ஏமங்காத நாட்டு வளம் -ஐம்பெருங் காப்பியங்கள்- திருத்தக்கதேவர் - சீவக சிந்தாமணி

 

ஐம்பெருங் காப்பியங்கள்

திருத்தக்கதேவர் - சீவக சிந்தாமணி

 

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி,மணிமேகலை  என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முந்தியது . வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன்  என்பதாகும் . சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணி. அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையது . அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர்.

 

 சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற வேறு பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.

 

  இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமணமுனிவராவார்.இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகாமுனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகின்றார் . திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.

 

ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்தபுலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே தவிர  அகப்பொருட் சுவை மிகுந்த  இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வம்  நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் 'நரி விருத்தம்' என்னும் நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை  மிகுந்த   பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு 'செம்பொன்வரைமேல்' என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், 'மூவா முதலா' எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடிதாகக் கூறுவர்.

 

பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார். பின்னர்  வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்றால் மிகையல்ல .

பாடல் 1

 

காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே

பொருள் : தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய், பாக்கு மரத்தின் உச்சியில் உள்ள தேனடையைக் கிழித்தது. பின்னர் பலாப் பழத்தைப் பிளந்து, மாங்கனியை சிதற வைத்தது. வாழைப்பழங்களை  கீழே உதிரச் செய்தது. இத்தகைய வளமுடைய நாடு ஏமாங்கத நாடு. அதன் புகழ் திசையெங்கும் பரவியிருந்தது.
பாடல் 2
இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே

பொருள் : பரதேசுவரர் என்னும் சக்கரவர்த்தியின் யானைக் கூட்டம் போன்ற மேகங்கள், அலைகளை உடைய கடல் நீரைப் பருகின. மேகங்கள் கருக்கொள்ளும் வரை மலைகளில் தங்கின. பிறகு வானில் பரவி சிவபிரானின் சடையைப் போல மின்னி வாய்விட்டு முழங்கின.
பாடல் 3
தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே

பொருள் : முகில்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காகக் கூடி, தேன் கூடுகள் நிறைந்த மலையுச்சியின் மேல், வெள்ளியால் செய்த வெண்மையான கோல்களை வானத்தில் வரிசையாக அமைத்தது போன்று, மழைநீர்த் தாரைகளை நிரைத்து நறுமணத்துடன் சொரிந்தன.

 

பாடல் - 4
குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின்
இழியும் வெள் அருவித் திரள் யாவையும்
குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே.

பொருள் : மலையின் உச்சியிலிருந்து முழங்கி வழிந்த வெண்மையான நீர் அருவிகள் மாடங்களில் உள்ள வெண்துகிற் பொடிபோல இருந்தன. பிறைச் சந்திரனால் கிழிப்புண்டு முழவின் ஒலிபோல் அதிர்ந்து வரும் தேனருவி செந்துகிற் கொடி போல இருந்தன.
பாடல் 5
இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே.

பொருள் : அவ் அருவிகள் மலையில் இருந்து விழும் பொழுது நீண்ட இந்திரன் மார்பில் பிணைந்து விழுந்த முத்துவடம் போன்று காட்சியளித்தன. அவை பொன்னையும், அழகிய மணிகளையும் சிந்துவதால் இந்திரனுடைய அணிகலப் பெட்டியைக் கவிழ்த்துக் காட்டப் பெற்ற அணிகளைப் போன்றும் விளங்கின.35
பாடல் 6
வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்
கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே.

பொருள் : நன்மனம் கொண்ட செல்வர்களைப் போல, வெள்ளமானது மலையின் உச்சியிலிருந்து வளம்மிக்க செல்வத்திரளை வாரிக் கொண்டு வந்து ஊர்தோறும் கொடுத்தது.
பாடல் 7
மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன்
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச்
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
நைய வாரி நடந்தது நன்று அரோ.

பொருள் : மழை வெள்ளம், மயங்கிய யானைகளின் மும்மதங்களையும் உள்ளே நிறைத்துத் தேனைப் பூசி, வியத்தகும் பொன் துளிகளைக் கலந்து, நறுமணச் சந்தனம், இனிய பழம் முதலிய பிறவற்றையும் வாரிக் கொண்டு காடு வருந்தும்படி, நாடு நோக்கி நடந்தது.
பாடல் 8
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து எனக்
காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய்
மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல்
நாடு முற்றியதோ என நண்ணிற்றே.

பொருள் : வீடுகள் இல்லாத ஊரைக் கொள்ளை கொண்ட வேந்தனைப் போல, வெள்ளமானது அலைகளாகிய கைகளால் காட்டை அரித்து, அதனுள் கிடந்த பொருள்களைக் கவர்ந்து சென்று, பெரிய நீண்ட கடல், நாட்டை வளைத்துக் கொண்டதோ என்று மக்கள் வருந்தும்படி அந்நாட்டை அடைந்தது.38
பாடல் 9
திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான்
சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக்
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே.

பொருள் : சரை என்னும் பெயரை உடைய வெள்ளம், தன் கணவனாகிய கடலை அடைந்து, அவனுக்குச் சூட்டுவதற்காக அருவி கொண்டு வந்த பொருள்களோடு, நுரையாகிய மாலையையும் சுமந்து கொண்டு வந்தது.
பாடல் 10
பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல்
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலை
தழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே.

பொருள் : காய்ந்த போன  தென்னை ஓலைகளைப் போல நெருங்க நீர் செல்லுமாறு வாய்க்கால்களில் அவ்வெள்ளம் புகுந்து மோதுவதால் வாய்க்கால்களின் உட்கரைகள் முரிந்தன. நீரின் வரவினை ஒலிக்கும் பம்பை என்னும் பறையினால் நாட்டு மக்களுக்கு அறிவிக்க, சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மதகுகளிடத்தில்  கூடினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்