அற்புதத் திருவந்தாதி -காரைக்காலம்மையார் - விளக்கம்
அற்புதத் திருவந்தாதி -காரைக்காலம்மையார்
- விளக்கம்
பாடல் எண் 1 :
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
யெஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
பொருள்
பிறந்து மொழியை அறிந்து பேசத் தொடங்கிய காலம் முதல் எக்காலமும் அன்புடன் உனது
திருவடியினையே சேர்ந்தேன். நஞ்சு கலந்த அமுதத்தைப்
பருக்கியதால் கருமையான கண்டத்தை உடைய இறைவனே எனது துன்பத்தைத் தீர்ப்பது எப்போது?.
பாடல் எண் 2
இடர்களையா ரேனு மெமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனுஞ் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு.
விளக்கம்
எனது இறைவன் எனக்குப் பிறவித்துன்பத்தை நீக்கலாம். அவ்வாறு நீக்காவிடினும் பரவாயில்லை . என்மேல் இரக்கம் வைக்கலாம் . அது செய்யாவிடினும் நான் செல்ல வேண்டிய நெறியினையேனும் பணிக்கலாம்.இவை எதுவுமே செய்யவில்லை எனினும் என் நெஞ்சம் அவரிடம் கொண்ட அன்பு என்றும் நீங்காது.
பாடல் எண் 3
அவர்க்கே யெழுபிறப்பு மாளாவோ; மென்றும்
அவர்க்கேநா மன்பரவ தல்லாற் - பவர்ச்சடைமே
பாகாப்போழ் சூடு மவர்க்கல்லான் மற்றொருவர்க்
காகாப்போ மெஞ்ஞான்று மாள்.
விளக்கம்
சடை முடி மேல் பிறை நிலவைச் சூடும் சிவபெருமானுக்கே ஏழு பிறவிக்கும் நாம் ஆளாவோம். அவனையன்றி எந்நாளும் பிறரைத் தொழுது ஆளாக மாட்டோம் .
பாடல் எண் 4
ஆளானோ மல்ல லறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ? கேளாமை - நீளாகஞ்
செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட விறை.
விளக்கம்
நிறத்திலும் மிடறு மட்டும் கரியதாய்
வேறு நிறத்திலும் இருக்கும் இறைவனே,
எங்கள் எங்கள் துன்பத்தை அறியும்படி
முறையிட்டாலும் எங்களை ஆளாகக்
கொண்ட இறைவன் கேளாத காரணம் என்ன. ?
பாடல் எண் 5
இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்; றோற்றி
யிறைவனே யீண்டிறக்கஞ் செய்வா - னிறைவனே
"யெந்தா!" யெனவிரங்கு மெங்கண்மேல் வெந்துயரம்
வந்தா லதுமாற்று வான்.
விளக்கம்
சிவபெருமானே எல்லா உயிர்களையும் பிறக்கச் செய்வான் . அவ்வாறு உருவாக்கிய உயிர்களை இறக்கும்படி செய்பவனும் அவனே. எமது தந்தையே என்று அவனை நோக்கி
இரங்கி நிற்கும் எங்களுக்குக் கொடிய துயரம் வந்தால் அதனை மாற்றுபவனும் அந்த இறைவனே
ஆவான்.
கருத்துகள்
கருத்துரையிடுக