நாலடியார் - ஈகை

              நாலடியார் - ஈகை

 

1.       இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு

அடையாவாம் ஆண்டைக் கதவு.  

 

 பொருள் :

ஒருவரிடம் பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் 

உள்ளதுபோல் மகிழ்ந்து மற்றவர்க்கு இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள

மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் அடைக்காமல் எப்போதும் திறந்தே

 இருக்கும்.

 

 

2.       முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள

பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே

பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்

கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

பொருள் :

எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் 

உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் 

நம்மை  வருதுகின்றன . ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் 

அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலைய வேண்டாம் . பொருளை 

இறுகப் பிடித்துக்கொண்டும் இருக்க வேண்டாம். ஒளித்து வைக்காது 

பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்.

 

3.       நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினையுலந்தக் கால்.   

பொருள் :

செல்வம் சேரும் காலத்தில் மென்மேலும் சேரும். நல்வினை 

முடிந்துவிட்டால் அச்செல்வத்தை இறுகப் பிடித்தாலும் அது நீங்கிப் 

போகும். இவ்வுண்மைகளை அறியாதவர் பிறருக்குப் பொருள் கொடுத்து 

உதவமாட்டார்கள். சேர்த்த செல்வத்தைப் பிறருக்கு மகிழ்வோடு கொடுத்து  

உதவவேண்டும்.பிறருக்குக் கொடுத்துத் தானும் அனுபவித்தாலும் பொருள் 

சேரும் காலத்தில் சேரும்.

(நம்மிடத்தில் பொருளைச் சேர்த்த நல்வினை தொலைந்தபோது, அப் பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கிவிடும். இந்த உண்மையை அறியாதவர் வறுமையால் வாடி வருந்தித் தம் உதவி நாடி வந்தவா¢ன் துயரைப் போக்க மாட்டார்கள் அறிந்தவர்கள் பிறர் துன்பம் களைவர் என்பது திண்ணம்) .

 

 

4.       இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்

கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து

அடாஅ அடுப்பி னவர்.  

பொருள் :

ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற 

அளவு பிறருக்குக் கொடுத்துப் பின்னர்  உண்ணுங்கள்! ஏனெனில்  

ஆழமான  கடல் சூழ்ந்த இவ்வுலகில் தனக்கான உணவினை சமைக்க 

இயலாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு 

ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் கூறுவர் .

 

 

5. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு

உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்

ஈதல் இசையா தெனினும் இரவாமை

ஈதல் இரட்டி யுறும்.   

 பொருள் :

மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற

வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக

அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறரிடம்  சென்று யாசிக்காமல்

இருத்தல், கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்