நற்றிணை -உள் ஊர் மா அத்த- நக்கண்ணையார்

         நற்றிணை -உள் ஊர் மா அத்த- நக்கண்ணையார்

 

கூற்று:  தலைவி

திணை : நெய்தல்

துறை :வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு

தோழிக்கு உரைத்தது.

பாடியவர் : நக்கண்ணையார்

  

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,

வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,

அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் 5

பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,

பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.   

பொருள் :

தோழீ! ; ஊரில்  உள்ள மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற 

எயிற்றினையுடைய வெளவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று பற்றித் 

தூங்குகிறது. அப்பொழுது வெல்லும் போரையுடைய சோழர் குடியிற் 

பிறந்த ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய காட்டின்கண் 

உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு 

காண்கிறது . அது போல நம் தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய 

அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்து அவற்றின் 

மகரந்தம் கடலின் துறையிடத்து மேய்கின்ற சிப்பியின் ஈரிய புறத்து 

விழும். சிறு குடியிலுள்ள பரதவர் மகிழும் மகிழ்ச்சியையும் பெரிய 

குளிர்ந்த கழிக்கரையிலுள்ள சோலையையும் நான் நினைந்த அப் 

பகற்பொழுதில்  கண்டு இன்புற்றேன் ; அவ்வின்பமெல்லாம் நான் 

விழித்தவுடன் ஒழிந்து போயிற்று என்கிறாள் !

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்