சிறப்புத்தமிழ் - வான் சிறப்பு - மழையின் பெருமை - திருக்குறள்

 

           வான் சிறப்பு - மழையின் பெருமை

                       திருக்குறள்

சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் 

பதினெட்டு நூல்களின் திரட்டில் இடம் பெற்று இருக்கிறது . இந்நூல் குறள் 

வெண்பா என்னும் பாவகையினால் அமைந்தது .  1,330 ஈரடிச் 

செய்யுள்களைக் கொண்டது.  வாழவதற்க்குத்   தேவையான அடிப்படைப் 

பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த 

படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  இதனை இயற்றியவர் 

திருவள்ளுவர்

திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து"

"முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் 

அழைக்கப்படுகிறது.

குறள்:1

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

குறள் விளக்கம்:

மழை பருவம் தவறாது பெய்ய உலகத்துயிர்கள் வாழ்ந்து வருவதால் 

அம்மழை அமிழ்தம் என்று எண்ணத்தக்கதாகும்.

குறள்: 2

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

குறள் விளக்கம்:

உண்பவர்க்குத்தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு

பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

குறள்:3

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

குறள் விளக்கம்:

மழை பெய்யாமல் போகுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக 

இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

குறள்:4

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

குறள் விளக்கம்:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால்,  உணவுப் 

பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

குறள்:5

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

குறள் விளக்கம்:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழை இல்லாமல்

 வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் பெய்து காக்க வல்லதும்

 மழையே ஆகும்.

குறள்:6

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

குறள் விளக்கம்:

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் 

ஓரறிவுஉயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

குறள்:7

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

குறள் விளக்கம்:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் 

விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

குறள்:8

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

குறள் விளக்கம்:

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக 

நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

குறள்:9

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

குறள் விளக்கம்:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு 

செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லாது ஒழியும்.

குறள்:10

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

குறள் விளக்கம்:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது 

என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்