ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது கவிஞர் மு.மேத்தா -விளக்கம்

 

ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது

 கவிஞர் மு.மேத்தா

முகவரி

சரியாக எழுதப்படாத

ஒரு கடிதம்

எங்கெங்கோ சென்று

முட்டி மோதி அலைந்துவிட்டு

என்னிடமே திரும்பி விட்டது.

ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது!

சேரும் முகவரி சரியில்லை

அனுப்பிய முகவரி அதில் இல்லை

பற்பல ஊர்களின்

முத்திரை பதிந்தது !

பற்பல தெருக்களில்

விசாரணை நடந்தது!

பற்பல தினங்கள்

பறந்து கடந்தது!

பிறந்த இடத்தின்

பெயரே இல்லை!

புகுந்த இடமோ

புரியவில்லை!

அந்தக் கடிதத்தை

அஞ்சல் நிலையங்கள்

ஆராய்கள் செய்தன!

ஒட்டியிருந்த

உறையின் உள்ளே

இருந்த தாளில்

எழுதியிருந்தது இப்படி!

“ஒருவாரத்திற்குள்

உங்கள் பதில் வரவேண்டும்

இல்லாவிட்டால்

உயிர்ப் பறவை சிறகடிக்கும்

கடைசி முத்தமிட என்

கல்லறைக்கு வரலாம்”.


விளக்கம்

கடிதம் என்பது வெறும் காகிதம் மட்டும் இல்லை. அது ஒருவரின் மன வெளிப்பாடு. அதில் சேர வேண்டிய முகவரியும், அனுப்புபவரின் முகவரியும் தெளிவாக எழுதப்படவில்லையெனில் அக்கடிதம் உரியவரிடம் சேராமல் அஞ்சல் நிலையங்களையே சுற்றி வரும். சில நேரங்களில் அனுப்பியவருக்கே போய்ச் சேர்ந்து விடும் . அப்படி அனுப்பியவருக்கும் போகாமல்,போய்ச் சேர வேண்டியவருக்கும் போகாமல் போன கடிதம் ஒன்றைப் பற்றி ஆசிரியர் இங்கு குறிப்பிடுகின்றார் .

காதல் கொண்ட ஒருவர் , தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கடிதம் எழுதுகின்றார் . அவசரத்தில் முகவரியைச் சரியாக எழுதவில்லை. தன் முகவரியையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. கடிதத்தை அப்படியே கொண்டு போய் அஞ்சல் நிலையத்தில் சேர்த்து விட்டார் .

முகவரி சரியாக எழுதப்படாததால், அக்கடிதம் எங்கெங்கோ சென்றது. பல ஊர்களுக்குப் பயணித்தது . பல அஞ்சல் நிலையங்களின் முத்திரையை ஏற்றுக்கொண்டது. தெருக்கள் தோறும் அக்கடிதம் குறித்து தீவிர விசாரணை நடந்தது. நாட்கள் பல கடந்து சென்றன. யார் எழுதியது என்பது மட்டும் தெரியவில்லை. யாருக்கு எழுதியது என்பதும் யாருக்கும் புரியவில்லை. அஞ்சல் நிலையங்கள் அக்கடித்தை ஆராய்ச்சி செய்து தோல்வியடைந்தன. உள்ளிருக்கும் செய்தியை வைத்தாவது அனுப்பியவருக்கோ அல்லது போய் சேர வேண்டிய முகவரிக்கோ  அனுப்பலாம்  என்றுபிரித்துப் படிக்க முயற்சி செய்தனர் அஞ்சல் நிலையத்தினர் .

அப்படி பிரித்துப் படிக் கையில் கடிதத்தின் உள்ளே ஒருவாரத்திற்குள் உங்கள் பதில் வரவேண்டும். இல்லாவிட்டால்  உயிர்ப் பறவை சிறகடிக்கும்.  கடைசி முத்தமிட என் கல்லறைக்கு வரலாம் என்று எழுதியிருந்தது. அனுப்பியவருக்கும் போகாமல்  , உரியவரிடமும்  சேராமல் அனாதையாகிவிட்டது .

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்