பாரதியார் - எங்கள் தாய் - பாடல் -பொருள் - விளக்கம்

 

         பாரதியார்  -  எங்கள் தாய்


தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் - இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்!

 

பொருள் :

முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும்  நன்கு உணரும் வகையில்  கல்வி பல கற்றவர்களும் கூட  எங்கள் தாய் எப்போது தோன்றியவள் என்று சொல்ல இயலாத அளவிற்கு சிறப்பை உடையவள்.

 

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள்

ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்

பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்

பயின்றிடுவாள் எங்கள் தாய்

 

பொருள் :

எவ்வளவு சிறந்த  அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச் 

சொல்ல முடியாத அளவு வயதினை உடையவள் எங்கள் தாய். 

ஆனாலும் எங்கள் தாய் இந்த உலகில் எப்போதும் ஒரு 

கன்னிகை போல் இருப்பாள்

 

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்

சிந்தனை ஒன்றுடையாள்

 

பொருள் :

முப்பது கோடி மக்களை உடையவள் . {பாடல் பாடப்பட்ட 

காலத்தில்} ஆனாலும் எல்லோர்  மனதிலும் நிறைந்து நின்று 

ஒரே உயிராக உடையவள். இவள் பேசுகின்ற மொழிகள் 

பதினெட்டாக இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருப்பவள்

 

நாவினில் வேதமுடையாள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் - தனை

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடையாள்

 

பொருள் :

இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள். கையில் 

நன்மை  அளிக்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள். அவளைச்  

சேர்பவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் 

வலிமையான தோள்களை  உடையவள்

 

அறுபது கோடி தடக்கைகளாலும்

அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்

செறுவது நாடி வருபவரைத் துகள்

செய்து கிடத்துவள் தாய்


பொருள்: 

நீண்ட வலிமையான அறுபது கோடி கைகளைக்  கொண்டு 

எல்லாவிதஅறங்களையும் நடத்துகிறாள் எங்கள் தாய்.  தன்னை 

அழிக்க விரும்பி யாரேனும் வந்தால் அவர்களை தூள் தூளாக்கி 

அழித்துவிடுவாள் எங்கள்தாய்.

 

 

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்

புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்

தோமிழைப்பார் முன் நின்றிடும் கார் கொடும்

துர்க்கை அனையவள் தாய்


பொருள் :

பொறுமையில் பூமாதேவி  சிறந்தவள் என்பார்கள் . அந்த 

பூமியை விட  பொறுமையில் சிறந்தவள். பெரும் புண்ணியம் 

செய்யும் மனதை உடையவள். ஆனாலும் அவளுக்குக் குற்றம் 

இழைப்பவர்  யாராயினும் அவர்கள் முன் கரிய கொடிய 

துர்க்கையைப் போன்று  நிற்பவள்  எங்கள் தாய்.

 

கற்றை சடைமதி வைத்த துறவியைக்

கைதொழுவாள் எங்கள் தாய் - கையில்

ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகாளும்

ஒருவனையும் தொழுவாள்

 

பொருள் :

சடை முடியையும் பிறை  நிலவையும் தலையில் சூடியிருக்கும்

துறவியான  சிவபெருமானைக் கைதொழுவாள். கையில் 

தன்னிகரில்லா ஆயுதமாம் சக்கரத்தை வைத்திருக்கும் 

ஒருவனாம் பெருமாளையும்தொழுவாள் எங்கள் தாய் .

 

யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்

ஒன்றென நன்றறிவாள் - உயர்

போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்

பொற்குவை தானுடையாள்

 

பொருள் :

யோகங்கள் அனைத்திலும் தனக்கு நிகரில்லாதவள். 

உண்மையாம் இறை  ஒன்று தான் என்பதை நன்கு அறிவாள். 

உயர்ந்த போகங்களிலேயும்  நிறைவுடையவள். கணக்கில்லாத 

செல்வங்கள் உடையவள்.

 

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர்

அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்

 

பொருள் :

நல்ல அறம் செய்வதையே  விரும்பும் மன்னர்களை வாழ்த்தி 

நல்லதைச்  செய்வாள் எங்கள் தாய். அவர்கள் கெட்டவர்கள் 

ஆயின் அவர்களை அழித்த பின் ஆனந்தக் கூத்திடுவாள்.

 

வெண்மை வளர் இமயாசலன் தந்த

விறன்மகளாம் எங்கள் தாய் - அவன்

திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்

சீருறுவாள் எங்கள் தாய்

 

பொருள் :

வெண்ணிறம் கொண்ட இமயமலை தந்த மகளாம் எங்கள் தாய். 

அந்த இமயத்தின் திண்மை குறைந்தாலும் தான் மறையாத 

திண்மையுடையவள்;  தினமும்  பல சிறப்புகளை  பெறுவாள் 

எங்கள் தாய்.

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்