ஆனந்தக் களிப்பு- கடுவெளிச் சித்தர் பாடல்கள் – பொருள் – விளக்கம்

ஆனந்தக் களிப்பு- கடுவெளிச் சித்தர் பாடல்கள் – பொருள் – விளக்கம்

பாடல்:1

      சாபம் கொடுத்திட லாமோ – விதி

தன்னை நம் மாலே தடுத்திடல் ஆமோ

   கோபம் கொடுத்திட லாமோ – இச்சை

கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ (பாபஞ்)

 பொருள் :

பாவம் செய்யாதே வாழ்க்கையில் யாருக்கும் சாபம் கொடுத்து விடாதே.  நடக்கும் ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும் என்ற விதியை நம்மால் தடுத்து நிறுத்தி விட முடியாது.  எனவே நம் வயிற்று எரிச்சல் அந்த மனிதனை துன்பத்திற்கு ஆட்படுத்தும் என்பதையும் அறிந்து அவன் மீது கோபத்தை கட்டுப்படுத்து என்று அறிவுரை கூறுகிறார்.

பாடல்:2 

சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தாற்

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத் திவிசு வாசம் – எந்த

நாளும் மனிதர்க்கு நன்மையாய் நேசம் (பாபஞ்)

பொருள் :

சொல்ல முடியாத மோசத்தை செய்கின்ற சூது செய்தால் அது உன்னை மட்டுமல்ல உன் சுற்றத்தாரையும் முழுமையாக நாசப்படுத்தி விடும் . நல்ல பக்தியும் விசுவாசமும் எந்த நாளாயினும் மனிதனுக்கு மிகவும் நேசமாக கூடவே இருக்கும்.

பாடல் 3

      நீர்மேல் குமிழியிக் காயம் – இது

நில்லாது போய்விடும் நீயறி மாயம்

   பார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்

பற்றா திருந்திடப் பண்ணு முபாயம் (பாபஞ்)

பொருள் :

பாவம் செய்யாதே இந்த உடம்பு நீர்க்குமிழி போன்றது.  இவ்விடமும் நிலை இல்லாத அழிந்து போய்விடும். இந்த மாயத்தை நீ அறிந்து கொள். இந்த உலகமும் அது போன்றது தான். இவ்வுலகின் மீது நீ பெரிதும் பாசம் கொள்ளாதே. அதனுடன் கொஞ்சமாக பற்று இல்லாதவராக இருந்திட  வேண்டிய காரியத்தை செய்ய வேண்டும். 

    பாடல்: 4

 

      நந்த வனத்திலோ ராண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

   கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு டைத்தாண்டி (பாபஞ்)

பொருள் :

நந்தவனத்தை வாழ்விடமாக கொண்ட ஆண்டி ஒருவன் பத்து மாதங்களாக குயவனிடம் பணிந்து வேண்டி இலவசமாய் பெற்று வந்த மண்பாண்டம் ஒன்றினை பத்திரமாக கொள்ளாமல் தலையில் வைத்து கொண்டாடி கீழே போட்டு உடைத்தாற் போல பத்து மாதங்களாக கருவறை இருந்து வெளிவந்த இவ்வுடம்பை பேணிப் பாதுகாக்காமல் பகட்டாய் திரிந்து அழித்துக் கொள்கிறாய் என்பதை எண்ணிப் பார் என்கிறார் .

 பாடல் 5 

      தூடணமாகச் சொல் லாதே –தேடுஞ்

சொத்துக்களிலொரு தூசும் நில்லாதே

   ஏடணை மூன்றும் பொல்லாதே – சிவத்

திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே (பாபஞ்)

பொருள் : 

தேவையற்ற விதமாக சொல்லாதே. தேடுகின்ற சொத்துக்கள் பொருட்கள் யாவும் நிலை அற்றவை . அவைகளில் ஒரு தூசு கூட நிலைத்து நிற்காது . ஏடனை மூன்றும் பொல்லாதவை . எனவே நீ சிவத்தின் மீது மட்டும் அன்பு வைத்தால் உனக்கு எமலோகம் உனக்கு தூரமாகும் .

பாடல்: 6

      நல்ல வழி தனை நாடு – எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

   வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு (பாபஞ்)

பொருள் :

பாவம் செய்யாதே. நல்ல வழிகளை விரும்பித்  தேடிடு.  ஒவ்வொரு நாளும் பரமனையே உள்ளத்தில் ஏற்றி அவன் அருளையே தேடு.  நல்லவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும் .  அள்ளித்தரும் வள்ளலாகிய பரமனை நெஞ்சில் நிறுத்தி அவனையே வாழ்த்தி கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும் .

பாடல்: 7

நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே – கெட்ட

பொய்ம் மொழிக் கோள்கள் பொருந்தவிள் ளாதே (பாபஞ்)

பொருள் :

பாவம் செய்யாதே.  நம்மோடு   இருக்கும் நல்லவர்களை எல்லாம் ஒதுக்கி தள்ளி விடக்கூடாது . நான்கு  எட்டினில் ஒன்றைக் கூட வெறுத்து ஒதுக்கி விடக் கூடாது.  என்றும் பிறர் மீது பொல்லாங்கு கொள்ளக் கூடாது.  கெட்ட நடத்தையாகிய பொய்யைப்  பேசி கோள்கள் பொருந்துமாறு நாம்  நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை கூறுகிறார்.

பாடல் 8

      வேத விதிப்படி நில்லு – நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

   சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு (பாபஞ்)

 

 பொருள் :

வேதங்கள் என்ன சொல்கின்றனவோ அந்த முறைப்படி எதையும் செய்யக்  

கற்றுக்கொள்ள வேண்டும்.  இவ்வுலகில் நல்லவர்கள் கடைபிடிக்கின்ற 

வழிகளை தேடிச்  சென்று கடைப்பிடிக்க முயல வேண்டும். 

அனைவருக்கும் சாதகமான முறையை, நிலைகளை மட்டுமே பிறருக்கு 

அன்புடன் சொல்ல வேண்டும்.  பொல்லாத சண்டாள கோபத்தை சாதனை 

செய்து கொன்றுவிட வேண்டும் .  பிறரிடம் கோபம் கொள்ளாதே

என்கிறார் .

பாடல் :9

பிச்சையென் றொன்றுங்கே ளாதே –எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே

இச்சைய துன்னையா ளாதே – சிவன்

இச்சை கொண்டவ்வழி யேறிமீ ளாதே (பாபஞ்)  

பொருள் :

பிறரிடத்தில் எதையும் யாசித்துப் பெற வேண்டும் என்று நினைக்கக் 

கூடாது.  மிக அழகாக பெண்கள் இருக்கின்றார்கள் என்று அவர்கள் மீது 

ஆசை கொண்டு பெருக்க மகிழ்ந்துதிரியாக கூடாது.  இத்தகைய 

சிற்றின்பங்கள் நம்மை வாழ வைக்காது.  அவை துன்பத்தையே தரும். 

சிவன் இச்சை கொண்டு தவவழியை மேற்கொண்டு இருந்ததைப் 

போல நீயும் இருந்து மீளாதே.

பாடல் 10

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை

அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு (பாபஞ்)

பொருள் :

உண்மையான தவத்தின் ஞான அறிவைப் பெற்று அவ்வழியிலே   செல்ல 

முயற்சி செய்.  இவ்வுலகில் பற்றற்ற வேதாந்த வெட்ட வெளியினை நாட 

வேண்டும். அஞ்ஞான மார்க்கத்தை விட்டு ஒழித்து விட்டு உன்னைச்  

சார்ந்தவர்களுக்கு ஆனந்தமான வழியை கூறுவதாக அமையும்.

பாடல் 11

மெய்க்குரு சொற்கட வாதே – நன்மை

மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே

பொய்க்கலை யால் நடவாதே – நல்ல

புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே (பாபஞ்)

பொருள்:
நீ பொய்யான குருவைத்  தேடி அக்குருவின் போதனைகளை 

தள்ளிவிடாமல் பின்பற்றி  பிறருக்கு நன்மை செய்வதை  விட்டு 

விடாதே. பொய்யான வாழ்க்கையால் ஆடம்பரத்தால் வாழாதே. நல்ல 

புத்தி சிறப்பை உடையவன் ஆனால் உன்னுடைய அறிவை பொய்யான 

வழியில் செலுத்தாதே.

பாடல்:12

      கூடவருவ தொன்றில்லை – புழுக்

கூடடெடுத்திங்கன் உலைவதே தொல்லை

   தேடரு மோட்சம தெல்லை – அதைத்

தேடும் வழியைத் தெளிவோரு மில்லை (பாபஞ்)

 

பொருள் :

மனமே நம்முடன் இறுதி வரை ஒன்றும் வருவது இல்லை . 

புழுப்போன்ற துர்நாற்றம் வீசும் உடலை  எடுத்து இவ்வுலகில் 

நடமாடுவது தொல்லை.தேடுவதற்கு அரிய வீடு பேற்றினை அடைவதே 

நமது எல்லையாகும்.  அந்த அறிய வழியைத்  தேடி தெளிவோர் 

உலகில் யாரும் இல்லை.

பாடல் 13

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த

ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு

முந்தி வருந்தி நீ தேடு – அந்த

மூலம் அறிந்திட வாமுத்தி வீடு

பொருள் :

மனமே இந்த உடல் ஐம்புலன்களால் சூழ்ந்த காடாகும்.  ஐம்புலன்களால் 

உமா தேவியாரின் கணவர் ஆகிய சிவபெருமானை  நீ நாடு.  அவரை 

எவ்வாறேனும்  வருந்தித்  தேடவேண்டும் . அந்த மூலப் பொருளை 

அடைந்து விட்டால் அதுவே முக்தி வீடாகும்.

பாடல் 14

      உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை

ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை

   கள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்

கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை (பாபஞ்)

பொருள் :

உன்னுடைய வாழ்க்கையில் நான்கு வகையான கோட்டைகள் உள்ளன. 

அதில் நீ பிறரிடம் கொள்ளும் பகையை மட்டும் விரட்டி விட்டால் நீயே 

இன்பம் என்கிற இந்த நாட்டை ஆளலாம்.  கள்ளத்தனமான 

காரியங்களை செய்ய தூண்டும் ஆசை இச்சையை தூண்டும் புலனை 

அடக்கி வெட்டித்  தீயில் இட்டு விட்டால் நேராக முதியை  அடைந்து 

விடலாம்.

பாடல் 15  

      காசிக்கோடில் வினை போமோ – அந்தக்

கங்கையா டில்கதி தானும் உண்டாமோ

   பேசுமுன் கன்மங்கள் சாமோ – பல

பேதம் பிறப்பது போற்றினும் போமோ (பாபஞ்)

 

பொருள் :

மனமே எண்ணற்ற பாவங்களை வாழ்நாளில் செய்துவிட்டு அதனை 

போக்கிக் கொள்ள காசிக்குச் சென்றால் அந்த பாவங்கள் தொலையுமா 

என்றால்  தொலையாது . எனவே பாவம் செய்யாமல் இருக்க 

வேண்டும். 

பாடல் 16

      பொய்யாகப் பாராட்டுங் கோலம் – எல்லாம்

போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்

   மெய்யாக வேசுத்த காலம் – பாரில்

மேவப் புரிந்திடில் என்னனு கூலம் (பாபஞ்)

 

 பொருள் :

கங்கையிலே நீராடினாலும்  முக்தி கிடைக்குமா என்றால் கிடைக்காது. 

மற்றவர்களிடம் நம் பாவங்களை எடுத்துச் சொல்லி புலம்புவதால் 

பாவங்கள் தீருமா என்றால் தீராது.  நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் 

என்னும் வேறுபாடு மேற்கொண்ட செயல்களை எல்லாம் செய்வதால் 

போகுமோ என்றால் போகாது.  அவரவர் செய்த வினைகளின் 

பலன்களை அவரவர் அனுபவிக்க வேண்டுமே தவிர  வினைகளில் 

இருந்து  என்றும்  விடுபடுதல் என்பது  மிகவும் இயலாத  ஒன்று 

ஆகும். 

பாடல் 17

சந்தேக மில்லாத தங்கம் – அதைச்

சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்

அந்தமில்லாத வோர் துங்கம் – எங்கும்

ஆனந்தமாக நிரம்பிய புங்கம் (பாபஞ்)

பொருள் :

மனமே பலரும் பொய்யான வேடம் இட்டுத் தி.ரிகின்றனர்.  அது 

மட்டுமல்லாமல் ஒருவரின் புறத்தோற்றத்தை கண்டு மட்டுமே 

இவ்வுலகம் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்த பொய் கோலம் 

ஒருவன் இறந்து போகும் காலத்தில் தான் அழியும். ஒருவன் மரணம் 

அடையும் காலத்தில் தான், தான் செய்த பாவங்களை எண்ணி 

வேதனைப்படும் நிலை வாய்க்கிறது.  இதனால் யாருக்கும் எந்த 

பலனும் இல்லை . இது போன்ற பொய் வேடமிட்டு திரிவதினால் 

உலகில் யாருக்கும் நன்மையில்லை எனவே மனமே எந்த பாவமும் 

செய்யாமல் இருக்க வேண்டும் . .

பாடல் 18

      பாரி லுயர்ந்தது பத்தி – அதைப்

பற்றின பேர்க்குண்டு மேவரு முந்தி

   சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்

சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி (பாபஞ்)

  

பொருள்:

மனமே இறைவன் சிறிதும் குற்றமற்றவன்.  பத்தரை மாற்றுத்  தங்கம் 

போன்றவன்.  அவனே கதி என்று நினைப்பவருக்கு எந்த நாளும் 

தாழ்வில்லை.  இறைவன் முடிவில்லாதவன் எங்கும் ஆனந்தமாய் 

நிரம்பியவர்.  மனமே இவ்வுலகத்திலேயே உயர்ந்தது பக்தி தான். 

அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை.  இறைவன் மேல் பக்தி 

கொள்ளும் ஆழ்ந்த அன்பே இறுதியில் வீடுபேறு பெற    அழைக்கும் 

சிவபெருமான் மேல் தொடர்ந்து பக்தி செலுத்தி வந்தால் அட்ட 

சித்திகளும் விரைவிலேயே கைகூடும்.

பாடல் 19

     அன்பெனும் நன்மலர் தூவிப் – பர

மானந்தத் தேவின் அடியிணை மேவி

   இன்பொடும் உன்னுட லாவி – நாளும்

ஈடேற்றத் தேடாய் நீ இங்கே குலாவி (பாபஞ்)

பொருள்:

அன்பு என்கின்ற நல்ல மலரை பிறரிடம் தூவ வேண்டும்.  பரமானந்த 

தேவியின் திருவடிகளைத்  தொழுது வணங்கி மகிழ்வானவற்றை 

உன்னுடைய உள்ளத்தில் நினைந்து தினம் தோறும் பரமனை வணங்கி 

வந்தால் உன்னுடைய எண்ணங்கள் இவ்வுலகத்திலேயே ஈடேறும். 

அதனை பூர்த்தி செய்ய நாம் எங்கும் தேடிப் போக  வேண்டியது 

இல்லை.

பாடல் 20

      ஆற்றறும் வீடேற்றங் கண்டு – அதற்

 கான வழியை யறிந்து நீ கொண்டு

   சீற்றமில்லா மலே தொண்டு – ஆதி

 சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கெண்டு (பாபஞ்)

பொருள்:

மனமே இம்மண்ணுலகில் பிறந்த பிறப்பை ஒழிக்கும் வழியை அறிந்து 

கொண்டு வீடு பெரும் அடையும் வழியை கண்டு கொண்டு எவ்வித 

கோபமும் இல்லாமல் மனம் விருப்பம் இல்லாமல் எல்லாம் வல்ல 

சிவபெருமானுக்கு தொண்டு செய்தால் வீடு பேறு அடையலாம்.

பாடல் 21

ஆன்மாவால் ஆடிடு மாட்டந் – தேகத்

தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்

வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்

வையி லுனக்கு வருமே கொண்டாட்டம் (பாபஞ்)

பொருள்:

மனமே, இந்த உடலில் ஆன்மா புகுந்து உடலை அதன் விருப்பப்படி 

ஆட்டி படைக்கிறது.  இந்த உடலில் இருந்து ஆன்மா நீங்கி விட்டால் 

இவ் உடல் வாட்டமடைந்து விடுகிறது.  வீடுபேறு அடைவதிலேயே 

நாம் விருப்பம் கொண்டிருந்தால்  எப்பொழுதும் இன்பம் தான் .

பாடல் 22

      எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை

 எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து

   வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த

 வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து (பாபஞ்)

பொருள்

மனமே வாசி என்னும் மூச்சுப்பயிற்சியின் மூலம் எண்வகை 

சித்திகளையும் அறிந்து கொண்டு உன்னுள் மறைந்திருக்கும் அனைத்து 

ரகசியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். வெட்ட வெளியாய் 

திகழும் இறைவனைச் சார்ந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வேண்டும். 

மனமே இதனை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாடல் 23

      இந்தவுலகமு ள்ளு – சற்றும்

இச்சைவையாமலே யென் நாளுந் தள்ளு

   செந்தேன் வெள்ளம் மதை மொள்ளு – உன்றன்

சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு (பாபஞ்)

பொருள்

இவ்வுலகம்  முள் போன்று துன்பம் நிறைந்தது. எனவே இவ்வுலக 

வாழ்விலே பேராசை வைக்காமல் அதை உதறித் தள்ள வேண்டும். தியான 

நிலையில் அமர்ந்து அதன் மூலம் கிடைக்கும் பேரின்ப வெள்ளத்தை 

அனுபவிக்க வேண்டும். அதனையேத்  தொடர்ந்து செய்ய வேண்டும். 

அதாவது எப்பொழுதும் யோக நிலையிலேயே அமர்ந்து 

இறைவனை  எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

பாடல் 24

பொய்வேதந் தன்னைப் பாராதே – அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே

மைவிழியாரைச் சாராதே – முன்

மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே (பாபஞ்)

பொருள்: மனமே வேதம் கூறும் செய்திகளைக்  கேட்காதே.  அவை 

இறைவனை அடைய உதவ மாட்டாது . வேத நூல் பயின்று அதன்படி 

தாங்களும் வாழ்வில் கடை பிடிக்காதவர்கள் ஆகிய குருமார்களின் 

அறிவுரையும் கேட்காதே. கண்ணில் மை இட்டு வாழ்வைப்  பாழாக்கும் 

சில தீய பெண்களைச்  சேராதே.  தவறான வாழ்க்கை கேட்டுச் 

செல்லும்  தீயவர்களுடன் விருப்பப்பட்டு சேரக் கூடாது .

பாடல் 25

      வைதோரைக் கூடவையாதே – இந்த

வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே

   வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை

வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே (பாபஞ்)

பொருள்

உன்னைத்  திட்டியவர்களைக்  கூட நாம்  மீண்டும் திரும்பத் திட்டி 

விடக் கூடாது.  இந்த உலகமே பொய்யானதாக இருந்து நடந்து 

கொண்டாலும் நீ பொய்யான கீழான வாழ்க்கையை  மேற்கொள்ளாமால் 

இருக்க வேண்டும்.  தேவையற்ற பிறர் துன்பப்படுகின்ற செயல்களை 

நாம்  செய்துவிட்டு பிறர் மீது பழியைப் போடக்  கூடாது.  வீணாகப் 

பறவைகள் மீது கல்லை எரிந்து துன்பப்படுத்தாதே என்கிறார்.

பாடல் 26

      சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்

 

தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே

  

   தவநிலை விட்டுத் தாண்டாதே – நல்ல

 

சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே (பாபஞ்)

பொருள்

சிவத்தை அன்றி வேறு எதையும் வேண்டி அலைந்து திரியாதே.  தீங்கு 

தரக்கூடிய சண்டையைப் பிறரிடம் மூட்டி அவர்களை துன்பத்தில் 

ஆழ்த்தக் கூடாது. தவநிலையை விட்டுவிட்டு என்றும் வேறு நிலைக்கு 

தள்ளி போகாதே. நல்ல கருத்துக்களை சொல்லாத நல்ல நெறிகளைக்  

கற்றுத்  தராத  நூல்களைத்  தேடாதே என்கிறார்.

பாடல் 27

      பாம்பினைப் பற்றி யாட்டாதே –உன்றன்

பத்தினி மார்களைப் பழித்து காட்டாதே

   வேம்பினை யுலகி லூட்டாதே – உன்றன்

வீறாப்புத் தன்னை விளங்க நாட்டாதே (பாபஞ்)

பொருள் :

மனமே பாம்பினை கையில் பிடித்து அவற்றுக்கு எவ்வித தீமையும் 

செய்யாதே. கற்பு  நெறி தவறாத பெண்களை பலிக்காதே. வேம்பு போல 

கசக்கும் செயல்களையும் பேச்சுக்களையும் உலகில் பரப்பாதே. நான் 

தான் பெரியவன் என்று ஆணவம் கொண்டு வீராப்புடன் இருக்காதே.

பாடல் 28

போற்றுஞ் சடங்கை நண்ணாதே – உன்னைப்

புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே

சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே – பிறர்

தாழும் படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே (பாபஞ்)

பொருள் :

போற்றுகின்ற முறைகளை எண்ணி சடங்கு முறைகள் செய்யாதே 

உன்னை நீயே புகழ்ந்து கொண்டு பலரையும் புண்படுத்த நினைக்காதே 

சாற்றுகின்ற முன் நீ வாழ்க்கையை நீ எண்ணி பார்க்காதே பிறத்தாலும் 

படியான தாழ்ந்த நிலையை நீ உருவாக்காதே பாவம் செய்யாதே.

பாடல் 29

கஞ்சாப் புகைபிடி யாதே – வெறி

காட்டி மயங்கியே கட்குடியாதே

அஞ்ச வுயிர் மடியாதே – பத்தி

அற்றவஞ் ஞானத்தின் நூல்படியாதே (பாபஞ்) 

பொருள்:

பாவம் செய்யாதே.  கஞ்சா மற்றும்  புகையிலை பிடிக்காதே. மயக்கம் 

தரும் கல்லையும் குடிக்காதே எங்கும் கிடைக்காத பெயராக 

கிடைத்துள்ள இந்த உயிரை வீணாக மாய்த்துக் கொள்ளாதே.  உடலை 

பேணிக்கொள்.  பக்தி இல்லாத அஞ்ஞானத்தையும் நூல்களையும் 

படிக்காதே.

பாடல் 30

      பத்தி யெனுமேணி நாட்டித் – தொந்த

 பந்த மற்றவிடம் பார்த்ததை நீட்டிச்

   சத்தியமென் றதை யீட்டி – நாளுந்

 தன்வச மாக்கிக் கொள் சமயங்களோட்டி (பாபஞ்)

பொருள்:

மனமே , பக்தி என்னும் உருவாகவே மாறி சொந்த பந்தங்களில் இருந்து 

விலகி வாய்மையே எப்பொழுதும் பேசி சமயங்களில் இருந்து நீங்கி 

இறைவனை யோக சாதனைகள் மூலம் உன் வசமாகி கொள்ளலாம்.

பாடல் 31

செப்பரும் பலவித மோகம் – எல்லாஞ்

சீயென்றொருத்துத் திடங்கொள் விவேகம்

ஒப்பரும் அட்டாங்க யோகம் – நன்றாய்

ஓர்ந்தறி வாயவ ற்றுண்மைசம் போகம் (பாபஞ்)

பொருள் :

எண்ணற்றவையாய் இருக்கும் இன்பம் எல்லாம் ஒரு நாளில் நம்மை 

விட்டு சென்றுவிடும். சிற்றின்பங்கள் தான் என எண்ணி இவை 

இழிந்தவை  என அவற்றை விளக்கி உண்மையான இறைவனிலே 

நாட்டம் கொள்ள வேண்டும்.

பாடல் 32

      எவ்வகையாக நன் னீதி – அவை

 எல்லா மறிந்தே யெடுத்து நீ போதி

   ஒவ்வாவென்ற பல சாதி – யாவும்

 ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி (பாபஞ்)

 

பொருள்: 

நல்ல நீதிகள் நற்செயல்கள் எந்த வகையில் இருந்தாலும் அவற்றை 

கற்று நன்கறிந்து அவற்றில் உள்ள நல்ல செயல்களை நாம் பிறருக்கும் 

போதனை செய்ய வேண்டும்.  சாதி வேற்றுமை உள்ளது என்பதையும் 

பல சாதிகள் உள்ளன என்பதையும் நீ ஏற்றுக் கொள்ளாமல் எல்லாமும் 

சேர்ந்த ஒரே சாதி மனித சாதி என்பதை அறிந்து அனைவரும் ஒன்றே 

என்ற நெறியை உணர்ந்து பிறருக்குக்   கூற வேண்டும்  என்கிறார் .

பாடல் 33

கள்ள வேடம் புனையாதே – பல

கங்கையிலேயுன் கடம் நனையாதே

கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்

கொண்டு புரிந்து நீ கோள் முனையாதே (பாபஞ்)

பொருள் :

உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் கள்ள வேடம் புனைந்து 

திரியக் கூடாது.வெளிவேஷத்தால் பல கங்கையில் உன்னுடைய உடம்பை 

நனைத்துத் திரியாதே.  தெரியாது பிறரிடம் இருந்து பொருள் போன்று 

எதனையும் கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைக்காதே.  நட்பு 

கொண்டு இருந்து விட்டு அந்த நட்புக்கு பங்கம் வரக்கூடியவாறு விட்டு 

பிரிந்து சென்று மாறாதே என அறிவுறுத்துகிறார் .

பாடல் 34

      எங்குஞ் சயபிர காசன் – அன்பர்

 இன்ப இருதயத் திருந்திடும் வாசன்

   துங்க அடியவர் தாசன் – தன்னைத்

 துதிக்கிற் பதவி அருளுவான் ஈசன் (பாபஞ்)

பொருள்:

எங்கும் வியாபித்திருக்கிற சயப்பிரகாசனின் நண்பராக விளங்குகின்ற 

இன்ப இதயத்தோடு விளங்கும் வாசன் அவர்தம் துணையாக இருக்கிற 

தாசன் தம்மை வணங்குகிற பதவியை ஈசன் அருள்வான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்