திருவெண்ணெய்நல்லூர் திருமுறை- சுந்தரமூர்த்தி நாயனார்

 

திருவெண்ணெய்நல்லூர் திருமுறை - சுந்தரமூர்த்தி நாயனார்.

 

பாடல்: 01

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா

எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

விளக்கம்:

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தெற்கில்  உள்ள திருவெண்ணெய்நல்லூரின் அருட்டுறை என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால், எவ்வாறானும் உன்னை மறவாமல்  நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, உனக்கு அடியவன் அல்லேன் என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

பாடல் : 02

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை

பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்

வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

 

 விளக்கம்:

மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன், ஆயினும், இப் போழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

 

பாடல்: 03

மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

பொன்னே மணிதானே வயிர(ம்)மே பொருது உந்தி

மின்னார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

அன்னே உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

விளக்கம்:

தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என்று எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

 

 

பாடல் : 04

முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ

கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள் நீ

செடியார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

அடிகேள் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

விளக்கம்:

இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும் ,மீண்டும்  பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

 

 

பாடல் : 05

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய்

ஆதன் பொருளானேன் அறிவு இல்லேன் அருளாளா

தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆதி உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

 

விளக்கம்:

அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், "ஆதன்" என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

 

 

பாடல்  : 06

தண்ணார் மதிசூடீ தழல் போலும் திருமேனீ

எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்

மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

அண்ணா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

 

விளக்கம்:

தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும் படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தெற்கில் உ ள்ள திருவெண்ணெய் நல்லூரின் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

 

பாடல்: 07

ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்

வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் 

தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

 

பாடல் விளக்கம்:

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

 

பாடல் ண : 08

ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்

தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர் வான் நீர்

ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆற்றாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

 

விளக்கம்:

பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

பாடல் : 09

மழுவாள் வலன் ஏந்தீ மறை ஓதீ மங்கை பங்கா

தொழுவார் அவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே

செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

அழகா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

 

விளக்கம்:

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

 

பாடல் : 10

காரூர் புனல் எய்திக் கரை கல்லித் திரைக் கையால்

பாரூர் புகழ் எய்தி திகழ் பன்மாமணி உந்தி

சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆரூரன் எம்பெருமாற்காள் அல்லேன் எனலாமே.

 

விளக்கம்:

மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளி வந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தெற்கில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் "அடியவல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்