சீறாப்புராணம் -உடும்பு பேசிய படலம்

         சீறாப்புராணம் உடும்பு பேசிய படலம்

 

 

1.    வடிவுறு முமறெனும் வள்ள னந்நபி

     யுடனுயர் தீனிலைக் குரிய ராயபின்

     றிடமுடைத் தவர்களாய்ச் சிந்தை யிற்பெறு

     மடமக றரப்பெரு மகிழ்ச்சி யெய்தினார்.

 

     பொருள்: நபிகள் நாயகம் அவர்களோடு அழகானது பொருந்தப் பெற்ற உமறு என்னும்  வள்ளலானவர்களும்  இஸ்லாமென்னும் மார்க்கதினை   பின்பற்றினர்.  அவ்வாறு பின்பற்றிய பின்னர் தைரியமுடையவர்களாகவும் மனசின்கண் கொண்ட அறியாமையானது அகலும் வண்ணம் பெரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

 

2. செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய

  பயிரென வருங்கலி மாவைப் பண்பொடு

  நயனுறப் பெருக்கிய நண்ப ரியாவரு

  முயிரென முகம்மதை யுவந்து காமுற்றார்.

 

      பொருள்:   அது மட்டுமின்றி , குற்றமற்ற தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமைக்கு உரித்தான அழகிய பயிரைப் போன்ற கலிமாவைத் தகுதியுடன் நன்மையுறும் வண்ணம் மனசின்கண் பெருகச் செய்தவர்கள்  நபிமுகம்மது அவர்களைத் தங்களின் ஜீவனைப் போல விரும்பி அன்பு செலுத்தினார்கள் .

 

3.    உடலுயி ரெனவுவந் துறையு நாளினி

     லடலபூ பக்கரு மலியுந் தெவ்வரைக்

     கடவிய வேற்கர வுமறுங் கள்ளவிழ்

     மடறிகழ் மாலிகை யறபி மன்னரும்.

     

பொருள்: அவ்வாறு உடலையும் உயிரையும்  போல விரும்பும் நிற்கும் தினத்தில் வலிமையை அபூபக்கர் அவர்களும் அலி அவர்களும் பகைவர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காக வேலாயுதத்தைக் கொண்ட கையையுடைய உமறுகத்தாபு அவர்களும் இதழ்கள் பிரகாசிக்கும் புஷ்பமாலை யணிந்த அறபி வேந்தர்களும்.

4.   தோமகன் முகம்மது நபியுஞ் சூழ்வர

     மாமதி ணகர்ப்புறத் தெய்தி மற்றொரு

     தேமலர்ப் பொழிலிடை தெரிய வைகினார்

     காமரு மதியமுங் கணமு மென்னவே.

 

      பொருள்:  குற்றமானது நீங்கப் பெற்ற நாயகம் நபிமுகம்மது அவர்களும் தங்களைச் சூழ்ந்து வரும் வண்ணம் பெருமை பொருந்திய மதில்களையுடைய தங்கள் நகரமாகிய மக்காப் பதிக்கு வெளியில் அடைந்து வாசனையைக் கொண்ட பூக்களையுடைய ஒரு சோலையின்கண் அழகிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் போல

தங்கியிருந்தார்கள்.

5.    செல்லிடுங் குடைநபி செவ்வி காண்டலுங்

     கல்லொடு மரமும்புற் கானும் வாவியு

     மெல்லிய சிறைப்புள்ளும் விலங்கி னங்களு

     மொல்லையூர் வனவனத் துகளுஞ் சாதியும்.

    

 பொருள்: அப்போது மேகங்களைக்  குடையாகக் கொண்ட  நபிமுகம்மது அழகைப் பார்த்த மாத்திரத்தில் அங்குள்ள கற்களுடன் மரங்களும் புற்களையுடைய காடுகளும் தடாகங்களும் மெல்லிய சிறகுகளையுடைய பட்சிகளும் மிருகக் கூட்டங்களும் விரைவில் ஊர்ந்து திரியும் ஊர்வனங்களும் காட்டின்கண் பாய்ந்து திரியும் சாதிகளும்.

 

6 .   தோற்றிய தெவ்வையுந் துலங்கக் கேட்பதா

     மாற்றருஞ் சுருதியின் வசனந் தன்னொடும்

     போற்றரும் புகழ்ச்சியாற் புகழ்ந்து பொங்கிய

     வூற்றமுற் றுயர்சலா முரைத்து நின்றவே.

 

பொருள்: கண்பார்வைக்குத் தெரியக் கூடிய மற்ற எல்லாவகைகளும் விளங்கும் வண்ணம் காதுகளினாற் கேட்கும்படியாக மாற்றுதற்கரிய வேதவசனத்தோடும் போற்றுதற்கு அருமையான துதிகளினால் துதித்து சலாம்  சொல்லி நின்றன.

7.    கானகத் துற்றகா ரணங்க ளியாவையுந்

     தீனவர் செவியுறத் தேக்கிச் சீர்பெற

     வானவர் புகழ்தர மக்க மாநபி

     யீனமின் மனையகத் தேகி னாரரோ.

 

      பொருள்:  அப்போது மக்கமா நகரத்தையுடைய நபிமுகம்மது மவர்கள் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்கு உரியவர்களான முஸ்லிம்கள் அந்தக் காட்டின் கண் பொருந்திய காரணங்க ளெல்லாவற்றையும் தங்களின் காதுகளிற் பொருந்தும் வண்ணம் நிறையும்படி கேட்டுச் சிறப்பைப் பெறவும், தேவர்களான துதிக்கவும், குறைபாடற்ற தங்களின் வீட்டின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

8 .  அற்றையிற் போழ்தவை யகன்று பின்னைநாள்

     வெற்றிவெங் கதிரயில் வீர ரியாவருஞ்

     சுற்றிட மெய்யெழி றுலங்க மானபி

     மற்றொரு தலத்திடை வைகி னாரரோ.

 

      பொருள்:  அவ்வாறு பெருமை பொருந்திய நபிமுகம்மது அன்றைய தினம் தங்களின் கூட்டத்தை நீங்கி மறுநாள் விஜயத்தையும்  பிரகாசத்தைக்  கொண்ட வேலாயுதத்தையுடைய வீரர்களான முஸ்லிம்களனைவர்களும் தங்களை வளையும் வண்ணம் வேறேயொரு தலத்தின் கண் போய்த் தங்கியிருந்தார்கள்.

9.    நல்லறி வுடையவர் சூழ நந்நபி

     யில்லிருந் தெழுந்திவ ணிருப்ப மற்றொரு

     வில்லினன் வலையினன் வேடன் கையினிற்

     கல்லிய தடியொடுங் கானி லேகினான்.

 

     பொருள்:  நல்ல அறிவையுடையவர்களான முஸ்லிம்கள் சூழும் வண்ணம் நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு வீட்டின் கண்ணிருந் தெழும்பி இவ்விடத்தில் தங்கியிருக்க, கோதண்டத்தையும் வலையையுமுடையவனான வேறேயொரு வேடன் தனது கையில் பூமியைக் கல்லுகின்ற தடியுடனும் காட்டின் கண் சென்றான்.

10.. கானகஞ் சுற்றியுங் கல்லைத் தள்ளியு

   மானினந் தடைபட வலைகள் வீக்கியுந்

   தான்மலை முழைஞ்சினுந் தடவி நோக்கியு

   மூன்புசித் திடுவதற் கொன்றுங் காண்கிலான்.

 

பொருள்: அவ்விதம் சென்ற வேடனானவன் காட்டினுள் வளைந்து திரிந்தும் கற்களைத் தள்ளியும் மான் கூட்டங்கள் தடைபடும் வண்ணம் வலைகளைக் கட்டியும் மலைகளினது குகைகளிலும்  தடவிப் பார்த்தும் மாமிசம் உண்பதற்காக எதுவும் கிடைக்காமல் இருந்தான் .

11.   அடவியிற் புகுந்தரும் பதுக்கை சுற்றியோர்

     புடையினின் முசலிகை புகுதக் கண்டனன்

     றடைபட வலைவயின் சாய்த்து மேற்சிலை

     யுடைபடத் தாக்கித்தன் னுரத்திற் பற்றினான்.

 

      பொருள்:  அதனால் அவன் சோலைகளில் நுழைந்து அரிய பாதைகளைச் சுற்றி ஒரு புடையின் கண் ஓருடும்பானது புகும் வண்ணம் பார்த்தான் . அவ்வுடும்பைத் தடைபடும்படி வலையினிடத்தில் சரித்துப் புடையினது மேலேயுள்ள கல்லானது உடையும் வண்ணம் அடித்துத் தனது மார்போடும் பிடித்தான்.

 

      12. வள்ளுகி ருடும்பினை வலைக்குண் மாட்டிவை

     முள்ளுறை கானமு முரம்பு நீக்கித்த

     னுள்ளக மகிழ்வொடு முழையர் சூழ்தர

     நள்ளுறை முகம்மது நபியை நோக்கினான்.

 

      பொருள்:  பிடித்த கூரிய நகத்தையுடைய அந்த உடும்பை அவ்வேடனானவன் வலையினுள்  கட்டித் தனது மனசினுள் மகிழ்ச்சியோடும் முட்கள் தங்கிய காடுகளையும் பாறைகளையும்  தள்ளி நடந்து தங்களின் உழையர்களான முஸ்லிம்கள் வளையும் வண்ணம் நடுவில் தங்கிய நபிமுகம்மதுவைக் கண்களினாற் பார்த்தான்.

 

13 .   மன்னிய வறிஞரி னாப்பண் வைகிய

    தென்னிவர்க் குறுஞ்செய லியாது கொல்லென

    முன்னிய வேட்டுவன் மொழிய வாதித

    னன்னிலைத் தூதிவர் நபியென் றோதினார்

 

பொருள்:  அவ்வாறு பார்த்து இவர் பொருந்திய அறிவையுடையவர்களான இவர்களின் நடுவில் தங்கினது என்ன காரணம்? அன்றியும், இவருக்கு இசைந்த தொழில் யாது? என்று நினைத்த அந்த வேடன் அங்கிருந்தவர் களிடத்திற் கேட்டான். அதற்கு அவர்கள் இவர்கள் யாவற்றிற்கும்  முதன்மையனான  நபிமுகம்மது என்று சொன்னார்கள்.

14 .   மைமுகிற் கவிகைநன் னபிமுன் வந்துநின்

     றெம்மறைக் குரியவர் நீவி ரெந்நெறி

     செம்மையி னடத்துத றெளியச் செப்புமென்

     றிம்மொழி யறபிவேட் டுவனி சைத்தினன்.

 

      பொருள்:  அதைக் கேட்ட அந்த அறபியாகிய வேடன் கறுத்த மேகக்குடையை உடைய நன்மை பொருந்திய நாயகம் நபிமுகம்மது முன்னர் வந்து நின்று கொண்டு நீவிர் எந்த வேதத்திற்கு உரித்தானவர்? அழகாய் நீர் நடத்துவது எந்த மார்க்கம்? அவற்றை யான் தேரும் வண்ணம் சொல்லுமென்று இந்த வார்த்தைகளைக் கேட்டான்.

 

15 .   கூறிய வறபியைக் குறித்துக் காசினிக்

     கீறினில் வருநபி யான லாதிலை

     யூறிய பொருட்புறுக் கானென் றோதிய

     தேறுநன் மறையெனக் குற்ற செவ்வியோய்.

      பொருள்:  அவ்வாறு கேட்ட அந்த அறபியாகிய வேடனை நாயகம் நபிமுகம்மது மனசின்கண் மதித்து அழகையுடைய வேடனே! யான் இப்பூலோகத்திற்குக் கடைசியாக வந்த நபி. என்னை யல்லாமல் இனிமேல் இந்தப் பூமியின்கண் நபிமார்களுமில்லர். சுரக்கின்ற பொருளையுடைய புறுக்கானுல் எனும்  எனக்குற்ற நன்மை பொருந்திய வேதமானது உயர்வாகும் என்று கூறினார் .

16.    என்னுரை நின்றிசு லாமி லாயினோர்

     மின்னொளிர் மாளிகைச் சுவன மேவுவர்

     பன்னியிம் மொழிபழு தென்னும் பாவியோர்

     வன்னியின் குழியிடைக் கிடந்து மாழ்குவார்.

 

பொருள்: அன்றியும், எனது வார்த்தைகளில் நின்று தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திலானவர்கள் ஒளிரும்  மாளிகைகளை யுடைய சுவர்க்கலோகத்தைப் பொருந்துவார்கள். இந்த வார்த்தைகளைத் தெளிந்து குற்றமென்று சொல்லும் பாவிகள் அக்கினியினது குழிகளை யுடைய நரகத்தின்கண் கிடந்து மயங்குவார்கள்.

 

17. ஈதுநன் றெனமன மிசைந்தென் னாவினி

    லோதிய நன்கலி மாவை யோதிநின்

    பாதகந் துடைத்துநற் பதவி யெய்தென

    வாதிதன் றூதுவ ரறைந்திட் டாரரோ.

 

      பொருள்:  ஆதலால் இதுவே நல்லதென்று உனது மனமானது பொருந்தி எனது நாவினால் சொல்லும் நன்மை தங்கிய கலிமாவைச் சொல்லி உனது தீமைகளை இல்லாமற் செய்து நல்ல பதவியை அடைவாயென்று நபிமுகம்மது சொன்னார்.

 

 

18 .     தெரிதர நன்மொழி தெளித்த நந்நபி

     மரைமலர்ச் செவ்விய வதன நோக்கிநும்

     முரைமறுத் திலனெனக் குண்மை யாகவித்

     தரையினி னபியெனச் சாட்சி வேண்டுமால்.

 

      பொருள்: அவ்வாறு நல்ல வார்த்தைகளைத் தெரியும் வண்ணம் தெளித்துச் சொன்ன நபிமுகம்மதுவின் தாமரைமலர் போன்ற அழகிய முகத்தை அந்த வேடன் பார்த்து யான் தங்களுடைய வார்த்தைகளை மறுக்கவில்லை. எனக்கு இப்பூலோகத்தின்கண் தாங்கள் நபியென்று சொல்லும்படி மெய்யாக சாட்சி வேண்டுமென்று சொன்னான்.

     19.  கானிடை யறபியிவ் வுரையைக் காட்டலுந்

     தேனகு மலர்ப்புயச் செவ்வி நன்னபி

     வானிடை மண்ணிடைப் படைப்பின் மற்றதி

     லீனமில் கரியுனக் கியைவ தேதென்றார்.

 

      பொருள்: அந்தக் காட்டின்கண் அறபியாகிய அவ்வேடன் இந்த வார்த்தைகளை வெளிப்படுத்தின மாத்திரத்தில் மலர்மாலையணிந்த தோள்களையுடைய அழகிய நபிமுகம்மது வானலோகத்தின் கண்ணும் பூலோகத்தின் கண்ணுமுள்ள படைப்புகளில் குறைபாடற்ற சாட்சியாக உனக்குப் பொருந்துவது யாதென்று கேட்டார்கள்.

 

20  .    கடும்பரற் கான்கவிழ் வலையி னுட்படு

     முடும்பென திடத்திலொன் றுளது முள்ளெயி

     றிடும்பகு வாய்திறந் தினிதி னாகநும்

     மொடும்பகர்ந் திடின்மறுத் துரைப்ப தில்லையே.

 

      பொருள்: அவ்விதம் கேட்கவே வேடன் கடிய பரற்கற்களையுடைய காட்டின்கண் கவிழ்த்திய வலையினது அகத்தில் அகப்பட்ட ஓருடும்பானது என்னிடத்திலுள்ளது. அவ்வுடும்பு தனது கூர்மையாகிய பற்களைத் தரித்த பிளந்த வாயைத்திறந்து  இன்பமாக உங்களுடன் பேசினால் அதை யான் மறுத்துச் சொல்லுவது வேறொன்றும்  இல்லையென்று சொன்னான்.

 

21 .    என்றுரை பகர்ந்தவ னிதயங் கூர்தர

     நன்றென முறுவல்கொண் டினிய நந்நபி

     குன்றினிற் றிரிதரு முடும்பைக் கூடிய

     மன்றினில் விடுகவென் றுரைவ ழங்கினார்.

 

     பொருள்:  என்று கூறிய  அந்த வேடனின் மனமானது ஏற்கும் வண்ணம் இனிமையையுடைய நபிமுகம்மது நல்லதென்று சிரித்து மலைகளில் திரியும் அந்த உடும்பைக் கூட்டமுற்ற இந்த சபையின்கண் விடுவாயாகவென்று கூறினார்.

 

22 .      கானிடை திரிந்தறத் தவித்துக் காறளர்ந்

     தேனினி விடிலுடும் பெளிதி னெய்திடா

     தானதான் மடிமிசை யாக்கி னேனறுந்

     தேனவி ழலங்கலோ யென்னச் செப்பினான்.

 

பொருள்:  அவர்கள் அவ்விதம் கூறவே  அந்த வேடனானவன் நறிய தேனானது நெகிழப் பெற்ற மலர் மாலையையுடையவர்களே! நான்  இந்த உடும்பைப் பிடிப்பதற்காய்க் காட்டின்கண் திரிந்து மிகவும் இளைத்து இரண்டு கால்களும் தளர்ச்சியடைந்தேன். இனி இதை விட்டால் இவ்வுடும்பு இலேசாய் நம்மிடத்திற் சேராது. ஆனதினால் அதை யான் எனது மடியின்மீது வைத்துக் கொள்கிறேன் சொல்லினான்.

 

23.   எடுத்துன துடும்பையென் னிடத்தின் முன்னிதா

     விடுத்திடி லகன்றிடா தெனவி ளம்பலு

     மடுத்தமென் மடிபுகு முடும்பை வாங்கியங்

     கடுத்தனன் விடுத்தன னறபி வேடனே.

 

      பொருள்: அப்போது நாயகம் நபிமுகம்மது உனது உடும்பைத் தூக்கி எனது இடத்தின் முன்னாக விட்டால் அவ்வுடும்பானது அவ்விடத்தை விட்டும் நீங்கிச் செல்லாதென்று சொன்ன மாத்திரத்தில் அறபியாகிய அந்த வேடன் நிறைந்த மெல்லிய தனது மடியின்கண்  நிற்கும் அவ்வுடும்பை வாங்கி அந்நபிகள் பெருமானவர்களை நெருங்கிக் கீழே விட்டான்.

 

24 .  நெடுந்தலை யெடுத்துவா னிமிர்த்து முள்ளெனப்

     படுந்தரத் துகிர்நிலம் பதிப்ப வூன்றியெள்

     ளிடுந்தரை யகன்றிடா திறைவன் றூதெனத்

     திடந்தர மனத்தினிற் றெளிந்து நோக்கிற்றே.

 

      பொருள்: அவ்வாறு விடவே அவ்வுடும்பானது நெடிய தனது தலையைத் தூக்கி வாலை நிமிரும்படி செய்து முள்ளைப்போலுண்டாகிய தன்மையையுடைய நகங்களைப் பூமியின் கண் பதியும் வண்ணம் ஊன்றி எள்ளிடும் அளவுள்ள தலமாயினும் நீங்கிச் செல்லாது நபிமுகம்மதுவை யாவற்றிற்கும் இறைவனின் தூதுவன் என்று வலிமை தரும்படி மனசின்கண் தேறிப் பார்த்தது.

 

25 .   ஆரமு தனையசொல் லரிய வாய்திறந்

     தோர்மொழி நந்நபி யுடும்பைக் கூவலுஞ்

     சீர்பெற விருவிழி திறந்து நோக்கிநின்

     றீர்தரு நாவெடுத் தியம்பிற் றன்றரோ.

 

      பொருள்: அவ்விதம் பார்க்கவே  நபிமுகம்மது  நிறைந்த தேவாமிர்தத்தைப் போலும் வார்த்தைகளையுடைய அருமையான தங்களின் வாயைத் திறந்து ஒப்பற்ற வார்த்தையாக அந்த உடும்பைக் கூப்பிட்ட மாத்திரத்தில் அவ்வுடும்பானது கீர்த்தி பெறும் வண்ணம் தனது இரண்டு கண்களையும் திறந்து நின்று அந்நபிகள் பெருமானவர்களைப் பார்த்துப் பிளவையுடைய நாவைத் தூக்கி பதில் பேசிற்று.

26    . இகம்பர மெனவரு மிருமைக் குண்மையா

     யுகம்பல வுதிக்குமுன் னுதித்துப் பின்னுதித்

     தகம்பயி லாரணத் துறைந்து செப்புமுச்

     சகம்புகழ்ந் திடவருந் தக்க நீதியோய்.

 

      பொருள்: இம்மை மறுமையென்று சொல்லும் இரண்டிற்கும் சத்தியமாகப் பலயுகங்களும் தோற்றமாகும் முன்னர்த் தோற்றமாகிய நபிமார்களுக்கெல்லாம் பின்னர் இவ்வுலகத்தின் கண் அவதரித்து மனமானது பழகா நிற்கும் வேதங்களில் தங்கிச் சொல்லா நிற்கும் வானம், பூமி, பாதாளமாகிய மூன்று லோகங்களும் துதித்திடும் வண்ணம் வந்த தகுதியான நீதியை யுடையவர்களே!

 

27  .    அண்டர்கள் பரவுநும் மடியை நாடொறுந்

     தெண்டனிட் டிருவிழி சிரசின் மீதுறக்

     கொண்டசிற் றடிமையே னுய்யக் கொண்டுவாய்

     விண்டெனை விளித்தவை விளம்பு கென்னவே.

 

      பொருள்: தேவர்களான  வணங்கி  நிற்கும் தங்களின் பாதங்களைப் பிரதி தினமும் வணங்கி இரண்டு கண்களிலும் தலையின் மீதும் வணங்கியது. பின் சிறிய அடிமையனான யான் ஈடேறும்படி கொண்டு தங்களின் வாயைத்திறந்து என்னைக் கூப்பிட்ட சமாச்சாரங்களைச் சொல்லுங்களென்று கேட்டது .

 

28 .   தேறிய மொழியிவை செவியிற் சார்தலு

     மாறிலா தியாரைநீ வணங்கு கின்றனை

     வேறற வுரையென விளங்கு நந்நபி

     கூறலு முசலிகை மறுத்துங் கூறுமால்.

 

      பொருள்:  தெளிவையுற்ற இந்த வார்த்தைகள் காதுகளிற் பொருந்தின மாத்திரத்தில்   நபிமுகம்மது  நீ மாறாது யாரை வணங்குகின்றாய்? அதை வேற்றுமையில்லாத படி  சொல்லென்று கேட்டளவில் அவ்வுடும்பானது அதற்கக் கூறியதாவது .

 

     29 .  மருமலி வள்ளலியான் வணங்கு நாயக

      னொருவனன் னோனெழி லுயர்சிங் காசனம்

      பொருவரும் வானில்ரா சாங்கம் பூமியிற்

      றெரிதருங் கிருபையோ செம்பொ னாட்டினில்.

 

      பொருள்:  கஸ்தூரி வாசனையுடையை  வள்ளலானவர்களே! நான் வணங்குகின்ற நாயகனானவன் ஏகன். அவனுடைய அழகிய மேலான சிங்காசனமானது ஒப்பற்ற வானலோகத்தில், இராஜாங்கம் பூமியில்,  அவருடைய  கருணை சிவந்த பொன்னாலான சொர்க்க லோகத்தில்.

 

  30   .  தீதிக லற்றவன் சினந்து செய்யுமவ்

     வேதனை நரகமென் றெரியும் வீட்டினிற்

     பேதமி லன்னதோர் பெரிய வன்றனை

     யோதியான் வணங்குவ துண்மை யென்றதே.

 

      பொருள்:  தீமையும் பகைமையும் மற்று அவன் கோபித்துச் செய்கின்ற அந்த வேதனையானது நரகலோகமென்று சொல்லி நிற்கும் வீட்டில் மாறுபாடற்ற அவ்வித ஒப்பில்லாத பெரியவனான  ஆலாவைத் துதித்து நான் வணங்குவது சத்தியமென்று சொல்லிற்று.

 

31 .   அறத்தொடு முரைத்தனை யென்னை யாரெனக்

     குறித்தனை யெனநபி கூறக் கேட்டலுஞ் 

     சிறுத்தமுள் ளெயிற்றவெண் ணிறத்த செம்முனை

     யிறுத்தநூ லிரட்டைநா வெடுத்தி யம்புமால்.

 

      பொருள்:  அப்போது  நபிமுகம்மது  அவ்வுடும்பை நீ தருமத்தோடும் சொன்னாய். ஆனால் என்னை யாரென்று மதித்தாயென்று சொல்லும்படி கேட்ட மாத்திரத்தில் சிறுத்த முள் போன்ற பற்களையுடைய வெள்ளிய நிறமும் சிவந்த நுனியும் தங்கிய பஞ்சின் நூலையொத்த தனது இரட்டை நாவுகளைத் தூக்கிச் சொல்லும்.

 

     32 .  பரவைவிண் ணிலமலை பருதி மற்றவு

     முரியநும் மொளிவினி லுள்ள வுண்மையிற்

     றெரிதர முதலவன் செவ்வித் தூதரா

     யிருநில நபிகளி னிலங்கு மேன்மையா.

 

      பொருள்: சமுத்திரமும் ஆகாயமும் பூலோகமும் மலைகளும் சூரியனும் மற்றவைகளும் உரித்தான தங்களின் ஒளியிலுள்ளன. அன்றியும், சத்தியமாய் விளங்கும் வண்ணம் யாவற்றிற்கும் முதன்மையனான ஆலாவின் அழகிய பெரிய இந்தப் பூமிலோகத்தினது நபிமார்களில் பிரகாசியா நிற்கும் மேன்மையாக.

 

       33.   ஈறினில் வருநபி யிவணும் வாக்கினிற்

      கூறிய மார்க்கமே மார்க்கங் கோதறத்

      தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீதென

     வேறுரைத் தவரவர் நரகின் வீழ்வரால்.

 

      பொருள்: கடைசியில் வந்த நபியானவர்கள் இப்பூமியின்கண் தங்களுடைய வாக்கினாற் சொல்லிய மார்க்கமே மார்க்கம். அதைக் குற்றமறும் வண்ணம் தெரிந்தவர்கள் சுவர்க்கலோகத்தைச் சேருவார்கள். குற்றமென்று வேறுபாடாய்க் கூறினவர்கள்  அவர்கள் நரகலோகத்தின்கண் விழுவார்கள்.

 

34  .    இனிதினும் பெயர்க்கலி மாவை யென்னொடும்

     வனமுறை யஃறிணை வாழ்த்து கின்றது

     நனிபுக ழுண்மைநன் னபியு நீரலாற்

     பினையிவ ணிலையென வுடும்பு பேசிற்றே.

 

     பொருள்: இன்பமாய்த் தங்களின் திருநாமத்தையுடைய கலிமாவை என்னுடன் காட்டின்கண் தங்கிய அஃறிணைச் சாதிகள் துதிக்கின்றன. மிகுத்த கீர்த்தியையுடைய மெய்யான நன்மை பொருந்திய நபியும் நீங்களே யல்லாமல் இவ்வுலகத்தின்கண் வேறே நபிமார்கள் இல்லை  என்று அந்த உடும்பானது சொல்லிற்று.

 

35 .   உடும்பிவை யுரைத்தலு முவந்து தன்மனத்

     திடும்பினைத் தவிர்த்துநின் றறபி யென்பவன்

     குடும்பமு மெளியனுங் குபிரி னாற்றினம்

     படும்பவந் தவிர்கெனப் பாதம் பற்றினான்.

 

பொருள்:  அந்த உடும்பானது இந்த சமாச்சாரங்களைச் சொன்ன மாத்திரத்தில் அவ்வறபியாகிய வேடனென்று சொல்லப்பட்டவன் மனசின்கண் விருப்பமடைந்து தனது துன்பங்களை ஒழித்து நின்று எளிமையையுடையவனான யானும் எனது குடும்பமும் குபிர் மார்க்கத்தினால் பிரதி தினமும் படும் பாவத்தை ஒழியுங்களென்று சொல்லி நபிமுகம்மதுவின் பாதங்களைப் பிடித்தான்.

 

36 .      வண்ணவொண் புயநபி பாதம் வைத்தகை

     கண்ணினிற் பதித்தகங் கனிய முத்தமிட்

     டெண்ணில வுவகையுற் றெவரும் போற்றிட

     வுண்ணெகிழ்ந் தருங்கலி மாவை யோதினான்.

 

      பொருள்:  அழகிய பிரகாசத்தைக் கொண்ட தோள்களையுடைய நபிமுகம்மதுவின் பாதங்களில் அவ்வாறு வைத்த கைகளைக் கண்களில் பதியும்படி செய்து மனமானது கனியும் வண்ணம் முத்தமிட்டான். கணக்கில்லாத மகிழ்ச்சியடைந்து எல்லோரும்  துதிக்கும்படி இருதயம் நெகிழப் பெற்று அருமையான கலிமாவைத் தமது வாயினால் ஓதினார்.

 

37.       புதியவ னபிகலி மாவின் பொற்புற

     வொதுவுடன் வருமுறை யொழுகி மாமறை

     விதிமுறைத் தொழுகையு மேவி மேதையின்

     முதியவ னிவனென முசுலி மாயினான்.

 

      பொருள்: அவ்விதம் நபியவர்கள்  ஓதிய கலிமாவை புதியவனான வேடனும் கலிமாவினது  முறைமைகளில் நடந்து மகத்தான விதியினது ஒழுங்குகளையுடைய தொழுகையையும் விரும்பி இவர் அறிவினது முதியவரென்று சொல்லும் வண்ணம் முசிலிமாயினார்.

 

   38  . உனைப்பிடித் தடர்ந்தன னுனது செய்கையா

     லெனைப்பிடித் தடர்பவ மின்று போக்கினேன்

     மனைத்தட வளைசெலென் றுடும்பை வாழ்த்தினான்

     பனைத்தடக் கரக்களி றனைய பண்பினான்.

 

 

      பொருள்:  அன்றியும், பனைமரத்தை யொத்த பெரிய துதிக்கையைக் கொண்ட யானையைப் போன்ற தகுதியையுடையவரான அவர் அந்த உடும்பை யான் உன்னை நெருங்கிப் பிடித்தேன். உனது செய்கையினால் என்னைப் பிடித்து நெருங்கியபாவங்களை இன்றையதினம் போக்கடித்தேன். ஆதலால் உனது வீடாகிய பெரிய வளையின்கண் போவாயாக வென்று சொல்லி ஆசீர்வதித்தார்.

 

39 .     உறைதருங் குழுவின ருவப்ப நோக்கித்தன்

     னறபிதன் முகமல ரதனை நோக்கிமெய்

     மறைநபி பங்கய வதன நோக்கிப்பின்

     னிறைதரு மகிழ்ச்சிபெற் றுடும்பு நின்றதே

 

      பொருள்: அப்போது அந்த உடும்பானது அங்கு தங்கிய கூட்டத்தார்கள்  மகிழும் வண்ணம் அவர்களைப் பார்த்து தனது அறபியினது முகமாகிய தாமரைப் புஷ்பத்தைப் பார்த்து சத்திய வேதத்தையுடைய நாயகம் நபிமுகம்மதுவின் முண்டக மலர்போன்ற முகத்தைப் பார்த்துப் பின்னர் பூரணப்பட்ட சந்தோஷத்தைப் பெற்று நின்றது.

 

       40  . மருப்புய நபிதிரு மதுர வாய்திறந்

     திருப்பிடத் தேகென வுடும்புக் கின்புற

     வுரைப்பது கேட்டுளங் கனிந்து கானிடை

     விருப்பொடும் போயது விலங்கின் சாதியே.

 

      பொருள்:  அவ்விதம் நிற்கவே, வாசனையைக் கொண்ட தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது தங்களின் தெய்வீகமுற்ற இனிமையையுடைய வாயைத் திறந்து அந்த உடும்பை நீ உனது இருப்பிடத்திற்குச் செல்லென்று மகிழ்ச்சி பொருந்தும் வண்ணம் சொன்னதை விலங்கின் இனமாகிய அந்த வுடும்பானது தனது காதுகளினாற் கேள்வியுற்று மனமானது கனியப் பெற்று விருப்பத்தோடும் காட்டின்கண் சென்றது.

 

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்