நாச்சியார் திருமொழி-ஆண்டாள்- கருப்பூரம் நாறுமோ
நாச்சியார் திருமொழி-ஆண்டாள்
கருப்பூரம் நாறுமோ
.
பாடல் 1
கருப்பூரம்
நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.
கண்ணனுடைய பவள வாய்
உதடுகளில் பச்சைக் கற்பூர வாசனை வீசுமோ?
தாமரைப் பூ மணம்தான் வீசுமோ? அவன் பவள வாய் தித்தித்ப்புச் சுவையுடன் இருக்குமோ? கடலில் பிறந்த வெண்மையான சங்கே!
குவலயாபீட யானையின் கொம்பினை ஒடித்த அந்தக் கண்ணபிரானின் உதட்டின் சுவையையும்,
வாசனையையும் பற்றி, கேட்டறிய விரும்புகின்றேன்.
பாடல் 2
கடலில்
பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.
. தீய அசுரர்கள் அழிவுபட, முழங்கும் பேறு பெற்றாய் நல்ல சங்கே! உப்புக் கடலில் பிறந்த நீ, இறைவனை வெறுத்த பஞ்சசனன் என்னும் அசுரன் உடலுக்குள் வளர்ந்து, இரண்டு இடங்களையும் கருதாமல், ஊழிக்காலத்தை
நிர்வகிப்பவனான திருமாலின் கைத்தலங்களில் குடிபுகுந்தாய்
பாடல்
3
தடவரை
யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே.
உன் அழகுக்கும் மேலே
திருமாலுக்கு அழகூட்டும் கோலம் உடைய சங்கே! சரத் காலத்தில் முழுநிலா நாளன்று பெரிய
மலையிலே சந்திரன் உதயமாகி ஒளிவிடுவது போலே,
வடமதுரை அரசனான கண்ணனின் திருக்கையினில் நீயும் குடிபுகுந்து உன்
பெருமைகள் தோன்ற விளங்குகிறாய்.
பாடல் 4
சந்திர
மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே.
வலம்புரிச் சங்கே…
சந்திர மண்டலம் குளிர்ந்த ஒளியை வீசித்
திகழ்வதுபோல நீயும் கண்ணபிரானின் கையினில் திகழ்கிறாய். அவன் நாயகிகள் அவனைவிட்டுப் பிரியாதிருப்பதைப்
போல, என்றும் இடைவிடாது அவனுடனேயே இருந்து,
அவன் காதுகளில் மந்திரம் பேசுகிறாயா? இத்தகைய
உன் செல்வத்துக்கு இந்திரனும் ஒப்பாக மாட்டான்.
பாடல் 5
உன்னோ
டுடனே யொருகடலில் வாழ்வாரை,
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே.
சங்ககே ,கடலில் உன்
இனத்தைச் சேர்ந்த மற்ற சங்குகளை, இவர்கள்
இப்படிப்பட்டவர்கள் என்று மதித்துப் பேசுவார் எவரும் இல்லை! ஒரே கடலில் வாழ்ந்த
உங்களுக்குள், நீ ஒருவன் மட்டுமே உலக சக்ரவர்த்தியாகத்
திகழும் மதுசூதனனின் வாயமுதத்தைப் பல நாள்களாகப் பருகும் பேறு பெற்றிருக்கிறாய்.
பாடல்
6
போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.
வலம்புரிச் சங்கே!
கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று, நீராட மேற்கொள்ளும் துன்பங்கள் எதுவும் இல்லாமலேயே
நீ அந்தப் பலனைப் பெற்றுவிட்டாய். இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளிய
கண்ணபிரானின் கைத்தலத்தில் குடிகொண்ட நீ, அந்தச் சிவந்த கண்களை
உடைய திருமாலின் வாய்த்தீர்த்தத்தில்
நீராடும் பேற்றினைப் பெற்று இருக்கின்றாய் .
பாடல்
7
செங்கமல
நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட் கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே
சங்குகளின் அரசனான
பாஞ்சசன்னியமே! அன்று மலர்ந்த செந்தாமரைப் பூவில் தேனைக் குடிக்கும் அன்னத்தைப்
போல, சிவந்த கண்களையும் கருத்த
திருமேனியையும் உடைய கண்ணனின் அழகிய கைத்தலத்தின் மீது ஏறி, உறங்கும்
உன் செல்வம் மிகவும் அழகியது .
பாடல் 8
உண்பது
சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே.
சங்கே! உலகளந்த
உத்தமனாகிய திருமாலின் வாய் அமுதத்தை நீ பருகுகிறாய். நீ தூங்கும் இடமோ, கடல் நிறத்தைக் கொண்ட கடவுளின் திருக்கை. இப்படி உணவும் உறக்கமும்
கண்ணபிரானிடமே உனக்கு வாய்த்ததால், பெண் குலத்தவர் உன்னிடம்
பொறாமை கொண்டு பூசல் இடுகின்றார்கள். பண்பில்லாத இந்தக் காரியத்தை நீ செய்வது
உனக்குத் தகுதியானதா.
பாடல் 9
பதினாறா
மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே.
பெருஞ்செல்வம் உடைய சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள், கண்ணபிரானின் வாய் அமுதத்தைப்
பருகுவதற்காகக் காத்திருக்கும்போது, நீ ஒருவன் மட்டுமே
புகுந்து தேனைக் குடிப்பதுபோலப் பருகலாமா? கண்ணன் அடியவர்கள்
யாவருக்கும் பொதுவாக உள்ளதை நீ மட்டுமே பெற்றுக் களித்திருக்கலாமா? மற்றவர்கள் உன்னிடம் இருந்து வேறுபட மாட்டார்களா?
பாடல் 10
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா
பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே.
அழகில் சிறந்த
திருவில்லிபுத்தூரின் புகழ் வாய்ந்த பட்டர்பிரானின் மகளான கோதை, சங்கை பத்மநாபனுடன் கிட்டிய
சுற்றமாக்கிப் பாசுரங்கள் பாடினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயின்று துதிப்பவர்கள்
அவனுக்கு அணுக்கத் தொண்டர்கள் ஆவார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக