தீயின்கண் அமிழ்த்திச்  சுட்டு  தான் மட்டுமே உண்டு தனது உடலை வளர்ப்பதைத் தவிர  ஒரு நொடிக்கூட வேறு சிந்தனை என்பதை அறியாதவன்.

 

5. காலினிற் கழலு நீண்ட கரியகா ழகத்தின் வீக்கும்

     பாலினில் வலையுங் கையிற் பருவரைத் தனுவுங் கூருங்

     கோல்வெறி துணியுந் தோளிற் கூன்பிறை வாளு மென்மை

     வாலுடைப் பறவை சேர்த்துங் கண்ணியு மருங்கிற் கொண்டோன்.

 

     பொருள் : அவன் , காலில்  செருப்பையும், அரையில் நீண்ட கந்தலையும்  பக்கத்தில் வலையையும்,கைகளில்  கோதண்டத்தையும், முதுகில் அச்சத்தை தருகின்ற கூரிய அம்பினது தூணியையும், தோளினிடத்து வளைந்த இளஞ் சந்திரனை நிகர்த்த வாளையும் , இடையில் மென்மையான பறவைகளைப்  பிடிக்க கண்ணிகளையும் கொண்டிருந்தான்.

 

6. குறுவெயர்ப் புதித்த மெய்யுங் கொழுந்தசை மணத்த வாயும்

     பறிதலை விரிப்புங் கூர்ந்த படுகொலை விழியு மாக

     வறபினி லறபி வேட னடவியிற் றொடர்ந்தோர் மானைக்

     கறுவொடும் வலையிற் சேர்த்திக் கட்டிவைத் திருப்பக் கண்டார்.

 

பொருள்: அது மட்டும் இன்றி , வியர்வையானது காணப்படுகின்ற தோற்றத்தையும்,மாமிசம் மணக்கின்ற  வாயினையும் , கலைந்த தலை முடியையும் கொலைத் தன்மை உடைய  கண்களுமாக அறபி நாட்டில் உள்ள ஓர் அறபி வேடன் ஆன அவன்  காட்டிற் சென்று ஒரு மானைக் கோபத்துடன் தனது வலையின் கண் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தங்களின் கண்களினாற் நபிகள் பார்த்தார்கள்.

 

7. குழைகுழைத் தெறியுஞ் செந்தேன் கொழுமலர்க் காவை நோக்கார்

     பொழிமலை யருவி நோக்கார் புறத்துநன் னிழலை நோக்கார்

     செழுமுகிற் கவிகை வள்ளல் செறிதரு மீந்தின் செங்காய்

     மழையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்.

 

பொருள்: அவ்வாறு அவனைப் பார்த்த செழிய மேகக் குடையையுடைய வள்ளலான நமது நாயகமவர்கள் குழைகளைக் குழைத்து வீசுகின்ற   சிவந்த தேனை யுடைய பூகளைக் கொண்ட  சோலையைப் பார்க்கவில்லை. அந்த மலையில்  சொரிகின்ற அருவிகளைப் பார்க்கவில்லை . பக்கத்திலுள்ள நல்ல நிழலைப் பார்க்கவில்லை . நெருங்கிய ஈச்ச  மரங்களின்  காய்களையும் பார்க்காமல்  அம்மரங்கள் மழைபோலும் தேனைப் பொழிவதையும்  பார்க்கவில்லை . அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் பக்கமாய் போனார்கள்.

 

8 . அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி

     சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும்

     வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப்

     பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே.

 

 பொருள்:  அவர்கள் அவ்வாறு போக ,கட்டுண்டு கிடந்த  மானானது கருணை நிறைந்த கண்களையும் , அழகு பிரகாசிக்கின்ற முகத்தையும் , கஸ்தூரி வாசனை கமழும் மெய்யினையும் , மேகக் குடையையும் இவர் இங்கு வருவது பரிசுத்தமான நபிகள்  தாமென்று தனது மனதில் உணர்ந்து இவ்வாறு சொல்ல ஆரம்பித்தது.

 

 9 . நெடியவன் றூதர் வந்தார் வேடனா னிலத்தி னந்த

     முடலுயிர்க் கிறுதி யில்லை யுழையினத் தோடுஞ் சேர்ந்து

     கடிதினிற் கன்றுங் காண்போ மெனமுகம் மதுவைக் கண்ணா

     னொடிவரை யிமைமூ னோக்கியே கிடந்த தன்றே.

பொருள்: இவ்விடத்தில் நெடியவனாகிய அல்லாவின் தூதுவர் நாயகம் நபிமுகம்மது வந்தார்கள். இனிப் பூமியின்கண் இவ்வேடனால் நமது உடலுக்கும் உயிருக்கும் யாதொரு முடிவும்  இல்லை. நாம் நமது கன்றையும் கண்களினாற் பார்ப்போமென்று எண்ணி  நபிகள்  பெருமானவர்களை  ஒரு நொடி நேரம் வரை தனது இமைகளை மூடாமல் கண்களினாற் பார்த்துக் கொண்டே கிடந்தது.

10 . பொருப்பிடைத் துறுகற் சார்பிற் பொரியரைத் தருவி னீழன்

     மருப்புடைப் படலைத் திண்டோண் மன்னவ ருடனும் புக்கி

     நெருப்பிடைத் தசைவா யார்ந்து நின்றவே டனையுஞ் செம்மான்

     றிருப்புதற் கருங்கட் டுண்டு கிடப்பதுஞ் சிறப்பக் கண்டார்

 

   பொருள்:   அவ்விதம் அந்த மான் கிடக்க, அந்த மலையின்கண் நெருங்கிய கல்லின் சார்பில் நபிகள் நாயகம்  புகுந்து நெருப்பின்கண் வாட்டிய மாமிசத்தை வாயினால்  அருந்திக் கொண்டு நின்ற அந்த வேடனையும் செந்நிறத்தையுடைய மானானது திரும்ப இயலாமல்  கட்டுண்டு கிடப்பதையும்  பார்த்தார்கள்.

 

11. இடைநிலத் துருக்கி விட்ட விரசிதம் பரந்த தென்ன

     மடிசுதை யமுதஞ் சிந்த வடிக்கணீர் பனிப்பத் தேங்கு

     முடலகந் துருத்தி யொப்ப நெட்டுயிர்ப் புயிர்த்துக் காலிற்

     றுடரொடுங் கிடப்பத் தூயோன் றூதுவ ரடுத்து நின்றார்.

 

 பொருள்:   அவ்வாறு பார்த்த நபிகள் அவர்கள் மானிடமிருந்து பூமியினிடத்து  உருக்கிவிட்ட வெள்ளியானது பரவியதைப் போலும் மடியினின்றும் வெள்ளிய பாலானது சொரியவும், கூர்மையான கண்களின் நீரானது சிந்தவும், கலங்கிய உடலும்  மனமும் காற்றூதும் துருத்தியைப் போன்று பெருமூச்சு விட்டுக் காலின்கண் கட்டிய கயிற்றினோடும் கிடக்க அதன் அருகில் சென்று நின்றார்கள்.

 

12 . கொடியடம் பிலையை மானும் குளம்பின்மேற் சுருக்கும் புள்ளிப்

     பொடியுடற் பதைப்பும் வீங்கிப் புதையுநெட் டுயிர்ப்பு நோக்கி

     நெடியவ னிறசூ லுல்லா நெஞ்சுநெக் குருகிக் கானின்

     பிடிபடு மானின் றன்பாற் பேரருள் சுரப்ப நின்றார்.

 

பொருள் : அன்றியும், அடம்பங் கொடியினது இலையை நிகர்த்த குளம்பின் மீது கயிற்றினது கட்டையும் புள்ளியை யுடைய சிறிய தேகத்தின் பதைப்பையும், ஓங்கிப் புதையா நிற்கும் பெரு மூச்சையும் பார்த்து நெடியவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் றசூல் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் மனமானது மிகவு மிரங்கிக் காட்டின்கண் பிடிபட்ட அம்மானினிடத்து பெரிய கிருபையானது அதிகரிக்கும்படி நின்றார்கள்.

 

13. கதிர்விரி கபீபு நிற்பக் கானகத் தருக்க ளியாவும்

     புதுமல ரலர்த்திச் செந்தேன் பொழிவமான் வருத்த நோக்கி

     விதிர்சினைக் கரங்கள் சாய்த்து மென்றழைக் கூந்தல் சோர

     மதியழிந் திரங்கிக் கண்ணீர் வடிப்பன போன்ற தன்றே

 

பொருள் :பிரகாசத்தையுடைய  நபிகள்  அவர்கள் அவ்வாறு அங்கு நிற்க, அக்காட்டினது மரங்களனைத்தும் புதிய பூக்களை அலரும்படி செய்து சிவந்த தேனைச் சிந்துவது, அந்த மானின் வருத்தத்தைப் பார்த்து அசைகின்ற கிளைகளான கைகளைச் சாய்த்து மெல்லிய இலைகள் என்னும் கூந்தலானது சோரும் வண்ணம் து அழுது கண்ணீர் சொரிவதைப் போன்று காட்சி அளித்தது.

 

14. குலத்தொடும் பறவை தத்தங் குடம்பையிற் புகுதன் மானை

     நிலத்திடைக் கிடத்திக் கட்டி நின்றவேட் டுவனைக் கண்ணா

     னலத்தொடுங் காண்ப தாகா தெனநடு நடுங்கி யுள்ள

     முலைத்தறப் பெடையி னோடு மொளிப்பன போன்ற தன்றே.

 

      பொருள் : அதோடு மட்டும் இன்றி , பறவைகள் தங்கள் கூட்டத்தோடும் தம்  கூடுகளில் போய் நுழைவது , அந்த மானை கட்டி பூமியின் கண் கிடத்திய அவ்வேடனைக் கண்களால் பார்ப்பதும்  ஆகாதென்று மிகவும் நடுங்கி மனமானது உலைவுற்று தங்களின் பெடைகளோடும் ஒளிந்து கொள்வதைப்  போன்று காட்சி அளித்தது. .

 

15. ஏட்டலர் நறவ மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம்

     வாட்டமின் முகம்ம திங்ஙன் வந்தனர் வருந்து மானை

    மீட்டனர் வேட னீமான் விரும்பினன் பயங்க டீர்த்தார்

     கூட்டுறைந் தொளித்தன் மாற்று மெனப்பல கூய போலும்.

 

பொருள் : அன்றியும், இதழ்களைக் கொண்ட பூக்களில் இருந்து  தேனை அருந்திப் பாடுகின்ற வண்டுகளின் இசையானது  கேட்பதற்கு, இவ்விடத்திற்கு வாட்டமற்ற நமது நபிகள் நாயகம் வந்தார்கள்.  துன்பப்படுகின்ற அம்மானை மீட்பார்கள். அந்த வேடனும் இசுலாமை விரும்புவான்  எனவே நீங்கள் உங்கள் பயங்களை   விடுத்து கூடுகளில் தங்கி ஒளிப்பதை மாற்றுங்களென்று கூவியதைப் போன்று இருந்தது .

 

16 . நிறைவளஞ் சுரந்த கானி னின்றநந் நபியை நோக்கிக்

     குறியவா லசைத்து நீண்ட கொழுங்கழுத் துயர்த்தி நீட்டி

     மறைபடா மதியே வண்மை முகம்மதே யென்னப் போற்றித்

     தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும்.

 

பொருள் : நிறைந்த வளங்கள் கொண்ட அக்காட்டினிடத்து நின்ற நமது நபிகள்  நாயகம் அவர்களைக் கண்ட  அந்த மானானது, தன் குறிய வாலை ஆட்டி நீண்ட  செழித்த  கழுத்தை உயர்த்தி  நீட்டி, ஒரு காலத்திலும்  மறையாத சந்திரன் போன்ற நபிகள் அவர்களே ,  முகம்மது என்னும் திருநாமத்தையுடையவரே! என்று சொல்லித் துதித்துத் தயங்காது எல்லோருக்கும்  கேட்கும் வண்ணம் சலா மெடுத்துச் சொல்லிக் கூறத் தொடங்கியது.

 

17. வல்லவ னுண்மைத் தூதே மன்னுமா நிலத்தின் மாந்த

     ரல்லலை யகற்றி வேதத் தறநெறி பயிற்றிச் சொர்க்கத்

     தில்லிடைப் புகுத்தப் பூவி னிடத்தினி லுதித்த கோவே

     யொல்லையி னெனது சொற்கேட் டுவந்தரு ளளிக்க வேண்டும்.

 

பொருள்: வல்லவனான அல்லாவின் உண்மையான தூதுவரே! மகத்தான இப்பூமியினது மாந்தர்களின் துன்பங்களை அழித்துப் இசுலாமிய வேதத்தின் புண்ணிய மார்க்கத்தைக் கற்பித்துச் சொர்க்கத்தில் புகுத்தும்படி இவ்வுலகத்தில் அவதரித்த அரசரே எனது வார்த்தைகளை விரும்பிக் கேட்டு விரைவில்  அருளல் வேண்டும் என்று கூறியது .

 

18. என்னுயி ரெனநீங் காத வினமுமென் கலையுங் கன்றுந்

     துன்னிடத் திரண்டு பைம்புற் றுறைதொரு மேய்ந்து நாளு

     முன்னிய பசிக டீர்த்தோர் மிருகங்கட் குயிர்கொ டாமன்

     மன்னிய மலையின் சார்பு மனப்பய மகற்றி வாழ்ந்தேம்.

 

பொருள்: எனது உயிரைப் போலும் பிரியாத என் கூட்டமும், ஆண்மானும் குட்டியும் நெருங்கி  ஒன்று சேர்ந்து பசிய புற்களையுடைய இடங்களில் எல்லாம் மேய்ந்து தினமும்  எங்கள்  பசிகளைப் போக்கி எந்த ஒரு மிருகங்களுக்கும் உயிரைப்  பறி கொடுக்காமல்  மனதின்  கண்ணுள்ள அச்சங்களை ஒழித்துப் பொருந்திய மலையினது சார்பில் வாழ்ந்திருந்தோம்.

 

19. இருநிலத் தாசைக் காயோ ரிளங்கன்றென் வயிற்று றாதான்

     மருவிய கலையு நானும் வருத்தமுற் றிருக்குங் காலம்

     பெருகுதீன் முகம்ம தேநும் பெயரினைப் போற்றல் செய்தே

     னுருவமைந் திளஞ்சூன் முற்றி யுதரமும் வளர்ந்த தன்றே.

 

 

    பொருள்:   பெரிய இப்பூலோகத்தில்  ஆசைக்காய் ஓர் இளங்கன்றானது எனது வயிற்றின்கண் வந்து உருவாகாததால்  எனது ஆண்மானும் நானும் துன்பமடைந்து இருந்தோம். அந்நேரத்தில் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தையுடைய நாயகம் நபிமுகம்மது அவர்களே! உங்களின் திருநாமத்தைத் துதி செய்தேன். உடனே எனது வயிற்றில் கருத்தங்கி இளம் பருவத்தைக் கொண்ட சூலானது முற்றி வயிறும் வளர்தலுற்றது.

 

20. தனியனென் னுயிருங் காக்குங் கலையுயிர் தானு மொன்றா

     யினிதினொன் றாய தென்ன விளங்கன்றொன் றீன்றே னின்ப

     நனிகளி கடலி லாழ்ந்து நறுமலை யிடத்திற் சேர்ந்து

     துனிபல வகற்றி னேன்முன் சூழ்வினை யறிகி லேனே.

 

 பொருள்:    எனது உயிரும் என்னைக் காக்கா நிற்கும் கலையினது உயிரும் ஒருங்கு சேர்ந்து இனிமையுடன் ஓர் உயிரானதைப் போல நான் ஒரு இளங்கன்றைப் பெற்றேன். அதனால் இன்பமிகுத்த மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கி வாசனை தங்கிய மலையினிடத்துச் சேர்ந்து பல துன்பங்களையும் ஒழித்தேன். ஆனால் என்னைச் சூழ்ந்திருக்கும் தீவினை  பற்றி அறியாமல் இருந்து விட்டேன் என்றது.

21. உள்ளுயி ரனைய கன்று மொருத்தலு மியானு மோர்நாள்

     வெள்ளமொத் தனைய மானி னினமுமோர் வெற்பின் சார்பி

     னள்ளிலை யள்ளி வாய்க்கொண் டரும்பசி தடிந்து நீருண்

     டெள்ளள வெனினு மச்ச மின்றிநின் றுலவு நேரம்.

 

 பொருள்:   ஓர் நாள் எனது உடலில் பொருந்தியிருக்கும் உயிரை ஒத்த குட்டியும் ஆண்மானும் நானும் கடலைப் போன்ற மான் கூட்டங்களும் ஓர் மலையினது சார்பில் வாயினால் நெருங்கிய இலைகளைக் கவ்வி எடுத்து பசியைக் குறைத்துத் தண்ணீர் குடித்து எள்ளளவும்  பயமில்லாமல் நின்று உலாவுக் கொண்டிருந்தோம்.  அந்த சமயத்தில்.

22. அத்திசைக் கெதிரின் மேல்பா லடுத்தொரு குவட்டின் கண்ணே

     மத்தகக் கரியு மாய்க்கும் வரிப்புலி முழக்க நீண்ட

     குத்திரத் தசனித் தாக்கின் குவலய மதிரக் கேட்டுத்

     தத்தியெத் திசையுந் திக்குந் தனித்தனி சிதறி னேமால்.

   

பொருள்:  நாங்கள் நின்றிருந்த அந்தத் திசைக்கு முன்னாற்  மேற்பக்கத்தில் ஒரு மலையின்கண் மத்தகத்தைக் கொண்ட யானையையும் வதை செய்யும் ஓர் வரிப் புலியினது முழக்கமானது  நீண்ட இடியினது ஓசையைப் போல இவ்வுலகமானது அதிரும்படி காதுகளில்  கேட்டு எந்தத் திசை என்று அறியாது  தனித்தனியாக  சிதறினோம் .

 

23. கூடிய தூறும் பாரிற் குளித்திடக் குதித்து வல்லே

     யோடிய திசையி னொன்றை யொன்றுகாண் கிலதா யானும்

     வாடிய மனத்தி னோடு மறியையு நோக்கா தாக்கை

     யாடியிற் றுரும்பாய் வேறோ ரடவியி னடைந்திட் டேனால்.

 

 பொருள்:   புதர் போன்ற சிறு செடிகளும் பூமியின்கண் படியும்படிகுதித்து  விரைவாய் அவ்வாறு ஓடிய  திசைகளில் ஒன்றையொன்று பாராததால் நானும் வாட்டமடைந்த இதயத்துடன் எனது குட்டியையும் பாராது உடலானது சமுத்திரத்திலகப்பட்ட துரும்பைப் போன்று வேறு ஒரு  காட்டின்கண் போய்ச் சேர்ந்தேன்.

 

24. அடவியி னடையுங் காலை யவ்வுழைக் கரந்திவ் வேடன்

     றுடரிடும் வலையைச் சுற்றிச் சுருக்கிடப் புலிவாய்த் தப்பி

     மி்டலரி யுழையிற் சிக்கி மிடைந்தென மிடைந்து செவ்வி

     யுடலுயிர் பதைப்பத் தேம்பி யுணர்வழிந் தொடுங்கா நின்றேன்.

 

  பொருள்:  அவ்வாறு அந்தக் காட்டின்கண் போய்ச் சேர்ந்த சமயத்தில் அவ்விடத்தில் இந்த அரபி வேடன் ஒளிந் திருந்து  கயிற்றினால் உண்டாகிய தனது வலையைச் சுற்றி சுருக்கினான்.  புலியின் வாயில் இருந்து  தப்பி வலிமையைக் கொண்ட சிங்கத்தின்  இடத்திலகப்பட்டுக் கொண்டதைப் போலும் வருத்தமடைந்து அழகிய தேகமும் ஆவியும் பதைக்கும் வண்ணம் அழுது அறிவழிந்து ஒடுங்கினேன்.

25. வலையிடத் துறைந்த தென்ன மகிழ்ந்தெழந் தோடி வந்து

     நிலைபெற வடுத்துச் சாய்த்து நின்றெனை நோக்கி யாகத்

    துலைவுறும் பசிக்கின் றென்பா லுற்றனை யென்னக் கூறிச்

   சலைகணை நிலத்திற் சேர்த்தித் தெரிந்தொரு பாசந் தொட்டான்.

 

பொருள்: அவ்வாறு நான்  ஒடுக்கமுற்று இருக்கும் போது  அவ்வேடன், மானானது நமது வலையினில்  மாட்டியது என்று களிப்புற்று எழுந்து ஓடி வந்து பக்கத்தில் நின்று என்னைச் சரித்துப் பார்த்து  அவனது உடலின்கண் நிலவும்  பசிக்காய் நான்  இன்றைய தினம் அவனிடத்தில் வந்து சேர்ந்தாய் எ சல்லித் தனது வில்லையும், அம்பையும் பூமியின்கண் பொருந்த வைத்து விட்டுக் கையினால் ஒரு கயிற்றைத் தீண்டித் தெரிந்து எடுத்தான்.

26. திருக்கற நாலு தாளுஞ் செவ்விதிற் கூட்டி யங்கை

     வரிக்கயி றதனாற் சுற்றி மாறுகொண் டீழ்த்துக் கட்டிக்

     கரிக்கர மென்ன நீண்ட கரத்தினாற் றாங்கி முன்னர்ச்

     சுருக்கிய வலையை நீக்கித் தோளினி லெடுத்துக் கொண்டான்.

பொருள்: நான்கு பாதங்களையும்  சிறப்பாய்ச் சேர்த்து எடுத்து அழகிய வரியைப் பெற்ற கயிற்றினால் மாறுகொண்டு சுற்றி இழுத்துக்கட்டி யானைத் தும்பிக்கையைப் போலும் நீண்ட தனது கைகளால் தாங்கி ஆதியிற் சுருக்கிய வலையை விடுத்து  வேறுபடுத்தித் தோளின்கண் எடுத்துக் கொண்டான்.

27. கவைமுனைக் கோட்டுச் செவ்விக் கலையுட லுயிரு மீன்ற

     நவியுட லுயிரு மோர்மா னுடன்கொண்டு நடப்ப தொத்துச்

     சவிபுறந் தவழுங் கோட்டுச் சார்பிலிவ் வனத்தின் கண்ணே

     சுவையறு மொழியா னென்னைச் சுமந்திவ ணிறக்கி வைத்தான்.

    பொருள்:  இரக்கமற்ற வார்த்தைகளை உடையவனான இவ்வேடன் அவ்விதம் எடுத்துக் கொண்டு  முனையினது கொம்புகளையுடைய அழகிய என் கலைமானின் உடலையும் உயிரையும் நான் பெற்ற கன்றினது உடலையும் உயிரையும் ஒரு மானுடன் கொண்டு செல்வதை நிகர்த்து என்னைச் சுமந்து வந்து மலையினது சார்பில் இச்சோலையினிடத்து இறக்கி வைத்தான்.

28. கட்டுடன் கிடந்து நெஞ்சிற் கவலையுள் ளழிந்து மாறா

     நெட்டுயிர்ப் பெறிந்து சோர்ந்து நிலத்திடைக் கிடக்கு நேரம்

     வட்டவெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே யும்மைத்

     திட்டியிற் றெரியக் கண்டேன் றிடுக்கமுந் தீர்ந்த தன்றே.

பொருள் : அந்த அறபி வேட்டுவன் அவ்வாறு கட்டிய கட்டோடு நானிருந்து  நெஞ்சமழிந்து நீங்காத பெருமூச்சு விட்டு மெலிந்து பூமியின்கண் கிடக்கின்ற சமயம் வள்ள லாகிய முகம்மதென்னும்  திருநாமத்தையுடைய நபிகட்பெருமானே! உங்களை எனது கண்களில் தெரியும்படி பார்த்தேன். எனது துன்பமும் நீங்கிற்று.

 

29. எனவிவை யுரைத்துப் பின்னு மெழினபி முகத்தை நோக்கி

     மனநிலை வாக்கி னோடு முகம்மதே யென்னப் போற்றிப்

     புனமுறை விலங்கின் சாதி யாயினுந் தமியேன் புன்சொற்

     றனையருட் படுத்திக் கேட்பீ ரென்றுரை சாற்றிச் சாற்றும்.

பொருள்:  மேற்கண்டவாறு இவைகளைக் கூறிப் பின்னரும் அழகிய நபிமுகம்மது அவர்களின் வதனத்தைப் பார்த்து மன நிலைமையைப் பெற்ற வாக்குடன் முகம்மதே  என்று சொல்லித் துதித்து நான் மிருகச் சாதியானாலும் என்னுடைய கீழ்மையான வார்த்தைகளைக் கிருபை வைத்துக் கேட்பீர்களாக வென்று கூறிச் சொல்லத் தொடங்கியது.

30. இச்சிலை வேடன் கையி னிறத்தலை யுளத்தி லெண்ணி

     யச்சமுற் றுரைப்ப தன்றிவ் வவனியிற் சீவ னியாவு

     நிச்சய மிறத்த லல்லா லிருப்பவை நிலத்தி னுண்டோ

     முச்சகம் விளக்குந் தீனின் முதன்மறை முறைமைச் சொல்லோய்.

பொருள் : வானுலகம் பூவுலகம் பாதாள உலகமென்னும்  மூன்று உலகங்களிலும் நிலைபெற்று  நிற்கும் தீனுல் இஸ்லாம் என்னும் மார்க்கத்தினது முதன்மயான வேதத்தின்  வசனங்களை உடைய முகம்மது நபியே! நான் இந்த மலையினது வேட்டுவன் கையால் இறப்பதை மனதின் கண்நினைத்து  பயந்து கூறுவில்லை , இந்த உலகத்தில் உயிர்கள் அனைத்தும் நிச்சயமாக இறப்பதே அல்லாமல் அழியாமல் இருப்பவைகள் பூமியினிடத் துள்ளனவா? இல்லை.

31. கலையெனப் பிரிவி லாது கண்ணிமை காப்ப தென்ன

     வலைவறக் காப்பச் சின்னா ளவனியிற் கலந்து வாழ்ந்தேன்

     குலவிய மறியு மீன்றேன் குறித்தினி யிருப்ப தென்கொ

     லிலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன் மன்னோ.

    பொருள் : அன்றியும்  எனது கலைமானும் என்னை விட்டு  நீங்காது கண்களை இமை காப்பது போலும் துன்பமறக் காத்து வரசிறிது  காலம் இந்தப் பூமியின்கண் கலந்து வாழ்ந்தேன். அவ்விதம் வாழ்ந்து ஓர் கன்றையும் பெற்றேன். இனி இவ்வுலகத்தினிடத்து மனசின்கண் சிந்தித் திருப்பது யாது? ஒன்றுமில்லை. இலையினது நுனியில்  தங்கிய பனியை நிகர்த்த இந்த வாழ்க்கை இறந்து படுவதே நல்லது.

32. அடவியிற் கிரியில் வீணி லவதியுற் றிறந்தி டாமல்

     வடிவுடைக் குரிசி லேநும் மலர்ப்பதச் செவ்வி நோக்கிப்

     படுபரற் கானில் வேடன் பசிப்பிணி தீர்ப்ப தாக

     வுடலிறத் திடுத லெவ்வெவ் விறப்பினு முயர்ச்சி மேலோய்.

 பொருள் : அழகையுடைய குரிசிலே! மேன்மையைக் கொண்ட முகம்மதென்னும் நபிகட்பெருமானே! காட்டி னிடத்தும் மலையினிடத்தும் வீணாகத் துன்பப்பட்டு இறந்து போகாமல் உங்களது தாமரை மலரைப் போன்ற திருவடிகளின் சிறப்பைப் பார்த்து விட்டேன்.  மிகவும் பரற்கற்களை யுடைய கானகத்தினது வேட்டுவன் பசி யாகிய நோயைத் தீர்ப்பதற்காகச் இறத்தல் எந்தெந்த இறப்பைப் பார்க்கிலும் மிக உயர்ந்தது.

 

33. வரிப்புலி முழக்கங் கேட்டு மானினஞ் சிதறித் தத்தந்

     தரிப்பிட மறியா தொன்றுக் கொன்றுடன் சாரா தெங்கு

     முரைப்பரி தென்னப் போந்த தாலென தொருத்த றேடி

     யிரைப்பறா நெடுங்கான் போய்ப்போ யிருந்ததோ விறந்த தேயோ.

   பொருள் : ஆயினும் வரிப்புலியினது முழக்கத்தைக் காதுகளினாற் கேள்வியுற்று மான் கூட்டமானது சிதறி  தத்தம் இருப்பிடத்தை உணராமலும் ஒன்றுக் கொன்று பொருந்தாமலும் தப்பித்து எவ்விடத்தும் போனதினால் எனது ஆண்மான் என்னைத் தேடி நெடிய காட்டினிடத்திற் சென்று சென்று தங்கி யிருந்ததோ? அல்லது இறந்து போயிற்றோ தெரியவில்லையே என்று கூறியது.

34. ஒல்லையி னோடி நீங்கா தொருத்தலின் றளவு மோந்து

     புல்லினைக் கறியா நீரும் புசித்திடா திருந்து தேடி

     யல்லலுற் றழுங்கிக் கண்ணி னருவிநீர் சொரிய வாடிப்

     பல்லவ மெரியிற் புக்க தெனவுடல் பதைக்கு மன்றே.

பொருள்: அன்றியும், அவ்வாறு அம்மானானது இன்று முழுவதும் விரைவாக ஓடி புற்களை உண்ணாமலும் தண்ணீருங் குடியாமலும் தங்கியிருந்து என்னைத் தேடித் துன்பமுற்று அழுது கண்களின் அருவியாகிய நீரானது சிந்தும் வண்ணம் மெலிந்து நெருப்பினகம் விழுந்த தளிரைப் போலும் பதைத்து நிற்கும்.

35. பிடிபடு மிதற்கு முன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்

     கொடிநுனை மேய்ந்து நீருங் குடித்தறி யாது பாவி

     மடிமுலை யிரங்கிப் பாலும் வழிந்தது குழவி சோர்ந்து

     படிமிசை கிடந்தென் பாடு படுவதோ வறிகி லேனே.

 பொருள்: அன்றியும், வேடனிடம் நா மாட்டிக் கொள்வதற்கு  மூன்று நாட்களுக்கு முன்னர் பிறந்து புல்லினது  நுனியைச் சாப்பிட்டுத் தண்ணீரும் அருந்தத் தெரியாத கன்றானது வாட்டமுற்றுப் பூமியின் மீது கிடந்து என்ன துன்பப் படுகின்றதோ? பாவியாகிய நான் அறிகிலேன். எனது மடியில் இருந்து இறங்கிப் பாலும் வழிகின்றது.

36. கோட்டுடைக் கலையி னோடுங் கூடிற்றோ வலதோர் பாலின்

     மீட்டதோ வினத்தைச் சேர்ந்து விம்மிநின் றேங்கிற் றோகான்

     காட்டிடைப் புலிவாய்ப் பட்டுக் கழிந்ததோ வென்னைத் தேடி

     வாட்டமுற் றலறி யோடி மறுகிற்றோ வறிகி லேனே.

  பொருள்: அன்றியும், கொம்புகளையுடைய ஆண்மானோடும் சேர்ந்ததோ! அல்லது ஓரிடத்தில் திரும்பினதோ? தனது கூட்டத்தைப் பொருந்தி நின்று விம்மி அழுததோ?  காட்டினிடத்துப் புலியின் வாயி லகப்பட்டுக் கழிந்து போயிற்றோ? என்னைத் தேடி மெலிவடைந்து சத்தித்து ஓடி மறுகுகின்றதோ? ஒன்றும் அறியேன்.

37. தேங்கிய பசியால் வாடித் திரிந்ததோ விறந்த தோவென்

றேங்கிய வருத்த மல்லா லிவ்விட ரதனி லாவி

நீங்குமென் றுள்ளத் துள்ளே னெட்டுட லுடும்பி னாவி

தாங்கிய தரும வேந்தே தவறன்று சரத மன்றே.

  பொருள்: அன்றியும், நிறைந்த பசியினால் மெலிந்து திரிந்ததோ? செத்ததோ? என் ஏங்கப் பெற்ற துன்பமே அல்லாமல் இந்த வேட்டுவன் வலையிலகப்பட்ட துன்பத்தினால் எனது  உயிரானது பிரியுமென்று நினைத்திலன். நெடிய தேகத்தையுடைய உடும்பினது உயிரைத் தாங்கிய புண்ணிய அரசாகிய முகம்மதென்னும் நபிகட் பெருமானே! இது தப்பல்ல, சத்தியம்.

38. மன்னிய கலிமா வென்னும் வழிநிலை மாந்த ரியாரும்

     பொன்னிலம் புகுதச் செய்யும் புண்ணியப் புகழின் மிக்கோய்

     கொன்னிலைச் சிலைக்கை வேடன் கொடும்பசி தணிப்பே னென்றாட்

     பின்னிய பிணிப்பு நீக்கிப் பிணையென விடுத்தல் வேண்டும்.

பொருள்: பொருந்திய கலிமாவென்னும் ஒழுங்கினது நிலைமையினால் உயிர்களனைத்தையும் சொர்க்கலோகத்தின் கண் போய்ச் சேரச் செய்கின்ற புண்ணியத்தைப் பெற்ற  மேன்மையமைந்த முகம்மது நபியே! நான்  பிராணிகளைக் கொலலும் நிலைமையைக் கொண்ட வில்லைத் தாங்கிய கையையுடைய இந்த வேட்டுவனது கொடிய பசியைத் தணியும்படி செய்வேன். எனது பாதங்களிற் பின்னிய கட்டையொழித்து எனக்காகத் தங்கள் பிணையென்று சொல்லி என்னை விடுவித்தல் வேண்டும்.

39. விடுத்திரேற் கலையைச் சேர்ந்து விழைவுறுங் கவலை தீரப்

     படுத்தியென் னினத்துக் கோதிப் பறழினுக் கினிய தீம்பால்

     கொடுத்தரும் பசியை மாற்றிக் குலத்தொடுஞ் சேர்த்து வல்லே

     யடுத்தொரு கடிகைப் போதி லடைவனென் றறைந்த தன்றே.

பொருள்: அவ்வாறு தாங்கள் என்னை விடுவிப்பீர்களேயானால் நான் எனது ஆசைப் பெருக்கமுற்ற ஆண் மானைச் சேர்ந்து அதன் பயத்தை ஒழித்து என் கூட்டத்திற்கும் சொல்லி மிகவும் இனிமையமைந்த பாலைக் கன்றுக் ஈந்து அரிதான அதன் பசியை அகற்றி அக்கூட்டத்தோடும் சேர்த்துவிட்டு விரைவில் ஒரு நாழிகை நேரத்தில் இவ்விடத்தில் வந்த சேருவேனென்று கூறிற்று.

40. மானுரை வழங்கக் கேட்டு மனத்தினிற் கருணை பொங்கிக்

     கானவேட் டுவனை நோக்கிக் கன்றிடை வருத்தந் தீர்த்துத்

     தான்வரு மளவு மியானே பிணையெனச் சாற்றி நின்றார்

     தீனெனும் பயிரைக் காத்துச் செழும்புகழ் விளைக்குஞ் செம்மல்.

பொருள்: தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரைக் காத்து வளர்க்கும் நமது நாயகம் அவர்கள் அவ்வாறு அந்த மானானது தனது கோரிக்கையைக் கூறத் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று இதயத்தின்கண் கருணை அதிகரித்து அந்தக் காட்டினது வேடனைப் பார்த்து இந்த மானானது தனது குட்டியினிடத்துள்ள துன்பத்தை ஒழித்து மீண்டும்  இங்கு வருமட்டும் அதற்கு பதிலாக நான்  பிணையென்று கூறி நின்றார்கள்.

41. பிரியமுற் றிரங்கிக் காட்டின் பிணைக்கியான் பிணையென் றோது

     முரையினைக் கேட்டு வேட னொண்புயங் குலுங்க நக்கித்

     தெரிதரு மறிவி னோடுஞ் சினத்தொடுங் கலந்து தேர்ந்து

     கருமுகிற் கவிகை வள்ளல் கவின்முக நோக்கிச் சொல்வான்.

பொருள்: அவ்வாறு அன்புற்று இரங்கிக் கானகத்தில்  நிற்கும் மானுக்கு நான் பிணையென்று கூறும் வார்த்தைகளைத் தனது காதுகளினாற் கேட்டு அந்த வேட்டுவன்  தோள்கள் குலுங்கும் வண்ணம் சிரித்தான்.  தெரிந்த தன் புத்தியோடும் கோபத்தோடும் கலந்து தேர்ச்சி கொண்டு கரிய மேகக் குடையை உடைய வள்ளலாகிய நபி முகம்மது அவர்களின் அழகிய முகத்தைப் பார்த்துச் சொல்லுவான்.

42. முள்ளுடைக் கானி லேகி முகமழிந் துச்சி வேர்வை

     யுள்ளங்கா னனைப்ப வோடி யுடலுலைந் தொன்றுங் காணா

     விள்ளரும் பசியான் மீளும் வேளையிப் பிணையை நோக்கி

     யொள்ளிழை வலையிற் றாக்கிப் பிடித்திவ ணொருங்கு சார்ந்தேன்.

பொருள்: முட்களையுடைய காட்டின்கண் சென்று எனது முகமானது அழியப் பெற்று உச்சியினது வேர்வை உள்ளங்காலை நனைக்கும் வண்ணம் ஓடி உடல் களைத்து ஒரு மிருகத்தையும் காணாது சொல்லுதற் கரிய பசியினால் வாடி நிற்கும் சமயத்தில் இம்மானைக் கண்டு ஒள்ளிய இழைகளை உடைய வலையினால் பாய்ந்து பிடித்து ஒருங்குடன் இவ்விடத்தில் வந்து சேர்ந்தேன்.

43. பெருத்தமான் றசையா லிற்றைப் பெரும்பசி தவிர்ந்த தென்று

     ளிருத்தியிங் கிருந்தே னந்த விருமனக் களிப்பை நீக்கி

     வருத்தமுற் றிடுஞ்சொற் சொன்னீர் முகம்மதே யெவர்க்கு மிச்சொற்

     பொருத்தம தன்று விண்ணு மண்ணினும் புகழின் மிக்கோய்.

பொருள்: ஆகாயத்திலும்  பூலோகத்திலும் புகழ்  மிகுந்த நபிகள்  பெருமானே! முகம்மதென்னும் திருநாமத்தை யுடையவரே! கொழுத்த  இந்த மானினது மாமிசத்தால் இன்றைய பொழுதின் பெரிய பசியானது ஒழிந்ததென்று இதயத்துள் மகிழ்ந்து இருந்தேன் .  அந்தப் பெரிய மன மகிழ்ச்சியை மாற்றித் துன்பமுற்றிடும் வார்த்தைகளைக் கூறினீர். இவ்வார்த்தைகள் எனக்கு சம்மதமானவையல்ல என்று கூறினான் .

44. கானிடைப் பிடித்த மானைக் கட்டவிழ்த் தவணிற் போக்கின்

     மானிடர் பாலின் மீட்டும் வருவது முன்ன ருண்டோ

     ஞானமு மறையுந் தேர்ந்தோர் செய்யுளு நாட்டிற் றுண்டோ

     வூனமிப் பிணைச்சொ லையா வோதுவ தொழிக வென்றான்.

பொருள்: அன்றியும் நபிகளே ! காட்டின்கண் பிடித்த மானை அதன் கட்டுகளை அவிழ்த்து அந்தக் காட்டில் மறுபடியும் போகச் செய்தால் திரும்பியும் மாந்தர்களிடத்து வருவது முன்னர் நடந்து உள்ளதா ? ஞானத்தைக் கொண்ட மூன்று வேதங்களையும் கற்றுத் தெளிந்தவர்கள் செய்யுட்களும் அவ்வாறு வருமென்று கூறியுள்ளனரா? இல்லையே! ஆதலால் இந்தப் பிணையென்று கூறும் வார்த்தை குற்றமானது. அதைக் கூறுவதை விட்டு விடுங்கள் என்று சொன்னான்.

45. என்னுறு பிணையாய்ப் போன விரும்பிணை கடிகைப் போதி

     னுன்னிடத் துறும்வா ராதே லுன்பசி தீர்ப்ப தாகப்

     பின்னிரண் டொன்றுக் கன்பாய்த் தருகுவன் பேது றேலென்

     றன்னவன் றனக்குச் சொன்னா ராரணத் தமிர்தச் சொல்லார்.

பொருள் :வேடன் அவ்வாறு சொல்ல நாயகம் நபிமுகம்மது அவர்கள் பொருந்திய எனது பிணையாகச் செல்லும் பெரிய பெண் மானானது ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி உனது பால் வந்து சேரும். அவ்விதம் வரவில்லை எனில்  உனது பசியைத் தீர்ப்பதற்காகப் பின்னர் அன்புடன் ஒரு மானுக்கு இரண்டு மான் தருவேன். நீ உன் அறிவானது கலக்க மடைய வேண்டா மென்று அவனுக்குக் கூறினார்கள்.

46. காரணக் குரிசில் கூறுங் கட்டுரை செவியி னோர்ந்து

     பாரினி லெவர்க்குந் தோன்றாப் புதுமைபார்த் தறிவோ மல்லாற்

     சார்பினிற் சாரா லொன்றுக் கிரண்டுமே தருது மென்றார்

     பேரினிற் பிணையாய்க் கொள்ளல் கருத்தெனப் பெரிதுட் கொண்டோன்.

பொருள் :காரணத்தைக் கொண்ட குரிசிலாகிய நமது நாயகம் அவர்கள் அவ்வாறு கூறும் உறுதியான வார்த்தைகளை அவ்வேடன் தனது செவிகளினாற் கேள்வியுற்று அறிந்து இப்புவியின் எவர்களுக்கும் வெளிப்படாத ஆச்சரியத்தைக் கண்களாற் பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் . இல்லை என்றால் இம்மான் நம்மிடம் வந்து சேரா விட்டால் ஒரு மானுக்கு இரண்டு மான் தருவேனென்று சொன்னார். இவர் பேரில் பிணையாகக் கொள்ளுதல் கருத்தென்று எண்ணினான்.

47. கள்ளமுங் கரப்பு மாறாக் கருத்தின னுயிர்கட் கென்று

     மெள்ளள விரக்க மில்லா வேட்டுவ ரினத்தி னுள்ளே

     னுள்ளம தறிந்துங் கேட்டீ ருரைப்பதென் னுயர்ந்த மேன்மை

     வள்ளனும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்தி ரென்றான்.

   பொருள்:   அவ்வாறு எண்ணிய வேட்டுவன், ஓங்கிய மேன்மையைக் கொண்ட வள்ளலாகிய நபிகள் நாயக்கத்தை அழைத்தான் .  திருட்டும்  ஒளிப்பும் நீங்காத சிந்தனையை உடையவனும்  உயிர்களுக்கு எக்காலமும் எள்ளினது அளவாயினும் இரக்கமில்லாத வேடர்களின் குலத்திலுள்ளவனுமான எனது இதயத்தை உணர்ந்தும் தாங்கள் இவ்வாறு கேட்டீர்கள். அதற்கு பதிலாக என்னிடம்  ஒன்றுமில்லை. உங்களது இனிமை தங்கிய வார்த்தைகளை நான் மறுக்கவில்லை . மானை விட்டு விடுங்களென்று சொன்னான்.

48. வேட்டுவ னுரைப்பக் கேட்டு முகம்மது விருப்ப முற்று

     வாட்டமுற் றிருந்த புள்ளி மானிடத் திருந்து பாரி

     னீட்டிய காலிற் சேர்த்த துடரினை நெகிழ்த்துக் கானிற்

     கூட்டுறாக் குழவிக் குப்பால் கொடுத்திவண் வருக வென்றார்.

பொருள் : வேடனானவன் அவ்வாறு சொல்ல, நபிகள் நாயகம் தன் காதுகளினாற் கேள்வியுற்று விருப்பமாய் மெலிவடைந்திருந்த அந்த புள்ளிகளை உடைய மானினது இடத்தில் உட்கார்ந்து பூமியின்கண் நீட்டிய காலில்  இருந்த கயிற்றை நெகிழும்படி அவிழ்த்துக் காட்டில் சென்று  கூட்டுத லுறாத குட்டிக்கு அமுத மளித்து இவ்விடத்திற்கு வருவாயாக வென்று கூறினார்கள்.

49. இருந்துகான் மடக்கி நீட்டி யெழுந்துடன் முறுக்கு நீக்கி

     மருந்தெனு மமுதத் தீஞ்சொன் முகம்மதின் வதன நோக்கிப்

     பொருந்திய கலிமா வோதிப் புகழ்ந்துடற் பூரிப் போடுந்

     திருந்தவே டனையும் பார்த்துச் சென்றது கானின் மானே.

பொருள் : அவ்விதம் கூறவே அந்த மானானது இருந்து தனது கால்களை மடித்து நீட்டி எழுந்து  உடலின் திருக்கை மாற்றி மருந்து என்னும்  அமுதம் போன்ற இனிய வார்த்தைகளைக்  கூறிய  நபிகள் நாயகத்தைக்கண்டு  என்று பொருந்திய கலிமாவைக் கூறித் துதித்துத் பூரிப்புடன் செவ்வையாக வேட்டுவனையும் பார்த்துக் கொண்டு காட்டின்கண் சென்றது.

50. வெண்ணிலாக் கதிர்கான் றென்ன மென்முலை சுரந்த தீம்பான்

     மண்ணெலா நனைப்பச் சூழ்ந்த வனமெலாந் திரிந்து தேடிக்

     கண்ணினி லினங்கா ணாது கலங்கியோர் வனத்தின் கண்ணே

     யெண்ணரும் பிணையுங் கன்றுங் கலையுட னினிது கண்ட.

பொருள் : அவ்விதம் சென்ற மானானது சந்திரனது கிரணங்கள் போலும் மெல்லிய முலையின் கண்ணிருந்து சுரப்புற்ற இனிய அமுத மானது பூமி முழுவதையும் நனைத்தது. , தன் இனத்தை   காடுகளெல்லாவற்றிலும் திரிந்து தேடிக் கண்களில்  காணாது கலக்கமுற்று பின் ஓர் காட்டினிடத்து மான்களையும் தனது குட்டியையும் ஆண்மானோடு இனிமையுடன் கண்டது.

51. மலைவற வினத்து ளாகி மனத்தினுட் கவலை நீக்கிக்

     கலையினுள் வருத்தந் தீர்த்துக் கன்றினை யணைத்து விம்மு

     முலையினை யூட்டி மென்மை முதுகுவா லடிநா நீட்டி

     யலைதர வளைத்து மோந்து வேட்கையை யகற்றிற் றன்றே.

பொருள் : அவ்வாறு கண்ட அம் மானானது மயக்கமறும் வண்ணம் தனது கூட்டத்தின் கண் சென்று இதயத்தினகமுள்ள துன்பத்தை ஒழித்துத் தன் ஆண்மானின் மனத்துன்பத்தையும் நீக்கிக் குட்டியைச் சேர்த்து விம்முகின்ற முலையினது பாலை உண்ணும்படி செய்து மெல்லிய முதுகையும் வாலையும் பாதங்களையும் நாவை நீட்டி அசையும்படி வளைத்து முத்தமிட்டு தன்னாசையை ஒழித்தது.
 

52. கன்றது வயிறு வீங்கக் கதிர்முலை யமுத மூட்டி

     நின்றதன் னினத்துக் கெல்லா நெறிபடுங் கானி   லோடி 

     வன்றிறல் வேடன் கையிற் படும்வர வாறுந் தூதர்

     வென்றிகொள் பிணையின் மீட்டு விட்டது மோதிற் றன்றே.

    பொருள் :  அவ்வாறு கன்றுக்குத் தன் வயிறானது பருக்கும்படி பிரகாசத்தை யுடைய முலையினது பாலை உண்பித்து அங்கு கூடி நின்ற தனது கூட்டத்திற் கெல்லாம் தான்  கானகத்தின்கண் ஓடிக் கொடிய வலிமையையுடைய வேட்டுவன் கையில் அகப்பட்ட வரலாற்றையும் நாயகம் நபிமுகம்மது அவர்கள் வெற்றியைக் கொண்ட தமது பிணையினால் திருப்பி விட்டதையும்  கூறியது .

 

53. பிணையென வுரைத்த மாற்றம் பிணைக்குல மனைத்துங் கேட்டுப்

     பணைபடு கானி லுள்ளப் பதைப்பொடுந் துணுக்கி நிற்பத்

     துணையெனுங் கலையி னங்கஞ் சோர்ந்துநெட் டுயிர்ப்பு வீங்கி

     யணைதர வடுத்து நோக்கி யாற்றுவான் றொடங்கிற் றன்றே.

 

      பொருள் : அவ்வாறு நாயகம் நபிமுகம்மது  அவர்கள் பிணை என்று கூறிய வார்த்தைகளை அங்கு கூடி நின்ற மானின் கூட்டங்கள் யாவும் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மூங்கிலைக் கொண்ட அக்கானகத்தில் மனம் பதறின.  துணுக்குதலடைந்து நின்றன. தனது துணையான  ஆண்மானின் உடலானது  வாடிப் பெருமூச்சு விட்டு உதவியைச் செய்யும் வண்ணம்  பார்த்து அப் பெண்மானின் துன்பங்கள் யாவையும் ஆற்றுவதற்கு ஆரம்பித்தது.

 

54 . மாறுகொண் டவர்கை தப்பி வந்தமா னினத்தின் சாதி

     கோறலை விரும்பி முன்னு நரர்கையிற் கூடிற் றுண்டோ

     வேறுரை பகரேல் பார்ப்பை வெறுத்துமுன் னினத்தை நீத்து

     மீறெனப் போதல் வேண்டா மெனுமுறை யியம்பிற் றன்றே.

 

பொருள் :அன்றியும், விரோதத்தைக் கொண்டவர்களான அந்த மாந்தர்களின் கையில் நின்றுந் தவறி வந்த மான் கூட்டத்தினது சாதியானது கொல்லுதலை விரும்பி மீண்டும் மானிடர்களின்  கரத்திற் போய்ச் சேர்ந்த துளதா? இல்லையே! நீ வேறு விதமான வார்த்தைகளைப் பேசக் கூடாது. உனது குட்டியை வெறுத்தும் கூட்டத்தை யொழித்தும் நமக்கு இதுவே முடிவென்று போக வேண்டாமென்றும் கூறிற்று.

55. இணைத்தென்னைப் பிணித்த வேட னிதயத்துக் கியையப் பேசி

     பிணைத்தன்னைப் பொருத்தி நின்றோர் பெரியவன் றூத ரிந்தத்

     திணைத்தலத் தறிவி லாத சேதனச் சாதி யன்றே

   யணைத்துயி ரனைத்துங் காத்தற் கவரல தில்லை யன்றே.

  பொருள்: அவ்வாறு கூற என்னைச் சேர்த்துக் கட்டிய அந்த வேட்டுவனது மனசுக்குப் பொருந்தும் வண்ணம் வார்த்தைகளை பேசித் தங்களைப் பிணையாகப் பொருந்தச் செய்து நின்றவர்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்த லென்னும் ஐந்திணைகளையுடைய இந்தப் பூலோகத்தின்கண் அறிவில்லாத உணர்ச்சியைக் கொண்ட சாதியானவரல்லர். யாவற்றிற்கும் பெரியவனான நபிகள் நாயகம் அவர்கள் ஆவார். உயிர்கள்   அனைத்தையும்  அணைத்துக் காப்பதற்கு அவர்களல்லாமல் வேறு  யாரும்  மில்லை என்றது பெண்மான்  .

56. என்னுயி ரதனை வேட னிரும்பசிக் கியைய வீந்து

     நந்நபி பிணையை மீட்ப நன்மனம் பொருந்தி லேனாற்

     பொன்னுல கிழந்து தீயு நரகினிற் புகுவ தல்லாற்

     பின்னொரு கதியு முண்டோ பிழையன்றிப் பெருமை யன்றே.

   பொருள் :  அன்றியும், எனது ஜீவனை அந்த வேட்டுவனது பெரிய பசிக்காகப் பொருந்தும்படி கொடுத்து நமது நாயகம் நபி அவர்களின் பிணையை மீட்பதற்கு நன் மனமானது பொருந்தாமல் இருந்தேன் எனில் சொர்க்க லோகத்தையும்  இழந்து தீயை உடைய  நரகலோகத்தில் சென்று சேர்வதைத் தவிர வேறு வழி இல்லை! இவ்வாறு நடப்பது  பிழையே

 அல்லாது பெருமையு மல்ல என்றுரைத்தது .

57. சிறப்புடைக் குரிசின் முன்னஞ் செப்பிய மாற்ற மாறி

     மறப்பொடு மிருந்தே னாகில் வரிப்புலி யினத்தின் வாய்ப்பட்

     டிறப்பதே சரத மல்லா லிருப்பதற் கிடமற் றுண்டோ

     வுறப்பெரும் விருப்ப மென்மே லிருத்தலை யொழித்தல் வேண்டும்.

பொருள் :அன்றியும், சிறப்பை உடைய குரிசிலான நாயகம் நபிமுகம்மது அவர்கள்  முன்னர் கூறிய வார்த்தைகளை மாறி மறதியுடன் இருந்து விட்டேனேயானால் வரிப் புலியினது இனத்தின் வாயிலகப்பட்டு இறந்து போவதே சத்தியம் அல்லாது நான் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்பு உண்டோ. எனவே நான் இங்கு உங்களோடு இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை விட வேண்டும் என்றது.

58. நதி்யிடைப் பெருக்கின் முன்னோர் நவ்விபி னடக்கு நாளின்

 

     மதியிலி யொருத்தன் வள்ளன் முகம்மதின் வசன மாறிப்

 

     புதியநன் னீரு ளாழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய

 

     வதிசய முலகில் விண்ணி லியாவரே யறிகி லாதார்.

 

பொருள்: அன்றியும், முன்னர் ஆற்றின்கண்  ஒப்பற்ற மானினது பின்னால் நடக்கும் நாளில், அறிவற்றவனான ஒருவன் வள்ளலாகிய நபிமுகம்மது அவர்களின் வார்த்தைகளை மாறி நொடி நேரத்தில் புதுமையைக் கொண்ட நல்ல தண்ணீரில் விழுந்து அமிழ்ந்து இறந்து போன ஆச்சரியத்தை இப் பூலோகத்திலும் வான லோகத்திலும் அறியாதவர்கள் யாருமில்லை.

59. ஈதெலா மறிந்து மென்னை யிவணிடை யிருத்தல் வேண்டி

     யோதுதல் பழுதென் றோதி யுழையின மனைத்துந் தேற்றிக்

     காதலிற் கலையைப் போற்றிக் கன்றினை யதன்பாற் சேர்த்திப்

     பேதுற லெனப்பா லூட்டி யெழுந்தது பிணையு மன்றே.

      பொருள் :இவைகள் யாவையும்  உணர்ந்தும் என்னை இவ்விடத்தின்கண் இருக்கவேண்டிச் சொல்லுதல் குற்றமென்று கூறி மான் கூட்டங்கள் எல்லாவற்றையும் தேற்றி அன்பைக் கொண்ட ஆண்மானைத் துதித்துக் குட்டியை அதனோடு சேர்த்து உங்களின் புத்தியானது மயங்க வேண்டாமென்று கூறிக் குட்டிக்கு அமுதம் உண்பித்து அந்தப் பெண்மானும் எழும்பிற்று.

60. இனத்தினை விடுத்து நீங்கி யிருங்களிப் பிதயம் பூப்ப

     வனத்தினி லேகுங் காலை மறிமுன மறிப்பச் சீறிச்

     சினத்தது தடுப்ப வோடிச் செவ்விமான் முகத்தை நோக்கி

     யினித்தவாய் புற்றீண் டாத விளமறி யுரைக்கு மன்றே.

பொருள் : அவ்வாறு தனது கூட்டத்தை விட்டு அகன்று பெரிய சந்தோஷ மானது மனதின்கண் உண்டாகும் வண்ணம் கானகத்தினிடத்துச் செல்லுகின்ற சமயத்தில் கன்றானது முன்னே மறித்தது.  அப்பெண்மான் சீற்ற முற்றுக் கோபித்து அக்கன்றைத் தடுக்க, இனிக்கப் பெற்ற வாயினாற் புல்லைத் தொடாத இளமறியாகிய அக்கன்றானது ஓடி அழகிய அப்பெண் மானின் வதனத்தைப் பார்த்துச் சொல்லத் தொடங்கியது.

    61. மாதவம் பெற்று நின்போன் முகம்மது நபிதஞ் செய்ய

     பாதபங் கயத்தைக் கண்டு பரிவுட னீமான் கொண்டு

     போதலே யன்றி நின்னைப் புறத்தினி லகற்றி வாழே

     னீதுமுத் திரையென் றோதி யெழுந்துமுன் குதித்த தன்றே.

பொருள் :உன்னைப் போலும் மகத்தாகிய தவத்தைப் பெற்று நாயகம் நபிமுகம்மது அவர்களின் சிவந்த சரணங்களான தாமரை மலரைப் பார்த்து அன்போடும் ஈமான் கொண்டு போவதே அல்லாமல் உன்னைப் பக்கத்தில் நீக்கி விட்டு நான் உயிர் வைத்து வாழ மாட்டேன். இஃது முத்திரையென்று கூறி எழும்பி முன்னே சாடிற்று.

62. இறையவன் றூதைக் கண்ட வதிசய மிதுகொ லென்ன

     மறிமன மறுகி லாது வதைதனைப் பொருந்திச் சேற

     லிறுதியற் றின்ப நம்பா லெய்துமென் றகத்தி னெண்ணிச்

     செறிவனங் கடந்து வேடன் றிசைதனை யடுத்த தன்றே.

      பொருள்:அவ்வாறு இஃது இறைவனான தூதுவர் நாயகம் அவர்களைப் பார்த்த ஆச்சரியமென்று தனது குட்டியின் மனமானது மறுகாது கொலையைச் விரும்பிச் செல்லுவதினால் நம்மிடத்தில் இன்பமானது முடிவற்று வந்து சேருமென்று மனசின் கண் நினைத்து நெருங்கிய கானகத்தைத் தாண்டி அவ் வேட்டுவனது திசையைச் சேர்ந்தது.

63. குருளையும் பிணையுங் கூடி வருவது குறித்து நோக்கி

     முருகலர் புயத்தார் வள்ளன் முகம்மது மகிழ்ந்தன் பாக

     விருளுறு மனத்த னான வேடனை யினிது கூவி

     யொருபிணைக் கிரண்டுன் பாலில் வருவதென் றுரைத்திட் டாரால்.

பொருள் :அப்போது வாசனையைக் கொண்ட  பூ மாலையைத் தாங்கிய தோள்களையுடைய வள்ளலான நமது நபிகள் நாயகம் அவர்கள் குட்டியும் அப்பெண் மானும் தம்மிற் கூடி வருவதைக் குறிப்பாய்ப் பார்த்து மகிழ்ந்து அந்த வேட்டுவனை அன்பாக இனிமையுடன் அழைத்து உன்னிடத்தில் ஒரு மானுக்கு இரண்டுமான் வருகின்றனவென்று கூறினார்கள்.

64. அன்னது கேட்டு வேட னோக்கியன் புற்ற காலை

     முன்னிய கன்று மானு முகம்மதி னடியிற் றாழ்ந்து

     பன்னிய சலாமுங் கூறிப் பாவியெற் காக வேட்டு

     மன்னிய பிணையை மீட்டு மெனுமுரை வழங்கிற் றன்றே.

பொருள்: அவர்கள் அவ்விதம் கூற அவ்வேட்டுவன் அந்த வார்த்தைகளைத் தனது காதுகளினாற் கேள்வியுற்றுப் பார்த்த சமயத்தில், அக்குட்டியும் மானும் நாயகம் அவர்களின் பாதங்களில் பணிந்து ஓதுகின்ற சலாமும் சொல்லிப் பாவியாகிய எனக்காக விரும்பிப் பொருந்திய தங்களின் பிணையை மீட்டிக் கொள்ளுங்களென்னும் வார்த்தைகளைக் கூறிற்று.

65. மாடுறைந் திவைமான் கூற முகம்மது நபியும் விற்கை

     வேடனை விளித்து நந்தம் பிணையினை விடுத்து நின்றன்

     பீடுடைப் பசியை மாற்றிப் பெரும்பதிக் கடைக வென்றார்

     வீடுபெற் றுயர்ந்து வாழ்ந்தே னெனமலர்ப் பதத்தின் வீழ்ந்தான்.

பொருள் :அந்த மானானது பக்கத்தில் தங்கி இவைகளைச் சொல்ல நாயகம் நபிமுகம்மது  அவர்களும் வில்லைத் தாங்கிய கையையுடைய அந்த வேட்டுவனை  அழைத்து நமது பிணையைத் தள்ளி உனது துன்பத்தைக் கொண்ட பசியை  நீக்கிப் பெருமையை உடைய ஊருக்குப் போய்ச் சேர்வாயாகவென்று சொன்னார்கள். உடனே அவன் நான் சொர்க்கலோகத்தைப் பெற்று மேன்மையுற்று வாழ்ந்தேனென்று சொல்லி அந்நபி பெருமானின் தாமரை மலரை ஒத்த திருவடிகளில் வீழ்ந்தான்.

66. பாதபங் கயத்தைப் போற்றிப் பருவர லகற்றி யாதி

     தூதுவ ரிவரே யல்லா லிலையென மனத்திற் றூக்கி

     வேதநா யகமே யென்பால் விருப்புறுங் கலிமாத் தன்னை

     யோதுமென் றிருகை யேந்தி யுவந்துநின்றுரைப்ப தானான்.

பொருள் : அவ்வாறு பாதங்களாகிய தாமரை மலரைத் துதித்துத் தனது துன்பங்களை  ஒழித்து யாவற்றிற்கும் முதன்மையனான இறைவனின் தூதுவர்  ஆன இந்த முகம்மதென்பவரே  அல்லாமல் வேறு ஒருவரும் இல்லை என்று  மனசின்கண் சிந்தித்து நான்கு வேதங்களுக்கும் நாயக மாகிய நபிகட் பெருமானே! என திடத்திற் ஆசை பொருந்திய உங்களது கலிமாவை ஓதுங்களென்று விருப்புற்று இரண்டு கைகளையு  உயர்த்தி நின்று கூறலானான்.

67 . கருமுகிற் கவிகை வேந்தே கானக வேட னென்னு

     முருவினன் விலங்கோ டொப்பே னுள்ளரி வுணர்வு மில்லேன்

     றெருளுறப் பாவி யென்னைத் தீனிலைக் குரிய னென்னப்

     பெரிதளித் திடுதல் நுந்தம் பெருமையிற் பெருமை யென்றான்.

      பொருள் : அன்றியும், கரிய மேகக் குடையினது அரசராகிய முகம்ம தென்னும் திருநாமத்தை யுடைய நபிகள் நாயகமே, கானகத்தினது வேட்டுவ னென்னும் வடிவத்தையுடையவனும், மிருகங்களுக்கு நிகராகப் பட்டவனும், மனசின்கண் அறிவாகிய உணர்வில்லாதவனும் பாவியு மாகிய என்னைத்  தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்கு உரிமையனென்று சொல்லப் பெருமையோடும் புரப்பது உங்களது பெருமையிற் பெருமையென்று கூறினான்.

68. மதிமுக மகிழ்ச்சி கூர முகம்மது கலிமாச் சொல்ல

     விதயமுற் றோதி வேட னினிதினி னீமான் கொண்டு

     புதியனை வணங்கிச் செய்யுஞ் செய்தொழில் பொருந்தக் கேட்டு

     நிதிமனைக் குரிய னாகித் தீனிலை நெறிநின் றானே.

பொருள்: அவ்வாறு அந்த வேட்டுவன் கூற நாயகம் நபி முகம்மது அவர்கள் தங்களின் சந்திரனை நிகர்த்த முகத்தின்கண் மகிழ்ச்சி அதிகரிக்கும்படி கலிமாவைச் சொல்ல வேட்டுவனும் தனது மனமானது பொருந்திச் சொல்லி இனிமையுடன் ஈமான் செய்து  நித்தியச் செயல்களைப் பொருந்தும் வண்ணம் கேட்டுச் சொர்க்கலோகத்திற்கு உரியவனாய்த் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையினது ஒழுங்கில் நின்றனன்.

69. பெறுகதி நின்னாற் பெற்றேன் பெரும்பவங் களைந்தேன் மாறாத்

     தெறுகொலை விளைத்து முன்னஞ் செய்தொழி றவிழ்த்தே னீயு

     மறுகலை யெறிந்து தேறு மனக்கலை யொடுகன் றோடு

     முறுகலை யிடத்திற் போய்ச்சேர்ந் தொழுகலை முயல்தியென்றான்.

பொருள் : அவ்விதம் நின்ற வேட்டுவன் அந்த மானைப் பார்த்து நான் உன்னால் நிற்கும் மோட்சத்தை பெற்றுக் கொண்டேன். என் பெரிய பாவத்தை இல்லாமற் செய்தேன். ஆதியில் நீங்காத நெருங்கிய கொலையை விளைத்துச் செய்கின்ற தொழில்களையும் ஒழித்தேன். நீயும் உனது மறுகுதலை வீசிவிட்டுத் தேறுகின்ற மனசினது பிரகாசத்தோடும் குட்டியோடும் பொருந்தி ஆண்மானிடத்திற் சென்று சேர்ந்து நடப்பதை முயல்வாயாக வென்று கூறினான்.

70. வானவர் பரவுங் கோமான் முகம்மது மானை நோக்கிக்

     கானகஞ் சென்னீ யென்றார் கமலமென் பதத்திற் றாழ்ந்து

     தீனிலைக் குரிய வேடன் றன்னையுந் திருந்தப் போற்றி

     நானிலம் புகலப் பாரி னடந்தினஞ் சேர்ந்த தன்றே.

பொருள் : தேவர்களாகிய வணங்கும்  கோமானாகிய நமது நாயகம் நபிமுகம்மது அந்த மானைப் பார்த்து நீ காட்டினிடத்துச் செல்லுவாயாக வென்று சொன்னார்கள். உடனே அவர்களின் தாமரை மலரை யொத்த மெல்லிய பாதங்களிற் பணிந்து தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்திற் குரிய வேட்டுவனையும் செவ்வையாய்த் துதித்து நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை யென்னும் நான்கு நிலங்களையு முடைய இவ் வுலகமானது வாழ்த்தும் வண்ணம் பூமியின்கண் நடந்து தனது இனத்தைப் போய்ச் சேர்ந்தது.

71. தேனைக்குங் குமங்கள் சிந்தச் செழித்ததிண் புயத்து வள்ளல்

     கானைக்குவ் விடத்திற் காட்டுங் கமலமென் பதத்தைப் போற்றித்

     தானைக்கும் பதிக்கு மியானே தலைவனென் பவர்போல் வேடன்

     மானைக்கொண் டுவரப் போயீ மானைக்கொண் டகத்திற் புக்கான்.

பொருள் :குங்குமப் பூக்களாலான மாலைகள் தேனைச் சொரியும்படி செழிப்புற்ற திண்ணிய தோள்களையுடைய வள்ளலாகிய நமது நாயகம் நபிமுகம்மது  அவர்களது பூமியினிடத்திற் தாமரை மலரைப் போன்ற மெல்லிய சரணங்களைத் துதித்து நான் சேனைகளுக்கும் இவ்வுலகத்திற்கும் தலைமைத்தனத்தை உடையவ னென்று சொல்பவரைப் போலும் அவ் வேட்டுவன் அந்த மானைக் கொண்டு வரப் போய் ஈமானைக் கொண்டு தனது வீட்டின்கண் போய்ச் சேர்ந்தான்.

72. துடவைநன் மலரைத் தூற்றுந் தூய்நிழ லிடத்தை நீந்திப்

     படர்முகிற் கவிகை யோங்கப் பாருள தெவையும் வாழ்த்த

     வடவரை யனைய திண்டோள் வயவர்க ளினிது சூழக்

     கடிமனை யிடத்திற் புக்கார் கபீபிற சூலு மன்றே.

பொருள் :அன்றியும், ஹபீபென்னுங் காரணப் பெயரை உடைய நமது நாயகம் எம் மறைக்கும் தாயகம் நபிகள் அவர்களும் சோலைகளானவை நல்ல புஷ்பங்களைச் சொரியும்  பரிசுத்தமான நிழலையுடைய அவ்விடத்தை விட்டுத்  தாண்டி விரிந்த மேகக் குடையானது ஓங்கவும், பூமியின் கண்ணுள்ள யாவும் துதிக்கவும், மகாமேருப் பருவதத்தை நிகர்த்த திண்ணிய புயங்களை யுடைய வீரர்களாகிய சகாபாக்கள் இனிமையுடன் சூழ்ந்து வரவும், காவலைக் கொண்ட தங்கள் மாளிகையின்கண் வந்து நுழைந்தார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்