அருட் பிரகாச வள்ளலார் - பிள்ளைச் சிறு விண்ணப்பம்

 

     அருட் பிரகாச வள்ளலார் - பிள்ளைச்  சிறு விண்ணப்பம்

    

    பிள்ளைப் பருவத்துத்தில் உள்ளத்தில் எழும் எண்ணங்களை

சிலவற்றை இறைவனிடம்  விண்ணப்பம் செய்வது.

பாடல் 1.

     தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்

          தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்

     பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்

          பேசிய தந்தையும் தாயும்

     பொடித்திரு மேனி அம்பலத் தாடும்

          புனிதநீ ஆதலால் என்னை

     அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

          அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.

பொருள் :

     அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, வளர்ச்சியினால்  உடல் தடித்த மகன் செய்த தவறைக்  கண்டு தந்தை மகனை அடிப்பானாயின், உடனே தாய் அங்கு சென்று  தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள். அதுபோல தாய் அடிப்பாளாயின் தன் கையில்  பற்றிப் பிடித்துக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்.  திருநீறு  அணிந்த திருமேனியை உடையனாய்த் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, இவ்வுலகில் எனக்கு நூல்கள் உரைத்த தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்.  இனி உனதருளால் என்னை ஆதரிக்க வேண்டும்; இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன்.

        2.

     பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்

          பெற்றவர் அறிவரே அல்லால்

     மற்றவர் அறியார் என்றனை ஈன்ற

          வள்ளலே மன்றிலே நடிக்கும்

     கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்

          குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்

     முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ

          முனிவதென் முனிவுதீர்ந் தருளே.

பொருள் :

     அம்பலத்திலே திருக்கூத்தாடும்  அரசே, எண்  குணங்களையுடைய இறைவனே, என்னைப் பெற்ற அருள் வள்ளலே, தாம் பெற்ற பிள்ளைகளின் குணங்களை எல்லாம் பெற்றவராகிய தாய் தந்தையர் அறிவார்களே அன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள். நான் மேற்கொண்டுள்ள குணங்களால்  கொடியவனாக இருக்கின்றேன் . என்னுடைய குணங்கள் அனைத்தையும் நீ முற்றவும் நன்கறிவாய். அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்?

பாடல் 3.

     வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை

          விரும்பினும் அங்ஙனம் புரியச்

     சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற

          தந்தைதாய் மகன்விருப் பாலே

     இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ

          என்றனை விழைவிக்க விழைந்தேன்

     செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்

          திருவுளம் அறியுமே எந்தாய்.

பொருள் :

     வெவ்விய அறிவும் கொடுமைப் பண்பும் உடைய மகன் கொடிய செயலொன்றைச் செய்யவிரும்பினால்  மகன்மேல்  உள்ள ஆசையால் அவனைப் பெற்ற தாயும் தந்தையும் அவன் புரியும் கொடுஞ் செயலுக்கு உடன்படுகின்றனர். இந்த மதியுடைய சிறியவனாகிய நான்  குற்ற மொன்றும் செய்ததில்லை.  என் மனத்தில் உன்மேல் அன்பு உண்டாகச் செய்தமையால் நான் உன்பால் அன்பு கொண்டேன். செவ்விய அறிஞர் மதிக்கும் அருளமைந்த திருநெறியும் இதுவாகும்.  இவை அனைத்தும் சிவ பெருமானாகிய எந்தையே, உனது திருவுள்ளம் அறிந்தஒன்றே .

4.

     பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்

          புல்முனை ஆயினும் பிறர்க்கு

     நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்

          நண்ணிய கருணையால் பலவே.

     கைபிழை யாமை கருதுகின் றேன்நின்

          கழற்பதம் விழைகின்றேன் அல்லால்

     செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ

          திருவுளம் அறியுமே எந்தாய்.

 

பொருள் :

     எந்தையாகிய சிவபெருமானே, பொய் கூறுதல் முதலான  குற்றங்கள் எண்ணிறந்தன செய்வேனாயினும் அதனால்  புல்லின் நுனியளவும் பிறர்க்கு வருத்தம் உண்டு பண்ணும் பிழை சிறிது இருக்குமானாலும்  வாயாற் சொல்ல மாட்டேன்.  பிறர்பால் உண்டாகிய அருளுணர்வால் சிறு பிழைகள் பலவும் செய்ய நினைப்பதில்லை .  நின்னுடைய திருவடியில்  ஆர்வம் உடையனாவதன்றிச் செய்தற்குரிய பிழை வேறு  ஒன்றும் அறியேன். இந்நிலைமை தேவன் அறிந்ததன்றோ .

பாடல் 5.

 

அப்பணி முடி என் அப்பனே மன்றில்

          ஆனந்த நடம்புரி அரசே

     இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்

          டிந்தநாள் வரையும்என் தனக்கே

     எப்பணி இட்டாய் அப்பணி அலதென்

          இச்சையால் புரிந்ததொன் றிலையே

     செப்புவ தென்நான் செய்தவை எல்லாம்

          திருவுளம் அறியுமே எந்தாய்.

 

பொருள் :

 

     கங்கையாறு தங்கிய திருமுடியை உடைய தந்தையே, இன்பத் திருக்கூத்தாடும் அரசே, என் தந்தையே,  இவ்வுலகில் எனக்கு நல்லறிவு தோன்றிய நாள் தொடங்கி இந்நாள் வரையும் எனக்கென எத்தகைய பணி செய்தல் வேண்டுமென  நீ ஏற்பாடு செய்தனையோ அதனைச் செய்வதன்றி வேறு எதுவும்  என் செயலாக நான்  செய்ததில்லை. இது தவிர யான் சொல்லுதற்கு வேறில்லை; நான் செய்துள்ளவையனைத்தும் நினது திருவுள்ளம் நன்கு அறியும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்