பாத்திரம் பெற்ற காதை- மணிமேகலை கதைச் சுருக்கம்- பொருள் -விளக்கம் -மணிமேகலை

 

                      பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலை கதைச் சுருக்கம்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.  மணிமேகலை, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாவாள். இவள் , இள வயதிலேயே துறவறம் பூண்டு அமுதசுரபி மூலம் மக்களின் பசியைப் போக்கும் மேலான செயலை மேற்கொள்கிறாள் . இக்காப்பியம் உலக மக்களுக்குப் புத்த மதக் கோட்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும்  , பல அறக்கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன.

 

 பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலையில் 30 காதைகளில் 11 வது காதையாகப் ‘பாத்திரம் பெற்ற காதை’ இடம்பெற்றுள்ளது. இக்காதையில்தான், மணிமேகலை அள்ள அள்ள குறையாத அமுதசுரபியைப் பெற்ற நிகழ்வு இடம்பெறுகிறது. மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் நந்தவனத்தில் மலர் கொய்யும் போது, அங்கு அவளைத் துரத்தி வந்த உதயகுமாரன் எனும் இளவரசனிடமிருந்து தப்பும் பொருட்டு ஒரு பளிங்கு அறையில் புகுந்தாள். அங்கிருந்து அவள் மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டாள். அத்தீவில் இருந்த புத்த பீடிகையை வணங்கி முற் பிறப்பை அறிகிறாள். பின்பு அங்குத் தோன்றிய தீவதிலகையிடம் தன்னைப் பற்றி கூறி, முன்னொரு காலத்தில் ஆபுத்திரனால் கைவிடப்பட்ட அமுதசுரபியைப் பெறுகிறாள்.

மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்

மணிபல் லவத்திடை மணிமே கலைதான்

வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்

காவதம் திரியக் (கடவுள் கோலத்துத்)

 

பொருள்:

  மணிமேகலா தெய்வம் மந்திரம் அளித்துச் சென்ற பின்னர், மணிமேகலை மணிபல்லவத் தீவில்  உள்ள, வெண்மையான  மணல்  குன்றுகளையும், பரந்து விரிந்த பூம்பொழில்களையும், குளிர்ந்த மலர்களையுடைய பொய்கைகளையும், மெல்ல நோக்கிக்கொண்டு,  ஒரு காத தூரம் சுற்றித் திரிந்து  கொண்டிருந்தாள் .

...................... கடவுள் கோலத்துத்

தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலம்கவிழ் மகளிரின் வந்துஈங்கு எய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்,

பொருள்:

    தெய்வ வேடமுடைய தீவதிலகை  மணிமேகலை முன் தோன்றி,) கவிழ்ந்த  மரக்கலம் ( கப்பல், கலம் ,தோணி , படகு)  ஒன்றிலிருந்து மீண்டு வந்த மகளிரைப் போல் இங்கு வந்து சேர்ந்த வளையல்களை அணிந்த மென்மையான இயல்பை உடைய பெண்ணே  நீ யார் எனக் கேட்டது.

      ( தீவதிலகை என்பவள்  இந்திரன் சொல்லிற்கு இணங்க புத்தன் பாத பீடிகையைப் பாதுகாத்துக்கொண்டு மணிபல்லவத்தில் இருப்பவள்; தீவுக்குத் திலகம் போன்றவள் என்ற காரணத்தால் தீவ திலகை என்றழைக்கப்படுபவள். )

எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது

பொன்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய்

போய பிறவியில் பூமியங் கிழவன்

இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்

ஆய பிறவியில் ஆடலங் கணிகை

மாதவி ஈன்ற மணிமே கலையான்

என்பெயர்த் தெய்வம் ஈங்குஎனைக் கொணரஇம்

மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்

ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது

பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,

 

பொருள்

யார் நீ என தன்னை வினவிய தீவ திலகையிடம் எனது எப்பிறப்பின் நிகழ்ச்சி குறித்து,  காமவல்லி போன்றவளே  நான்  கூறுவதனை மனம் பொருந்திக் கேட்பாயாக என்றாள் . மேலும் சென்ற பிறவியில்,  நிலவுலகினை ஆண்ட மன்னனாகிய இராகுலனுடைய மனைவியாக இருந்தேன். இலக்குமி என்பது என்னுடைய பெயர். இப் பிறப்பிலே, ஆடல் கணிகை மாதவி என்பவளின் மகள் மணிமேகலை நான். என் பெயரை உடைய மணிமேகலா தெய்வம் இங்கு என்னைக் கொண்டு வந்தாள் .  பெருமை பொருந்திய இப்பீடிகையால் என் முற்பிறப்பினை அறிந்தேன். இதுவே நான் வந்த வரலாறும் ,இவ்விடத்தில் நான் அடைந்த பயனுமாகும் என்று கூறிய மணிமேகலை  பூங்கொடி போன்றவளே நீ யார் என்று தீவ திலகையைக் கேட்டாள். (பூமியங் கிழவன் – தரணிபன்)

ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த

தீவ திலகை செவ்வனம் உரைக்கும்

ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து

ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை

அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய

பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்

அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்

தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்

பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை

தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்

தீவ திலகை என்பெயர் இதுகேள்:

பொருள்

   மணிமேகலையின் முற்பிறப்பினை அறிந்த,  தீவதிலகை தான் வரலாற்றைக் கூறலானாள் .இத்தீவின்  பக்கத்தில் இரத்தின தீவின்கண்,  மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறத்திற்கு உரிமை உடையவனாகிய புத்தனின் இணையடிகள்  பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பதற்குத் துணை புரியும் . அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத்துள்ளது . அதனைத் தொழுது வலங் கொண்டு பணிந்து இங்கு வந்தேன்.  குற்றமற்ற தோற்றத்தினையுடைய நல்லதாகிய  இந்த மணிப்பீடத்தை இந்திரன் ஏவலால் காவல்  காத்தலை செய்து வருகின்றேன். எனது பெயர் தீவதிலகை என்பதாகும் என்று கூறினாள்.

தரும தலைவன் தலைமையின் உரைத்த

பெருமைசால் நல்அறம் பிறழா நோன்பினர்

கண்டுகை தொழுவோர் கண்டதன் பின்னர்ப்

பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி

அரியர் உலகத்து ஆகுஅவர்க்கு அறமொழி

உரியது உலகத்து ஒருதலை யாக

 

பொருள்:

மேலும் இதனைக் கேட்பாயாக, தரும வேந்தனாகிய புத்தன் தலைமையாகக் கூறிய, பெருமை மிக்க நல்லறத்தில் இருந்து வழுவாத நோன்புடையவர்கள்  மட்டுமே  இப் பீடிகையைக் கண்டு கைகூப்பி வணங்குதற்கு உரியோர் ஆவர்.  அவ்வாறு இப் பீடிகையைக் கண்ட பின்னர் அவர் முற்பிறப்பை அறிந்து கொள்வர் . அத்தன்மையை உடையவர்கள்  உலகத்திற் பெறுதற்கு அறியவர்கள். அவர்களுக்கு உறுதியாக உலகிலே தருமபதம் உரியது என்றாள் தீவ திலகை.  

ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள்

ஈங்குஇப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது

மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி

பொருள்:

அதோடு  அணியிழையே  இதனையும் கேள். பெரும்புகழுடைய இப் பீடத்தின் முன்னால்  அழகிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் கலந்து விளங்குகின்ற, கோமுகி என்னும் பெயருடைய அழகிய மிகுந்த நீரையுடைய பொய்கை உள்ளது.

இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்

மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது

நின்ஆங்கு வருவது போலும் நேர்இழை

ஆங்குஅதின் பெய்த ஆர்உயிர் மருந்து

வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

நறுமலர்க் கோதை நின்ஊர் ஆங்கண்

அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்

பொருள் :

இளவேனில்  பருவத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், இருபத்தேழு நாள்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதிமூன்றுநாள்மீன்கள் சென்றபின் இடையில் இருப்பதாகிய விசாகத்தின்கண், ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம் புத்தனுடன் பொருந்தித் தோன்றும். அந்தப் பாத்திரம் தோன்றும்  நன்னாளும் இந்நாளே.  அது தோன்றும் பொழுதும் இப்பொழுதே . ஆதலின், நேரிழையே  அது நின் கையிடத்து வருவதுபோலும். அப் பாத்திரத்திலிட்ட உயிர்களுக்கு மருந்தாகிய அரிய அன்னம், வாங்குபவர்களுடைய கையை  வருந்தச் செய்யுமே   அன்றி தான் குறைவு படாத இயல்பை  உடையதாகும். மணம் மிக்க மலர் மாலையினை அணிந்த பெண்ணே ,  நின் ஊரின் கண் உள்ள அறவணவடிகளிடத்தில் இப்பாத்திரத்தின் வரலாற்றினைக் கேட்டறிவாய் என்று கூறியது.

 

என்றுஅவள் உரைத்தலும், -இளங்கொடி விரும்பி

மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்

தீவ திலகை தன்னொடும் கூடிக்

கோமுகி வலம்செய்து கொள்கையின் நிற்றலும்

எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்

தொழுந்தகை மரபின் பாத்திரம் புகுதலும்.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்

மாத்திரை இன்றி மனமகிழ் எய்தி

பொருள்:

மேற்கண்டவாறு தீவதிலகை கூறியதும் மணிமேகலை அதனை விரும்பி, பெருமை மிக்க பீடத்தைக் கும்பிட்டு வணங்கினாள். தீவதிலகையோடும்  சேர்ந்து  கோமுகிப் பொய்கையை வலம் வந்து வணங்கி நின்றாள்.  அவ்வாறு வணங்கிய பின் அனைவரும் தொழுது வணங்கும் இயல்பை  மரபினையுடைய மாபெரும் பாத்திரம் பொய்கையிலிருந்து  எழுந்து வலம் புரிந்து நின்ற மணிமேகலையின் சிவந்த கைகளில் புகுந்தது. அப் பாத்திரத்தைப் பெற்ற மணிமேகலை அளவின்றி மன மகிழ்ச்சியடைந்தாள்.

மாரனை வெல்லும் வீர நின்அடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி

பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி

எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி

கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி

தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்அடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்அடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்அடி

வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு

அடங்காது என்ற ஆயிழை முன்னர்,

பொருள்:

  மாரனை வென்ற வீரனே நின் திருவடிகள் ,  தீய வழிகளையும்  மிக்க பகையை நீக்கும்.  நின் திருவடிகள் , பிறர்க்கு அறதை நல்க முயலும்.  நின் திருவடிகள் சுவர்க்க(சொர்க்கம்) இன்பத்தை வேண்டாதவை .  பழையோனே நின் திருவடிகள் மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே கிடக்குமாறு மேற்பட்ட நிலையில் இருப்பவை.  நின் திருவடிகள் உயிர்களுக்கு ஞானத்தை அளிக்கும்.  மெய்யுணர்வுடையவனே,  தீயமொழிகளைக் கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை உடையவனே. மெய்மொழிகள் பேசும் நாவினை உடையவனே  நின் நரகத்தில் இருப்பவர்களின் துன்பம் நீக்கச் சென்றவனே.உனது திருவடிகளை வணங்குதல் அல்லது வாழ்த்துதல் என்பது என் நாவால்  இயலாது என்று கூறி  மணிமேகலை வணங்கினாள்.

போதி நீழல் பொருந்தித் தோன்றும்

நாதன் பாதம் நவைகெட ஏத்தித்

தீவ திலகை சேயிழைக்கும் உரைக்கும்

பொருள்:

மணிமேகலை புத்தனின் பாதங்களை வணங்குவதைக் கண்ட தீவ திலகையும் வணங்கிக் கீழக்கண்டவாறு கூறலானாள். 

 

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது

பொருள்:

     பசிநோய் என்று கூறப்படுகின்ற பாவி  தான்  பற்றியவரின் உயர்ந்த குடிப் பிறப்பைக் கெடுக்கும்.  சிறப்பினை அழிக்கும்.  கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும். நாணாகிய அணிகலனைப் போக்கும். மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும்.பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறரின்  வாயிலில் நிறுத்தும். அத்தகைய பசியை நீக்கியவர்களது  புகழை எடுத்துக் கூறுவதற்கு எனது நாவால் முடியாது என்று கூறுகிறாள் தீவ திலகை. 

புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி

மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்

அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்

இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்

அரும்பசி களைய ஆற்றுவது காணான்

திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ

பொருள்:

புல்லும் மரமும் கரியாகுமாறு  புகையையுடைய தீப் போன்ற  வெப்பம் மிகுந்து, உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால், அரசு பதவியை விட்டு  நீங்கி, அரிய மறைகளை உணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திர முனிவன் பெரிய பூமி எங்கும்  சுற்றித் திரிந்தான். பசியை நீக்க உதவுகின்ற  உணவு ஒன்றையுங் கிடைக்காதவனாகினான்.சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்கினான். உண்ணுமுன் செய்தற்குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர்  வந்து அமரர் தலைவனான இந்திரன் தோன்றினான். மழைவளத்தை அளித்தான். நிலைபெற்ற உயிர்கள் மிகுந்து, குறையாத விளைச்சலும் பெருகியது.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்

கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,

பொருள் :பொறுக்கும் வன்மையுடையோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோரேயாவர், வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின்  உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை,  அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர், உயிரினை அளிக்கும் அறத்தினை மேற்கொண்ட வலிய அறிவினை உடையையாகி, கயக்கறு கலங்குதலற்ற நல்லறத்தினை அறிந்தாய் என்று தீவதிலகை உரைத்தாள்.

விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்

திட்டி விடம்உணச் செல்உயிர் போவுழி

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து

வெயில்விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய

சாது சக்கரன் தனையான் ஊட்டிய

காலம் போல்வதுஓர் கனாமயக்கு உற்றேன்

ஆங்குஅதன் பயனே ஆர்உயிர் மருந்தாய்

ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது

பொருள்:

  முற்பிறவியில் நான் விரும்பிய என் கணவன், திட்டிவிடமெனும் பாம்பு தீண்டப்பெற்று உயிர் நீங்கினான். தீயிற் குளித்து உயிர் போகும் நிலையில்  என்  உணர்வு நீங்குந் தறுவாயில், வெயில் விளங்குகின்ற உச்சிப் பொழுதில் விளக்கமுற்றுத் தோன்றிய, சாது சக்கரனுக்கு நான்  உணவளிப்பது போல  ஒரு கனவைக் கண்டு நான் மயக்கத்தை அடைந்தேன்.  அக் கனவைப் போன்ற நினைவின் பயனாகவே அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாகிய  இப் பாத்திரம் இங்கு என் கையில் புகுந்தது என்று கூறினாள்.

நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து

வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்

துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து

வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி

வெயில்என முனியாது புயல்என மடியாது

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்

அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்

ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்

தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே

நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து

அகன்சுரைப் பெய்த ஆர்உயிர் மருந்துஅவர்

முகம்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என,

 

பொருள் :

  மிகப் பெரிய சம்புத் தீவின்கண் நல்லறத்தை விதைத்து அதன்கண் விளைந்த பயனாகிய செல்வத்தை அனுபவிக்கும் செல்வருடைய இல்லத்தில் கிழிந்த சீரைகளை உடுத்திக்கொண்டு வயிற்றினைக் காய்கின்ற பெரிய பசி அலைத்தலால் வருந்தி  மிக்க வெயில் என்று வெறுப்படையாமலும் மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று,  தலைவாயிலில் நின்றுகொண்டு துன்பமிகுந்து,  முற்பிறப்பிற் செய்த தீவினையால்,  ஓரிடத்தில் நில்லாமல் துன்புறுகின்றவர் பலராவர்.  ஆகலின் பெற்ற குழந்தையினது முகத்தைக் கண்டு இரங்கி, இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் கொங்கையைப் போல,  மனத்தின் வழியே ஒழுகும்  இப்பாத்திரத்தின் கண், அகன்ற உள்ளிடத்திலிட்ட உயிர் மருந்தாகிய உணவு,  வரியவர்களின் முகத்தைக் கண்டு சுரத்தலைக் காணும் விருப்பமுடையவளாகிறேன்  என்று மணிமேகலை கூறினாள் .

 

மறந்தேன் அதன்திறம் நீஎடுத்து உரைத்தனை

அறம்கரி யாக அருள்சுரந்து ஊட்டும்

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது

ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை

ஈங்குநின்று எழுவாய் என்றுஅவள் உரைப்ப,

 

பொருள் :

   நான் இப்பாத்திரத்தின்  இயல்பினை நன்கு மறந்தேன் நீ எடுத்துக் கூறினாய். அறமே சான்றாக அருள் பெருக்கால் உண்பிக்கும், சிறப்பை உடையவர்களுக்கு  அன்றி ஏனையோர்க்கு இப்பாத்திரம் உணவை சுரக்காது.  அங்ஙனம் ஊட்டுவதின் பயனையும் அறிந்தாய் எனவே ஈண்டு நின்று நின் பதிக்கு எழுவாயாக என்று தீவதிலகை மொழிந்தாள். 

தீவ திலகை தன்அடி வணங்கி

மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்

கோமகன் பீடிகை தொழுது வலம்கொண்டு

வான்ஊடு எழுந்து மணிமே கலைதான்

வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த

எழுநாள் வந்தது என்மகள் வாராள்

வழுவாய் உண்டுஎன மயங்குவோள் முன்னர்

வந்து தோன்றி,

அந்தில் அவர்க்குஓர் அற்புதம் கூறும்

 

பொருள் : தீவதிலகையினுடைய பாதங்களைப் பணிந்து, பெருமை மிக்க அமுதசுரபியை மலர்போலும் கையில் ஏந்தினாள்.  புத்த பகவானின்  திருவடிப் பீடத்தை வலம் வந்து   வணக்கம் செய்தாள். மணிமேகலை வானத்தின் வழியாக எழுந்து சென்றாள். குற்றமில்லாத  மணிமேகலா தெய்வம் உறுதியாகக் கூறிய ஏழாம் நாள் வந்தது என் மகள் வரவில்லை, மணிமேகல தெய்வத்தின் வார்த்தைகள் தப்புதலும் உண்டு போலும் என்று கலங்குகி நின்ற மாதவியின் முன் வந்து தோன்றி அவர்களுடைய கலக்கத்தை நீக்கினாள் மணிமேகலை .

 

இரவி வன்மன் ஒருபெரு மகளே

துரகத் தானைத் துச்சயன் தேவி

அமுத பதிவயிற்று அரிதில் தோன்றித்

தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்

அவ்வையர் ஆயினீர் நும்மடி தொழுதேன்

வாய்வ தாக மானிட யாக்கையில்

 

பொருள் : தான் தாயைக்கண்ட மணிமேகலை அவர்களுக்கு ஓர் அற்புதத்தைக் கூறினாள்.  இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெரிய மகளே, குதிரைச் சேனைகளையுடைய துச்சயனுடைய மனைவியே, அமுதபதியின் வயிற்றின்கண் அரிதாகப் பிறந்து எனக்குத் தமக்கையராகிய தாரையும் வீரையுமாக நீங்கள் முற்பிறவியில் இருந்தீர்கள் . இப்பிறப்பில் எனக்குத் தாயர் ஆனீர்கள் நான் உங்களுடைய அடிகளை வணங்குகிறேன் என்றாள் மணிமேகலை.

தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு

அறவண வடிகள் தம்பால் பெறுமின்

செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்குஇஃது

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்எனத்

தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்

பழுதுஅறு மாதவன் பாதம் படர்கேம்

எழுகென எழுந்தனள் இளங்கொடி தான்என்.

 

பொருள் :உங்களுக்கு  இப்பொழுது மனித உடலால் தீவினைகளை நீக்கவல்ல நிலை செய்த தவத்தினால்  கிடைத்துள்ளது. செறிந்த வளையல்களை அணிந்த மகளிரே உம் பிறப்பினை அறவண அடிகளிடம் சென்று  அறிந்து கொள்ளுங்கள்.  இங்கிருக்கின்ற இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பெயருடைய பெருமைமிக்க பாத்திரமாகும். இதனை நீங்களும்  வணங்குவீர்  என்று கூற வணங்கித் துதித்தனர்  மாதவியும்  சுதமதியும் .  குற்றமற்ற பெருந்தவமுடைய அறவண அடிகள் திருவடிகளை வணங்குதற்குச் செல்லுவேம் என மாதவியையும் சுதமதியையும் எழுக எனவுரைத்து மணிமேகலை எழுந்தனள். .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்