ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்-கவிஞர் இன்குலாப்-விளக்கம்

 


 

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்-கவிஞர் இன்குலாப்

 

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

 

பறவைகளோடு எல்லை கடப்பேன்

 

பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்

 

எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

 

நீளும் கைகளில் தோழமை தொடரும்

 

நீளாத கையிலும் நெஞ்சம் படரும்

 

எனக்கு வேண்டும் உலகம் ஓர்கடலாய்

 

உலகுக்கு வேண்டும் நானும் ஓர்துளியாய்

 

கூவும் குயிலும் கரையும் காகமும்

 

விரியும் எனது கைகளில் அடையும்

 

போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்

 

பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்

 

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்

 

என்செவிகளிலே எதிரொலி கேட்கும்

 

கூண்டில் மோதும் சிறகுகளோடு

 

எனது சிறகிலும் குருதியின் கோடு!

 

சமயம் கடந்த மானுடம் கூடும்

 

சுவரில்லாத சமவெளிதோறும்

 

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

 

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்.

 

விளக்கம்

 

   மனிதன் வாழத் தகுதியான இடம் என்பது பல்வேறு உயிரினங்கள் சேர்ந்து வாழும் இடமே . உலகில்  இருக்கும் ஒவ்வொரு புல்லையும் நான் பெயர் சொல்லியே அழைப்பேன் .

       பறவைகளுக்கு எல்லையைக் கடக்க விசாவும்(visa ) பாஸ்போர்ட்டும் (passport)  தேவை இல்லை . காலத்திற்கும் பருவ மாற்றத்திற்கும் ஏற்ப விரும்பிய திசையெல்லாம் பறந்து எல்லைகளைக் கடகக்கும் இயல்புடையவை பறவைகள். அப்பறவைகள் போன்று மனிதர்களை இனம் பிரிக்கும் நாடு, சாதி, இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து வாழ விரும்புவதாகக் கூறுகின்றார்.கல்லுக்கும் மண்ணுக்கும் கூட பெயர் சூட்டி மகிழ்கிறார்.

     மனிதம் என்பது மறந்து போன  சமுதாயத்தில் வேற்றுமை என்பது இல்லாமல் தோழமையோடு நீளுகின்ற  கரங்களை ஏற்றுக் கொள்பவர்களிடம் நட்பு பாராட்டுவேன். என்னை நட்பை விரும்பாதவர்களிடமும் நேசத்தைப் பகிர்ந்து கொள்வேன். இந்த உலகமே எனக்குக் கடலாக மாற வேண்டும். உலகுக்கு நன்ம செய்து அந்தக் கடலில் நானும் ஒரு துளியாக இணைய வேண்டும்.

     கூவுகின்ற குயிலும், கரைககின்ற காகமும் என் கைகளில் அடைய வேண்டும். போதி மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரைச் சார்ந்தவர்களும் , சிலுவையில் இளைப்பாறும் கிறித்துவர்களும் , பிறையின் ஒளியில்  வாழ்கின்ற இசுலாமியர்களும்  சமத்துவம் என்ற பெருங்கடலில் கரைந்து ஒன்றாக வேண்டும். அப்படி ஆகும் போது எங்கே யாருக்கு துயரம் என்றாலும் என காதுகளில் அவர்களின் விசும்பல் கேட்கும் என்கிறார்.

   கூண்டில் அடைப்பட்ட பறவைகள் கூண்டைவிட்டு வெளியேற முயற்சிக்கும்போது சிறகுகள் முறிந்து குருதி வழிந்து  துன்பப்படும். ஆனால் கூண்டைத் தகர்த்து வெளியேறிவிட்டால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்.  அதுபோல, மனிதனாகப் பிறந்த யாவரும் மதம் என்ற கூண்டை விட்டு வெளியேறி சமத்துவம் என்ற சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும் . அப்படி மதக் கூண்டை விட்டு வெளியேற முடியாத மனிதப்பறவைகளைப் பார்க்கும் போது தனது சிறகிலும் குருதி வழிவதாகக் கூறுகிறார்.   

 

   மதம்  என்ற சுவர்கள் இல்லாத சமவெளிகளில் மதங்களையும் இனங்க களையும்  குறிக்கின்ற அடையாளங்கள் எதுவும்  இல்லாத முகங்களில் விழிப்பேன். அப்போது மனித நேயம்  என்றொரு பாடலை இசைத்து மகிழ்வேன் என்று கூறுகின்றார்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்