வல்லினம் மிகா இடங்கள்

 

        வல்லினம் மிகா இடங்கள்

 நிலைமொழி இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும் ய, , ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க, , , ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகாது என்பதைச் சான்றுடன் காண்போம்.

சுட்டு, வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகா

அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று, அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

அது + சிறிது = அது சிறிது
எது + பெரியது = எது பெரியது?
அவை + போயின = அவை போயின
எவை + பெரியவை = எவை பெரியவை?
அன்று + பார்த்தான் = அன்று பார்த்தான்
என்று + காண்பேன் = என்று காண்பேன்?
அத்தனை + செடிகள் = அத்தனை செடிகள்
எத்தனை + பழங்கள் = எத்தனை பழங்கள்?
அவ்வளவு + பேர் = அவ்வளவு பேர்
எவ்வளவு + தருவாய் = எவ்வளவு தருவாய்?
அவ்வாறு + பேசினான் = அவ்வாறு பேசினான்
எவ்வாறு + படித்தாள் = எவ்வாறு படித்தாள்?


எண்ணுப்பெயர்கள், எண்ணுப்பெயரடைகள் முன் வல்லினம் மிகா

சான்று:

ஒன்று + போதும் = ஒன்று போதும்
இரண்டு + தடவை = இரண்டு தடவை
மூன்று + குழந்தைகள் = மூன்று குழந்தைகள்
நான்கு + கால்கள் = நான்கு கால்கள்
ஐந்து + சிறுவர்கள் = ஐந்து சிறுவர்கள்
ஆறு + கடைகள் = ஆறு கடைகள்
ஏழு + சிறுகதைகள் = ஏழு சிறுகதைகள்
ஒன்பது + கிரகங்கள் = ஒன்பது கிரகங்கள்
நூறு + பழங்கள் = நூறு பழங்கள்

ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்ணுப்பெயரடைகளின் முன்வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஒரு + பொருள் = ஒருபொருள்
இரு + தடவை = இருதடவை
அறு + படைவீடு = அறுபடைவீடு
எழு + கடல் = எழுகடல்

வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகா

i) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

சாமி + கும்பிடு = சாமி கும்பிடு (சாமியைக் கும்பிடு)
நகை + செய்தான் = நகை செய்தான் (நகையைச் செய்தான்)
கனி + தின்றான் = கனி தின்றான் (கனியைத் தின்றான் )
காய் + கொடுத்தான் = காய்கொடுத்தான் (காயைக் கொடுத்தான்)
தமிழ் + படித்தான் = தமிழ் படித்தான் (தமிழைப் படித்தான்)
நீர் + பருகினான் = நீர் பருகினான் (நீரைப் பருகினான்)

ii) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணை அதன்முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

பொன்னி + கணவன் = பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்)

iii) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:


தாய் + சொத்து = தாய் சொத்து
மனைவி + கண்ணீர் = மனைவி கண்ணீர்
நடிகை + கோபம் = நடிகை கோபம்
வள்ளி + திருமணம் = வள்ளி திருமணம்

சான்று:

கத்தி கொண்டு + குத்தினான் = கத்திகொண்டு குத்தினான்
                                            (
கத்தியால் குத்தினான்)
வாள்கொண்டு + போர் செய்தான் = வாள்கொண்டு போர் செய்தான்

அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகாமை

அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர், தொகா நிலைத்தொடர் என்னும் இருவகைத் தொடர்களில் வல்லினம் மிகும் இடங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

        தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை

வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.

சான்று:

நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்

இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.

சுடு + காடு = சுடுகாடு
நடு + கல் = நடுகல்
குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
மூடு + பனி = மூடுபனி
சுடு + சோறு = சுடுசோறு
விடு + கதை = விடுகதை
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி

இரண்டு சொற்களோ, இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது, அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

இட்லி + தோசை = இட்லி தோசை (இட்லியும் தோசையும்)
யானை + குதிரை = யானை குதிரை (யானையும் குதிரையும்)
மா + பலா + வாழை = மா பலா வாழை (மாவும், பலாவும், வாழையும்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்)
நரை + திரை = நரைதிரை (நரையும் திரையும்)
கல்வி + கேள்வி = கல்வி கேள்வி (கல்வியும் கேள்வியும்)
நன்மை + தீமை = நன்மை தீமை (நன்மையும் தீமையும்)

தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை

எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

கண்ணகி + பேசினாள் = கண்ணகி பேசினாள்
மாதவி + பாடினாள் = மாதவி பாடினாள்
கோழி + கூவியது = கோழி கூவியது
யானை + பிளிறியது = யானை பிளிறியது

விளித்தொடரில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

மகனே + கேள் = மகனே கேள்
தம்பீ + போ = தம்பீ போ
அரசே + பார் = அரசே பார்

iii) ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஏவல் வினைமுற்று

வா + கண்ணா = வா கண்ணா
போ + தம்பி = போ தம்பி
படி + பாடத்தை = படி பாடத்தை
புறப்படு + பள்ளிக்கு = புறப்படு பள்ளிக்கு

வியங்கோள் வினைமுற்று

வாழ்க + தலைவா = வாழ்க தலைவா
ஒழிக + தீமைகள் = ஒழிக தீமைகள்
வருக + புலவரே = வருக புலவரே

         தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா

தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

வந்த + பையன் = வந்த பையன்
ஓடிய + குதிரை = ஓடிய குதிரை
கேட்ட + கேள்வி = கேட்ட கேள்வி
பாடிய + பாட்டு = பாடிய பாட்டு
கொடுத்த + கை = கொடுத்த கை
கூடிய + கூட்டம் = கூடிய கூட்டம்

       குறிப்புப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகா

குறிப்புப் பெயரெச்சத்தை இக்கால மொழியியலார் பெயரடை (Adjective) என்று குறிப்பிடுவர். இதன் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

நல்ல + பையன் = நல்ல பையன்
பெரிய + தெரு = பெரிய தெரு
புதிய + சிந்தனை = புதிய சிந்தனை
சிறிய + பேனா = சிறிய பேனா
கரிய + குதிரை = கரிய குதிரை
அரிய + பொருள் = அரிய பொருள்

எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா

செல்லாத, காணாத, ஓடாத என்பன போன்ற பெயரெச்சங்கள் எதிர்மறைப் பொருளை உணர்த்துவதால் எதிர்மறைப் பெயரெச்சங்கள் எனப்படும். இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

செல்லாத + காசு = செல்லாத காசு
காணாத + கண்கள் = காணாத கண்கள்
ஓடாத + குதிரை = ஓடாத குதிரை

     ண்டு, ந்து, ன்று என முடியும் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும், ய்து என முடியும் இடைத்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

கண்டு + பேசினார் = கண்டு பேசினார்
கொண்டு + போனான் = கொண்டு போனான்
வந்து + சென்றான் = வந்து சென்றான்
தின்று + பார்த்தான் = தின்று பார்த்தான்
கொன்று + குவித்தான் = கொன்று குவித்தான்
செய்து + தந்தான் = செய்து தந்தான்
கொய்து + கொடுத்தாள் = கொய்து கொடுத்தாள்

நன்கு + பேசினான் = நன்கு பேசினான்
நன்று + பேசினாய் = நன்று பேசினாய்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்