லீலை - ந.பிச்சமூர்த்தி - விளக்கம்
லீலை
- ந.பிச்சமூர்த்தி
மண்ணில் பிறந்தால் வானேற ஆசை
காலோடிருந்தால் பறப்பதற்கு ஆசை
வானாயிருந்தால் பூமிக்கு வேட்கை
கொண்டலாயிருந்தால் மழையாகும் ஆசை
மின்னலாயிருந்தால் எருக்குழிக்கு ஆசை
எருக்குழியாயிருந்தால் மலராகும் பித்து
இரும்பாயிருந்தால் காந்தத்திற்கு ஆசை
துரும்பாயிருந்தால் நெருப்புக்கு ஆசை
தனியாயிருந்தால் வீட்டுக்கு ஆசை
வீட்டோடிருந்தால் கைவல்யத்திற்கு ஆசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை
உனக்கோ ! உலகாளும் ஆசை.
பாடலின் பொருள் : மாற்றம் ஒன்று தான் மாறாதது இது தான் உலக நியதி . மனிதனின் மனமும் அவ்வாறே செயல்படுகின்றது.
மண்ணில் பிறந்தவன் வானத்தில் ஏறிச் செல்ல விரும்புகின்றான். கால்கள் இருப்பவன் நடந்து செல்ல விரும்பாமல் வானத்தில் பறப்பதற்கு ஆசைப்படுகின்றான். வானமாக இருந்தால் பூமியாக இருக்க வேண்டும் என வேட்கைக் எழுகின்றது.
மேகமாக
இருப்பினும் அவை மழையாகப் பொழிவதையே விரும்புகின்றன. மின்னல்கள் யாவும் மண்ணில்
எருக்குழியாக விரும்புகின்றன. எருக்குழியோ
மலர்களாக மாற முயற்சி செய்கின்றன.
இரும்பு காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அதன்பால்
செல்கின்றது. துரும்புகள் நெருப்பினைத்
தேடி போகின்றன. தனிமையில் இருப்பவன் வீட்டைத் தேடுகின்றான். வீட்டில் இருப்பவனோ மோட்சத்தை விரும்புகின்றான்.
நான் நீயாக இருப்பதை விரும்புகின்றேன். நீயோ
உலகமாக இருப்பதை விரும்புகின்றாய். எனக்கு உன்னைப்போல் ஆகும் ஆசை உனக்கோ உலகாகும் ஆசை என்று கூறுகின்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக