வருங்காலம் உண்டு - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்- விளக்கம்

 

  ருங்காலம் ண்டு - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்

திறமைதான் நமது செல்வம்

கையும் காலுந்தான் உதவி- கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி

பயிரை வளர்த்தால் பலனாகும் – அது

      உயிரைக் காக்கும் உணவாகும்

வெயிலே நமக்குத் துணையாகும் –

இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்.

தினம் வேலையுண்டு குல மானமுண்டு

வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்

சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்

ஏழைகள் நிலைமை .

அந்தச் சாமி மறந்தாலும் பூமி தந்திடும்

தகுந்த பலனை – இதைப்

பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல

கோடிக்கோடி முறை கும்பிடுவோம்.

காயும் ஒரு நாள் கனியாகும்-நம்

கனவும் ஒருநாள் நனவாகும்

காயும் கனியும் விலையாகும் – நம்

கனவும் நினைவும் நிலையாகும் – உடல்

வாடினாலும் பசி மீறினாலும்  - வழி

மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.

 

 

 

பாடலின் பொருள் :

நாம் செய்கின்ற தொழிலைத் தெய்வமாக நினைத்துப் போற்ற வேண்டும். அந்தத் தொழிலில் திறமையுடன் நாம் செயல்படும்போது தான்  நம் செல்வம் பெருகும். பிறரிடம் எதையும் எதிர்பார்த்து  நிற்காமல் இரு கைகளையும் இரு கால்களையும் கொண்டு உழைத்தால் வாழ்வில் வெற்றி நிலைக்கும். தொழிலில் கடமை தவறாமல் செயல்பட வேண்டும். அந்தக் கடமையை நமக்கான பதவியாக எண்ணினால் வாழ்வில் உயரத்தை அடையலாம்.

விவசாயம் செய்கின்ற ஒருவனுக்குப் பயிரை  வளர்ப்பது நல்ல பலனைத் தரும் . அதுவே அவனுக்கும் பிறருக்கும்  உயிரைக் காக்கின்ற உணவாக அமைகின்றது. உழைப்பவர்களுக்கு வெயிலே துணையாகவும், சிந்துகின்ற வியர்வைத் துளிகளே விதையாகவும் அமைகின்றன. வியர்வை சிந்தாமல் வாழ்வில் விடியல் இல்லை .

ஏழைகளின் துன்பத்தை இறைவன் அறிவான். அவன்  உழைத்தால் பலன் தருகின்ற பூமிக்கும் அவர்களின் துன்பம்  புரியும். ஒரு வேலை இறைவனே இவர்களின் உழைப்பிற்கேற்ற  விளைச்சல் தர மறந்தாலும் பூமி மறப்பதில்லை. இந்த உண்மையைப் பாடிப் பாடி  ஆடி  பூமியை வணங்குவோம்.

 காய்த்த காய்கள் ஒரு நாள் கனிகளாகும். அதுபோல நம் எதிர்காலக் கனவுகள் ஒரு நாள் நினைவேறும். நாம் விதைத்த காய்களும் கனிகளும் விலையாகி செல்வத்தைக் கொடுக்கும். நம் கனவுகளும் நனவுகளும் எப்போதும் நிலையானதாகிவிடும். கடினமாக  உழைப்பதால் உடல் சோர்வு அடைந்தாலும், நம் பசியினால் உடல் வாடினாலும்  நன்மை தரும் நேர்  வழியில் இருந்து தவறாமல்  வாழ்ந்திட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்