விநாயகர்துதி - அருணகிரிநாதர்


 

 

விநாயகர்துதி - அருணகிரிநாதர்

 

முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர்.  தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவரது பாடல்கள் சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன.

 

அருணகிரிநாதரின் நூல்கள்

 

             கந்தர் அந்தாதி

             கந்தர் அலங்காரம்

            கந்தரனுபூதி

            திருப்புகழ்

            திருவகுப்பு

            சேவல் விருத்தம்

            மயில் விருத்தம்

            வேல் விருத்தம்

            திருவெழுகூற்றிருக்கை

 

நினது திருவடி சத்தி மயில் கொடி

நினைவு கருதிடு புத்தி கொடுத்திட

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம்

நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி

நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்ட கரத்து

ஒரு மகர சலநிதி வைத்த துதி கர

வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு

வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே

தெனன தெனதென தெத்தென அன பல

சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல்

திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை

செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல்

நிரைய அரவ நிறைத்த களத்து இடை

திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே

எனவெ துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள்

இடி மிக ஒத்து முழக்கிட

டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட

இரண பயிரவி சுற்று நடித்திட

எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே.

 

விளக்கம்

 

தெனன தெனதென தெத்தென என்றவாறு ஒலி செய்யும் சிறிய ஈக்கள் பல மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள் இவைகளோடு வரிசையாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த முருகப் பெருமானே உன்னை வணங்குகின்றேன்.

 

 உன்னுடைய திருவடியையும், வேல், மயில், சேவல் ஆகியவற்றையும் நினைவில் கொண்டு தியானிக்கும் அறிவை நான் எப்போதும் பெறுவதற்காக, விநாயகனை வணங்குகின்றேன். நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பம், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்பு, லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, இனிய வாழைப்பழ வகைகள், இளநீர் ஆகிய நிவேதனப் பொருட்களை மிக விருப்பத்துடன் தொட்டு உண்ணுகின்ற திருக்கரத்தையும், கடலைத் தொட்டு உண்ட தும்பிக்கையையும் உடைய, யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து,  அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு வழிபட்டு, துதிப்பதற்குரிய சொற்களைக் கொண்டு துதித்து, தூக்கிய கைகளால் காதைப் பிடித்து, தோப்புக்கரணம் போட்டு, சிரசில் குட்டி, அந்த விநாயகருடைய தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறப்பதில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்