திருத்தில்லைப் பதிகம் – திருஞானசம்பந்தர்-கற்றாங்கு எரி ஓம்பி -பொருள் விளக்கம்

 

 

       

    திருத்தில்லைப் பதிகம் – திருஞானசம்பந்தர்

 

திருமுறை      :  முதல் திருமுறை 80வது திருப்பதிகம்

 

அருளிச்செய்தவர்   : திருஞானசம்பந்த சுவாமிகள்

 

திருஞானசம்பந்தர்  சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவர். தேவார மூவருள் முதலாமவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாத இருதயர், தாயார் பகவதி அம்மையார்.

இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது  உமாதேவியார்,  சிவபெருமானுடன்  இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அறிவுசேரர் என்று பொருள்பட திருஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

மகன்மை நெறியில் இறைவனை வழிபட்டார். இவர் பாடிய பதினாறாயிரம் பதிகங்களுள் 384 பதிகங்களே கிடைத்துள்ளன. இவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாக வைத்துப்போற்றப்படுகிறது.

 

ஆளுடைய பிள்ளை, காழி வள்ளல் என்ற வேறு பெயர்களாலும் வழங்கப்படுகிறார். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று பாராட்டப்பட்டார். ஆதி சங்கர்ர் தன்து சௌந்தர்ய லகரியில் இவரை திராவிட சிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தனது பதினாறாவது வயதில் திருநல்லூர் நம்பாண்டர் மகள் சொக்கியாரை மணம் முடிக்கச் சம்மதித்தார். திருப்பெருமணநல்லூரில் திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி திருமணக்கோலத்துடன் சுற்றம் சூழ இறைஒளியில் கலந்து விட்டார்.

 

மூன்று வயதில் உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டவர் , சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும் பெற்றவர் , வேதாரணியத்தில் திருக்கதவு அடைக்கப் பாடியமை, பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியமை, தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தவர் , வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தவர் ,  சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றமை, விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தவர் .

 

திருஞானசம்பந்தர் 220 பதிகளுக்குச் சென்று இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. அவற்றுள் சிதம்பரத்தில் உள்ள நடராசப் பெருமானைப் பாடிய திருத்தில்லைப் பதிகத்திலிருந்து பதினொரு பாடல்கள் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளன..

 

பாடல் எண் : 01

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

 

பொருள்:

வேதம் முதலிய நூல்களைக் கற்று அவற்றில் சொல்லப்படுகின்ற  நெறியில்  நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வார விடாமல் தடுக்கும்   அந்தணர்கள் வாழக் கூடிய   தில்லையிலுள்ள சிற்றம் பலத்தில் எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றாது .

 

 

 

பாடல் எண் : 02

பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்

சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

பிறப்பு இல்பெருமானை பின் தாழ்சடையானை

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.

 

பொருள்:

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, வேள்வித் தீயை வளர்க்கும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல் இல்லாதவனும், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடை முடியை உடையவனும் ஆகிய பெருமானை மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர்.

 

பாடல் எண் : 03

மை ஆர் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழிசூழ் தில்லையுள்

பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகு ஏத்தச்

செய்யான் உறைகோயில் சிற்றம்பலம்தானே.

 

பொருள்:

மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள் மாடங்கள் நிறைந்த  நீண்ட வீதிகளில்  தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்கக்காத  வேதப்பாடல்களை விரும்பும் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்தும் வகையில் கோயில் கொண்டுள்ள இடம்  சிற்றம்பலமாகும்.

 

 

பாடல் எண் : 04

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்

பிறை வந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்

சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய

இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே.

 

பொருள்:

மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து சிறிதே தாக்கும்.  சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.

 

 

பாடல் எண் : 05

செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்

செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற,

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

 

பொருள்:

செல்வவளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தொடும் .  பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கும் . மற்றும்  ஞானச்செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லை. அத்தகைய சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறு என்னும்  செல்வத்திற்குரிய சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.

 

 

 

பாடல் எண் : 06

வருமாந் தளிர்மேனி மாது ஓர்பாகம் ஆம்

திருமாந் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி-ஆடைக் கறைசேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.

 

பொருள்:

புதிதாக மரத்தின்கண் இருந்து வெளிவரும் மாந்தளிர் போன்ற மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன் . திருமகள் விளங்கும் தில்லை மாநகருள் சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத்தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய சிவபெருமான் திருவடிகளை அல்லாது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது. 

 

 

பாடல் எண் : 07

அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்

மலையான் மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்தச்

சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

 

பொருள்:

அலைகள் வீசும் கங்கை நதியை முடியிற்சூடித் தன் திருமேனியில் ஒருபாகமாக மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு மகிழ்ந்திருப்பவன்.  உலகம் போற்ற மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்தவன் .  அத்தகைய சிற்றம்பலத்துப் பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குபவர்கள்  தலைமைத் தன்மையோடு விளங்குவார்கள் .

 

 

பாடல் எண் : 08

கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

 

பொருள்:

கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச் சிறந்த புகழ் உடைய  சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராதநோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம்.

 

பாடல் எண் : 09

கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்

காணார் கழல் ஏத்த கனல் ஆய் ஓங்கினான்

சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த

மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

 

பொருள்:

வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப் பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம் பலத்தின்கண் எழுந்தருளியவனுமாகிய சிவபெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை உள்ள கொடிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும்.

 

பாடல் எண் : 10

பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

 

பொருள்:

மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும் நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

 

 

பாடல் எண் : 11

ஞாலத்து உயர்காழி ஞானசம்பந்தன்

சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை

கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

 

பொருள்:

உலகில் உயர்ந்து விளங்கும் சீர்காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்கசீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீதுபாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப் பதிகத்தை, அழகுறப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்