இயேசு காவியம் – ஊதாரிப் பிள்ளை-- பொருள் - விளக்கம்- பாடல்

       இயேசு காவியம் – ஊதாரிப் பிள்ளை

ஒரு தந்தை இரு மக்கள் ஊர் முழுதும் சொத்து

ஒரு பிள்ளை அவர்களிலே மணியான முத்து

சிறுபையன் ஊதாரி தேறாத நெத்து

தீராத மழையினிலே கரையேறும் வித்து

தன் பாகம் வேண்டுமெனத் தந்தையிடம் கேட்டான்

தந்தை அவன் மொழி கேட்டுச் சரிபாதி தந்தான்

தந்தானே யல்லாது தாளாது துடித்தான்

தன் பிள்ளை வாழட்டும் என்றேதான் கொடுத்தான்.

குருட்டுமகன் தன் சொத்தைக் குறைந்தவிலை விற்றுக்

கொண்டோடி வெளிநாட்டில் கும்மாளமிட்டான்!

பொருட்பெண்டிர் மதுவென்று போனவழி சென்று

பொருள் தேய்ந்து புகழ்தேய்ந்து தெருவினிலே நின்றான்!

அந்நாட்டில் பெரும்பஞ்சம் அவ்வேளை சூழ

அறியாத இளமைந்தன் அலைந்தானே வாழ!

தன்னாட்டு மனிதனிடம் ஒரு வேலை தேட

தந்தானே ஒருவேலை பன்றிகளோடாட!

பன்றிக்குத் தருகின்ற உணவேதான் உணவு

பாவிக்கு நாளெல்லாம் தந்தையவன் கனவு

அந்நேரம் தெளிந்ததுகாண் அவனுடைய அறிவு

அப்பாவின் கால்களிலே விழுகின்ற நினைவு!

என்தந்தாய் வானுக்கும் உமக்கும் எதிரானேன்

எத்தனையோ ஊழியர்கள் இங்கிருக்கப் போனேன்.

உன்வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய்!

உன்பிள்ளை என்று சொலத் தகுதியில்லை காப்பாய்!

இப்படிப்போய் விழ வேண்டும் என்றெண்ணிச் சென்றான்.

எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையின்முன் நின்றான்.

அப்பா என் மகனே என்றணைத்தானே தந்தை

அன்பான தந்தையின்முன் அழுதவன் சிந்தை.

எப்போது வருவாய் என்று எண்ணியிருந்தேனே

இளைத்தாயே என் மகனே கண்மணியே தேனே

தப்பான பிள்ளையல்ல எதுவும்சொல்லாதே

 

சந்தர்ப்பம் செய்த சதி! வருவாய் இப்போதே!

யாரங்கே பணியாள் வா! பட்டாடை நகைகள்

அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்

பேர்சொல்லும் மகனுக்குப் பருங்கன்றின் கறிகள்

பிழையாமல் செய்யுங்கள் விரைவில் எனச் சொன்னான்.

மாலையிலே மூத்தமகன் மனைக்குவரும்போது

மனையிலே சங்கீதம் நடனவகை நூறு

சாலையிலே நின்றபடி ஏன் சத்தம்? என்றான்

தம்பி இன்று வந்துள்ளார் என்றொருவன் சொன்னான்

ஆத்திரத்தில் வெளிப்புறமே மூத்தமகன் நின்றான்

அப்போது தந்தையவன் அந்த இடம் வந்தான்

சாத்திரத்தை மறந்தவனைத் தடபுடலாய் ஏற்றீர்

சாப்பாடு நடனமென ஏற்றுகிறீர் போற்றி!

உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்

ஒருநாளும் எனக்கென்று விருந்துவகை உண்டா,

கண்கலங்கி மூத்தமகன் இவ்வாறு சொல்ல

கனிவோடு தந்தையவன் மறுவார்த்தை சொன்னான்.

என்னோடு என்றும்நீ இருப்பவனேயன்றோ!

என் செல்வம் எந்நாளும் உன்னுடையதன்றோ!

உன் தம்பி இறந்ததன்பின் உயிர் பெற்று வந்தான்!

உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

பொருள் :

ஒரு பணக்கார தந்தைக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு ஊர் முழுவதும் சொத்துகள்  இருந்தன . இரு மகன்களில் மூத்தவன் மணியான முத்து போன்றவன்.  நல்ல குணங்களை உடையவன்.  தந்தையின் பேச்சினை கேட்பவன்.  இளைய மகனோ எதற்கும் பயன்படாத நெத்தாக வாழ்ந்தான். விடாமல் பெய்கின்ற மழையில் விதைக்கப்பட்ட விதை ஆனது கரை ஒதுங்குவது போல எதற்கும் பயன்படாதவன்.  ஒரு நாள் தனது தந்தையிடம் தனக்குரிய சொத்தை தனியாக பிரித்து தர வேண்டும் என்று கேட்டான். அதை கேட்டவுடன் தந்தையின் மனம் துடித்தது. இருந்தாலும் மகனின் ஆசைக்காக சொத்தில் பாதியைப்  பிரித்து கொடுத்தார்.தன் மகன் நன்றாக வாழட்டும் என்ற எண்ணம் அவரை  அவ்வாறு செய்யச் செய்தது. கண்ணிருந்தும் கூட அந்த  இளைய மகன் கால் போன போக்கில் நடந்தான் . சொத்துக்களைக் குறைந்த விலைக்கு விற்று வெளிநாட்டிற்கு சென்று ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். மதுவிற்கும் விலை மகளிர்க்கும்  செலவழித்து அவர்களுக்கு   அடிமையாகிக்  கெட்ட நண்பர்களோடு சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டான். இந்த வாழ்க்கை தொடரவில்லை கையில் இருந்த அனைத்து சொத்துக்களும் தீர்ந்து போயின. பொருள் தேய்ந்து போனதோடு மட்டுமல்லாமல் புகழும் குன்றிப்போனது. நீர் அற்ற குளத்து அருநீர் பறவை போல தனிமையில் வாடினான்.  நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது என்ன செய்வது என்று தெரியாமல் சிந்திக்க தொடங்கினான்.  என்ன செய்வது என்று தெரியாமல் தெருக்களில் வாழ்க்கையைத்  தேடி ஓடி அலைந்தான். பசியை போக்க வேலை தேடத் தொடங்கினான்.  எந்த ஒரு வேலையையும் பார்க்கவும் தெரியவில்லை.  இறுதியாக அவனுக்கு பன்றிகள் மிகுந்திருக்கக் கூடிய ஒரு பண்ணையில் வேலை கிடைத்தது.  வேலைக்குக்  கூலியாளாகச்  சேர்க்கப்பட்டான். பன்றிகள் உண்ணும் தவிடே இவனுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது.  தந்தையோடு வாழ்ந்த போது சுகபோகமாக இருந்ததை பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.  எப்பொழுதும் தந்தையை நினைவாகவே இருந்தான். அப்பொழுது அவனது அறிவு தெளிவு பெற்றது.  தவறை உணர்ந்து தந்தையின் கால்களிலே விழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தந்தையே, கடவுளுக்கும் உமக்கும் முன்பாக நான் தவறு செய்தேன் என்று கூறி அழவேண்டும் போல் அவன்  உள்ளம் எண்ணியது.  வீட்டில் பணியாளர்கள் பலர் இருக்க நானோ வீட்டை விட்டு வெளியேறி மனம் போன போக்கில் அலைந்தேன்.  உங்கள் பிள்ளை என்று சொல்ல தகுதியற்றவன்.  எனவே உங்கள் வீட்டு பணியாளர்களுள் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என தந்தையிடம் மன்னிப்பு கேட்க நினைத்தான் ஊதாரி மகன்.  தனது வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான்.  மகன் என்றாவது திரும்பி வந்து விடமாட்டானா என்ற வேட்கையுடன் விருப்பத்துடன் தந்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.  தூரத்திலிருந்து மகன் வருவது தெரிந்ததும் அவருக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது . வேகமாக ஓடிச் சென்று அவனைத்  தழுவி என் மகனே என்று அழைத்து  நீ எப்போது வருவாய் என்று காத்திருந்தேன்.  என் மகனே நீ மெலிந்து விட்டாய் கண்மணியே தேனே இனி நீ வருந்த வேண்டாம் நீ தப்பான பிள்ளை இல்லை உனது சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டது என்ற தந்தை உடனே  பணியாட்களை வர வைத்து விலை மதிப்புமிக்க பட்டா டைகளையும்  அணிகலன்களையும் எடுத்து வரச் சொன்னார்.  அவற்றை மகனுக்கு அணிவிக்குமாறு கூறினார்.  தன் பெயர் சொல்லும் மகனுக்கு பெருங்கன்றின் கறியினை சுவையாகச்  சமைத்து விரைவாகக்  கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.  மாலை நேரம் மூத்த மகன் வயலில் இருந்து வீட்டிற்கு திரும்பினான்.  வீட்டிற்குள் இருந்து சங்கீதமும் ஆடல் வகை நூறும் நடப்பது அவனுக்கு தெரிந்தது. வீட்டு வாசலில் நின்று கொண்டு வேலை ஆள்  ஒருவன் மூலம் தம்பி வந்து இருப்பதையும் வீட்டிற்குள் நடப்பதையும்  அறிந்து கொண்டான். தந்தையோ மூத்த மகன் வெளியில் கோபத்தோடு நிற்பதைப்  பார்த்து அவனைத் தேடி வந்தார்.  மூத்தவனோ  இதுவரை நான் உங்களுடன் இருந்துள்ளேன். என்றாவது எனக்கு இத்தகைய விருந்தினை தந்தது உண்டா? சாத்திரத்தை மறந்தவனுக்கு இவ்வளவு சிறப்புகள் நடக்கிறது.  உங்களோடு இருந்த நான் என்ன கண்டேன் என்று கூறி கண்கலங்கினான்.  உடனே தந்தை மிகவும் கருணையோடும் கனிவோடும் என்றும் என்னோடு இருப்பவன் நீதானே எனக் கூறி எல்லாம் உனக்குத்  தானே.  உன் தம்பியோ இறந்தபின் மறுபிறவி எடுத்து மீண்டு வந்துள்ளான் அதற்காக இந்த ஏற்பாடுகளை செய்தேன் என்றார்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்