இன்று நான் பெரிய பெண் -அ.சங்கரி - விளக்கம்
இன்று நான் பெரிய பெண் -அ.சங்கரி
நான்
கல்லாய்
மாறிய பூ
பாறையாய்
இறுகிய காற்று
பனியாய்
உறைந்த நீர்
பூவைப்
போலவும்
காற்றைப்
போலவும்
நீரைப்
போலவும்
குதித்துத்
திரிந்து
சுற்றிய
பருவத்தில்
காலை
உதைத்து
வீரிட்டு
அழவும்
கல
கல என்று
கைதட்டிச்
சிரிக்கவும்
கோபம்
வந்தால்
கொப்பியைக்
கிழிக்கவும்
முடிந்த
காலம்.
மரத்தில்
ஏறவும்
மாங்காய்
பிடுங்கவும்
பக்கத்து
வீட்டுப்
பிள்ளைகளுடனே
கிட்டி
அடிக்கவும்
ஒளித்துப்
பிடிக்கவும்
ஒன்றும்
பேசிலர் எவரும்.
ஒன்று
நான்
பெரிய பெண்
உரத்துச்
சிரித்தல் கூடாது
விரித்த
புகையிலை
அடக்கம்; பொறுமை
நாணம்
பெண்மையின்
அணிகலம்
கதைத்தல்; சிரித்தல்
பார்த்தல்; நடத்தல்;
உடுத்தல்
எல்லாம்
இன்னபடி என்றெழுதி….
நான்
கல்லாய்
பாறையாய்
பனியாய்
பெண்ணாய்…..
விளக்கம்
இந்தக் கவிதை ஒவ்வொரு பெண்ணும் பருவம் எய்திய பின்னர் தான் வாழக்கையில் ஏற்படும் மாற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது .
தன்னையே இந்தச் சூழலில் பொருத்திக்கொண்டு
நான் சிறு குழந்தையாக இருந்தபோது எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. பூவைப் போல சிரித்தும் காற்றைப்போல எங்கும் சுற்றியும் நீரைப்போல ஓடியாடி
மகிழ்ந்து இருந்தேன் . வேண்டிய பொருட்களைப் பெறுவதற்காக கை கால்களை உதைத்து வீறிட்டு
அழுதிருக்கிறேன். என்னைப் போன்ற குழந்தைகளுடன் கல கல என்று சத்தம் போட்டுக்
தைட்டிச் சிரித்திருக்கிறேன். என் கோபத்தை வெளிப்படுத்த என் நோட்டுப்
புத்தகங்கைளக் கிழித்திருக்கிறேன். (கொப்பி என்பது இலங்கையில் நோட்டு புத்தகங்களைக் குறிக்கும் சொல்லாகும்) . பருவம் எய்துவதற்கு முன் மரங்களில் எறி மாங்காயைப் பறித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன்
சேர்ந்து கிட்டிப்புல் விளையாடியிருக்கிறேன். எல்லாக் குழந்தைகளுடன் சேர்ந்து ஒளித்துப்
பிடித்து விளையாடியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம்
எந்தக் கட்டுப்பாடும் எனக்கு விதிக்கப்படவில்லை.
ஆனால் பருவம் எய்திய நாள்
முதல் என்னைக் கட்டுப்பாடுகள் சூழ்ந்து
கொண்டுள்ளன. சத்தமிட்டு சிரிக்கக்கூடாது என்றார்கள். அதற்கு பெண் சிரித்தால் போச்சு புகையிலை விரிச்சா
போச்சு என்ற பழமொழியை ஆயுதமாக்கினார்கள்
அடக்கமாகவும், பொறுமையாகவும் கோபம் கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அச்சம் மடம் நாணம் போன்றவையே பெண்மையின் அணிகலன் என்று திணிக்கப்பட்டது
. நான் பேசுவதற்கு,
சிரிப்பதற்கு, பார்ப்பதற்கு, நடப்பதற்கு, உடுத்துவதற்கு என அனைத்திற்கும் இப்படித்தான் என்று வரைமுறைகள்
விதிக்கப்பட்டன.
ஆதலால், பூவாக மலர்ந்த
நான் இன்று கல்லாகி விட்டேன். காற்றாக சுற்றித் திரிந்த நான் பாறையாக நிலைத்து ஓரிடத்தில் நின்று விட்டேன். நீராய் ஓடித்திரிந்த நான்
பனியாய் உறைந்து விட்டேன் என்று பூப்பெய்தும் பெண்கள் வாடித் துவளும் நிலையை
எடுத்து உரைக்கின்றார் .
கருத்துகள்
கருத்துரையிடுக