கம்பராமாயணம் – குகப் படலம் - கங்கை காண் படலம்

 

     

       கம்பராமாயணம் – குகப் படலம் கம்பராமாயணம்

 குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் புலவரால் 

இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் 

இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு 

இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி 

நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய 

இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி 

நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் 

புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார் . கம்பர் 

இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று 

அழைக்கப்படுகிறது.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம்

கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு 

காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது 

பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். 

ஏழாம் காண்டமாகிய  உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் சம 

காலத்தவராகிய ஒட்டக்கூத்தர் இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் 

காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில்  உச்சநிலையினை அடைந்தது. 

 இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு 

நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்று 

கூறுவர் .

கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் 

கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பராமாயணம் 

பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. 

அணிபொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் 

பொருட்சுவையும் கொண்டு தமிழ் பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.

 

பாடல் 1

ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு

நாயகன் போர்க் குகன் எனும் நாமத்தான்

தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்

காயும் வில்லினன் கல் திரள் தோளினான்.

 

உரை

அந் நேரத்தில்; ஆயிரம் நாவாய்களுக்குத் தலைவனும், 

தூய்மையான கங்கைத் கரையில் நெடுங்காலமாகப் படகு

விடும் தன்மை  உடையவனும் ,பகைவரைச் சீறி

அழிக்கும் வில்லுடையவனும் , மலை போல்

திரண்ட தோளை உடையவனும் ஆகிய போர்த் தொழிலில் வல்ல

குகன் என்ற பெயரை உடையவன் வந்தான் .

 

             

பாடல் 2

துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்

அடியன் அல் செறிந்த அன்ன நிறத்தினான்

நெடிய தானை நெருக்கினன் நீர் முகில்

இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான்.

 உரை

துடி என்னும் பறையையும் வேட்டைநாய்களையும் உடையவன்.    

தோலாற் செய்த மிதியடி இறுக்கிய பெரிய பாதங்களை 

உடையவன்;  இருள் நெருங்கித் திரண்டதை  ஒத்த கருநிறம் 

உடையவன்.    தன்னுடைய மிகப்பெரிய சேனை நெருங்கி் வருதலின்;  

 பெய்யும் மேகம் இடியோடு கூடி மேற் கிளம்பினாற் போன்ற 

 தன்மைகொண்டவன் .

  (மேகம் குகனுக்கும், இடி ஆர்ப்பரிப்பு அவன் சேனைக்கும்
உவமையாம். வேட்டுவராதலின் துடிநாய் முதலியன கூறப்பெற்றன.)


பாடல் 3

கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை

பம்பை பம்பு படையினன் பல்லவத்து

அம்பன் அம்பிக்கு நாதன் அழிகவுள்

தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றினான்.

 

உரை

 ஊது கொம்பு, துத்தரி என்னும் பறை,  சங்கு,ஒலிக்கின்ற பெருமுரசு, 

இருதலைப் பறை முதலிய வாத்தியங்கள் நிரம்பிய சேனையை

உடையவன். தளிர் போலச் சிவந்த நிறம் படைத்த அம்பினை உடையவன். 

நாவாய்களுக்குத் தலைவன்;மதநீர் பெருகுகின்ற யானைத் தொகுதியை

ஒத்த உறவினர்களால் சுற்றப்பட்டவன்.       

                    

பாடல் 4 

காழம் இட்ட குறங்கினன் கங்கையின்

ஆழம் இட்ட நெடுமையினான் அரை

தாழ விட்ட செம் தோலன் தயங்குறச்

சூழ விட்ட தொடு புலி வாலினான்.

 

உரை

காழம் என்னும் ஒருவகை  உடையை இறுக அணிந்த துடையை

உடையவன். கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமை

படைத்தவன் .  இடுப்பிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட சிவந்த

வார்ப்பட்டை  உடையவன் இடுப்பைச் சுற்றிக் விளங்கும்படி

ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டப் பெற்ற  புலி  வாலை உடையவன்.

 

 (காழம் எனப்து இடுப்பிலிருந்து தொடைவரை அணியும் சிறிய

காற்சட்டை.  காழகம் எனவும்வரும. அரையிலிருந்து  தொங்கவிடப்பெற்ற

செந்திறத் தோலாகிய வார்ப் பட்டை அம்பு முதலியனதீட்டுதற்காகும் .

புலிவால்களை ஒன்றோடொன்று பிணைத்து இடுப்பைச் சுற்றிக்

கட்டியுள்ளான்).                       

                           

பாடல் 5 

பல் தொடுத்த அன்ன பல்கு கவடியன்

கல் தொடுத்தன்ன போலும் கழலினன்

அல் தொடுத்தன்ன குஞ்சியன் ஆளியின்

நெற்றொடு ஒத்து நெரி புருவத்தினான்.

 

உரை

      பற்களைத் தொடுத்தாற் போன்ற உட்குடைவான பல பலகறைகளை 

அணிந்தவன்;  கற்களை ஒன்று  சேர வைத்தாற் போன்ற திண்ணிய 

வீரக்கழலை உடையவன்;  இருளைப் பின்னினாற் போன்ற கரிய தலை 

மயிரை உடையவன்; ஆளிச் செடியின் வற்றி உலர்ந்த காயைப் போன்று 

நெறிப் புடைய புருவத்தை உடையவன்.

பாடல் 6

பெண்ணை வன் செறும்பில் பிறங்கிச் செறி

வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன்கையான்

கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்

எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.

உரை  

பனைமரத்தினது வலிய சிறாம்பு போலவிளங்கி நெருங்கியுள்ள

கருநிறம் படைத்த வலிய மயிர்கள்  வார்ந்து நீண்டு ஒழுகப்பெற்றுள்ள

முன்கையை உடையவன்  இடமகன்ற விசாலமான மார்பு என்கின்ற

கல்லினை உடையவன்;   எண்ணெய் பூசப் பெற்ற இருளை ஒத்த கரிய

பளபளப்பான உடம்பை உடையவன்.

பாடல் 7 

கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்

நச்சு அராவின் நடுக்கு உறும் நோக்கினன்

பிச்சர் ஆம் அன்ன பேச்சினன் இந்திரன்

வச்சிராயுதம் போலும் மருங்கினான்.

 

உரை

   அரைக்கச்சிலே கட்டிய இரத்தக் கறை படிந்துள்ள ஒளிபடைத்த

வாளை உடையவன். விடம்பொருந்திய பாம்பைப் போல 

பிறர் நடுக்கம் அடைகின்ற கொடிய கண் பார்வை

உடையவன்.  பித்தர்களைப் போலஒன்றுக் கொன்ற தொடர்பில்லாமல்

பேசக்கூடிய பேச்சினை உடையவன். தேவேந்தி ரனது  வச்சிராயுதம்

போல மிகவும் உறுதியான இடுப்பை உடையவன்,         

பாடல் 8 

ஊற்று மொய் நறவு ஊனொடு மீன் நுகர்

நாற்றம் மேய நகை இல் முகத்தினான்

சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்

கூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான்.

 

உரை

                 வலிமை மிகும்படி  விலங்குகளின் இறைச்சியோடு மீனையும்

தின்று  புலால் நாற்றம் பொருந்தியவன் . சிரிப்பு என்பது சிறிதும்

இல்லாத (கடு கடுப்பான) முகத்தினைஉடையவன். கோபம் இல்லாத

போதும் கனல் கக்குமாறு பார்ப்பவன்.  இயமனும்

பயப்படும்படி அதிர்ந்து  ஒலிக்கின்ற குரலை உடையவன்.

             

குகன் இராமனைக் காண வருதல்

பாடல் 9 

சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்

மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்

ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்

இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்.

 

உரை

               

  சிருங்கி பேரம் எனப் பெயர் பெற்று  அலை வீசும் கங்கை யாற்றின்;

பக்கத்தில் தோன்றுகின்ற நகரிலே தங்கி வாழ்கின்ற

வாழ்க்கையை உடையவன் . அவன்  (முனிவர் தவச்சாலையில்) 

தங்கியிருந்த இராமபிரானைக்  காண்பதற்கு  ஒரு சேரத் தேனும் மீனும் 

என்ற கையுறைப் பொருளை ஏந்தியவனாய்  வந்து சேர்ந்தான்.              

பாடல்  10

சுற்றம் அப்புறம் நிற்கச் சுடு கணை

வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து

அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன்.

நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான்.

 

உரை

     உடன் வந்த வேட்டுவச் சுற்றம் வேறொரு பக்கத்தில் ஒதுங்கிநிற்க ,

பகைவரை அழிக்கும் அம்பையும் வில்லையும் விலக்கி வைத்தான். 

இடைக்கச்சில் கட்டப்பெற்ற வாளையும் நீக்கி விட்டு  பொய்யற்ற தூய

மனம்  உடையவனாகவும் இராமன்பால் கொண்ட சிறந்த பக்தி

உடையவனாகவும் நல்ல தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

             

குகன் இலக்குவனிடம் தன்னை அறிவித்தல்

பாடல் 11

கூவா முன்னம் இளையோன் குறுகி ‘நீ

ஆவான் யார்? ‘என அன்பின் இறைஞ்சினான்

தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்

நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் ‘என்றான்.

உரை

குகன் அழைப்பதற்கு முன்னமே  இலக்குவன் அவனைச் சென்றடைந்து

நீ யார்? என்று வினவினான். அன்போடு குகன் அந்த இலக்குவனை

வணங்கினான்;  (முன் அறியாதவன் ஆதலின் அவனையே இராமனாகக்

கருதி) ‘அரசனாகிய தெய்வமே! நாய் போலக் கீழான அடிமையாகிய;

கங்கையைக் கடக்க ஓடங்களை உடைய வேட்டுவச் சாதியினனாகிய

குகனாவேன்.  உனது திருவடிகளை வணங்கும் பொருட்டு வந்தேன்

என்றான்.    

இலக்குவன் இராமனிடம் குகன் வரவு கூறுதல்

பாடல் 12

நிற்றி ஈண்டு ‘என்று புக்கு,  நெடியவன் தொழுது, தம்பி,

கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்; நிமிர்ந்த கூட்டச்

சுற்றமும் தானும், உள்ளம் தூயவன், தாயின் நல்லன்,

எற்றும் நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், ஒருவன் ‘என்றான்.

 உரை

 இராமனது  தம்பியாகிய இலக்குவன்  குகனைப் பார்த்து இங்கேயே நில்

என்று சொல்லி  (இராமன் இருந்ததவச்சாலையில் உள்ளே) புகுந்தான்  

பெருமையிற் சிறந்துயர்ந்த இராமனை வணங்கி  அரசனே!;

மனத்தால் பரிசுத்தமானவன். தாயைக் காட்டிலும் மிக்க அன்பையுடைய

நல்லவன்.  மோதுகின்ற நீரை உடைய கங்கையாற்றில் செல்லும்

மரக்கலங்களுக்குத் தலைவன்குகன் என்ற பெயரை உடைய ஒருவன்.

பெருந்திரளாக உள்ள உறவினரும் தானுமாக   உன்னைக் காணும்

பொருட்டு வந்துள்ளான் என்றான் .

குகன் இராமனைக் கண்டு மனமுருகுதல்

பாடல் 13

அண்ணலும் விரும்பி, ‘என்பால் அழைத்தி நீ அவனை ‘என்னப்

பண்ணவன் ‘வருக ‘என்றான்; பரிவினன் விரைவில் புக்கான்;

கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி

மண் உறப் பணிந்து, மேனி வளைந்து, வாய் புதைத்து நின்றான்.

 

உரை

இராமனும்  குகனை மனத்தால் விரும்பி இலக்குவா? நீ அக்குகனை

என்னிடம் அழைத்து வருக என்று சொன்னான் . பண்பிற் சிறந்த

இலக்குவன்வருக’ (குகனே) வருக என்று அழைக்க   அக்குகனும் மனத்தில்

அன்பு மிக்கவனாய், விரைவில் வேகமாக உள்ளே புகுந்து, கண்ணழகுடைய

இராமனை தன் கண்களால் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான் .  இருள்

நிறமான  தலைமுடி  பூமியில் விழுமாறுவிழுந்து வணங்கி உடம்பைக்

குறுக்கிக்  கொண்டு வாயினைக் கைகளால் மூடிக் கொண்டு   நின்றான்.

             

குகன் கையுறை யேற்குமாறு இராமனை வேண்டுதல்

பாடல் 14

இருத்தி நீ ‘என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த

அருத்தியன், ‘தேவனும் மீனும அமுதினுக்கு அமைந்த ஆகத்

திருத்தினென், கொணர்ந்தேன்; என் கொல் திரு உளம் ‘? என்ன, வீரன்,

விருத்த மாதவரை நோக்கி  முறுவலன், விளம்பலுற்றான்.

உரை

 இங்கே அமர்வாயாக என்று இராமன் கூறிய  அளவிலும்; தன்னடக்கத்தால் 

குகன் அமரவில்லை . அளவு கடந்த அன்புடையனாக தேவரீருக்கு 

உணவாகப் பொருந்தும்படி தேனையும்,  மீனையும் தூய்மை செய்து 

ஆராய்ந்து கொண்டு வந்துள்ளேன்;  தங்கள் மனக்கருத்து  யாதோ?’ எனக் 

கூறி நின்றான் . இராமன்  வயது முதிர்ந்த முனிவர்களைப் பார்த்து  புண் 

முறுவல் செய்தவனாய் சொல்லத் தொடங்கினான்.

குகன் கையுறையை இராமன் பாராட்டுதல்

 

 பாடல் 15

அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த, காதல்

தரெிதரக் கொணர்ந்த, என்றால் அமுதினும் சீர்த்த! அன்றே

பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம்; எம் அனோர்க்கும்

உரியன; இனிதின் நாமும் உண்டனெம்; அன்றே ‘என்றான்.

உரை

 அருமையான பொருள்கள் இவை . தாம் மகிழ்ச்சியடைதற்குத் தகுதி வாய்ந்த அன்பின் முதிர்ச்சியாகிய பக்தி 

அனைவர்க்கும் புலப்படுமாறு கொண்டு வரப்பட்டவை என்று ஆகுமானால்

தேவர் அழுதத்தைக் காட்டிலும் சிறப்புடையவை அல்லவா என்று 

கூறினான் இராமன் .    எப்பொருளும் அன்பினால் கொண்டு வரப்பட்டவை 

என்றால் அவை தூய பொருள்களே.  எம்போன்ற தவம் 

மேற்கொண்டவர்களுக்கும் ஏற்றுக் கொள்ளுவதற்கு உகந்தவையே.   

இனிமையாக நாமும் உண்டதற்குச் சமானம் ஆகும் அன்றோ என்றான்.

             

கங்கை கடக்க நாவாயொடு வழிநாள் வருமாறு  குகனிடம் இராமன் கூறுதல்

 

 பாடல் 16 

சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், ‘யாம்

இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப்

பொங்கும் நின் சுற்றத்தோடும் போய், உவந்து, இனிது உன் ஊரில்

தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல் ‘என்றான்.

 

உரை


ஆண்சிங்கத்தை ஒத்த இராமன்மேலும் ‘ நாங்கள் இத்தவச்சாலையில்

தங்கியிருந்து  நாளைக்கு அலை  வீசும் கங்கையாற்றைக் கடந்து  செல்ல

எண்ணியுள்ளோம் உன் உறவினர்களோடும் சென்று உன்னடைய 

நகரத்திலே மன மகிழ்ச்சியோடு இனிமையாகத் தங்கியிருந்து நாளை 

விடியலில்மரக்கலங்களோடும்  வருவாயாக என்றான். 

             

குகன் வேண்டுகோள்

பாடல் 17

கார் குலாம் நிறத்தான் கூறக்  காதலன் உணர்த்துவான், ‘இப்

பார் குலாம் செல்வ! நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை

ஈர்கிலாக் கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கித்

தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை ‘என்றான்.

 

உரை

மேகம் போல் உள்ள கரு நிறம் உடைய திருமேனியனாகிய இராமன் 

இவ்வாறு கூற;   அவனிடத்தில் பேரன்புகொண்ட குகன் கீழக்கண்டவாறு 

கூறினான் .  இந்தப் பூமி முழுவதும் ஆளும்செல்வத்துக் 

குரியவனே!’ உன்னை  இவ்வாறு  சடைமுடிக் கோலத்தோடு பார்த்த 

கண்களை இதுகாறும் பிடுங்கி எறியாமல் உன்பால் அன்புடையவன் போல 

நடிக்கின்ற திருடன் நான் .   இத்தகைய துன்பத்தில் இருந்தபடியைப் 

பார்த்து உன்னைப் பிரிய மாட்டாதவனாக இருக்கிறேன்.  என் நிலைமை

அவ்வாறாகியது ஐயனே உன் அருகேயேஇருந்து உனக்குரிய 

தொண்டுகளைச் செய்வேன்என்றான்.          

             

குகன் கருத்தறிந்த இராமன் கூறுதல்

 

பாடல் 18 

கோதை வில் குரிசில் அன்னான்  கூறிய கொள்கை கேட்டான்,

சீதையை நோக்கித் தம்பி திரு முகம் நோக்கித் ‘தீராக்

காதலன் ஆகும் ‘என்று கருணையின் மலர்ந்த கண்ணன்,

யாதினும் இனிய நண்ப!இருத்தி ஈண்டு எம்மொடு ‘என்றான்.

உரை   

வெற்றிமாலை அணிந்த வில்லையுடைய இராமன்   குகனது

பேச்சில் வெளிப்பட்ட அவன் மனக்கருத்தைக் கேள்வி மூலம் அறிந்தான்.

சீதையைப் பார்த்தும்  தம்பியாகிய இலக்குவனது  அழகிய முகத்தைப்

பார்த்து  இருவருக்கும் குகனது  தோழமையில் உடன்பாடு என்பதைக்

குறிப்பால் அறிந்து நம்பால் என்றும் நீங்காத பேரன்புடையவனாவான் 

என்று சொல்லினான் .  கருணையால்  மலர்ச்சியடைந்த  கண்களை 

உடையவனாய் எல்லாப் பொருள்களினும்  இனிமையான நண்பனே இங்கே 

எங்களோடு (இன்று) தங்கி இருப்பாயாக  என்றான்-.

             

திருநகர் தீர்ந்த செய்தியறிந்து குகன் வருந்தல்

பாடல் 20  

திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தரெித்தி! என்னப்

பருவரல் தம்பி கூறப் பரிந்தவன் பையுள் எய்தி,

இரு கண் நீர் அருவி சோரக் குகனும் ஆண்டு இருந்தான்; ‘என்னே!

பெரு நிலக் கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் ‘என்னா.

 

மனு குலத்தில் வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரை விட்டு 

இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். 

இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல அதைக் கேட்டு 

இரங்கியவனான குகன் மிக்க துன்பமுற்று, “பூமி தேவி தவம் செய்தவளாக 

இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லை போலும். 

இதென்ன வியப்பு” என்று கூறி இரண்டு கண்களும் அருவி போலக் 

கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.            

கதிரவன் மறைதல் 

பாடல் 21  

விரி இருள் பகையை ஓட்டித்  திசைகளை வென்று, மேல் நின்று,

ஒரு தனித் திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி, நாளும்

இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள் புரிந்து வீந்த

செரு வலி வீரன் என்னச் செம் கதிர்ச் செல்வன் சென்றான்.

 

உரை

 பரந்துள்ள இருள் கூட்டம் போன்ற பகையை ஓடச்செய்து, திக்குகளை 

யெல்லாம் தன்னுடையதாக வெற்றி கொண்டு,மேலான இடத்தில்

இருந்து, ஒப்பற்றஆணைச் சக்கரத்தைச் செலுத்தி; தன்னுடைய சிறந்த 

புகழைநிலைநாட்டி, நாள்தோறும் இவ்உலகில் உள்ள எல்லார்க்கும் 

மனத்தின்கண் இருந்து அருளைச் செய்து;  இறந்து போன;  போர்வலிமை 

உடைய வீரனாகிய தசரத சக்கரவர்த்தி போல சூரியன்  மறைந்தான்.               

             

பாடல் 22

மாலை வாய் நியமம் செய்து, மரபுளி இயற்றி, வைகல்

வேலை வாய் அமிர்து அன்னாளும் வீரனும் விரித்த நாணல்

மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர், வரி வில் ஏந்திக்

காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்.

உரை

நாளின் மாலைக் காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளைச்

வேண்டிய முறைப்படியே செய்து பாற்கடலிலிருந்து தோன்றிய 

அமுதத்தை ஒத்தவளும்  இராமபிரானும் பூமியில்   வரிசையாக விரிக்கப் 

பெற்ற நாணற் புல்லாகிய படுக்கையிலே உறங்கினர் . இலக்குவன்  

காலைப் பொழுது வரும் வரை கட்டமைந்த வில்லை ஏந்தி;  கண் 

இமையாது அவ்விருவரையும் காவல் செய்து நின்று கொண்டேயிருந்தான்.

             

குகன் இராமலக்குவர்களை நோக்கி வருந்திநிற்றல்

 

பாடல் 23   

தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,

வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்,

தம்பி நின்றானை நோக்கித் தலை மகன் தனிமை நோக்கி

அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றில் நின்றான்.

உரை

நாவாய்களுக்குத் தலைவனான குகன்  யானைக் கூட்டத்தைப்

போலச் சுற்றியிருக்கும் வேட்டுவக்கூட்டத்தை உடையனாய்  தொடுத்த

நாண் ஏற்றி அம்பு பொருத்திய தயார் நிலையில் உள்ள வில்லை

உடையனாக இராமன் வனம் புகுந்த நிலை கருதி புழுங்கி நொந்து நைந்த

மனத்தனாக இருந்தான் .  இரவு முழுதும் விழித்த கண்ணனாய்

நின்றுகொண்டே உறங்காது காவல் செய்யும் இலக்குவனைப்

பார்த்தும்  அரச குமாரனாகிய இராமன் தரையில் உறங்கும் தன்மையைப்

பார்த்தும்   கண்ணீராகிய அருவி விழும் மலைபோல நின்றான்.

             

கதிரவன் தோற்றம்

பாடல்24 

துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்

மறக்குமா நினையல்; அம்மா! வரம்பு இல தோற்றும் மாக்கள்

இறக்கும் ஆறு இது ‘என்பான்போல முன்னை நாள் இறந்தான், பின்னாள்

பிறக்கும் ஆறு இது ‘என்பான்போல் பிறந்தனன் பிறவா வெய்யோன்.


உரை

   என்றும் பிறவாது  ஒருபடித்தாகவே  உள்ள

சூரியன், எண்ணிலவாய் உலகில் தோன்றும் மக்கள் இறப்பது  இவ்வாறு 

என்று அவர்களுக்கு எடுத்துக் கூறுவானைப் போல முதல் நாள் மாலை 

அத்தமித்தான்.  மறுநாள்  பிறப்பது  இவ்வாறு என்று எடுத்துக் கூறுவான் 

போலத் தோன்றினான் (இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருதலை உணர்வார்).

உயர்ந்தசுவர்க்கம் முதலியனவும் நிலையிலாதவை என உணர்த்தலின் 

மறக்கமாட்டார்கள் 

             

கதிரவன் தோன்றும் காலை நிகழ்ச்சி

பாடல் 25 

செம் செவ்வே சேற்றில் தோன்றும்  தாமரை, தேரில் தோன்றும்

வெம் சுடர்ச் செல்வன் மேனி  நோக்கின விரிந்த; வேறு ஒர்

அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கிச் செய்ய

வஞ்சி வாழ் வதனம் என்னும்  தாமரை மலர்ந்தது அன்றே.

உரை

 செக்கச் செவேல் என்று சேற்றில் தோன்றிய செந்தாமரை மலர்

ஒற்றைச் சக்கரத் தேரில் உதயமான  வெம்மையான கதிர்களை உடைய 

சூரியனது வடிவத்தைப் பார்த்து மலர்ந்தன. சிவந்ததாகிய வஞ்சிக்

கொடிபோல்பவளாகிய சீதையினிடத்தில்  உள்ளமுகம் என்னும் தாமரை

செஞ்சூரியனில் மாறுபட்டு வேறொன்றான கருஞாயிற்றை ஒத்த

இராமனைப் பார்த்து மலர்ந்து விளங்கியது.            

             

இராமன் குகனை விரைவில் நாவாய் கொணர்க எனல்

 பாடல் 26 

நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத்

தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான்,

ஆள் முதற்கு அமைந்த கேண்மை  அன்பனை நோக்கி, ‘ஐய!

கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்; என்றான்.

உரை 

அச்சந்தரும் தோளிடத்திற்குப் பொருந்திய வில்லை உடைய இராமன்

வைகறைக் காலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் 

விரும்பிச் செய்தான் . வேதியர்கள் தன்னைத் தொடர்ந்து வரச் 

செல்கின்றவன் அடிமைத்தன்மைக்குப் பொருந்திய நட்புரிமை உடைய 

அன்புள்ளம் கொண்ட குகனைப் பார்த்து ஐயனே கொண்டு செல்லுதற்குரிய 

தரம் வாய்ந்த மரக்கலங்களை விரைவாகக் கொண்டு வருவாயாக என்றான்.

இராமனிடம் குகன் வேண்டுகோள்

 பாடல்27 

ஏவிய மொழி கேளா,  இழி புனல் பொழி கண்ணான்,

ஆவியும் உலைகின்றான், அடியிணை பிரிகல்லான்,

காவியின்மலர் காயா கடல் மழை அனையானைத்

தேவியொடு அடிதாழாச் சிந்தனை உரை செய்வான்.

 

உரை

   இராமன் நாவாய் கொணரும்படிகட்டளையிட்ட வார்த்தையைக்கேட்டு 

எங்கே இராமன் தன்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ என்னும் 

நினைப்பால் இறங்குகின்ற நீர் இடையறாது சொரிகின்ற கண்ணனை 

உடையவனானான் . உயிர் துடிக்கப் பெற்றவனானான் .  

இராமனதுதிருவடிகளை விட்டுப் பிரிய மாட்டாதவனாக  நீலோற்பல மலர்,  

பூவைப் பூ,  கடல், மேகம் இவற்றை ஒத்த கருநீல நிறம்படைத்த இராமனை 

சீதையோடு சேர்த்து அடியில் வீழ்ந்து வணங்கி தன் எண்ணத்தை கூறத் 

தொடங்கினான்.

பாடல் 28

பொய்ம் முறை இலரால் எம் புகலிடம் வனமேயால்;

கொய்ம் முறை உறு தாராய்! குறைவு இலெம்; வலியேமால்;

செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை

இம்முறை உறவு என்னா இனிது இரு, நெடிது எம் ஊர்.

 

உரை

  கத்திரிகையால் ஒழுங்குசெய்யப் பொருந்திய மாலையை அணிந்தவனே 

எம் மக்கள் வஞ்சகம்அறியாதவர்கள்.  எங்களுடைய இருப்பிடம் இக்காடே 

ஆகும்.  எவற்றாலும் குறையுடையவர்கள் இல்லை . பகைவரைஅழிக்கும் 

வலிமையும் உடையவர்கள் . செய்ய வேண்டிய முறைப்படி  உனக்கு 

வேண்டிய சிறு தொண்டுகளைச் செய்வோம்.  உன்தொண்டர்களாகிய 

எங்களை இந்த முறையான உறவினர்கள் என்று கருதி  எங்களுடைய  

ஊரிலே  நீண்ட  காலம்  இனிமையாக இருப்பாயாக என்று கூறினான் .             

பாடல் 29

தேன் உள, தினை உண்டால், தேவரும் நுகர்தற்கு ஆம்

ஊன் உள, துணை நாயோம் உயிர் உள, விளையாடக்

கான் உள, புனல் ஆடக்  கங்கையும் உளது, அன்றோ

நான் உள தனையும் நீ  இனிது இரு; நாட, எம்பால் ‘.

 

உரை

 தேவர்களும் தூயது  எனக் கருதிஉண்ணுதற்குப் பொருத்தமானதேனும்

தினையும் எம்மிடம் உண்டு. தேவர்களும் அவியிற் கொள்ளும் புலால் 

உண்டு  அடியேங்களுடைய உயிர் உங்களுக்குத் தொண்டு செய்ய 

உள்ளவையே;தேவியோடு விளையாடிப்பொழுது போக்க இனிய காடுகள் 

உள்ளன.  நீரிலே முழுகிவிளையாடக் கங்கையாறும்  இருக்கிறது.  நான் 

உடன் உள்ளவரையும்  நீ எம்மிடத்துக்கு  இனிது  இருப்பாயாக என்றான் .  

      

பாடல் 30

தோல் உள துகில் போலும்,சுவை உள தொடர் மஞ்சம்

போல் உள பரண், வைகும் புரை உள, கடிது ஓடும்

கால் உள, சிலை பூணும் கை உள, கலி வானின்

மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால்.

 

உரை

  நூல் ஆடை போல உள்ள மென்மையான தோல்கள் உள்ளன . 

சுவையுடைய இனிய பொருள்கள் பல உள்ளன. தூங்குதற்குக் கயிற்றால் 

பிணித்த தொட்டிற் கட்டில் போல் பரண்கள் உள்ளன. தங்குதற்குக் குடில்கள் 

உள்ளன. விரைந்து  சென்று எதையும் கொணர்ந்து  தரவல்ல

வலிய கால்கள் எமக்கு  உள்ளன. தடுப்பாரை அழிக்க வல்ல வில்லை 

ஏந்திய கைகள் எம்மிடம் உள்ளன.  செருக்கிய ஆகாயத்தின் மேலேஉள்ள 

பொருளாக இருந்தாலும் விரைந்து சென்று கொண்டு வருவோம் என்று 

கூறினான் .

பாடல் 31    

 ஐயிருபத்தோடு ஐந்தாயிரர் உளர் ஆணை

செய்குநர், சிலை வேடர்,  தேவரின் வலியாரால்,

உய்குதும் அடியோம், எம் குடில் இடை ஒருநாள் நீ

வைகுதி எனின், மேல் ஓர் வாழ்வு இலை பிறிது ‘என்றான்.

 

உரை

நான் இட்ட கட்டளையை நிறைவேற்றுபவராகிய தேவர்களைக் காட்டிலும் 

வலிமை படைத்தவர்களாகிய  வில் ஏந்திய வேடர்கள் ஐந்து  இலக்கம் 

பேர் இருக்கின்றார்கள் இராமா!  நீ எம் குடிசையிடத்து ஒருநாள் 

தங்குவாயானால் எங்களுக்கு அதைக்காட்டிலும்மேலான வேறொரு 

வாழ்க்கை இல்லை நாங்கள் ஈடேறிவிடுவோம் என்றான்.

               

குகனிடம் இராமன் கூறுதல்

பாடல் 32

அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான்,

வெள் நிற நகை செய்தான்,வீர! நின் உழை யாம் அப்

புண்ணிய நதி ஆடிப்  புனிதரை வழிபாடு உற்று

எண்ணிய சில நாளில் குறுகுதும்; இனிது ‘என்றான்.

 

உரை

இராமனும் அதனைக் கேட்டு மனம் நிறைந்தகருணை மிகுந்தவனாக

மகிழ்ச்சியை வெளிக்காட்டி வெண்மையான ஒளிபடைத்த முறுவல் 

செய்தானன் . பின் குகனே! நாங்கள்  அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி

அங்கங்கே உள்ள முனிவர்களை வழிபாடுசெய்து வனவாசத்துக்குக் குறித்த 

சில நாள்களில் உன்னிடத்துக்கு இனிமையாக வந்து சேர்வோம் என்றான்.

  

குகன் கொணர்ந்த ஓடத்தில் இராமன் முதலியோர் ஏறுதல்

பாடல் 33

சிந்தனை உணர்கிற்பான், சென்றனன், விரைவோடு

தந்தனன் நெடுநாவாய்;தாமரை நயனத்தான்

அந்தணர் தமை எல்லாம அருளுதிர் விடை ‘என்னா,

இந்துவின் நுதலாேளாடு  இளவலொடு இனிது ஏறா.

 

உரை

குகன் இராமனதுமனக்கருத்தை உணர்ந்தவனாய் விரைந்து சென்று

நெடுநாவாய் பெரியமரக்கலங்களைக் கொணர்ந்தான். தாமரை மலர்போலும் 

கண்களைஉடைய இராமன் முனிவர்கள் எல்லாரையும்

எனக்குப் புறப்பட விடை கொடுங்கள்’ என்று கேட்டுப் பெற்று;

பிறைமதி போலும் நெற்றியை உடைய சீதையோடும்;

இலக்குவனோடும்இனிமையாக அந்நாவாயில் ஏறினான் .

             

இராமன் குகன் நாவாயில் கங்கை கடத்தல்

பாடல் 34

 

 விடுநதி கடிது ‘என்றான்; மெய் உயிர் அனையானும்

முடுகினன் நெடு நாவாய்;  முரி திரை நெடுநீர்வாய்க்

கடிதினின் மட அன்னக் கதி அது செல, நின்றார்

இடர் உற, மறையோரும்  எரி உறும் மெழுகு ஆனார்.

 

உரை

   இராமனும் மிக வேகமாக நாவாய்களைச் செலுத்து என்றுகூற

உடம்பும்  உயிரும் ஒத்த          ந ட் பினை இராமன்பால் உடைய குகனும்

ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை நீரிடத்தே பெரிய ஓடத்தை 

விரைந்து செலுத்தினான் . அந்நாவாய் விரைவாக இளைய அன்னப்பறவை 

நீரிற்செல்லுமாறு போலச் செல்ல கரையின்கண்  நின்றவர்களாகிய 

வேதியரும் துன்பமடைந்து நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் 

உருகி இரங்கினார்கள்.

 

பாடல் 35

பால் உடை மொழியாளும்    பகலவன் அனையானும்

சேல் உடை நெடு நல் நீர்   சிந்தினர் விளையாடத்

தோல் உடை நிமிர் கோலில்  துழவிட, எழும் நாவாய்

கால் உடை நெடு ஞெண்டில் சென்றது கடிது; அம்மா!

உரை

பால்போலும் இன்சொல் உடையவளாகிய சீதையும் சூரியனை ஒத்த

இராமனும் கயல் மீன்களை உடைய நீண்ட புண்ணியக் கங்கை நீரைச் 

சிதறி எறிந்து விளையாடிக் கொண்டே சென்றனர் .  முன்னர்த் 

தோல்பட்டையை உடைய நீரைத் தள்ளி மேல் உயரும் துடுப்புகளால் 

நீரைத் தள்ளசெல்லுகின்ற தோணிகால்களை உடைய பெரிய நண்டைப் 

போல விரைந்து  சென்றது.         

ஓடம் கங்கையின் தென்கரை சேர்தல்

பாடல் 36

சாந்து அணி புளினத்தின்  தடம் முலை உயர் கங்கை

காந்து இன மணி மின்னக் கடி கமழ் கமலத்தில்

சேந்து ஒளி விரியும் தெள் திரை எனும் நிமிர் கையால்

ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால்.

 உரை

சந்தனம் அணிந்த புளினத்தின் மணல் மேடுகளாகிய பெரிய முலைகளை 

உடைய உயர்ந்த கங்கையானவள் எரிகின்ற கூட்டமான இரத்தினங்கள் 

விட்டு விளங்க மணம் வீசுகின்ற தாமரை மலரினால் சிவந்து  ஒளி 

பரவுகின்றதெளிந்த அலைகள் என்று கூறப்படும் நீண்ட கைகளால்தான் 

ஒருத்தியே அந்த ஓடத்தைச்சுமந்தவளாய் இனிமையாக அக்கரையில் 

கொண்டுசேர்த்தாள்.

 

இராமன் குகனிடம் சித்திரகூடத்துக்குச் செல்லும் நெறி வினவுதல்

பாடல்  37

அத்திசை உற்று, ஐயன்,அன்பனை முகம் நோக்கிச்

சித்திரகூடத்தில் செல் நெறி பகர் ‘என்னப்

பத்தியின் உயிர் ஈயும்  பரிவினன் அடி தாழா,

உத்தம! அடி நாயேன்  ஓதுவது உளது ‘என்றான்.

 

உரை

   இராமன் கங்கையின் அக்கரையை அடைந்து குகனைப் பார்த்து  

 சித்திர கூடத்திற்குச் செல்லும் வழியைக் கூறுக என்று ககேட்டான் . 

 குகனும்  இராம பக்தியால் தன்னுயிரையும் இராமனுக்கு ஈநதுவிடும் 

அன்புடையனாகி இராமன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எல்லோரிலும் 

மேம்பட்டவனே! நாய்போல் கடைப்பட்ட அடிமையாகிய யான் சொல்லுவது 

உளது’ என்று சொன்னான்.

 

தன்னை உடனழைத்துச் செல்லுமாறு இராமனிடம் குகன் வேண்டுதல்

பாடல் 38  

 நெறி இடுநெறி வல்லேன்; நேடினென் வழுவாமல்

நறியன கனி காயும் நறவு இவை தரவல்லேன்;

உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடிவரை உம்மைப்

பிறிகிலென்; உடன் ஏகப் பெறுகுவென் எனில், நாயேன். ‘

உரை

  நாய்போற் கடைப்பட்டவனாகிய அடியேன் உங்களுடனே வருகின்ற

பேற்றைப் பெறுவேண்டும் . அவ்வாறு பெற்றால் நீங்கள்செல்லும் வழியை 

அமைத்துத்தரும் வல்லமை உடைவன் .  மிகவும் நல்லனவாகிய பழம்,  

காய்,தேன் முதலியவற்றைச் சிறிதும் குறைவுபடாமல் தேடிக் 

கொண்டுவந்து தருதற்கு வலிமை உடையவன் . செல்லும் வழியிடங்களில் 

தங்குதற்குரிய இடங்களைஅமைத்துத்தருவேன் ஒரு நொடிக்கால அளவும் 

உங்களைப் பிரியாமல் பாதுகாப்பேன் என்றான் .

பாடல் 39

     

 தீயன அவை யாவும்  திசைதிசை செல நூறித்

தூயன உறை கானம்  துருவினென் வர வல்லேன்,

மேயின பொருள் நாடித் தருகுவென், வினைமற்றும்

ஏயின செய வல்லேன்,  இருளினும் நெறி செல்வேன். ‘

உரை

   கொடிய தன்மை படைத்த எப்பொருளும் நாலாதிசைகளிலும் ஓடி 

ஒளியும்படி அழிப்பேன் .  தூய விலங்குமுதலியன வசிக்கும் காடுகளை

தேடித் தருவதற்கு வல்லமை உடையவன் .  நீங்கள் விரும்பிய 

 பொருளை எங்கிருப்பினும் தேடிக் கொண்டுவந்து  தருவேன்.  நீங்கள் 

ஏவிய எல்லா வேலைகளையும் செய்ய வல்லமை உடையேன் நள்ளிருள் 

பொழுதும் காட்டு வழியில் செல்லும் தீரம் உடையேன்.

பாடல் 40                 

 கல்லுவென் மலை மேலும் கவலையின் முதல் யாவும்,

செல்லுவென் நெறி தூரம்,   செறி புனல் தரவல்லேன்,

வில்லினம் உளென், ஒன்றும்   வெருவலென், இருபோதும்

மல்லினும் உயர் தோளாய்!  மலர் அடி பிரியேனால்.

 

உரை

     மற்போர்த் திறமையிலும் மேன்மைபொருந்தியதோள்களை உடைய 

இராமனே செல்லும் வழி மலையாயினும் தோண்டி வழிசெய்வேன்

அதன்மேலும் கவலைக்கிழங்கு முதலிய உணவு வகைகளையும் தோண்டி 

எடுப்பேன். சேய்மையான வழிகளிலும் செல்வேன். உயிர் 

செறிதற்குக்காரணமான நீரை எங்கிருந்தும் கொண்டு தருதற்கு உரிய 

வல்லமை  உடையேன் துணைக்கு வில் ஏந்திய சேனையை உடையேன்

எதற்கும், அஞ்சமாட்டேன். பகல், இரவு ஆகிய இருபொழுதுளகளிலும் 

உன்னுடைய மலர்போன்ற அடிகளைப் பிரியாமல் உடனாகத் 

தங்கியிருப்பேன்.

பாடல்41  

  திருவுளம் எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு

ஒருவலென் ஒரு போதும் உறைகுவென்; உளர் ஆனார்

மருவலர் எனின், முன்னே மாள்குவென்; மிகை அல்லேன்;

பொரு அரு மணி மார்பா! போதுவென் உடன் ‘என்றான்.

உரை

ஒப்பற்ற அழகிய மார்பினை உடையவனே உன் மனத்திற்கு உடன்பாடாக

இருக்குமானால் நான் வருவதோடு அல்லாமல் என்னுடைய 

சேனைகளையும் கூட அழைத்துக் கொண்டு எல்லாக் காலத்தும்  

நீங்காதவனாக உன்னுடனேதங்குவேன்.  தீங்கு செய்யும் பகைவர்கள் 

யாரேனும் வருவார்கள் ஆயின்  உனக்கு முன்னே அவர்களுடன் 

போர்செய்து அவர்களை அழித்து நானும் இறந்துபடுவேன். அடைக்கலம் 

புகுந்தவரைமாற்றானிடம் காட்டிக் கொடுத்தான் என்ற பழிச் சொல்லுக்கு 

ஆளாகமாட்டேன் உன்னுடனேயே வருவேன் என்று கூறினான்.

குகனை நோக்கி இராமன் கூறுதல்

பாடல் 42

அன்னவன் உரை கேளா, அமலனும் உரை நேர்வான்,

என் உயிர் அனையாய் நீ;    இளவல் உன் இளையான்; இந்

நல் நுதலவள் நின் கேள்;    நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்

 

உரை

குற்றமற்றவனாகிய இராமனும் அந்தக்குகனது வார்த்தையைக் கேட்டு  

பதில் கூறுவானாகி  குகனே!  நீ என் உயிரைப்போலச் சிறந்தவன். தம்பி 

இலக்குவன் .இவ் அழகிய நெற்றியை உடையாளாகிய 

சீதை உன் கொழுந்தியாவாள். குளிர்ந்த கடலாற் சூழப்பெற்ற இவ் உலகம் 

எல்லாம்  உனதே யாகும். நான் உன்னுடைய ஏவல் தொழிலுக்குக் 

கட்டுப்படும் உரிமையில் இருக்கின்றவனாவேன்.

பாடல் 43

துன்பு உளது எனின் அன்றே  சுகம் உளது; அது அன்றிப்

பின்பு உளது இடை மன்னும்    பிரிவு உளது ‘என உன்னேல்;

முன்பு உளெம் ஒரு நால்வேம்,  முடிவு உளது என உன்னா

அன்பு உள இனி நாம் ஓர்   ஐவர்கள் உளர் ஆனோம்

உரை

துன்பம் உளதானால் அல்லவா சுகம்உண்டாகும் .  அச்சுகம் இப்பிரிவாகிய 

துன்பத்துக்குப்   உளது . இடையே இப்படி நிலையான

ஒருபிரிவு உண்டாகியுள்ளது என்று மனத்தில் கருதாதே. இராம இலக்குவ 

பரத சத்துருக்கனன் என்று ஒரு நான்கு சகோதரர்கள் முன்பிருந்தோம்

கடைபோயிற்று என்று கருதமுடியாது வளர்ந்து கொண்டே செல்லும்

அன்பினை மிகவும் உடைய நாம் உன்னோடு ஐந்து சகோதரர்கள் 

ஆக ஆனோம்.

பாடல் 44

படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம்;

இடர் உறு தகையாயோ?    யான் என உரியாய் நீ;

சுடர் உறு வடி வேலாய்!   சொல் முறை கடவேன், நான்

வடதிசை வரும் அந்நாள்   நின் உழை வருகின்றேன்.

உரை

          ஒளி படைத்த கூரிய தீட்டப்பெற்ற  வேலை உடைய குகனே உன்

தம்பியாகிய இலக்குவன் வனத்தின் கண் நான் வசிக்கும் நாள்கள் எல்லாம் 

எனக்கு வருத்தம் நேராமல் தான்அந்த  வருத்தத்தைத் தாங்க என்னுடனே 

இருக்கின்றான். நீ உன் நாட்டிற்குச் சென்று நான் இருக்கும் 

ஆட்சி உரிமையில் இருந்து ஆட்சி புரிவாயாக.  நான்

மீண்டு வடதிசை நோக்கி அயோத்திக்கு வரும் அக்காலத்தில் உன் 

இருப்பிடத்திற்கு வருகின்றேன். சொல்லிய பேச்சிலிருந்து  மாற 

மாட்டேன்என்றான் ராமன் .

பாடல் 45

     

 அங்கு உள கிளை காவற்கு  அமைதியின் உளன் உம்பி;

இங்கு உள கிளை காவற்கு  யார் உளர்? உரைசெய்யாய்;

உன் கிளை எனது அன்றோ?  உறு துயர் உறல் ஆமோ?

என் கிளை இது கா என் ஏவலின் இனிது ‘என்றான்.

 

உரை

உன் தம்பியாகிய பரதன் அயோத்தியில் உள்ள குடிமக்களையும் 

சுற்றத்தையும் காப்பாற்ற வேண்டி அதற்குரியஆட்சிக் குணங்களோடு 

இருக்கின்றான்.  நீ என்னுடன் வந்துவிட்டால் சிருங்கிபேரத்தில் உள்ள 

சுற்றத்தையும் குடிகளையும் காப்பாற்ற யார் இருக்கின்றார்கள்.

சொல்வாயாக; நீயும் நானும் ஒன்றான பிறகு   உன்னுடைய சுற்றம் என் 

சுற்றம் அல்லவா மிக்க துன்பத்தை என் பிரிவால் அடையாதே . 

என்னுடைய சுற்றமாகிய இவ்வேடுவர்களை என் கட்டளையால்  இனிது 

காப்பாயாக என்றான் .

              

குகன் விடை பெறுதலும் இராமன் முதலியோர் கானகத்துப்

புகுதலும்

பாடல் 46

பணிமொழி கடவாதான்,   பருவரல் இகவாதான்,

பிணி உடையவன் என்னும்   பேதினன், விடை கொண்டான்;

அணி இழை மயிலோடும்,    ஐயனும், இளையோனும்,

திணி மரம் நிறை கானில்   சேண் உறும் நெறி சென்றார்.

 

உரை

இராமன் இட்ட கட்டளை வார்த்தையை மீறாதுஇராமனது பிரிவினால் 

ஏற்பட்ட துன்பமும் நீங்காது நோயுற்றான் என்று சொல்லும்படியான 

பிரிவுத் துன்பத்தை உடையனாய் குகன் உத்தரவு பெற்றுச் சென்றான்

 அழகிய ஆபரணங்களை அணிந்த மயில் போல்பவளாகிய

சீதையோடும் இராமனும் தம்பி இலக்குவனும்

வலிய பெரு மரங்கள்நிறைந்துள்ள காட்டில் நெடுந்

தொலையான வழியில் சென்றார்கள்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்