புத்தகம் -கவிஞர் அப்துல் ரகுமான் - விளக்கம்

 

                புத்தகம் -கவிஞர் அப்துல் ரகுமான்

 

பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில்

 

ஒதுங்கினான்.

 

குழந்தைகளின் கையிலிருந்த

 

புத்தகங்களைப் பார்த்து

 

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்.

 

குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

 

அவன் மேலும் சொன்னான்

 

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக

 

இருக்கிறார்கள்

 

அவர்கள் கையில் ஏன் காகிதக்

 

குப்பைகளைத் தருகிறீர்கள்?

 

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை

 

ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

 

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!

 

நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

 

இதோ இரவு பகல் என்ற ஏடுகள்

 

உங்களுக்காகவே புரளுகின்றன

 

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

 

இதோ உண்மையான உயிர்மெய்

 

எழுத்துகள்

 

உங்கள் முன் நடமாடுகின்றன

 

நீங்களோ அவற்றைக் கற்றுக்

 

கொள்வதில்லை

 

ஒவ்வொரு பூவும் பாடப்புத்தகமாக இருப்பதை

 

நீங்கள் அறிவதில்லை

 

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க

 

கற்றிருந்தால்

 

உச்சரிக்க முடியாத எழத்துகளில்

 

அதிகமான அர்த்தம் இருப்பதை

 

அறிந்திருப்பீர்கள்

 

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை

 

வாசிக்க முடிந்திருந்தால் ஒளியின் ரகசியத்தை

 

அறிந்திருப்பீர்கள் !

 

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்

 

படிக்கத் தெரிந்திருந்தால்

 

நீங்கள் மனிதனின் சாரத்தை

 

அறிந்திருப்பீர்கள் !

 

எழுத்துகளால் அல்ல

 

காயங்களால் கற்பதே கல்வி

 

என்பதை அறிந்து கொள்ளுங்கள்

 

உங்கள் புத்தகங்கள்

 

விளக்குகளாக இருக்கின்றன

 

சூரியனைக் காண விளக்குகள்

 

தேவைப்படுவதில்லை.

 

விளக்கம்

 

  புத்தகம் என்ற தலைப்பில் கவிஞர் அப்துல்ரகுமான் அவர்கள் காகிதக் 

கல்வி வாழ்வினை முழுமையாக்கது என்று விளக்குவதற்காக பித்தனைக் 

கொண்டு தன் கருத்துக்களை முன்வைக்கிறார் .

    பித்தன் ஒருவனின் கூற்றாக இக்கவிதை  அமைந்துள்ளது . காகிதக் 

கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது என்று அறிவுறுத்துபவர்களை 

 இந்தச் சமுதாயம்  பித்தன் என்றே அழைக்கிறது. இக்கவிதையில் 

கருத்துகளை எடுத்துரைக்கும் குறியீடாக பித்தன் என்ற சொல் 

அமைந்துள்ளது.

 

  மழை பெய்தமையால் மட்டுமே  பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான் ஒரு 

பித்தன். அங்கு வகுப்பறையில் குழந்தைகளின் கையில் இருந்த 

புத்தகங்களைக் பார்க்கின்றான் . அப்புத்தகங்களிடம் புத்தகங்களே 

சமர்த்தாய் இருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்று 

கூறுகின்றான் குழந்தைகள் புத்தகங்களை கிழிப்பது புதிதல்ல. ஆனால் 

புத்தகங்கள் குழந்தைகளை நம்மால் முடியாது, நமக்குத் தெரியாது என்ற 

இயலாமை மனப்போக்கை  வளர்த்து அவர்களைக்  காயபடுத்துவதை 

இங்கு எடுத்து உரைக்கின்றார் .   

 குழந்தைகள் தினம் தினம் ஒன்றைக் கற்றுக்கொண்டும் கற்றுக் 

கொடுத்துக் கொண்டும்  இருக்கிறார்கள்.  ஆனால்  நாமோ 

பாடப்புத்தகங்களை அவர்கள் கையில் கொடுப்பதால் அவர்களுக்கான 

தனித்தன்மை இன்றி மனப்பாடம் செய்யும் சூழலுக்கு ஆளாகிறார்கள் . 

எனவேதான்   அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள் 

 என்று கேட்கிறார் கவிஞர்.

 

   வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களே  நமக்கு சிறந்த பாடங்களைக் 

கற்றுக்கொடுக்கின்றன . அதை விட்டு  பாடப்புத்தகங்களை மட்டும் நம்பும் 

நம்மைப் பார்த்து , காகித ஓடங்களை நம்பிப் பயணம் செய்ய 

நினைப்பவர்கள் என்கின்றார். அந்த ஓடத்தை நம்பி உங்களால்  எப்படி 

அக்கரைக்குச் செல்ல முடியாதோ, அதுபோல  வெறும் புத்தகப் 

 பாடங்களும் மதிப்பெண்களும் பட்டங்களும்  நம் வாழ்க்கையை 

 உயர்த்தாது என்கிறார் .

 

  இரவு பகல் இரண்டுமே வாழ்க்கையின் இருவேறு பக்கங்களைக் 

கற்றுத்தருகின்றன. இரவு நாளை என்பது நிரந்தரம் இல்லை என்பதையும் 

பகல் என்பது இன்று மட்டுமே நிச்சயம் என்பதையும் நமக்கு தெளிவு 

படுத்துகின்றது . அதுமட்டுமல்ல  இரவு இல்லையெனில் பகல் இல்லை. 

பகல் இல்லையெனில் இரவு இல்லை. அதுபோலவே  இன்பமும்

துன்பமும்வெற்றியும் தோல்வியும் என்ற வாழ்வின் உயரிய 

தத்துவத்தைப் புரிந்து கொள்ள இரவும் பகலும் துணையாகின்றன.

 

     உயிர் எழுத்தும்  மெய் எழுத்தும் இல்லையெனில் உயிர் மெய் 

எழுத்துகள் இல்லை. உயிரும் மெய்யுமாக  நம் கண்முன் நடமாடுகின்ற 

குழந்தைகளின் குழந்தமையை நாம் கற்றுக் கொள்ள விரும்புவதில்லை 

என்கிறார்.

 

    பூக்கள் ஒரு நாள் மட்டுமே வாழ்கின்றன . ஆனாலும்  மலர்ந்து 

மணம் வீசி பார்ப்பவர்களுக்கு மனமகிழ்வைத்  தருகின்றன. உதிர்ந்த 

பின்னும்   மண்ணுக்கு உரமாகின்றன. ஒவ்வொரு நாளும் 

அடுத்தவர்களுக்குப் பயனுள்ளதாக வாழ்வதில்தான் நம்  வாழ்க்கை 

முழுமையடையும் என்பதை  மலர்கள் கற்றுத்தருகின்றன. ஆனால் நாம் 

அதைக் கவனிப்பதேயில்லை என்கின்றார்.

 

    இரவில்  தோன்றுகின்ற  நட்சத்திரம் இல்லா வானம் 

வெறுமையாகவே தோன்றும். அதுபோல உச்சரிக்க முடியாத அதாவது 

வார்த்தைகளால் சொல்ல முடியாத மௌனத்தில் அதிகமான அற்தம் 

இருப்பதாகக் கூறுகின்றார் .

 

    மழை வரும்போது மட்டுமே மின்னுகின்ற மின்னல்களின் 

மொழியினை அறிந்து கொண்டால், இருளை நீக்கும் ஒளியின் பொருளை  

அறிந்து கொள்ள முடியும் என்கின்றார்.

  பிற உயிர்களின் கண்ணீர் துளிகளைக் கண்டு அவற்றின் துயரம் 

அறிகின்ற உன்னதமானவரகளால்   மட்டுமே மனித மனங்களின் 

சாராம்சத்தை  கண்டு கொள்ள முடியும் .

 

     எழுத்துக்கள் என்பது மட்டுமே கல்வி இல்லை . காயங்களைக் 

கொண்டும்  வாழ்வைக் கற்றுக்கொள்ளுங்கள் . பாடப்புத்தகங்கள்   

வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் போன்றவை . வாழ்க்கையோ 

சூரியனைப் போன்றது.  சூரியனைக் காண விளக்குகளாகிய 

பாடப்புத்தகங்கள் தேவைப்படுவதில்லை என்கின்றார். வாழ்க்கையைப் 

புத்தகங்கலளின் கண் கொண்டு பார்க்காதீர்கள் என்கிறார் .

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்