பெரியபுராணம் - சேக்கிழார் -மெய்ப் பொருள் நாயனார் புராணம்
பெரியபுராணம் - சேக்கிழார் -மெய்ப் பொருள் நாயனார் புராணம்
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார்
அவர்களால் இயற்றப்பெற்றது . சுந்தரமூர்த்தி சுவாமிகளின்
திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும்
சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில்
விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார்
நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை
மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம்
அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய
தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம்
எழுதப்பெற்றுள்ளது.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச்
சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று
அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு
அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கியதாக
நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை
பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.
மெய்ப் பொருள் நாயனார் புராணம்
1.சேதி நல் நாட்டு நீடு திருக் கோவலூரின்
மன்னி
மாது ஒரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்;
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்.
உரை
தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கிய
இந்நகரில் மலாடர் என்னும் மரபு வழி வந்தவர்கள் ஆட்சி புரிந்தனர்.
சிவபெருமானிடத் தும், அடியார்களிடத்தும் அன்பு கொண்ட இம்மரபில்
தோன்றியவர் மெய்ப் பொருள் நாயனார். அறநெறி தவறாமல் ஆட்சி
புரிந்து மக்களின் அன்பை பெற்று வாழ்ந்துவந்தார். வீரத்தில்
சிறந்துவிளங்கிய இவர் சிவனடியார்களைப் போற்றி வணங்கும்
சிவநேசராகவும் இருந்தார்.
2.அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடும் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மை யினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்.
உரை
அரசியல் நெறியிலே வந்த அற வழிகளில் வழுவாமற் பாதுகாத்து,
மலைபோலுயர்ந்த தமது தோள் வலிமையாற் பகைவர்களைப் போரில்
வென்றவர். முன்னோர் மொழிந்தவற்றில் இருந்து சிறிதும் பிறழாது
ஓங்குகின்ற நீதிநிலையிலே சிறந்தவராகவும் இருந்தார் , அலைகள்
வீசுகின்ற கங்கையைச் சடையிலே தரித்த சிவபெருமானது அடியார்
வேடத்தினையே சிந்தையுட் கொண்டவராக விளங்கினார்.
3.மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழ் இசைப் பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்;
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார்.
உரை
உமாதேவியாரை ஒருபாகத்தேயுடைய சிவபெருமான் எழுந்தருளி
வீற்றிருக்கும் கோயில்கள் எங்கெங்கும் பூசைகள் தவறாது
நடைபெற்று வரும்படியாகவும், ஏழிசைப்பாடலும் ஆடலும்
சிறப்புடன் மிகவும் பொருந்தி நிகழும்படியாகச்
செய்து வழிபட்டு வந்தார் . தனது நாயகரான சிவபெருமானின்
அன்பர்களது திருவடிகளைத் தவிர வேறு சார்பில்லாதவராக இருந்தார் .
4.தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார்.
உரை
தமது அரசுரிமையிலே தேடியனவாகிய பொருள்களையும்
செல்வங்களையும் திருத்தில்லையிலே எழுந்தருளி இருக்கும்
பெருமானது அன்பர்க்கே உரியதாகும் என்று விருப்பதுடன் ,
நாயன்மார்களாகிய அரனடியவர்கள் தன்னை நாடி வந்த போது
மகிழ்ச்சி பொங்கக் குறைவற அச்செல்வங்களை வேண்டுமாறு
கொடுத்து வந்தார்.
5.இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர்
மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேல்கொண்டு்
பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்.
உரை
இவ்வாறு இவர் ஒழுகி வருகின்ற காலத்தில் ஓர் அரசன் இவருடன்
பகை கொண்டு இவரை வெல்லும் ஆசையினாலே, போரில் எதிர்த்து
வந்து தன்னுடைய பொன்னாலியன்ற முகபடாம் அணிந்த யானை,
போர்க்குதிரை, காலாள் முதலிய பலவற்றையும் பலமுறை
இழந்தவனாய்த் தோற்று அவமானமடைந்து போயினான்.
6.இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச்
செப்ப அரும் நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான்.
உரை
இப்படி இழந்தவனாகிய அந்தப் பகையரசன் போர்முனையிலே
நாயனாரை வெல்ல முடியாது எனத் தெளிந்து , மெய்ப்பொருள்
வேந்தராகிய நாயனாரது சிவனடியார் மீதான
அன்பினைத் தெரிந்துகொண்டான் . திருநீறு சாத்திக்கொள்வதாகிய
அந்தப் பெரிய வேடந் தரித்தான் . வஞ்சனையினாலே வெல்வதற்கு ,
அவன் வாக்கினாற் சொல்லவும் இயலாத , அந்த நிலைமையை மனதில்
எண்ணிக்கொண்டு திருக்கோவலூரினுட் சென்று சேர முற்பட்டான் ,
7.மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி,
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்.
உரை
தன் உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சடைகளை முடித்துக்
கட்டிக்கொண்டு, கையிலே படையை மறைத்துவைத்துப் புத்தகம்
போற்கட்டிய புத்தகப்பையை எடுத்து ஏந்திக்கொண்டான். மையினை
உள்ளே பொதிந்து வைத்து வெளியே ஒளியினைச் செய்யும் விளக்கு
என்று சொல்லும்படி, மனத்தினுள்ளே வஞ்சனையைப் பொதிந்து
வைத்துப் பொய்யினை மறைத்த தவவேடங் கொண்டு அந்நகரினுள்ளே
முத்தநாதன் என்ற அவ்வரசன் புகுந்தான்.
8.மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகிச்
சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்.
உரை
தவவேடந் தாங்கிய அவ் வன்னெஞ் சுடையவன்; மாடங்கள்
எங்கேயும் மாலை சுற்றிய கூந்தலையும் குழையினையும் உடைய
கொடிகள் ஆட, அவற்றின் மேலே ஒளிவிளங்கும் வெண்கொடிகள்
அசைகின்ற அகன்ற இடத்தை உடைய , நீண்ட வீதியயின் வழியே
சென்றான். சேதிநாட்டரசர் பெருமானாராகிய மெய்ப்பொருள்
நாயனாரது அரண்மனையின் அழகிய திருவாயிலை அடைந்தான்.
9.கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
‘உடையவர் தாமே வந்தார்; உள் எழுந்து அருளும்’ என்னத்
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
‘இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன்’ என்றான்.
உரை
அரண்மனையின் பல வாயில்களிலும் காவல் செய்து நின்ற
காவலாளர்கள் முத்தநாதன் உட்புகுந்தது கண்டு அவனைக் கைதொழுது
விலகி நின்று எங்களையாளுடையவராகிய அடியவர் தாமே வந்தனர்
என்று "உள்ளே எழுந்தருள்வீராக" என்று கூறினார்கள் . அவ்வாறே
அரண்மனையின் பலவாயில்களையும் தாண்டிச்சென்றான் . பின்
கடைசியாயுள்ள தனி வாயிலினைக் காவல் புரிந்து நின்ற தத்தன்
என்பவன் "சமயம் நோக்கித் தேவரீர் அருள்புரிய வேண்டும்; எமது
இறைவன் துயில்கொள்கின்றார் "என்று சொன்னான்.
10.என்று அவன் கூறக் கேட்டே ‘யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும்’ என்றே அவனையும் நீக்கிப் புக்குப்
பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே
மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான்.
உரை
இவ்வாறு தடைமொழிகளைத் தத்தன் சொல்லக் கேட்டும், முத்தநாதன்
"நான் அவ்வரசனுக்கு உறுதி கூற வந்திருக்கின்றேன் , நீயும் இங்குத்
தடை செய்யாமல் வேறு நின்றிடுக" என்றே சொல்லி, அவனையும் நீக்கி
உட்புகுந்தான். அங்கே பொன்னால் விளங்கும் பள்ளிக் கட்டிலில்
அரசர் துயில, அவர் பக்கத்திலே வாசனையுடைய அழகிய கூந்தலையும்
மெல்லிய சாயலையும் உடைய அரசமாதேவியிருப்பக் கண்டான்.
11.கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டு அலர் மாலையானை எழுப்பிட, உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் எனக் குவித்த செங் கை
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று.
உரை
அவ்வாறு கண்ட பின்னும் உள்ளே சென்று பக்கத்திலே சென்றான்.
அதனைக் கண்டு மாதேவி விரைந்து எழுந்து, வண்டு
அலர்தற்கிடமாகிய மாலையணிந்த அரசரை எழுப்பினார் . அரசர்
உணர்ந்து, "தேவதேவனாகிய சிவபெருமானது தொண்டராம் இங்கு
வந்தவர்" எனத் தலைமேற் சிவந்த கைகளைக் கூப்பிக்கொண்டு
பள்ளிவிட்டெழுந்து எதிரிலே சென்று அடியார் தாம் கொண்ட
கொள்கையின்படி வணங்கி நின்று.
12.‘மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து
அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ’ என்று கூற,
‘உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன்; இயம்ப’ என்றான்.
உரை
மங்கலம்பெருக மற்றும் எனது வாழ்வேவந்து அணைந்தது என்னும்படி
இங்குத் தேவரீர் எழுந்தருளும் பேறு வாய்க்கப்பெற்ற தென்கொல்?“
என்று சொல்ல, “உங்கள் நாயகராகிய இறைவனார் முன் சொல்லிய
ஆகமநூல் இம்மண்ணுலகத்தின் மேலே எங்கும் இல்லாததாகிய ஒன்று
உமக்கு இயம்புதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன்“ என்று முத்தநாதன்
சொன்னான்.
13.‘பேறு எனக்கு இதன் மேல் உண்டோ?பிரான் அருள் செய்இந்த
மாறு இல் ஆகமத்தை வாசித்து அருள் செயவேண்டும்’ என்ன,
‘நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருத்தல் வேண்டும்’ என்று அவன் விளம்ப, வேந்தன்.
உரை
எனக்கு இதனை விட மேலான பேறு வேறுண்டோ? இறைவன்
அருளிச்செய்த இந்த மாறில்லாத ஆகமத்தை வாசித்து அருளிச்
செய்யவேண்டும" என்று அரசர் சொல்ல,“வாசனையுடைய பூமாலை
அணிந்த தேவியாரும் இவ்விடத்து நின்று நீங்கவேண்டும் , நானும் நீயும்
தனியாகிய இடத்தில் இருத்தல் வேண்டும்" என்று அவன் சொன்னான் .
அதற்கு அரசர் கீழக்கண்டவாறு நடக்கலானார் .
14.திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப் புரத்திடைப் போக ஏவித்
தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றார்.
உரை
திருமகளே என்று எண்ணும் படியாக அங்கு நின்ற
தேவியாரைப் பார்த்து அந்தப்புரத்தினிற் போகும்படி மனதார எண்ணி
ஏவினார் அரசர் . புனைந்த தவவேடமுடைய அவனை ஆசனத்தின்மேல்
இருக்கும்படி செய்து, தாம் இருநிலத்திலே வீற்றிருந்துகொண்டு,
துதித்து, “இனி அருள்செய்ய வேண்டும்“என்றார்.
15.கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல்
வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில்,
பத்திரம் வாங்கித் தான் முன் நினைந்த அப் பரிசே செய்ய,
‘மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள்’ எனத் தொழுது வென்றார்.
உரை
கையில் வைத்திருந்த வஞ்சனையாகச் செய்த புத்தகப் பையை
மடிமேல் வைத்துப் புத்தகத்தை அவிழ்ப்பவன் போல அவிழ்த்தான் . அவர்
வணங்குஞ் சமயம் பார்த்து, அதனுள்ளே கரந்து வைத்திருந்த படையை
எடுத்து ஓங்கித் தான் முன்னர் நினைத்த வந்த அவ்வண்ணமே
செய்தான் . "உண்மைத் தவவேடமே மெய்ப்பொருளாம்" என்று
தொழுது வென்றார் அரசர்.
16.மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்;
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்.
உரை
மறைத்தவன் உள்ளே புகுந்த போதே, அங்கே மனம் வைத்துப்
பார்த்திருந்தவனாகிய தத்தன் மிக விரைவில் அவ்விடத்திற் கூடி
வாளினாலே அவனை வெட்ட முற்பட்டான்; மிகவும் இரத்தம்
பெருகுதலால் விழுகின்றவராகிய நாயனார், தாம் தரையில் வீழ்கின்ற
அந்த அளவுக்குள் தமது நீண்ட கையினால் "தத்தா! நமரேகாண்"என்று
சொல்லி அவன் செய்கையைத் தடுத்து
வீழ்ந்தார்.
17.வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
தாதன் ஆம் தத்தன்தானும் தலையினால் வணங்கித் தாங்கி,
‘யாது நான் செய்கேன்’ என்ன, ‘எம்பிரான் அடியார் போக
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ’ என்றார்.
உரை
வேதனைப்பட்டு வீழ்ந்த அரசர் கட்டளையினாலே இவ்வாறு தனது
செய்கையினின்றும் தடுத்து விலக்கப்பட்ட அடிமையாகிய தத்தனும்.
அரசரது ஏவலைத் தலையால் வணங்கி ஏற்று அதன்படி அமைந்து
நின்றவனாய், வீழ்ந்த அரசரைத் தாங்கி அணைத்துக்கொண்டு, “யாது
நான் செய்தல் வேண்டும்“ எனப் பணிவுடன் கேட்டான் . “எம்பிரானுடைய
அடியாராகிய இவர் திரும்பிச் செல்லும் வழியில் எவரும் இவரைத்
தடுக்காத வகையிலே காவல்புரிந்து கொண்டுபோய் விடு நீ “
என்று சொன்னார்.
18.அத் திறம் அறிந்தார் எல்லாம் ‘அரசனைத் தீங்கு செய்த
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம்’ எனப் புடை சூழ்ந்த போது,
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்,
‘இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை’ என்றான்.
உரை
அச்செய்தியை அறந்தவர்கள் எல்லாம் "எமது அரசனுக்குத் தீங்குசெய்த
இந்தப் பொய்த்தவனைக் கொன்றிடுவோம்" என்று எழுந்து பக்கத்திற்
சூழ்ந்தபோது, தத்தனும் அவர்களை எல்லாம் தடுத்து, அவனைத்
தன்னுடன் கொண்டு போக முற்பட்டான் . அப்போது அவர்களை நோக்கி
"இத்தவன் இவ்வாறு உயிருடன் போகப்பெற்ற காரணமாவது
இறைவனது ஆணையேயாகும்" என்று சொன்னான்.
19.அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து,
கை வடி நெடுவாள் ஏந்தி ஆள் உறாக் கானம் சேர,
வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்.
உரை
தத்தன் சொல்லியதனை ஏற்று அமைந்தவர்களாகிய அவர்கள்
எல்லாம் பயந்து அகன்றார்கள் . தத்தன் சிறந்த வழியிலே
திருநகரத்தைக் கடந்து போய்க், கையிலே கூர்மையுடைய நீண்ட
வாளினை ஏந்திக் காவல் செய்து, ஆட்கள் யாரும் அணுக முடியாத
காட்டினை அடையவும், அவ்விடத்திலே வெவ்வினைக்
கொடியவனாகிய அவனை விட்டு, அதன்பின் மீண்டு வந்தான்.
20.மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்; கோமகன் குறிப்பில் நின்றான்.
உரை
மற்று தத்தன் காவல் புரிந்து கொண்டு போயின வஞ்ச வேடமுடையான்
மேல் எதிர்த்து வருகின்றவர்களை யெல்லாம் தடுத்து விலக்கி
அனுப்பிவைத்தான் . இவ்வாறு அவனை தீங்கு இல்லா வழியிலே
விட்டதாகிய நற் சொல்லைக் கேட்பதற்காகவே சோர்ந்து போய்க்
கொண்டிருக்கின்ற உயிரைத், தாங்கியிருந்த அரசர் திருமுன்பு
சென்றான். அவ்வரசர் பெருமானது குறிப்பிலே நின்றான் (தத்தன்).
21.சென்று அடி வணங்கி நின்று ‘செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன்’ என்று கூற,
‘இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார்’ என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்.
உரை
சென்று அரசரை அடிவணங்கி நின்று கொண்டு, “செய்த தவவேடங்
கொண்டதனாலே வென்றவனைக் காவல் செய்து, கட்டளைப் படி
கொண்டுபோய் விட்டனன்“ என்று (தத்தன்) சொன்னான் . “இன்று எனக்கு
ஐயனாகிய நீ செய்ததுபோல யாவர் செய்யவல்லவர்?“ என்று
நன்மொழி கூறி, வணங்கி நின்றான் தத்தன் . அவனை
நோக்கி, நிறைந்த பெருங்கருணை கூர்ந்தார்
அரசர்.
22.அரசியல் ஆயத்தார்க்கும் அழிவு உறும் காதலார்க்கும்
விரவிய செய்கை எல்லாம் விளம்புவார், ‘விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்.
உரை
தமக்குப் பின் அரசாட்சி நடத்தும் முறைமையில் வரும் இளவரசர்,
அமைச்சர் முதலியவர்க்கும், தம்மிடத்துக் கொண்ட காதலால் மனம்
வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார் முதலியோர்க்கும், பொருந்திய
செய்தியைக் கூறுவாராகி “விதியினாலே பரவப்பெற்ற திருநீற்றினிடத்து
வைத்த அன்பினையே சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு
செலுத்தக் கடவீர்“ என்று தன் கட்டளையைக் கூறினார் அரசர் .
பின்னர் , திருமன்றிலே அருட் கூத்தாடு கின்ற பூங்கழலணிந்த
எடுத்த திருவடியைச் சிந்தித்திருந்தனர்.
23.தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்டர் வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக்
கொண்டவர் இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்.
உரை
சிந்தை செய்த தொண்டனாருக்குப் பார்வதியம்மையார் கொழுநராகிய
சிவபெருமான் அவர் முன் பன்னாளும் தம்மைக் கருத்தினில்வைத்துக்
கண்டிருந்த வண்ணமே வெளிப்பட அவர் எதிரிலே வந்து காட்சி
கொடுத்து அருள்புரிந்து, மிகுந்த தேவர்களுக்கும் எட்டாத தமது
அருளாகிய பாதநீழல் சேரும்படி அருள் கொடுத்து, இடையறாமற்
கும்பிட்டிருக்கும் பேற்றினையும் ஈந்தருளினார்.
24.இன் உயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர்
என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொன் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்.
உரை
இனிய உயிரைப் பிரிக்கும் செகுத்தல் செய்யக் கண்ட
பின்னும்
இவன் தாங்கிய திருவேடத்தாலே எம்பிரான் அன்பனேயாவான் என
உட்கொண்டு, திருவேடமே சிந்தை செய்வதாகிய தாம் கொண்ட,
நன்னெறியினைச் சோர்வுபடாது பாதுகாத்தளித்த சேதிநாட்டரசராகிய
மெய்ப்பொருணாயனாரது பெருமையில் எனது ஆற்றலினுட்பட்ட
சிறிதளவே ஈண்டுச் சொல்லினேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக