வழக்குரை காதை- சிலப்பதிகாரம்- பொருள் - விளக்கம்

 

                      வழக்குரை காதை

 

 

ஆங்கு,

குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்

கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!

திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,

கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!

விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்

கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!

 

பொருள்:

அரண்மனை வாயில் காவலன் முன் கண்ணகி பேசுகிறாள்.

வாயில் காப்பவனே,

அரசனது வெண்  கொற்றக் குடையும் செங்கோலும் விழ, அரண்மனை

வாயில் மணி ஒலிப்பதை நான் காணப்போகிறேன்.

எட்டுத் திசையும் அதிரவும், சூரியனைப் பட்டப்பகலில் இருள் விழுங்கவும்

நான் காணப்போகிறேன். 

வானவில் ஒடிந்து விழவும், பகலில் விண்மீன்கள் உதிரவும் நான்

காணப்போகிறேன் என்று கண்ணகி வாயில் காப்பவனிடம் கூறினாள்.    

 

வாயில் காப்பவனின் எண்ணம் :

செங்கோலும், வெண்குடையும்,

செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;

நம் கோன்-தன் கொற்ற வாயில்

மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;

இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;

இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;

வருவது ஓர் துன்பம் உண்டு;

மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-

பொருள்:

செங்கோலும் குடையும் நிலத்தில் விழுகின்றன.

வாயில் மணி நடுங்கி ஒலிக்கிறது.

இரவில் வானவில் தோன்றுகிறது.

பகலில் விண்மீன்கள் விழுகின்றன.

எட்டுத் திசையும் அதிர்கின்றது போன்றவற்றைக் காட்சியாகக் கண்ட

காவலன் அரசனுக்கு துன்பம் வரப்போவதை உணர்ந்து அரசனுக்குச்

சொல்லுவோம் என்று நினைக்கிறான்.

கோப்பெருந்தேவி தான் கண்ட கனா

[கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை  அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்]

 

ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,

அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;

கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,

கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,

வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,

மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,

கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,

கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:

கூனும், குறளும், ஊமும், கூடிய

குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;

நரை விரைஇய நறுங் கூந்தலர்,

உரை விரைஇய பலர் வாழ்த்திட

ஈண்டு நீர் வையம் காக்கும்

பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,

ஆயமும் காவலும் சென்று

அடியீடு பரசி ஏத்த;

கோப்பெருந்தேவி சென்று தன்

தீக் கனாத் திறம் உரைப்ப-

அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,

திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,

 

பொருள்:

கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை  அரசனிடம் கூறுவதற்குச் 

செல்லும் போது,  ஒளி வீசுகின்ற  அழகிய அணிகலன்களை  அணிந்த 

பெண்கள்  கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தி வந்தனர் .புதிய 

நூலாடையையும் பட்டாடையையும் தாங்கி வந்தனர். கொழுவிய 

வெற்றிலைச் செப்பினை ஏந்தி வந்தனர். பல்வகை நிறங்களையும் 

பொடிகளையும்  மான்மதச் சாந்தினையும்  சுமந்து வந்தனர். 

தொடையினையும்   மாலையினையும் கவரியினையும்  அகில் 

புகையினையும் தாங்கி வந்தனர் .  கூனர்களும்  குறளர்களும் 

ஊமையர்களும்  சூழ்ந்து  குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ இங்கு 

உலகம் காக்கும் பாண்டியனின் பெருந்தேவி வாழ்க  என்று 

வாழ்த்திக்கொண்டு சென்றனர்.  இப்படி, தோழிகளும்,  காவலரும் சூழ்ந்து 

வரச் சென்ற கோப்பெருந்தேவி, தான் கண்ட தீய கனாவினைக் கணவன் 

பாண்டியனிடம்  சொல்லிக்  கொண்டிருந்தாள்.  அப்போது, திருமகள்  

விரும்பும் மார்பினை உடைய தென்னவர்களின்  கோமகன் அரியணையில் 

வீற்றிருந்தான். இது இவ்வாறு நிகழ அங்கே அரண்மனை வாயிலில் 

வேறொன்று  நிகழ்கிறது.

             

கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல்

 

வாயிலோயே! வாயிலோயே!

அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,

இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!

இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,

கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று

அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-

பொருள்

கண்ணகி காவலனிடம் வாயில் காவலனே!

ஆளும் முறையில் பிழை செய்தவனாகிய பாண்டியனின்   வாயிலைக்  

காப்பவனே!  இரண்டு சிலம்புகளில் ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு,

கணவனை  இழந்த  பெண் ஒருத்தி உன்னைக் காண வாயிலில்

காத்திருக்கிறாள்  என்று அரசனுக்கு அறிவிப்பாயாக என்று கூறினாள்.   

 

கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்

 

வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!

தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!

செழிய, வாழி! தென்னவ, வாழி!

பழியொடு படராப் பஞ்சவ, வாழி!

அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்

பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,

வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;

அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை

ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்

கானகம் உகந்த காளி, தாருகன்

பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;

செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;

பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;

கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;

கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-

பொருள் : 

கொற்கை வேந்தே வாழி! பொதியமலைத் தலைவனே,

செழிய தென்னவ, பழிப் பக்கம் செல்லாத பஞ்சவ வாழி.

ஒருத்தி வேந்தனைக் காண அரண்மனை வாயிலில் நிற்கிறாள்.

அவள் காளி போல் காணப்படுகிறாள். ஆனால், காளி அல்லள்.

வெட்டிய தலையைக் குருதி ஒழுகக் கையில் பிடித்துக்கொண்டு வெற்றி

வேலுடன் மேடையில் நிற்கும் கொற்றவையும்  அல்லள்.

ஏழு பெண்களில் இளையவளாகிய சாமுண்டியும் அல்லள்.

இறைவன் சிவபெருமானின் ஆட்டத்தைக் கண்டு அருளிய அணங்கும்  

அல்லள். அச்சம் தரும் காட்டில் வாழ விரும்பும் காளியும்  அல்லள்.

தாருகன் என்னும் அரக்கனின் நெஞ்சைப் பிளந்த பெண்ணும் அல்லள்.

நெஞ்சில் கறுவு கொண்டவள் போலவும், பெருஞ்சினம் கொண்டவள்

போலவும் காணப்படுகிறாள். பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு

ஒன்றைகைக் கையில் ஏந்திக்கொண்டிருக்கிறாள். கணவனை இழந்தவள்.

அரண்மனை வாயிலில் வேந்தைக் காணக் காத்துக்கொண்டிருக்கிறாள். 

என்று வாயிலோன் வேந்தனுக்குத் தெரிவிக்கிறான்.  

 

கண்ணகியை மன்னவன் அரண்மனைக்குள் வார அனுமதித்தல்

 

வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-

வாயில் வந்து, கோயில் காட்ட,

கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-   

பொருள்:

மன்னவன் வாயில் காப்பவனிடம் வாயிலில் நிற்கும்

கண்ணகியை அரண்மனைக்குள் அனுமதிக்குமாறு கூறினான்.அவனும்

வாயிலுக்குச் சென்று கண்ணகிக்கு அரசனின் அரண்மனையைக்

காட்டினான் . அவளும் உள்ளே சென்று மன்னனைக் கண்டாள்.             

 

பாண்டியன் கண்ணகியிடம் நீ யார் என வினாவுதல்.

 

நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!

யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என

 

பொருள்:

நீரொழுகும் கண்களுடன் என் முன் வந்து  இளங்கொடிபோல்

நிற்பவளே நீ யார் என்று அவளைக் (கண்ணகியைக்) கண்ட மன்னன்

கேட்டான்.

கண்ணகியின் மறுமொழி

தேரா மன்னா! செப்புவது உடையேன்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,

புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,

வாயில் கடை மணி நடு நா நடுங்க,

ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,

ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி

மாசாத்து வாணிகன் மகனை ஆகி,

வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,

சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு

என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;

கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே!

பொருள் :

குற்றமற்ற சிறப்பினை யுடைய தேவர்களும் வியப்பு எய்தப் புறாவொன்று 

அடைந்த  துன்பத்தினைப் போக்கியவனும்(சிபி சக்கரவர்த்தி), அவனன்றியும் 

அரண்மனை வாயிலில் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய

பசுவின் கண்களில் இருந்து ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வருந்தச் 

செய்ததால் , தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலில் 

இட்டுக் கொன்றவனும் ( மனுநீதிச் சோழன் )ஆகிய இவரது,  மிக்க புகழை 

உடைய புகார் நகரமே நான்  பிறந்த ஊர். அவ்வூரின்கண் பழியில்லாத 

சிறப்பினை உடைய எல்லா இடத்திலும் புகழ் சென்று விளங்கிய 

பெருங்குடியில்  மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் 

தோன்றி,பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி முன் செய்த 

தீவினையின் பயனாக நினது மதுரை நகரத்திற்கு  வந்து , இந் நகரில் 

என்னுடைய காலின் அணிந்திருந்த  சிலம்பு ஒன்றினை  விற்றதன் 

காரணமாக உன்னிடத்துக் கொலையுண்ட கோவலன் என்பவனுடைய 

மனைவி நான் ,  என் பெயர் கண்ணகி என்று கண்ணகி  கூறினாள்.


மன்னவன் உரைத்த விடை

கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;

 

வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை

பொருள்      

அணங்குபோல் தோன்றுகின்ற  பெண்ணே,  கள்வனைக் கொலை 

செய்தல் கொடுங்கோன்மை அன்று .  மேலும் அதுவே அரச 

நீதியுமாகும் என்று அரசன் கண்ணகியிடம் கூறினான்.

 

கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்

 

 நல் திறம் படராக் கொற்கை வேந்தே!

என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-

தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;

யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;

தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-

     

பொருள்:

ஒள்ளிய இழையினை அணிந்தவளாகிய  கண்ணகி மன்னனை நோக்கி,  

அறநெறியில்  செல்லாத கொற்கை நகரத்து அரசனே, என் காலில் அணிந் 

திருந்த  பொற் சிலம்பு மாணிக்க பரல்களை உடையது எனக் கூற 

மன்னவனோ என் காற்கு அணியான பொற் சிலம்பு   முத்துப் பரல்களை 

உடையது  என்று கூறினான். மேலும் அதனை வார வைத்து கண்ணகி 

முன் வைத்தான்.  

"(மன்னவன் தனது தேவியின் சிலம்பில் உள்ள அரி முத்து எனக் கூறி,

காவலர் கொணர்ந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்")

             

 

கண்ணகி சிலம்பை உடைக்க, மன்னவன் முகத்தில் மணி 

தெறித்தல்

 

              கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,

     மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,

 

பொருள் :

 

கண்ணகி தான் கார் சிலம்பை எடுத்து உடைக்க மாணிக்கப் பரல்

 

பாண்டியனது முகத்திடத்துத் தெறித்து வீழ்ந்தது.            

             

 

மன்னவன் உண்மை உணர்ந்து, உயிர் துறத்தல்

 

தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,

பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட

யனோ அரசன்? யானே கள்வன்;

மன்பதை காக்கும் தென் புலம் காவல்

என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்

 

பொருள் :   அவ்வாறு  தெறித்த மாணிக்கப் பரலைப் பார்த்து, தாழ்வுற்ற 

குடையை உடையவனாக, சோர்வுற்ற செங்கோலனாக , பொன் தொழில் 

செய்யும் கொல்லனுடைய பொய் வார்த்தைகளைக்  கேட்டு முறை 

பிழைத்த நான் ஓர் அரசனா? இல்லை , நான் துணிந்த  கோவலன் கள்வன் 

அல்லன் நானே கள்வன் என்று கூறினான். மக்களைக்  காக்கின்ற 

பாண்டிய நாட்டு ஆட்சி என்னை முதலாகக் கொண்டு தவறு  உற்றது என்று 

வருந்தி என் வாழ்நாள் அழியட்டும் என்று சொல்லி அரசன் மயக்கமுற்று 

வீழ்ந்தான்.

 

கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்

 

கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று

இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.

பொருள் :

பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் 

நடுங்கினாள். தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை 

சொல்லிப் பிறரைக் காட்டக் கூடும் . ஆயின் கணவனை இழந்த மகளிர்க்கு 

அவ்வாறு  சொல்லிக் காட்டக் கூடியது இவ்வுலகில் ஒன்று இல்லை 

என்று கருதி, இணையடி தொழுது வீழந்தாள்  .

             

 

வெண்பா

 அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்’ என்னும்,

பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே -பொல்லா

வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!

கடு வினையேன் செய்வதூஉம் காண்.

காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,

ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!

காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,

கூடலான் கூடு ஆயினான்.

மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,

கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்

கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்

உண்டளவே தோற்றான், உயிர்.    

பொருள் 

பாவச் செயல்களைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே எமனாக இருந்து 

தண்டிக்கும் என்கின்ற  பல அறிஞர்களின் கூற்றும்  உண்மையே.  கொடிய 

தீங்கினைச் செய்த வெற்றியினையுடைய பாண்டியனுடைய மனைவியே

கொடுவினையை உடையேனாகிய யான் இழைக்கும் மறச் 

செயல்களையும் நீ காண்பாய். கண்ணகியின் நீல மலர் போன்ற விழி 

பொழியும் நீரையும், அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பினையும்,

உயிர் நீங்கினது  ஒத்த அவள் வடிவினையும்,  காடுபோல் விரிந்து உடல் 

முழுதுஞ் சூழ்ந்த கரிய கூந்தலையும், கூடற்பதிக்கு அரசனாகிய பாண்டியன் 

கண்டு அஞ்சி வெற்றுடம்பாயினான். பாவியாகிய யான் இதனைக் 

காண்பேனாயினேன். கண்ணகியின் உடம்பிற் படிந்த புழுதியையும்

விரிக்கப்பட்ட கரிய கூந்தலையும்,  கையிலுள்ள ஒற்றைச் 

சிலம்பினையும், கண்ணீரையும், வையைக்கு இறைவனாகிய பாண்டியன்

பார்த்த அளவிலே வழக்கிலே தோல்வியுற்றான், அந் நங்கையின் 

சொல்லினைச் செவியில்  கொண்ட அளவிலே,  உயிரை இழந்தான்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்