சிறப்புத்தமிழ் -திங்களைப் போற்றுதும்!-சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடல்

 

       சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடல்

சிலப்பதிகாரம்=சிலம்பு+அதிகாரம் என்ற இரு சொற்களால் 

ஆனது.சிலம்பு காரணமாகத்  தோன்றிய கதை ஆதலால் 

சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் 

காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் 

செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை

நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். ஏனைய நூல்கள் 

அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் 

கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் 

பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் 

காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து 

எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் 

என்பவராவார். புகார்க் காண்டம்,மதுரைக் காண்டம் வஞ்சிக் காண்டம் என்ற 

மூன்று காண்டங்களை உடையது .

 -

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-

கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்

அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-

காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு

மேரு வலம் திரிதலான்.

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,

மேல நின்று தான் சுரத்தலான்.

பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

ஆங்கு,

பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,

பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,

நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை

ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்

முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.

 

பொருள்  விளக்கம்

Ø  திங்களைப் போற்றுவோம் .  திங்களைப் போற்றுவோம் . அத்தி  மாலையை அணிந்துள்ள சோழனின் வெண்கொற்றக் குடையைப்  போன்று இவ்வுலகத்தைக்  காப்பதால் திங்களைப்  போற்றுவோம் .

Ø  கதிரவனைப்  போற்றுவோம். கதிரவனைப்  போற்றுவோம். காவிரி நாட்டை ஆளுகின்ற சோழ மன்னனின் ஆணைச் சக்கரம் போன்று மேரு மலையை வலம் வருவதால் கதிரவனைப்  போற்றுவோம் .

Ø  மழையைப்  போற்றுவோம் . மழையைப் போற்றுவோம்.  கடல் சூழ்ந்த இந்த உலகத்தைச்  சோழ மன்னன் அருள்செய்து காப்பதுபோல் காப்பதால் மழையைப்  போற்றுவோம்.

Ø  பூம்புகாரைப்  போற்றுவோம்.  பூம்புகாரைப்  போற்றுவோம் . சோழ மன்னனின் குலம் போன்று பரந்து விரிந்து இருப்பதால் பூம்புகார் நகரை போற்றுவோம்.  

Ø  புகார் நகரத்து மக்கள் அகத்திய முனிவர் வாழும் பொதிகை மலையாக இருந்தாலும் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயம் மலையாக  இருந்தாலும் அங்கு சென்று வாழ வேண்டும் என்ற விருப்பம் கொள்ளாதவர்கள் .

Ø  பூம்புகார் நகரின் பழைமைச் சிறப்பில் மகிழ்ந்தவர்களாக வாழும் இயல்புடையவர்கள் .

Ø  மிகுதியான கேள்வி செல்வம் உடையவர்கள்.  

Ø  நடுநிலையோடு செயல்படுபவர்கள் .

Ø  சான்றாண்மை உடையவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்