சுற்றந்தாழல் - சுற்றம் தழால் -திருக்குறள்
சுற்றந்தழால்
1. பற்றற்ற கண்ணும் பழைமைபா
ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
பொருள்: ஒருவன்
வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப்
பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
2. விருப்பறாச் சுற்றம் இயையின்
அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்
பொருள்: அன்பு
நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக்
கொடுக்கும்.
3. அளவளா வில்லாதான் வாழ்க்கை
குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
பொருள்: சுற்றத்தாரோடு
மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்
செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
பொருள்: சுற்றத்தாரால்
சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப்
பெற்றதனால் பெற்ற பயனாகும்.
5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்
அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
பொருள்:
கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால்
சூழப்படுவான்.
6. பெருங்கொடையான் பேணான் வெகுளி
அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்
பொருள்: பெரிய
கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை
உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
7. காக்கை கரவா கரைந்துண்ணும்
ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
பொருள்: காக்கை
தனக்குக் கிடைத்ததை மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு
உடையவர்க்கே உண்டு.
8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா
நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
பொருள்: அரசன்
எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர்
சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர்
ஆவர்.
9. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம்
அமராமைக்
காரணம் இன்றி வரும்
பொருள்: முன்
சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த
காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
10. உழைப்பிரிந்து காரணத்தின்
வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
பொருள்: தன்னிடமிருந்து
பிரிந்து சென்று பின்னர் ஒரு காரணம் பற்றித்
திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து
ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக