குணங்குடிமஸ்தான் சாகிபு - பராபரக்கண்ணி - பொருள் விளக்கம்

 

குணங்குடிமஸ்தான் சாகிபு - பராபரக்கண்ணி

பாடல்கள்

 

1.    அண்ட புவனமென்று ஆடுதிருக் கூத்தினையான்

 

கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே!

 

2.    ஆதியா யாண்டவனா யஃபாதுவாய் நின்றபெருஞ்

 

சோதியாய் நின்மலமாய்ச் சூழ்ந்தாய் பராபரமே!

 

3.    வேத மறைப் பொருளை வேதாந்தத் துட்கருவை

 

ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே!

 

4.    அண்ட புவனம் உடன்ஆகாச மென்றுசும்பிக்

 

கொண்டமெஞ் ஞானக் கூத்தே பராபரமே!

 

5.    நாவாற் புகழ்கெட்டா நாயகனே நாதாந்தம்

 

பூவாய் மலர்ந்திருக்கப் பூத்தாய் பராபரமே!

 

6.    பேராற் பெரிய பெரும்பொருளே பேதைதனக்

 

ரா ரிருந்துபல னாமோ பராபரமே!

 

7.    மாறாய நற்கருணை மாவருள்சித் தித்திடவே

 

பாராயோ வையா பகராய் பராபரமே!

 

8.    ஆனாலும் உன்பாதம் யாசித் திருப்பதற்குத்

 

தானா யிரங்கியருள் தாராய் பராபரமே!

 

9.    நாதாந்த மூல நடுவீட்டுக் குள்ளிருக்கு

 

மாதவத்தோர்க் கான மருவே பராபரமே!

 

10. உடலுக்கு உயிரேஎன் உள்ளமே உன்பத்தைக்

 

கடலும்மலை யும்திரிந்தும் காணேன் பராபரமே!

 

விளக்கம்

 

1.    எங்கும் நிறைந்த பராபரப் பொருளே! அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நான் கண்டு மகிழும்படி நீ காட்ட வேண்டும் பராபரமே.

 

2. உலகத்து முதல்வனாய், என்னை ஆட்கொண்டு அருளினவனாய், அவ்வப் பொருளாய் நின்ற பெருஞ்சோதியே! குறைவில்லாதவனாய் எங்கும் சூழ்ந்திருக்கின்றவனே! பராபரமே.

 

3.வேதத்தின் மறைப்பொருளாகவும், வேதாந்தத்தின் உட்கருத்தாகவும் இருக்கின்ற உன்னை ஓதி அறிந்தவர்கள் யாருமில்லை பராபரமே.

 

4.அண்டங்களில் உள்ளோரும், உலகத்தில் உள்ளோரும், வானுலகில் உள்ளோரும் துதித்துக் கொண்டாடுகின்ற உண்மை ஞானக்கூத்தே! பராபரமே.

 

5. நாவினால் புகழ்வதற்கு எட்டாத நாயகனாய் இருக்கின்றவனே!நாகாந்த பூவாய் மலர்ந்நதிருக்கின்றவனே! பராபமே

 

6.பேரால் புகழ் பெற்ற பெரிய பரம்பொருளே! ஏழையாகிய எனக்கு யார் இருந்தும் எந்தப் பயனும் இல்லை பராபரமே.

 

7.ஐயனே! எனக்கு அம்முடைய உயர்ந்த திருவருளானது கைகூடும்படி திருக்கண் திறந்து அருள வேண்டும். பராபரமே.

 

8.எந்தச் சூழலில் நான் இருந்தாலும் உம்முடைய திருவடிகளை யாசித்துக் கொண்டே இருப்பதற்குக் கிருபையோடு அருள் செய்ய வேண்டும். பராபரமே.

 

9. நாத தத்துவத்திற்கு அந்தமான மூல வீட்டினுள்ளே எழுந்தருளி இருக்கின்ற தவம் உடையவர்களுக்குத் தோழனாக விளங்குகின்றாய். பராபரமே.

 

10.என் உடலில் இருக்கின்ற உயிரே! என் மனமே! உன் திருவடிகளைக் கடலிலும், மலைகளிலும் திரிந்தும் காண முடியவில்லை. பராபரமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்