பூசலார் நாயனார் புராணம் - பெரிய புராணம் - பாடல் விளக்கம்- சேக்கிழார்
பூசலார் நாயனார் புராணம்
- பெரிய புராணம் - பாடல் விளக்கம்- சேக்கிழார்
1.
அன்றினார்
புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
ஒன்றும்
அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்று
என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த
நின்ற
ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்கல் உற்றார்.
பொருள்
பகைவர்களுடைய புரங்களை எரித்த சிவபெருமானுக்கு
ஒருகோயில் அமைக்க எண்ணி அதற்கு வேண்டிய நிதி ஒரு சிறிதும் அவருக்கு அங்குக்கிடைக்காமல் போனது. நினைப்பினாலே அமைத்தலே
நல்ல பணியாகும் என்று நினைத்து மனத்தினாலே நல்ல கோயிலை அமைத்த திருநின்றவூரில் வாழ்ந்த
பூசலாருடைய நினைப்பினாலாகிய வரலாற்றினைச் சொல்கின்றார் சேக்கிழார் .
2. உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெருந்தொண்டை
நாட்டு
நலம்மிகு
சிறப்பின் மிக்க நான் மறை விளங்கும் மூதூர்
குல
முதல் சீலம் என்றும் குறைவுஇலா மறையோர் கொள்கை
நிலவிய
செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊராம்.
பொருள்
இந்த நிலவுலகில் நல்லொழுக்கம் எக்காலத்திலும்
உயர்ந்து ஓங்கும் பெருமை உடைய தொண்டை நாட்டில் நலம் மிக்க சிறப்புடைய
நால்வேதங்களும் விளங்குதற்கு இடமாகிய பழைய ஊராகும். குலத்திற்கு
முதன்மையாகிய ஒழுக்கம் எந்நாளும் குறைவில்லாத மறையவர்கள் தமது கொள்கையின்
நிலைநின்ற செல்வம் நிகழ்கின்ற திருநின்றவூராகும்
.3. அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தை
தரும்
உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சார
வருநெறி
மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்
பொருள்
பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்.
பொருள்
அரிய வைதிக மரபு வாழும்படி அந்த ஊரில் அவதரித்த அவர் உள்ளத்தில் வரும் உணர்வுகள் எல்லாம் சிவபெருமான் திருவடியிலே
சாரும்படியும் அந்த வழியினின்றும் பிறழாத அன்பு வளர்ந்தோங்கத் தாமும் வளர்ந்தார். உண்மைப் பொருளைப்
பெறுதற்கேதுவாகிய வேதநீதிக் கலைகளை கற்று சிறந்து விளங்கினார் .
4. 'அடுப்பது
சிவன்பால் அன்பர்க்கு ஆம் பணி செய்தல்' என்றே
கொடுப்பது
எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி
வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
எடுப்பது
மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார்.
பொருள்
சிவனுக்கும் அவன் அன்பர்க்கும் தமக்கு ஆகும் பணிகளைச்
செய்தலே தக்கதாம் என்றே துணிந்து கொடுப்பதற்காக
எவ்வகையாலும் பொருளைத் தேடி அவ்வடியவர்கள் கொள்ளும்படி கொடுத்த அவர் கோயில்
அமைப்பதற்கு செல்வம் தம்மிடம் இல்லை என்பதை
எண்ணாதவராய் கங்கை வெள்ளம் நிரம்பிய
சடையினையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதற்கு ஒரு கோயிலைக் கட்டும் செயலை
மனத்துள் கருதினார்.
5. மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித்
தேடி
'எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என்
செய்கேன்' என்று நைவார்
நினைப்பினால்
எடுக்க நேர்ந்து நிகழ் உறு நிதியம் எல்லாம்
தினைத்துணை
முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
பொருள்
பொருள் தேடிப்பெறும் இடங்களை மனத்தினால் கருதி
எங்கும் சென்று கோவில் கட்டுவதற்கான பெருநிதியினை வருந்தித் தேடினார். எவ்வாறாயினும்
ஒரு சிறிதும் பொருள் கிடைக்காததால்“இனி என் செய்வேன்” என்று வருந்தினார். நினைவினாலே
கோயில் எடுப்பதனைத் துணிந்துகொண்டு செயல் நிகழ்வதற்கான நிதியங்களை எல்லாம் தினை அளவுள்ள சிறிது சிறிது
அளவாகத் தேடி மனத்தினாற் சேர்த்துக் கொண்டனர்.
6. சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு
ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து
ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்
காதலின்
கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்.
பொருள்
கோயில் கட்டுதற்குரிய சாதனங்களோடு தச்சர்களையும்
மனத்தினாற் தேடிக்கொண்டார். இறைவருக்கு கோயில் செய்தற்குரிய நன்மை பெறும் நல்ல நாளும் வேளையும் குறித்துக்
கொண்டார். விரும்பி ஆகம விதிப்படி அடிநிலை
எடுத்து மனதில் கோயில் கட்ட ஆரம்பித்தார். அன்பினால் ஆசை மிகுந்து இரவினும் உறங்காமல் கோயில் எடுக்கலானார்.
7. அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவு
உறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து, மான
முடிவு
உறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு,
நெடிது
நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.
பொருள்
அடி வரி முதல் உபான வரி முதலாக வரும் அடுக்குகள்
எல்லாவற்றையும் சித்திர வேலைப்பாடுகள் முதலாக மனத்தினாலே அமைத்து விமானத்தின் முடிவில் வரும் சிகரமும் விதித்த முழு அளவிற்
கொண்டு நீண்ட நாட்கள் செல்லக் கோயில் நிறைவுபட நினைப்பினாலே செய்தனர்.
8. தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும்
செய்து
கூவலும்
அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி,
வாவியும்
தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபரம்
சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில்.
பொருள்
தூபியினையும் நாட்டிச், சுண்ணச்சாந்து பூசி, மேல் சிற்ப அலங்கார
வகைகளையும் செய்தும் தீர்த்தக்கிணறும் அமைத்தும் பக்கத்திலும் கோயிற் சுற்றிலும்
மதில்களைக் கட்டியும் தடாகமும் அகழ்ந்து
அமைத்தார். மற்றும் மேலும்
வேண்டுவனவற்றையும் வகைபடச் செய்தார். நிலை
பெற்ற தாவரத்தைச் சிவபெருமானுக்குப் பொருந்தும்படி நிறுத்தும் நாள் வந்தது.
9. காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற
மாடு
எலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால்
அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்நாள்
ஏடு
அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.
பொருள்
காடவர் பெருமானாகிய பல்லவ அரசன் கச்சியம்பதியிலே
கற்கோயில் எடுப்பித்தான். முழுதும் பக்கமெல்லாம் சிவனுக்காகப் பெருஞ் செல்வங்களை
நியமிக்கின்ற நோக்கில் திருமாலும் தேடியறிதற்கு அரியராகிய இறைவனுக்குக் கோயில் திறப்பதற்கு நியமித்த நாளுக்கு முந்தைய நாளில் இதழ்கள் விரிகின்ற கொன்றை மலர்களைச்
சூடிய இறைவன் இரவினில் பல்லவ அரசனது
கனவில் தோன்றினான்.
10. 'நின்ற
ஊர்ப் பூசல் அன்பன் நெடு நாள் நினைந்து செய்த
நன்று
நீடு ஆலயத்துள் நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய
செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்' என்று,
கொன்றை
வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்.
பொருள்
திருநின்றவூரில் உள்ள பூசல் என்கின்ற அன்பன் நீண்ட
நாட்களாக நினைந்து நினைந்து செய்த கோயிலிலே நாளை நான் சென்று குடியேறுவேன் . நீ இங்கு இக் கோயிலிற் பொருந்திய செய்கையை நாளைக்கழித்து வைத்துக்கொள்வாயாக என்று
கூறினார். அவ்வாறு கொன்றை சூடிய நீண்ட
சடையினையுடைய இறைவர் தொண்டரது கோயிலின் தாவரத்தைக் கொண்டருள எழுந்தருளினர்.
11. தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை
நீங்கித்
திண்திறல்
மன்னன் 'அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டு
நான் வணங்க வேண்டும்' என்று எழும்
காதலோடும்
தண்
டலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்.
பொருள்
தொண்டராகிய பூசலாரை உலகத்தார் அறியச் செய்யும் பொருட்டுத் தூயசிவபெருமான்
இவ்வாறு அருளிச் செய்தார். துயிலுதலை விட்டு திண்ணிய திறலினையுடைய அவ்வரசன் அந்தத்
திருப்பணி செய்தவரைக் கண்டு நான் வணங்கிட வேண்டும் என்று மேனமேல் எழுகின்ற விருப்பத்தினால்
சோலைகளின் கூட்டம் சூழ்ந்த திருநின்றவூரில் வந்து சார்ந்தனன்.
12. அப்பதி அணைந்து 'பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்
எப்புடையது
?' என்று அங்கண் எய்தினார் தம்மைக்
கேட்கச்
'செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று
இல்லை' என்றார்;
'மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக' என்று உரைத்தான் வேந்தன்.
பொருள்
அந்தப்பதியினை அடைந்து பூசலார் என்னும் அன்பர் செய்த கோயில்
எப்பக்கத்திலுள்ளது என்று அங்கு இருந்தவர்களைக் கேட்டான். நீங்கள் சொல்லிய பூசலார், கோயில் ஒன்றும் கட்டவில்லை என்று சொன்னார்கள். அது கேட்டு, உண்மை நெறியில் நிற்கும் மறையவர்கள்
எல்லாம் வருக என்று ஆணையிட்டான்.
13. பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
'மாசு இலாப் பூசலார் தாம் யார் ?' என, மறையோர்
எல்லாம்
'ஆசு இல் வேதியன் இவ்வூரான்' என்று அவர் அழைக்க ஒட்டான்
ஈசனார்
அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்.
பொருள்
வேதியர்களெல்லாரும் வந்து அரசனைக்காண குற்றமற்ற
பூசலார் தாம் யாவர்? என்று கேட்டான். அதற்கு மறையோர்கள்
எல்லாம் அவர் குற்றமற்ற வேதியர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்
என்று கூறினர். அவரைப் போயழைத்து வாருங்கள்
என்று கூறாமல் இறைவரது அன்பராகிய
பூசலாரிடத்தில் வேலையுடைய அரசன் சென்று சேர்ந்தனன்.
14. தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது 'நீர் இங்கு
எண்
திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது ?' இங்கு
அண்டர்
நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
கண்டு
அடி பணிய வந்தேன்; கண் நுதல்
அருள் பெற்று' என்றான்.
பொருள்
சென்று அத்தொண்டர் பெருமானைக் கண்ட அரசர்
அவரைத்தொழுது தேவரீர் இவ்விடத்து எத்திசையார்களும் போற்றும்படி நீங்கள் எடுத்த
கோயில் எது என்று கேட்டார். இன்று தேவர்
பெருமானாகிய சிவபெருமானை அத்திருக்கோயிலில் தாபித்தருளும் நாள் என்று தெரிந்தது என்றான் . நெற்றிக் கண்ணை உடைய பெருமானது திருவருளினால் தெரிந்தது
அதனால் உம்மைக்கண்டு திருவடி தொழுவதற்கு
வந்தேன் என்று சொன்னார்.
15. மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு
நோக்கி,
'என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான்
அருள் செய்தாரேல்
முன்வரு
நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம்' என்று சிந்தித்து எடுத்த வாறு எடுத்துச்
சொன்னார்.
பொருள்
அரசர் இவ்வாறு சொல்லக் கேட்ட அன்பராகிய பூசலாரும்
மருட்சியடைந்து அவரைப்பார்த்தார் என்னையும் ஒரு பொருளாகக் கொண்டே எமது பெருமான்
அருளிச் செய்தாராயின் முன்னர்ப்பெரும் நிதி கிடையாமையால் மனத்தினாலே முயன்று
நினைந்து நினைந்து செய்த கோயில் இதுவாகும் என்று சொன்னார் . சிந்தனையின் செயலாகவே செய்த கோயிலினைத்தாம்
விளங்க எடுத்துக் கூறினார்.
16. அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி 'என்னே!
புரை
அறு சிந்தை அன்பர் பெருமை!' என்று அவரைப்
போற்றி
விரை
செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசு
எறி தானை யோடு மீண்டு தன் மூது ஊர்ப் புக்கான்.
பொருள்
அரசனும் அதைக் கேட்டு அங்கு மிக்க அதிசயம் அடைந்து குற்றமற்ற சிந்தையினையுடைய அன்பரது பெருமை எத்தனை உயர்ந்தது என்று அவரை மணமிக்க மாலை கீழே படியும்படி
நிலத்தின் வீழ்ந்து வணங்கினான். முரசுகள் முழங்கும் சேனைகளுடனே மீண்டு சென்று தனது பழைய ஊரினையடைந்தான்.
17. அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
நன்
பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்.
பின்பு
பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
பொன்
புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார்.
பொருள்
அன்பராகிய பூசலாரும் தாம் மனத்தினாலமைத்த ஆலயத்தில்
சிவபெருமானை நல்ல பெரும்பொழுது வரத் தாபித்தார். நன்மையோடு அதன்பின்பு செய்ய வேண்டிய பூசனைகளையெல்லாம் பெருமையோடும் பல நாட்கள்
விரும்பிச் செய்து வாழ்ந்தார் . பொன்னாலியன்ற திருவம்பலத்தில்
ஆடுகின்ற சிவபெருமானின் பொன்னடியின் நீழலை
அடைந்தனர்.
18. நீண்ட செஞ்சடையினார்க்கு நினைப்பினால் கோயில்
ஆக்கிப்
பூண்ட
அன்பு இடை அறாத பூசலார் பொன்தாள் போற்றி
ஆண்ட
கை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வப்
பாண்டிமா
தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்.
பொருள்
மிக நீண்ட சிவந்த சடையினையுடைய இறைவருக்கு
நினைப்பினாலேயே கோயில் அமைத்து மேற்கொண்ட அன்பு இடையறாது செய்த பூசலாருடைய
பொன்னடிகளைத் துதித்து ஆண்மை மிக்க சோழர் பெருமான் உலக முய்யத் திருவுயிர்த்த
செல்வப் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசி அம்மையாரது திருவடிகளைத் துதிக்கப்
புகுகின்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக