பாத்திர மரபு கூறிய காதை- மணிமேலை

                                                    2. மணிமேலை -   பாத்திர மரபு கூறிய காதை

                                         

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை

இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். சிலப்பதிகாரமானது இல்லறத்தையும்

மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதால், இவை இரட்டைக் 

காப்பியங்கள் எனப்பட்டன.

 

காப்பிய அமைப்பு

மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்பது போலவே தொடர்ந்து

வளர்ந்து முடிகிறது. மணிமேகலையின் பிறப்பையும், கோவலன் இறந்த நிலையில் அவள் இளநங்கையாய் இருத்தலையும் சிலப்பதிகாரம் சுட்டிச் செல்கிறது. அந்த இளநங்கையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு மணிமேகலைக் காப்பியம் பாடப்படுகிறது.

பெயர்க் காரணம்

இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், இந்நூலுக்கு மணிமேகலை எனப் பெயர் வந்தது.

காப்பிய நோக்கம்

பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும். மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப் பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூல்மணிமேகலை எனலாம். மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்து, துறவியாகிப் பௌத்த சமயத்தைப் போற்றிப் பரப்பிய முறையை இக்காப்பியம் கூறுகிறது. இந்நூலில் அமைந்த முப்பது காதைகளிலும் ஊடுருவிச் செல்லும் மணிமேகலையின் வரலாற்றின் மூலமாக, காப்பியத்தின் இந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது எனலாம்.

காப்பியச் சிறப்பு

இலக்கியங்கள், காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் காலந்தோறும் தோன்றும் இலக்கியங்களில் தனி மனித வாழ்வு நிலை, சமய நிலை, சமுதாய நிலை ஆகிய மூன்றினையும் அறிந்து கொள்ளலாம். இம்மூன்று நிலைகளிலும் மனித வாழ்வு செம்மை அடைவதற்காக அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டதே மணிமேகலைக் காப்பியமாகும்.

காப்பியம் கூறும் கதை

மாதவியின் மகள் மணிமேகலை. அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள். மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன்

அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது. அங்கு மணிமேகலை ‘அமுதசுரபி’ என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள்.

அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசமயான பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான். அவனிடமிருந்து தப்ப மணிமேகலை ‘காயசண்டிகை’ என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள். இந்நிலையில் காய சண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான். உதயகுமரன் இறந்தவுடன் அவன் தாய் மணிமேகலைக்குக் கொடுமை பல செய்கிறாள். மணிமேகலை அவளைத் திருத்தி அறநெறியைப் பின்பற்றச் செய்கிறாள். மணிமேகலை நாடெங்கும் பௌத்த தருமத்தைப் பரப்புகிறாள். இதுவே மணிமேகலை நூல் கூறும் கதை. மணிமேகலையில் இடம்பெற்றுள்ள பாத்திரமரபு கூறிய காதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

பாத்திர மரபு கூறிய காதை

ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை

பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்

மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து

ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ

துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி

வயிறு காய் பெரும் பசி மலைக்கும்  என்றலும்

ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்

ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த

கேள் இது மாதோ கெடுக நின் தீது  என

யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத் 10

தேவி சிந்தாவிளக்குத் தோன்றி

ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய்

நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது

வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது

தான் தொலைவு இல்லாத் தகைமையது என்றே

தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்

சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து

நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!

வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!

ஏனோர் உற்ற இடர் களைவாய்! எனத் 20

தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி

ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு

வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்

மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்

தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ

பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்

இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப

ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்

பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி 30

வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி

மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்

ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி

இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து

உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க  என

வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு

எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்

ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்

காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது

அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் 40

நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்

யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு

இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே

வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்

திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை

உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ

பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ

யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்? என்றலும்

புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு

இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப 50

நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்

பரப்பு நீரால் பல் வளம் சுரக்க! என

ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன்

ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்

பன்னீராண்டு பாண்டி நல் நாடு

மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது

வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப்

பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்

ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை

ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி 60

விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்

நடவை மாக்களும் நகையொடு வைகி

வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்

முட்டா வாழ்க்கை முறைமையது ஆக

ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி

ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்

யார் இவன்? என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு

அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை

இருந்தாய் நீயோ! என்பார் இன்மையின்

திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள 70

ஒரு தனி வரூஉம் பெருமகன் போல

தானே தமியன் வருவோன் தன்முன்

மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்

சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்

ஊன் உயிர் மடிந்தது உரவோய்! என்றலும்

அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது

குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி

அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து என

வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி

கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின் 80

மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்

தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்

இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து

வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்

வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி

அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்

மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்

என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்

தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்

சுமந்து என் பாத்திரம்? என்றனன் தொழுது 90

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்

ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்

அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்

உளர்எனில் அவர் கைப் புகுவாய்  என்று ஆங்கு

உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி

அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன்

என் உற்றனையோ? என்று யான் கேட்பத்

தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்

குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக்

குட திசைச் சென்ற ஞாயிறு போல 100

மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு

தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு

சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன்

ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என் 104

பாடலும்  பொருளும்

ஆங்குஅவற்கு ஒருநாள் அம்பலப் பீடிகைப்
பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்:
மாரி நடுநாள் வல்இருள் மயக்கத்து
ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇத்
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும்
ஏற்றுஊண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர்அஞர் எய்த,
கேள்இது மாதோ கெடுகநின் தீதுஎன
யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத்
தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா அழியல் எழுந்துஇது கொள்ளாய்
நாடுவறங் கூரினும்இவ் ஓடுவறம் கூராது
வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
தான்தொலைவு இல்லாத் தகைமையது என்றே
தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும்

பொருள்

அறவண அடிகள் மணிமேகலைக்குச் சொல்கிறார். ஆபுத்திரனுக்கு மதுரை அம்பலப் பீடிகையில் ஒரு நாள் நிகழ்ந்ததைச் சொல்கிறேன், கேள். மழை பொழியும் நள்ளிரவில் வழிநடைப் பயணத்தால் களைப்புற்ற சிலர் தூங்கும் ஆபுத்திரனை எழுப்பி வாழ்த்தி வயிற்றுப் பசி மலை போல் உள்ளது என்றனர். பிச்சை எடுத்து ஈத்துண்ணும் வாழ்க்கை உடைய அவனுக்கு அவர்களின் பசியைப் போக்க வழி அறியாமல் துன்புற்றான். அப்போது அந்தப் பீடிகையில் எரியும் சிந்தாவிளக்குத் தெய்வம் அவன் முன் தோன்றி, வருந்த வேண்டாம் என்று சொல்லித் தன் கையிலிருந்த பாத்திரத்தை அவன் கையில் தந்து, "நாடே வறுமை உற்றாலும், இந்தப் பாத்திர ஓடு வறுமை இல்லாமல் உணவைச் சுரந்துகொண்டிருக்கும்,  பயன்படுத்திக்கொள்" என்று கூறிற்று.

2
சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே நாமிசைப் பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
ஏனோர் உற்ற இடர்களை வாய்எனத்
தான்தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி,
ஆங்கவர் பசிதீர்த்து அந்நாள் தொட்டு
வாங்குகை வருந்த மன்உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம்சேர் பறவையும்
தொக்குஉடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ
பழுமரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழும்என் சும்மை இடைஇன்று ஒலிப்ப,
ஈண்டுநீர் ஞாலத்து இவன்செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆகலின்
பொருள்
ஆபுத்திரன் தனக்கு அமுதசுரபி பாத்திரம் அளித்த சிந்தா தேவியைப் பாராட்டினான்.  கலை வேலைப்பாடுகள் கொண்ட நந்தா (தூண்டா) விளக்கே! என் நாவில் நடக்கும் பாவையே! வானோர் தலைவி

மண்ணோர் முதல்வி  மற்றவர் துன்பத்தைப் போக்குபவளே

என்றெல்லாம் போற்றி வணங்கினான். அங்கு வந்து உணவு வேண்டியவர்களின் பசியை அந்தப் பாத்தித்தால் போக்கினான். மற்றும் அது முதல் வாங்குபவர் கை  வருந்தும் அளவுக்கு உணவு வழங்கி உயிரினங்களைக் காப்பாற்றி வந்தான். மக்களும் விலங்குகளும் பழுத்திருக்கும் மரத்தில் பறவைகள் ஒலிப்பது போல, ஆபுத்திரனைச் சூழ்ந்து  உண்டு மகிழ்ந்து ஒலிக்கும் ஆரவார ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. இங்கு எழுந்த மகிழ்ச்சி ஒலி வானுலக இந்திரன் அவைக்களம் பாண்டுகம்பளத்தை உலுக்கியது.
3
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கைஓர் மறையோன் ஆகி
மாஇரு ஞாலத்து மன்உயிர் ஓம்பும்
ஆர்உயிர் முதல்வன் தன்முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாதுநின் கருத்து
உன்பெருந் தானத்து உறுபயன் கொள்கென
பொருள்
இந்திரன் முதிர்ந்த அந்தணன் உருவத்தில், கையில் தடி ஊன்றிக்கொண்டு, தளர்வாக ஆபுத்திரன் முன்னர் வந்தான்.  உலகின் உயிரினங்களைப் பாதுகாக்கும் முதல்வனாகிய ஆபுத்திரன் முன் வந்தான். "இந்திரன் வந்திருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும்? கேள். உன் தனத்துக்குப் பயனாகத் தருகிறேன். கொள்க" என்றான்.
4
வெள்ளை மகன்போல் விலாஇற நக்குஈங்கு
எள்ளினன் போம்என்று எடுத்துஉரை செய்வோன்
ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்
காண்தகு சிறப்பின்நும் கடவுளர் அல்லது
அறம்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்
நல்தவம் செய்வோர் பற்றுஅற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர்நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்துஅவர்
திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை
உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ
யாவைஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும்,
பொருள்

ஆபுத்திரன் ஒன்றுமறியாதவன் போல உடம்பு குலுங்க, இந்திரனைப் பார்த்து ஏளனம் செய்துகொண்டு சிரித்தான். இங்கு செய்த நல்வினைகளை உன்  உலகில் நுகரச் செய்பவன் நீ.  உன் தேவர்களும் அப்படிப்பட்டவர்கள்.  தேவர்கள் இங்கு  அறம் செய்பவர்களுக்கு உதவுவார்களா?  அல்லது இங்குள்ளவர்கள் போலத் தவந்தான் செய்வார்களா?  அல்லது இங்கு உள்ளவர்கள்  போலப் பற்றினை அறுக்க முயல்வார்களா?  இப்படிப்பட்டவர் யாரும் இல்லாத தேவர் நாட்டுக்குத் தலைவன் நீ. வருந்தி வந்தவர்களின் பசித் துன்பத்தைப் போக்கி, அவர்களின் மலர்ந்த முகத்தைக் காணச் செய்யும் ‘தெய்வக் கடுஞை’ என்னிடம் உள்ளது. இது என்னிடம் இருக்கும்போது, நீ எனக்கு என்ன தருவாய்? உணவா, உடையா? அல்லது இன்பம் தரும் பெண்களா, அல்லது பேணிப் பாதுகாப்பவர்களா? என்று தேவர்களின் அரசனை ஆபுத்திரன் கேட்டான்.

5
புரப்போன் பாத்திரம் பொருந்துஊண் சுரந்துஈங்கு
இரப்போர்க் காணாது ஏமாந் திருப்ப
நிரப்புஇன்று எய்திய நீள்நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல்வளம் சுரக்கென
ஆங்குஅவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன்
ஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்,

பன்னீ ராண்டு பாண்டிநல் நாடு
மன்உயிர் மடிய மழைவளம் இழந்தது
வசித்தொழில் உதவ மாநிலம் கொழுப்பப்
பசிப்புஉயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்
ஆர்உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை
ஊண்ஒலி அரவம் ஒடுங்கிய தாகி
விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும்
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமைய தாக,

பொருள்
ஆபுத்திரன் கையில் இருக்கும் பாத்திரம் உணவு சுரக்க வேண்டும். அதனை வாங்குவதற்கு யாரும் இல்லாமல் அவன் வருந்தி ஏமார வேண்டும். அதற்காக உலகம் முழுவதும் பல வளங்களும் சுரக்கும்படி மழை பொழியவேண்டும். இப்படி ஆபுத்திரனுக்காக, ஆயிரம் கண் பொண்ட இந்திரன் வரம் தந்துவிட்டுப் போய்விட்டான். அதனால் 12 ஆண்டு மழை இல்லாமல் வருந்திய பாண்டிய நாட்டில் மழைவளம் சுரந்தது. உயிரினங்கள் பசி வருத்தம் இல்லாமல் மகிழ்ந்தன. ஆபுத்திரன் இருந்த அம்பலப் பீடிகையில் உணவு உண்ணும் ஆரவாரம்  இல்லை. காமுகர், பரத்தர், சுற்றத்தாரைத் துறந்து திரிவோர் முதலானோர் அங்குச் சிரித்து மகிழலாயினர். வட்டும், சூதும் விளையாடி வம்பளந்துகொண்டு அங்குத் திரிந்தனர். எங்கும் எதற்கும் தட்டுப்பாடில்லாத வாழ்க்கை அங்கு நிலவுவதாயிற்று
6
ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி
ஊர்ஊர் தோறும் உண்போர் வினாஅய்
யார்இவன் என்றே யாவரும் இகழ்ந்துஆங்கு
அருந்தே மாந்த ஆர்உயிர் முதல்வனை
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள
ஒருதனி வரூஉம் பெருமகன் போலத்
தானே தமியன் வருவோன் தன்முன்,
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நல்நாட்டுத் தண்பெயல் மறுத்தலின்
ஊன்உயிர் மடிந்தது உரவோய் என்றலும்,
அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்தஎன் பாத்திரம் ஏந்தி
அங்குஅந் நாட்டுப் புகுவதுஎன் கருத்துஎன
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மால்இதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்
தங்கியது ஒருநாள் தான்ஆங்கு இழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்றுஇதை எடுத்து
வழங்குநீர் வங்கம் வல்இருள் போதலும்,
வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன்உயிர் ஓம்பும்இம் மாபெரும் பாத்திரம்
என்உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன்
சுமந்துஎன் பாத்திரம் என்றனன் தொழுது
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியின்
ஓர்யாண்டு ஒருநாள் தோன்றுஎன விடுவோன்
அருள்அறம் பூண்டுஆங்கு ஆர்உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர்கைப் புகுவாய் என்றுஆங்கு
உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்ப்புழி,
பொருள்

ஆபுத்திரன் மதுரை அம்பலத்தை விட்டு நீங்கினான். உணவு வேண்டுவோர் யார் என்று ஊர் உராக வினவிக்கொண்டே சென்றான். "இவன் யார்" என்று அவனை எல்லாரும் இகழ்ந்தனர்.  அருந்தும் உணவளித்துக் காப்பாற்றிய உயிர் முதல்வனை ஆர் என்பார் இல்லை. இருக்கும் திருச்செல்வம் அனைத்தையும் கடல் கொண்டு செல்லத் தனிமகனாய் வருபவன் போல ஆபுத்திரன் வந்துகொண்டிருந்தான். அப்போது கப்பலிலிருந்து வந்த சிலர் அவனைக் கண்டு வணங்கினர். சாவக நாட்டில் மழை  பொழியவில்லை. ஆதலால் உயிரினங்கள் அங்கு மடிந்துகொண்டிருக்கின்றன என்றனர்.

இந்திரன் ஆணையால் உணவு வழங்கும் பாத்திரம்  பயனற்றிருக்கும் பாத்திரத்தைப் பயனுடையதாக்க, வங்கக் கப்பலில் ஏறி சாவகத் தீவு நோக்கி ஆபுத்திரன் செல்லலானான். அப்போது புயல் காற்று வீசிற்று.  வங்கம் மணிபல்லவத் தீவில் ஒரு நாள் தங்கியது. அதன் பாய்மரத்தை (இதை) சீர் செய்துகொண்டிருந்தனர். ஆபுத்திரன் கப்பலை விட்டு இறங்கி நடமாடிக்கொண்டிருந்தான்.

இறங்கியவன் ஏறிவிட்டான் என்று எண்ணி மாலுமி கப்பலை ஓட்டிச் சென்றுவிட்டான். "வங்கம் போன பின்னர் அங்கு  வாழ்வோர் யார்ரும்  இல்லை. மக்கள் உயிரைக் காப்பாற்றும் இந்தப் பாத்திரம்  என் உயிரை மட்டும் காப்பாற்றுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். என் தவநிலை கெட்டுவிட்டது. இதனைச் சுமந்துகொண்டு வாழ்வது துன்பம்" என்று  சொல்லி, கோமுகி என்னும் பொய்கையில் போட்டுவிட்டான். "ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு நாள்  அது தோன்ற வேண்டும். அருளும் அறமும் பூண்டு உயினத்தைக் காப்பாற்றுவோர் உளர் எனில் இப்பாத்திரம் அவர் கைக்குப் போய்ச்  சேரவேண்டும்" என்று வேண்டிக்கொண்டு பொய்கையில் போட்டுவிட்டான்.  அதன் பின் உண்ணாமல் பட்டினி கிடந்து ஆபுத்திரன் உயிர் துறந்தான்.

7
அந்நாள் ஆங்குஅவன் தன்பால் சென்றே
என்உற் றனையோ என்றுயான் கேட்பத்
தன்உற் றனபல தான்எடுத்து உரைத்தனன்

குணதிசைத் தோன்றிக் கார்இருள் சீத்துக்
குடதிசைச் சென்ற ஞாயிறு போல
மணிபல் லவத்திடை மன்உடம்பு இட்டுத்
தணியா மன்உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன்
ஆவயிற்று உதித்தனன் ஆங்குஅவன் தான்என்.

பொருள்

அறவண அடிகள் மணிமேகலையிடம் கூறுகிறார். அவன் உயிர் விடப் பட்டினி கிடந்த நாளில் நான் அவனிடம் இருந்தேன். "என்ன துன்பம்?" என்று வினவினேன். நான் சொன்னவாறு அவன் தன் துன்பத்தை எடுத்துரைத்தான். கிழக்குத் திசையில் தோன்றிய சூரியன் இருளைப் போக்கிக்கொண்டு இருந்துவிட்டு மேற்குத் திசையில் மறைவது போல ஆபுத்திரன் மறைந்தான். உயிரினங்களைக்  காப்பாற்றும் தணியாத ஆசை  காரணமாக சாவகத் தீவை ஆளும் வேந்தனின் பசு வயிற்றில் அவன் பிறந்துள்ளான்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்