திருமந்திரம் - திருமூலர்

 

திருமந்திரம் - திருமூலர்

அன்புடைமை

பாடல் - 1

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

விளக்கம்

அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.

பாடல்  - 2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்

மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்

பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

விளக்கம்

பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.

பாடல்  - 3

என்அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின்

முன்அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்

பின்அன்பு உருக்கிப் பெருந்தகை நந்தியும்

தன்அன்பு எனக்கே தலைநின்ற வாறே.

விளக்கம்

உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் காட்டுவான்.  

பாடல் - 4

தான்ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்

வான் ஒரு காலம் வழித்துணை யாய்நிற்கும்

தேன் ஒரு பால்திகழ் கொன்றை அணிசிவன்

தான் ஒரு வண்ணம்என் அன்பில்நின் றானே

விளக்கம்

தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.

பாடல் - 5

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி

கண்டேன் கரி உரி யான்தன் கழலிணை

கண்டேன் கமல மலர்உறை வான்அடி

கண்டேன் கழல்அது என் அன்பினுள் யானே.

விளக்கம்

கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.

 

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்