குடும்பம் ஒரு கதம்பம் - கண்ணதாசன்- பாடல் விளக்கம்

 

       குடும்பம் ஒரு கதம்பம் -  கண்ணதாசன்

 

குடும்பம் ஒரு கதம்பம்

 

பல வண்ணம் பல வண்ணம்

 

தினமும் மதி மயங்கும்

 

பல எண்ணம் பல எண்ணம்

 

தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை

 

குழந்தை ஒரு பாதை

 

காலம் செய்யும் பெரும் லீலை

 

மனையாள் பணி செய்தால்

 

மணவாளன் வாழலாம் – அதிலே

 

வருமானம் ஆனாலும் அவமானம்

 

வீடுகள்தோறும் இங்கு

 

இதுதானே கேள்வி இன்று

 

விடிந்தால் ஒரு எண்ணம்

 

எல்லோர்க்கும் தனியுள்ளம்

 

கணவன் பெரிதென்று

 

மணந்தார்கள் மங்கையர்கள்

 

உழைப்பாள் அவளென்று

 

மணந்தார்கள் நாயகர்கள்

 

பொருளாதாரத்திலே

 

பொருள்தானா தாரம் இன்று

 

இருவர் உழைத்தால்தான்

 

இந்நாளிலே பசி தீரும்

 

இரண்டு குதிரையிலே ஒரு

 

மனிதன் போவதென்ன

 

இரண்டு நினைவுகளில் சில

 

மனிதர் வாழ்வதென்ன

 


காலங்கள்தோறும் அவர்

 

சிந்தனையில் மாற்றமென்ன

 

மனிதன் நினைக்கின்றான்

 

இறைவன் அதை மாற்றுகின்றான்

 

பாடலின் பொருள்

 

கதம்பம் என்பது பலவகையான வண்ண  மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை. அதுபோல பல வகையான மனிதர்கள் ஒரே வீட்டில் ஒன்று சேர்ந்து வாழ்வதால் குடும்பத்தையும் கதம்பம்  என்கிறார் .

வெவ்வேறு ஆசைகளையும்  எண்ணங்களையும் மனதில்   கொண்ட மனிதர்கள் ஒரு குடும்பமாக வாழ்வதால் பல எண்ணங்களும் விவாதங்களும் தோன்றுவது நியதி . அதனால் குழப்பங்கள் பல ஏற்பட்டு அறிவானது மயங்கி குழம்புகின்றது .


தலைவனான கணவன்  ஒரு பாதையிலும், தலைவியான மனைவி  ஒரு பாதையிலும், குழந்தைகள்  வேறு பாதையிலும்  பயணப்பட விரும்புகின்ற  குடும்பங்களில் நிம்மதி என்பது இருக்காது . அதனால் காலம் பல சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது.

மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டுக் கணவன் வீட்டுக்குள் அமர்ந்து உண்டால் வருமானம் வரும். ஆனால் அது  பிறர்  நம்மை அவமதிக்கும் சூழலை ஏற்படுத்தி விடும்.  குடும்பமாய் சேர்ந்து  வாழ்கின்ற எல்லோருக்கும் தனித்தனி எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் இருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன .

கணவனே தான் தனக்கு இனி எல்லாம் அவனை விட உயர்ந்தது இவ்வுலகில் இல்லை  என்று பெண்கள் ஆண்களை மணக்கிறார்கள். ஆனால், வீட்டில் உள்ளவர்களுக்கும் தனக்கும் சேர்த்து உழைப்பாள் என்ற எதிர்பார்ப்போடு பெண்களை மணந்து கொள்கின்றனர்  பெரும்பாலான  ஆண்கள்.


கணவன் மனைவி இருவரும் உழைத்தால்தான் பசி இன்றி வாழ முடியும் என்ற காலச் சூழலால்  பணமும் வேண்டும், வாழ்க்கையும் வேண்டும் என்று இரண்டு குதிரைகளில் பயணம் செய்கின்றான் . இதனால் நல்ல நிலையான வாழ்வைப் பெற முடியாமல் பல்வேறு நினைவுகளால் மாறுபட்ட சிந்தனைகளில் சிக்கி துன்பத்தை அடைகின்றான்.


மனிதன்  தான் நினைப்பதெல்லாம் நடந்து விட வேண்டும் என்று நினைக்கின்றான் .இறுதியில் இறைவன் எண்ணப் படியே  மனிதனின் வாழ்க்கை அமையும் என்பதை இப்பாடல் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்