சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - ஈரோடு தமிழன்பன் -விளக்கம்

 

     சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - ஈரோடு தமிழன்பன்

 

சொல்லில் உயர்வு

 

தமிழ்ச் சொல்லே என்று பாடிய பாரதி

 

இங்கு வரவில்லை திருவள்ளுவர்க்குக் கூட

 

என்வணக்கம் இல்லை

 

திருக்குறளைப் படிப்பவர்க்கெல்லாம்

 

என்வணக்கம்.

 

வள்ளுவர்க்கு இதைவிட

 

வேறென் வணக்கம் வேண்டும்?

 

 

 

தாயை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது

 

எவருக்கு விண்ணப்பம் போட்டும்…

 

கையூட்டு – காலூட்டுக் கொடுத்தும்

 

விரும்பியபடி

 

தாயைப் பெறமுடியாது.

 

முடியும் என்றால்

 

அரசாங்கம் “தாய்மாற்று” வாரியம்

 

ஏற்படுத்தியிருக்கும். . .

 

ஏழைகளுக்கு

 

இலவசத்தாய் வழங்கு திட்டம்

 

தொடங்கப்பட்டிருக்கும். . .

 

தேர்தல் முடியும் வரை

 

யாரும் தாயாகக் கூடாது என்று

 

தலைமைத் தேர்தல் ஆணையம்

 

தடையைப் போட்டிருக்கும்

 

தாயை மாற்றிக் கொள்ள

 

முடியாது . . .

 

தாய் மொழியையும் மாற்றிக் கொள்ளவோ

 

தானாகத்

 

தேர்ந்தெடுத்துக் கொள்ளவோ முடியாது . . .

 

 

 

தமிழ்நாட்டில்தான்

 

தள்ளுபடி விலையில், தமிழ்த்தாயை

 

விற்றுவிட்டு

 

ஆங்கில ஆயாவையே

 

தாயின் இடத்தில் அமர்த்தினார்கள்.

 

உடனே

 

மம்மி’ வந்து சேர்ந்தாள்

 

மம்மி என்றால் என்ன பொருள்

 

பதப்படுத்தப்பட்ட பிணம்

 

மம்மிக்குப்பின்

 

டம்மியான தந்தை டாடியானான்.

 

மம்மியையும்

 

மம்’ என்று இறுக்கமாய்

 

அமுக்கினார்கள் . . .

 

சின்னம்மா – மினிமம்

 

பெரியம்மா – மேக்சிமம்

 

ஆனார்கள்.

 

டாடிகள்

 

திண்டாடினார்கள்.

 

அத்தையா

 

சித்தியா, பேத்தியா

 

மொத்தக் குழப்பத்தில் “ஆண்டி”!

 

மாமாவா

 

சித்தப்பாவா பெரியப்பாவா . . .

 

சந்தேக அங்கிளைப் பார்த்து

 

ஆண்டி ஹாய் என்றாள்.

 

 

 

பள்ளிகளில்

 

இங்கிலிஷ் மிஸ், கணக்கு மிஸ்

 

கெமிஸ்ட்ரி மிஸ், டிராயிங் மிஸ்

 

மொத்தத்தில் –

 

தமிழ் மிஸ்.

 

 

 

கல்லூரிகளில்

 

மரியாதை அதிகம்

 

மிஸ்கள் எல்லாம் மேடமானார்கள்.

 

பைத்தியமான அம்மாக்களாய்

 

இருக்க வேண்டும் என விரும்பி

 

அவர்களை

 

மேடமாக்கினார்களோ

 

தெரியவில்லை.

 

 

 

ஆங்கிலத்தின் நடுவே

 

அங்கங்கே

 

கைதான தமிழ்சசொற்கள்

 

கண்ணீர் வடித்தபடி . . .

 

கதை வசனம்.

 

 

 

காதலனுக்கும்

 

காதலிக்கும் தாய்மொழி வெவ்வேறு

 

அதற்காக

 

மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு

 

உரையாடல் நடத்தினால்

 

 என்ன நடக்கும்?

 

தமிழ் தெரியாப் பெண்ணைக்

 

காதலித்த ஒருவன் –

 

உன்ன நான் காதலிக்கிறேன்’

 

என்று தமிழில் சொல்ல

 

மொழிப் பெயர்ப்பாளன் ‘ஐ லவ் யூ’

 

என்றான் மொழிபெயர்த்து.

 

ஐ டூ லவ் யூ’ என்று

 

தமிழ் தெரியாத அந்தப் பெண்

 

அவனோடு போய்விட்டாள்

 

நம் கடவுளிடம்

 

நம் மொழியில்நாம்

 

காதலாகிக் கசிந்து

 

கண்ணீர் மல்கித் தொழ வேண்டாமா?

 

 

 

தமிழில் எழுதவேண்டும்

 

தமிழாகவும் எழுதவேண்டும்

 

இப்போது

 

சென்னை மாநகராட்சியின்

 

சீர்மிகு துணையால்

 

பிளைவுட், ஷாப்

 

வன்பொருள் – விற்பனைக் கடை ஆயிற்று

 

பேக்கரி – அடுமனையகமாயிற்று

 

எத்தனை எத்தனை

 

விளம்பரங்களில் ...

 

முத்தான தமிழ்ச் சொற்களால்

 

அத்தனைக்கும் தமிழ்த்தாய்

 

முத்தப் பரிசளிப்பாள்

 

தமிழின் இரத்தம்

 

சூரியனில் ஒளியாக இருக்கிறது.

 

நிலவில் குளிச்சியாக இருக்கிறது.

 

 

 

தமிழின் முகவரியில் நெடுங்காலம்

 

அழகைச் சுவாசித்து வளர்ந்த பிறகுதான்

 

வசந்தம்

 

இயற்கையோடு வாழப் புறப்பட்டு வந்தது.

 

மழை பருவத்து

 

ஈரம் அவ்ளவும்

 

மேகங்கள் தமிழின்  மடியிலிருந்து

 

திரட்டிக் கொண்டவை அல்லவா?

 

சொல்லோ – கல்லோ

 

எதுவானாலும் மாணிக்கமாய் வைரமாய்

 

இருக்கட்டும்

 

அடிபடி நாங்கள் தயாராய் உள்ளோம். !

 

விளக்கம்

 

    பாரதி “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்று தமிழின் சிறப்புகளை  எடுத்துரைக்கவே பாடினான்.. உலகப்பொதுமறையாம் திருக்குறளைத்  தந்த வள்ளுவனுக்குச் செய்யும் மரியாதை   வள்ளுவன் இயற்றிய திருக்குறளின் பெருமையை உணர்ந்து அதனைப் படித்தும்  அதன்படி தன்னுடைய  வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்களையும்  வணங்குவதுதான் உண்மையில் வள்ளுவனுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் என்கின்றார்.

 

   இவ்வுலகில் உள்ள உயிர்கள் எவையுமே  தங்கள் தாயைத் தானே தேர்ந்தெடுக்க முடியாது எனவும் யாருக்காவது  விண்ணப்பம் செய்தோ அல்லது  லஞ்சம் கொடுத்தோ பொருட்களை மாற்றிக் கொள்வதுபோல, தாயை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுகின்றார் .

 

அவ்வாறு நாம் விருப்பப்பட்டால், தாயை மாற்றிக் கொள்ள முடியும் என்ற ஒரு சூழல் வந்தால், அரசாங்கம் தாய் மாற்று வாரியம் என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருக்கும். தாய் இல்லாக் குழந்தைகளுக்காக இலவசத் தாய் வழங்கும் திட்டம் தொடங்கியிருக்கும். தலைமைத்தேர்தல் ஆணையமோ,  தேர்தல் காலங்களில் யாரும் தாயாகக் கூடாது என்று தடை போட்டிருக்கும் என்று  இடித்துரைக்கின்றார் .  தாயைத் தேர்நதெடுக்கவோ, தாயை மாற்றிக் கொள்ளும் உரிமையோ யாருக்கும் இல்லாததைப்போல தாய்மொழியைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ யாருக்கும் உரிமை கிடையாது என்பதைத் தெளிவாக்குகின்றார் .

 

   தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ்த்தாயை விற்றுவிட்டுத் தள்ளுபடி விலையில் ஆங்கிலம் என்னும் ஆயாவைத் தாயின் இருக்கையில் அமர்த்துகின்றனர் என்று சீறுகின்றார் . இதனால் தமிழ்நாட்டுக் குழந்தைகள் அம்மாவை மம்மி என்று அழைக்கத் தொடங்கினர். மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்ற பொருள் தெரிந்தும் அப்படி  அழைப்பதை நாகரிகம் என்று கருதி  பெருமை கொள்ளும் தாய்மார்களைக் கண்டு வருந்துகிறார் .  அப்பாவை “மம்மிக்குப் பின் டம்மி ஆகியதாகக் கருதி டாடி என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். மம்மியை இன்னும் சுருக்கி  “மம்” என்று இறுக்கிவிட்டனர். இந்த கீழான  நிலையை எடுத்து உரைக்கின்றார் .

 

   தமிழ் மொழியின் சிறப்பு என்பதே அதன் சொல்வளம் தான்  எல்லா உறவுகளுக்கும் நல்ல சொல் தமிழில்  உண்டு. தாயின் இளைய சகோதரியைச் சித்தி என்றும், மூத்த சகோதரியைப் பெரியம்மா என்றும், தந்தையின் மூத்த சகோதரனைப் பெரியப்பா என்றும், இளைய சகோதரனைச் சித்தப்பா என்றும் உறவுமுறை சொல்லிய நிலைமை போய், இன்று பெண்கள்  யாவரும் ஆண்டியாகி (aunt ) விட்டனர். ஆண்கள் யாவரும் ( uncle ) அங்கிளாகிவிட்டனர். இதனால் உறவு முறையில்  குழம்ப்பம் ஏற்பட்டு   திண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்கின்றார்.

   பள்ளிகளில் பெண் ஆசியர்களை  மிஸ் என்றும், ஆசிரியர்கள் எல்லோரும் மிஸ் ஆனதால் அங்கே தமிழும் மிஸ் ஆகிவிட்டது என்றும்  கல்லூரிகளில் மிஸ்கள் எல்லாம் மேடம் ஆகிவிட்டார்கள். Mad  என்னும் ஆங்கிலத்தில் சொல் பைத்தியம் என்ற  பொருளைத் தருவதால் இவ்வாறு கூறுகின்றார். 

  அன்றாட வாழ்க்கையில் நாம் தமிழுடன்  ஆங்கிலத்தைக்  கலந்து பேசுவதால், தமிழ் ஆங்கிலத்திற்கு நடுவில் சிக்கிச் சிதைந்து போகும் என்கின்றார் ..

 

   இரு வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இருவர் காதலித்தால் எந்த மொழியில் பேசி எப்படி  தங்கள் காதலை வளர்த்துக் கொள்வார்கள் . அதற்கென்று ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துக் கொண்டு காதலித்தால் அந்தப் பெண்ணைக் காதலிக்கின்றவன் “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று தமிழில் சொல்ல, மொழிபெயர்ப்பாளன் “ஐ லவ் யூ” என்று ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணிடம் மொழி பெயர்ப்பான்.  அந்தப் பெண் மொழிபெயர்ப்பாளனோடு காதல் கொண்டு சென்று விடுவாள் என்று கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இறைவனைத் தொழுதனர் .  ஆனால் நாம் இன்று வேற்று மொழியில் இறவனை வணங்குகிறோம் . எழுதுவது எதுவானாலும்  தமிழில்தான் எழுத வேண்டும். அதைத் தமிழாகவே எழுத வேண்டும் .

 சென்னை மாநகராட்சியின் துணையால், பிளைவுட்ஷாப் என்பது வன்பொருள் விற்பனைக் கடை என்றும், பேக்கரி என்பது அடுமனை என்றும் அழகான தமிழில் எழுதப்படுகின்றது.

      புதிய சொற்கள் அத்தனைக்கும் தமிழில் சொற்களை உருவாக்க முடியும்.  இந்த முத்தான  தமிழ்ச் சொற்கள் அத்தனைக்கும் தமிழ்த்தாய் முத்தப் பரிசளிப்பாள் என்று விளக்குகின்றார்.      

 

    சூரியனில் ஒளியைப் போன்றும்   நிலவில் குளிர்ச்சியைப் போன்றும் , தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என்பதை தெளிவு படுத்துகின்றார் . எனவே தான் சூரியனையும், நிலவையும் தமிழின் இரத்தம்  என்கின்றார்.

 

தமிழ்மொழியோடு வசந்தம்  நீண்ட காலம் வாழ்ந்து விட்டு தான் இயற்கையோட வாழச் சென்றதாம்  . தமிழ மொழி அத்தகைய சிறப்பு வாய்ந்தது என்று கூறுகின்றார் .  

    மழை பருவத்தின் ஈரத்தை மேகங்கள் தமிழ் மொழியில் இருந்தே உறிந்து எடுத்துக் கொண்டு மழையாகப் பொழிந்து   மக்களைக் காக்கின்றது.. அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழை  உயர்த்தும்  முயற்சியில்  ஏற்படும் இன்னல்களை  மாணிக்கங்களாய் வைரங்களாய் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்கிறார் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்