ஊர் காண் காதை விளக்கம் - மதுரைக் காண்டம் - சிலப்பதிகாரம்

 

                                                                       1. சிலப்பதிகாரம்

                மதுரைக் காண்டம் - ஊர் காண் காதை    

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்காப்பியம். கதையில் வரும் முக்கிய  நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிலம்பே காரணமாக இருத்தலின் இது சிலப்பதிகாரம் எனப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு.

ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்புடையது. கோவலன் ,கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது.

நூல் அமைப்பு

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் ஆகிய மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. புகார்க் காண்டம் மங்கல வாழ்த்துப் பாடல் தொடங்கி நாடுகாண் காதை முடிய 10 காதைகளையும், மதுரைக்காண்டம் காடுகாண்காதை தொடங்கி கட்டுரை காதை முடிய 13 காதைகளையும், வஞ்சிக்காண்டம் குன்றக்குரவை என்ற தலைப்பில் தொடங்கி வரந்தரு காதை முடிய 7 காதைகளையும் கொண்டு மொத்தம் 30 காதைகளைக் கொண்டு விளங்குகிறது.

நூல் சிறப்பு

இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்டது இந்நூல்.காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியம். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வர்ணிக்கப்பட்டுள்ளன.

அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும்.

சிறப்புப் பெயர்கள்

 ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை;குடிமக்கள் காப்பியம் என்றும்,

இயல், இசை ,நாடகம் என்ற முத்தமிழும் விரவிக் காணப்படுவதால் “முத்தமிழ்க் காப்பியம்” என்றும்,

புதுமைமிகு கருத்துகள் பல கொண்டதால் “புரட்சிக் காப்பியம்” என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமை பேசுவதால் “மூவேந்தர் காப்பியம்” என்றும்,

அக்காலத் தமிழக மக்களின் வரலாற்றை அறியும் கருவுவூலமாக விளங்குவதால் வரலாற்றுக் காப்பியம்“ என்றும் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது.

 “உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள்” எனவும்   குறிக்கப்பெறுகிறது.

காப்பியத்தின் கதை

 காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகியபெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர். கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி  இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள்.

பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்குவழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான். பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன்,பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனால் மன்னின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்? என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி;ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம் கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது.என்றாள். அதற்கு அரசன்;நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப்பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய் ;பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்; என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். சினம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள். பின் சேரநாடு சென்று 14 நாட்கள் மலையில் தவமிருந்து கோவலனோடு சேர்ந்தாள்.

ஊர்காண் காதை

புறஞ்சேரியில் கண்ணகியையும் கவுந்தியடிகளையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது.  மதுரைக் காண்டம் - 4. ஊர் காண் காதை


1
புறஞ்சிறைப் பொழிலும்பிறங்கு நீர்ப் பண்ணையும்,
இறங்கு கதிர்க் கழனியும்புள் எழுந்து ஆர்ப்ப;
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம்
வேந்து தலை பனிப்பஏந்து வாள் செழியன்
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப-

விளக்கம்
 

புறஞ்சேரியில் இருந்த சோலைகளிலும்நீர் நிறைந்திருக்கும் பண்ணைகளிலும்,  கதிர் 

வாங்கி விளைந்திருக்கும் வயல்களிலும்பறவைகள் பறந்து ஒலிக்கும்படியும்

வைகறைப் பொழுதில் தாமரை மலரும்படியும், - பொதிந்திருந்த சூரியன் தோன்றிற்று.  

வாளேந்திய செழியன் பேந்தர்களின் தலைகளை வணங்கும்படிச் செய்யப் புறப்பட்டது. 

உலகை உறக்கத்திலிருந்து எழுப்பியது.               
2
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்,
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்,
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்.
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்,
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்,
வால் வெண் சங்கொடு வகை பெற்று ஓங்கிய
காலை முரசம் கனை குரல் இயம்ப-

விளக்கம்

நெற்றிக்கண் சிவன் கோயில்

கருடக்கொடியோன் திருமால் கோயில்

கலப்பை ஏந்திய பலராமன் கோயில்

சேவல் கொடி கொண்ட முருகன் கோயில்

அறம் வளர்க்கும் அருகன் பள்ளி

மறத்திறம் காட்டும் மன்னன் அரண்மனை

இங்கெல்லாம் சங்கு ஊதும் ஒலியும்முரசு முழக்க ஒலியும் காலையில் கேட்டன.

3
கோவலன் சென்றுகொள்கையின் இருந்த
கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி,
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி,
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த,
அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து,
சிறுமை உற்றேன்செய் தவத்தீர்! யான்:
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என் நிலை உணர்த்தியான் வரும்காறும்,
பாதக் காப்பினள் பைந்தொடிஆகலின்,
ஏதம் உண்டோஅடிகள்! ஈங்கு?’ என்றலும்-

விளக்கம்

கோவலன் கவுந்தியைப் போற்றிக் கை கூப்பி வணங்கினான். நான் என் நெறி நீங்கிய 

ஒழுக்கத்தால் எல்லாருக்கும் துன்பத்தைக் கொண்டு அறியாத இடத்துக்கு  வந்து 

துன்புறுகிறேன். தவப் பெருமாட்டியே! இந்தப் பழமையான நகரில் மன்னரின் 

வழிநிற்பவர்களுக்கு என் நிலைமையை உணர்த்திதிரும்பி வரும் வரையில் என் 

மனைவி தங்கள் திருவடிகளைக் காத்துக்கொண்டிருப்பாள். இதனால் அடிகளாகிய 

தங்களுக்கு இங்கு ஏதாவது துன்பம் உண்டோ - எனக் கோவலன் வினவினான்.


4
கவுந்தி கூறும்: ‘காதலி-தன்னொடு
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்!
மறத்துறை நீங்குமின்வல் வினை ஊட்டும்” என்று,
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,
நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்,
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்;
தீது உடை வெவ் வினை உருத்தகாலை,
பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர்;
ஒய்யா வினைப் பயன் உண்ணும்காலை,
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்;
பிரிதல் துன்பமும்புணர்தல் துன்பமும்,
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்,
புரி குழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது,
ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை;
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்
கண்டனர் ஆகிகடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்துஆங்கு,
ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால்இறந்தோர் பலரால்;

விளக்கம்


கவுந்தி கோவலனிடம் கூறுகிறாள்.

காதலியுடன் தவம் இல்லாத வாழ்க்கையில் ஈடுபட்டுத் துன்புற்றாய். மற நெறியைக் 

கைவிடுக. அதன் வல்வினை மீண்டும் உன்னைத் தாக்கும். - என்று அறத்துறை 

மக்கள் நாக்கைக் கடித்துக்கொண்டு சினம் கொண்டு சொன்னாலும் பிடிப்பு 

இல்லாதவர்கள் அதனைப் பின்பற்றுவதில்லை.  செய்த வினை வந்து தாக்கும்போது 

அறியாமையால் மயக்கத்தில் துன்புறுகின்றனர்.கற்றறிந்த மக்கள் தாம் 

உய்த்துக்ககொண்டு வராத வினை வந்து தாக்கினாலும் வருந்த மாட்டார்கள்.

விரும்பியதைப் பிரிவதால் வரும் துன்பம்விரும்பாதவை வந்து சேர்வதால் வரும் 

துன்பம்உருவம் இல்லாத காமன் தண்டிக்கும் துன்பம் ஆகியவை தனிமை 

மேற்கொண்டுள்ள நெஞ்சுரம் படைத்தவர்களுக்கு இல்லை.

பெண்களும் உணவும் மட்டுமே உலகில் இன்பம் தருவன என்று கொண்டவர் 

அளவில்லாத் துன்பம் அடைந்தனர்.அனைத்தையும் கடந்த கடவுளர் வேண்டாம் என 

ஒதுக்கிய இந்த இரண்டு இன்பங்களைத் துய்த்துகாமத்தில் நிறைவு பெறாமல் 

துன்புறுகின்றனர். இப்படித் துன்பப் பட்டு இறந்தவர்களும் பலர் உண்டு.


5
தொன்றுபட வரூஉம் தொன்மைத்துஆதலின்:
தாதை ஏவலின் மாதுடன் போகி,
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோநெடுமொழி அன்றோ?
வல் ஆடு ஆயத்துமண்அரசுஇழந்து;
மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன்
காதலின் பிரிந்தோன் அல்லன்: காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்:
அடவிக் கானகத்து ஆய்-இழை-தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது
வல் வினை அன்றோமடந்தை-தன் பிழை எனச்
சொல்லலும் உண்டேல்சொல்லாயோநீ
அனையும் அல்லைஆய்-இழை-தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றோ?
வருந்தாது ஏகிமன்னவன் கூடல்;
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு’ என்றலும்-

விளக்கம்


துன்பம் என்பது தொன்று தொட்டு அனைவர்க்கும் வருவது. 

தந்தை ஏவியபடி இராமன் தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்றான். மனைவியை 

இழந்து பெரிதும் துன்புற்றான். அவன் வேத முதல்வன். அவனுக்கே இந்த நிலைமை 

என்பது உனக்குத் தெரியாதாஇது நீண்ட காலமாக இருந்துவரும் உண்மை அல்லவா?

வல்லுச் சூதாட்டம் ஆடிநாட்டையும் ஆட்சி உரிமையையும் இழந்து மனைவியுடன் 

நளன் காட்டை அடைந்தான். மனைவியை தள்ளிரவில் அவனே விட்டுவிட்டுப் 

போனான். மனைவி யாதும் தீது செய்யவில்லை. அப்படிப்பட்டவளை விட்டுச் 

சென்றது வல்வினையாகிய விதி அல்லவாஇதனைப் பெண்ணின் பிழை என்று நீ 

சொல்வாயாநீ அப்படித் துன்பம் அடையவில்லை. மனைவியைப் பிரியா நிலை 

பெற்றிருக்கிறாய்  அல்லவாவருந்தாமல் சென்று மன்னவன் மதுரையில் 

பொருத்தமானதை  அறிந்துகொண்டு மீள்க - என்று கவுந்தி கோவலனை 

அறிவுரையுடன் அனுப்பிவைத்தாள்.



இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில்
பெரும் கை யானை இன நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி-

விளக்கம்

இளைய மரமடர்ந்த காவல்காட்டுடன் மதுரையைச் சுற்றிலும் அகழி இருந்தது. 

அதனைக் கடந்து செல்லச் சுருங்கை-வழி (குகைப் பாதை) ஒன்று இருந்தது. அந்தப் 

பாதை யானையின் அணிவகுப்பே செல்லும் அளவுக்கு இருந்தது. அதன் வழியே 

கோவலன் மதுரைக்ககுள் சென்றான்.

7     
கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு,
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய் திறந்தன்ன மதில் அக வரைப்பில்-  

விளக்கம்


மதுரையின் காப்பு வாயிலை யவனர் காத்தனர். அவர்கள் கொல்லும் வாளுடன் 

பாதுகாத்தனர். அவர்களைக் கண்டு அஞ்சாமல் கோவலன் மதுரைக்குள் நுழைந்தான். 

உள்ளே மதிலகம். அது தேவேந்திரன் செல்வம் வைத்திருக்கும் கருவூலம் போலப் 

பாதுகாப்பினை உடையது. அதன் வழியே கோவலன் சென்றான்.

8
குட காற்று எறிந்துகொடி நுடங்கு மறுகின்
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை
விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி,
பூம் புணை தழீஇபுனல் ஆட்டு அமர்ந்து-  

விளக்கம்

கொடிகள் பறக்கும் தெருவில் மேலைக்காற்று வீசும். அதில் வாழும் மகளிர் தம் 

குழந்தைகளுடன் மருத மரம் ஓங்கியிருந்த  வையை ஆற்றுத்துறை மணல் மேட்டுத் 

பூங்காத் துருத்திக்கு வருவர். அங்கே உலவும் ஓங்கிய மாடக் கப்பல்களில்  

ஏறிக்கொண்டும்சிறிய புணைகளில் அமர்ந்துகொண்டும் வையையின் நடு நீரில் 

நீராடுவர்.

9
தண் நறு முல்லையும்தாழ் நீர்க் குவளையும்,
கண் அவிழ் நெய்தலும்கதுப்பு உற அடைச்சி;
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல்
கொற்கை அம் பெரும் துறை முத்தொடு பூண்டு;
தெக்கண மலயகச் செழுஞ் சேறு ஆடி,
பொன் கொடி மூதூர்ப் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு-

விளக்கம்

முல்லைகுவளை,  நெய்தல், - பூக்களைத் தலையில் சூடிக்கொண்டும்மல்லிகைப் பூ

செங்கழுநீர்ப் பூ மாலைகளும்கொற்கை முத்தாலான முத்தாரமும் அணிந்துகொண்டு

தெக்கண மலையாகிய பொதியமலையின் சந்தனக் குழம்பைப் பூசிக்கொண்டும் 

மக்கள் மதுரை மூதூர்ப் பொழிலில் விளையாடுவர்.


10
எல் படு பொழுதின் இள நிலா முன்றில்,
தாழ்தரு கோலம் தகை பாராட்ட,
வீழ் பூஞ் சேக்கைமேல் இனிது இருந்து-ஆங்கு-

விளக்கம்


பொழுது இறங்கும் நேரம் ‘எற்பாடு’. அந்த நேரத்தில் கதிரவன் ஒளி இளகிய 

நிலவொளி போல வீசும். அப்படி ஒளி வீசும் காலத்தில் மக்கள் நிலாமுற்றத்தில் பூ 

மெத்தையில் அமர்ந்திருப்பர். 



11
அரத்தப் பூம் பட்டு அரைமிசை உடீஇ,
குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி,
சிறுமலைச் சிலம்பின் செங் கூதாளமொடு
நறு மலர்க் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து,
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து,
செங் கொடுவேரிச் செழும் பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில்
அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு,
மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்குக்
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட,
கார் அரசாளன் வாடையொடு வரூஉம்
காலம் அன்றியும்-  நூலோர் சிறப்பின்,

விளக்கம்

இடுப்பில் சிவப்பு நிற ஆடைகுடச ஒப்பனை செய்த கூந்தல்,  சிறுமலைக் காட்டில் 

பூத்த செங்கூதாளப் பூகுறிஞ்சிப்பூ சூடிய கூந்தல்குங்குமம் பூசிய கொங்கை

செங்கோட்டு வேரிப்பூவால் தொடுத்த மாலைமேனியில் சிந்தூரம் என்னும் 

மணப்பொடிப் பூச்சுபவளக் கோவை அணி - என்று அழகுக் கோலத்தை மகளிர் 

புனைவர். - கிரவுஞ்ச மலையின் சிறகினை வெட்டிய முருகனுக்குக் காட்டுவான் 

வேண்டிப் புனைவர் - கார் காலத்தை அரசாளும் வேந்தனை வரவேற்குச் 

செவ்வணியாகக் காட்டுவான் வேண்டிப் புனைவர். வாடைக் காற்றோடு வரும் 

காலத்தை இப்படி மகளிர் வரவேற்பர்.

12

முகில் தோய் மாடத்துஅகில் தரு விறகின்
மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து;
நறுஞ் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு
குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்-

விளக்கம்

மேகம் தோயும் மாடங்களில் இருக்கும் மகளிர் கூதிர் காலத்தில் அகில் கட்டையைப் 

புகைத்துக் குளிர் காய்வர். சந்தனம் பூசிய நம்பியரோடு சேர்ந்து காற்று வரும் 

சன்னல்களை அடைப்பர்.


13
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி,
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர,
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்புவெண் மழை
அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்-

விளக்கம்

முன்பனி பொழியும் காலத்தில் மகளிரும் மைந்தரும் இள வெயிலை விரும்பி 

முற்றத்துக்கு வருவர். கதிரவன் தென்பகுதியில் தோன்றும். வெண்மழை மேகங்கள் 

எப்போதாவது தோன்றும்.

14
ஆங்கு அது அன்றியும், ‘ஓங்கு இரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும்துகிலும்ஆரமும்வாசமும்,
தொகு கருப்பூரமும்சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்துகோமகன் கூடல்
வெங் கண் நெடு வேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன்?- 

விளக்கம்

மேலைக்காற்று வீசத் தொடங்கும் பங்குனித் திருவிழாவின்போது வில்லேந்தி 

விளையாடும் காமன்  திருவிழா மதுரையில் நடைபெறும். அப்போது சேர நாட்டுத் 

தொண்டித் துறைமுக மக்கள் மதுரைக்கு வருவர். வங்கக் கப்பலில் தொண்டிக்கு 

வந்தபொருள்களுடன் வருவர். மற்றும்அகில்துகிலாடைசந்தனம்மணப் பொருள்கள்

கருப்பூரம்ஆகியவற்றைச் சுமந்துகொண்டு வருவர். கிழக்குத் திசை நோக்கி வருவர். 

இது பனி-அரசன் ஆளும் அரசாட்சி. இவன் எங்கே இருக்கிறானோ - என்று 

வினவும்படி மக்கள் வாழ்வர்.


15
கோதை மாதவி கொழுங்கொடி எடுப்ப
காவும் கானமும் கடிமலர் ஏந்த,
தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து,
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம்
இன் இளவேனில் யாண்டு உளன்கொல்?’ என்று,
உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு
பருவம் எண்ணும் படர் தீர் காலை-

விளக்கம்

கொத்துக்கொத்தாக மாதவி மலர் பூக்கும். வளர்க்கும் காடுகளிலும் வளர்க்காத 

கானங்களிலும் பூக்கள் மணக்கும். தென்னவன் ஆளும் பொதியமலையிலிருந்து 

தென்றல் காற்று வரும். இது மதுரை மக்களைத் திளைக்கச் செய்யும்.

இப்படிப்பட்ட இளவேனில் என்னும் அரசனை மக்கள் தேடுவர்.

கொடி உருவம் பெற்றிருக்கும் மகளிர் கொழுநரோடு திளைப்பர்.

16
கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக்
காடு தீப் பிறப்பகனை எரி பொத்தி,
கோடையொடு புகுந்துகூடல் ஆண்ட
வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர,
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்-
வையமும்சிவிகையும்மணிக் கால் அமளியும்,
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும்,
சாமரைக் கவரியும்தமனிய அடைப்பையும்,
கூர் நுனை வாளும்கோமகன் கொடுப்ப;
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து;
செம் பொன் வள்ளத்துசிலதியர் ஏந்திய
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி;
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும்
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு:
இலவு இதழ்ச் செவ் வாய் இள முத்து அரும்ப,
புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்;
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்தன்ன.
செங் கயல்நெடுங் கண் செழுங் கடைப் பூசலும்;
கொலை வில் புருவத்துக் கொழுங் கடை சுருள,
திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்;
செவ்வி பார்க்கும் செழுங் குடிச் செல்வரொடு
வையம் காவலர் மகிழ்தரு வீதியும்-


விளக்கம்

கோடை என்னும் மேலைக்காற்று வீசும் வேனில் காலம் மதுரையை விட்டுக் 

கடந்துவிட்டது. கன்றுகளுடன் இருக்கும் பசுக்கூட்டம் நடுங்கும்படிச் செய்த வேனில் 

விட்டுவிட்டுப் போய்விட்டது. காடு தீ பறக்கும்படிக் கொளுத்திய வெயில் 

போய்விட்டது. வேறு நிலப்பகுதிக்குச் சென்றுவிட்டது. போய்க்கொண்டிருக்கும் 

வெயிலின் கடைசி நாள் அது.  அன்றுதான் கோவலன் மதுரைக்குள் நுழைகிறான்.

மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கும் நேரம்.

வையம் என்னும் மூடாக்கு வண்டியிலும்சிவிகை என்னும் பல்லக்கிலும் 

சென்றுகொண்டிருந்தனர். சிலர் மணியாலான கால் கொண்ட கட்டிலில் 

அமர்ந்திருந்தனர். சிலர் உய்யானத்தில் துணைவியருடன் அமர்ந்து ஊஞ்சலாடி 

மகிழ்ந்துகொண்டிருந்தனர். சிலர் வீசும் வெஞ்சாமரைக் காற்றில் திளைத்தனர். சிலர் 

தங்கத்தாலான வெற்றிலைப் பாக்குப் பெட்டியைத் திறந்து வெற்றிலைப் பாக்குப் 

போட்டுக்கொண்டு மகிழ்ந்தனர். சிலர் கூரிய வாளை ஏந்தி நின்றனர். சிலருக்கு 

அரசன்  வழங்கிய செல்வம் இருந்தது. அதனைப் பெற்ற பொற்றொடி மகளிர் சிலர் 

புது மணம் புரிந்துகொண்டு வாழ்ந்தனர். சிலர் வேலைக்காரப் பெண்கள் செம்பொன் 

கிண்ணத்தில் தந்த தேறல் கள்ளை உண்டு மகிழ்ந்து மயங்கினர். அங்கு வண்டுகள் 

மொய்த்துக்கொண்டிருந்தன. சிலர் காதலருடன் தழுவிக்கொண்டிருந்தனர். சிலர் 

மணக்கும் மாலை அணிந்துகொண்டு தன் இலவம் பூ போன்ற சிவந்த வாயைத் 

திறந்து இள முத்துக்கள் தோன்ற கணவருடன் ஊடி உரையாடிக்கொண்டிருந்தனர். 

அதனைப் பொருட்படுத்தாத கணவன்மார் வாய் பேசாமல் எட்டு இட்டுக்கட்டு ஊடல் 

உரைக்கு விடையாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். அதைக் கண்ட மகளிரின் கயல் 

போன்ற கண்கள் கடைப் பகுதியில் சிவந்து பூசலிட்டன. கொலை வில் போன்ற 

அவர்களின் புருவம் சினத்தால் சுருண்டன. அவர்களின் நெற்றியில் வியர்வை 

அரும்பியது. இப்படிச் செழுங்குடி மக்களும்உலகைக் காக்கும் மக்களும் திளைக்கும் 

வீதி வழியாகக் கோவலன் சென்றான்.


17
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை,
வேத்தியல்பொதுவியல் என இரு திறத்து,
மாத்திரை அறிந்துமயங்கா மரபின்
ஆடலும்வரியும்பாணியும்தூக்கும்,
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து,
நால் வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பு-அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்;
வாரம் பாடும் தோரிய மடந்தையும்;
தலைப் பாட்டுக் கூத்தியும்இடைப் பாட்டுக் கூத்தியும்;
நால் வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டுஆங்கு,
அரும் பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக,
தவத்தோர் ஆயினும்தகை மலர் வண்டின்
நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும்,
காம விருந்தின் மடவோர் ஆயினும்,
ஏம வைகல் இன் துயில் வதியும்
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல்
எண்-எண் கலையோர் இரு பெரு வீதியும்-  


 விளக்கம்

 காம விருந்தளிக்கும் மகளிர் மதுரையில் தனித் தெருவில் வாழ்ந்தனர். அவர்கள் 

குற்றம் சுமத்தப்பட்டு தலையில் சுட்டமண் செங்கல் ஏற்றிக் கொண்டுவரப்படாத 

பொதுமகளிர்  குற்றம் புரிந்த விலைமகளின் தலையில் ஏழு செங்கல்களை ஏற்றி 

ஊரைச்  சுற்றி அழைத்து வருதல் அக்கால வழக்கம்,

முடி சூடிய அரசர்களும் ஒடுங்கிக் கிடக்கும் காப்புள்ள மனைகளில் அவர்கள் வாழ்வர்.

அவர்கள் வேத்தியல் பொதுவியல் என்னும்  இருவகைக் கூத்தும் தாளம் தப்பாமல் 

ஆடுவர். வரிப்பாட்டு,  இசைப்பாணிஇயல் பாட்டு ஆகியவற்றுடன் குழலிசைக்கு ஏற்ப 

ஆடுவர். நான்கு வகையான அவிநயக் களத்திலும்ஏழு வகையான ஆட்ட நிலத்திலும் 

தேர்ச்சி பெற்றவர்கள். அவற்றைச் சொல்லித் தருவோரும் இருந்தனர்.

ஆடித் ‘தலைக்கோல்’ விருது பெற்றவர்களும் இருந்தனர்.

பின் பாட்டுப் பாடும் தோரிய மடந்தை மகளிரும் இருந்தனர்.

முன் பாட்டுப் பாடும் தலைப்பாட்டுக் கூத்தியும்இடைப்பாட்டுப் பாடும் கூத்தியும் 

இருந்தனர். நால்வேறு வகையில் ஆடி 1008 கழஞ்சு பொன் நாள் ஒன்றுக்குப் பெறும் 

கூத்தியரும் இருந்தனர். அவர்கள் தாக்கும் அணங்கு போன்றவர்கள்.

அவர் பார்க்கும் பார்வை வலையில் பட்டு அறிவு பிறிதாகி வீழ்ந்தவர் பலர்.

தவம் செய்தவரும் வீழ்ந்தனர். வண்டு போல் அவர்களின் புன்னகைக்காகக் 

காத்திருக்கும் இளையவர்களும் உண்டு. இவர்கள் காம விருந்தின் மடவோர் எனப் 

போற்றப்படுபவர். இன்பத் துயில் தரும் இவர்கள் 64 கலைகளிலும் தேர்ச்சி 

பெற்றவர்களாக இருந்தனர். இவர்களின் வீதி வழியாகக் கோவலன் சென்றான்


18
வையமும்பாண்டிலும்மணித் தேர்க் கொடுஞ்சியும்,
மெய் புகு கவசமும்வீழ் மணித் தோட்டியும்,
அதள் புனை அரணமும்அரியாயோகமும்,
வளைதரு குழியமும்வால் வெண் கவரியும்,
ஏனப் படமும்கிடுகின் படமும்,
கானப் படமும்காழ் ஊன்று கடிகையும்,
செம்பின் செய்நவும்கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும்மாலையின் புனைநவும்,
வேதினத் துப்பவும்கோடு கடை தொழிலவும்,
புகையவும்சாந்தவும்பூவின் புனைநவும்,
வகை தெரிவு-அறியா வளம் தலைமயங்கிய,
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்-


விளக்கம்

மதுரைக் கடைத்தெரு அரசனும் அடைய விரும்பும் பண்டங்களைக் கொண்டது. அங்கு

விற்கப்பட்ட பண்டங்களில் சில:

மூடாக்கு வண்டி,பல்லாக்கு ஏறிச் செல்லும் தேரில் வைக்கப்படும் கொடுஞ்சி என்னும் 

இருக்கை ,மார்புக் கவசம்

வீழ்த்தும் தொரட்டு (மணி பதித்தது)

தோலாலான உடம்புக் கவசம்

தவம் புரிய உதவும் சிங்கத் தோல்

வளைந்திருக்கும் குழியம் என்னும் படைக்கருவி (boomerang)

விசிறும் வெண் கவரி

அன்னப் பறவை துணிப் பொம்மை

வெண்டுகளால் செய்யப்பட்ட பொம்மை

காடுகள் எழுதிய திரைத்துணி

வயிர மாலை

செம்பில் செய்தவை

வெண்கலத்தில் செய்தவை

முடிச்சுப் போட்டுச் செய்யப்பட்ட பொருள்கள்

மாலையில் செய்யப்பட்ட பொருள்கள்

பவளத்தால் கோக்கப்பட்டவை

சங்கினைக் கடைந்து செய்யப்பட்டவை

நறுமணப் புகை

சந்தனப் பொருள்கள்

பூ வேலைப்பாடுகள்

போன்றவை வகை தெரியா வளங்களாகக் குவிந்து அரசனும் விரும்பும் கடைத்தெரு 

 

அது.


19
காகபாதமும்களங்கமும்விந்துவும்,
ஏகையும் நீங்கிஇயல்பின் குன்றா
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்;
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசு ஆர் மேனிப் பசுங் கதிர் ஒளியவும்;
பதுமமும்நீலமும்விந்தமும்படிதமும்,
விதி முறை பிழையா விளங்கிய சாதியும்;
பூச உருவின் பொலம் தெளித் தனையவும்;
தீது அறு கதிர் ஒளித் தெண் மட்டு உருவவும்;
இருள் தெளித்தனையவும்இரு வேறு உருவவும்;
ஒருமைத் தோற்றத்து ஐ-வேறு வனப்பின்
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்;
காற்றினும்மண்ணினும்கல்லினும்நீரினும்,
தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும்;
சந்திர-குருவேஅங்காரகன்என
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்;
கருப்பத் துளையவும்கல்லிடை முடங்கலும்,
திருக்கும்நீங்கிய செங் கொடி வல்லியும்;
வகை தெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப்
பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும்-

விளக்கம்

காகபாதம்களங்கம்விந்து. ஏகை - ஆகியன மணிக் கற்களில் காணப்படும் 

 

குற்றங்கள். இந்தக் குற்றங்கள் நீக்கப்பட்ட மணிகள். மணிக்கல் நூலில் 

 

வல்லவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை அவை. நுண்மையான கோடி விளிம்புகள் 

 

கொண்டவை.  நான்கு வகையான வருணப் பெயர்கள்  சூட்டப்பட்டவை. நல்ல ஒளி 

 

உடையவை.இந்த மணிகளால் செய்யப்பட்ட ஏகை என்னும் தனிமணி மாலை

பன்மணி மாலை இருள் உள்ள பச்சை மேனியிலும் பச்சை ஒளி ஊட்டக்கூடியவை

பதுமம்,நீலம்விந்தம்படிதம் என்னும்  சாதி மணிகள்

பொன்னில் சேர்த்துச் செய்யப்பட்டவை . கதிரவன் ஒளி போன்றவை

இருட்டு போன்றவை இருள்ஒளி இரண்டும் கலந்து ஐந்து வகையான ஒளி வீசும்படி 

வனப்புடன் செய்யப்பட்டவை காற்றுமண்கல்நீர் - ஆகியவற்றால் ஒளிநிறம் 

மாறாதவை  திங்கள்புதன்செவ்வாய் கோள் வட்டம் போல் ஒளிர்பவை

கருப்பத் துளைகல் மடிப்புதிருக்கு - ஆகியவை நீங்கிய செங்கொடி வல்லி ஓட்டம் 

கொண்டவை. இவற்றின் வகை தெரிந்த மக்கள் இந்த மணிக் கற்களை விற்றுவந்தனர்.

20
சாதரூபம்கிளிச்சிறைஆடகம்,
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின்
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்துஆங்கு,
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்-
விளக்கம்

சாதரூபம்,

கிளிச்சிறை,

ஆடகம்,

சாம்பூநதம்

ஆகியவை பொன்னின் தர வகைகள்.

இவற்றின் தரம் தெரிந்த மக்கள் வாங்கும் மக்கள் கலங்காமல் இருக்கும் வகையில் 

அவற்றின் தரத்தைக் காட்டும் கொடிகள் பறக்கும்படிக் கட்டி விற்பனை செய்துவந்தனர்.

 கோவலன் இப்படிப்பட்ட பொன்னணி வீதி வழியாகச் சென்றான்.


21
நூலினும்மயிரினும்நுழை நூல் பட்டினும்
பால் வகை தெரியாப் பல் நூறு அடுக்கத்து,
நறு மடி செறிந்த அறுவை வீதியும்-


விளக்கம்

பருத்தி நூல்மயிர் நூல்,  பட்டு நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டுஇன்ன வகை 

என்று சொல்ல முடியாத அளவுக்கு பல நூறு வகையாக அடுக்கி மடி மடியாகத் 

துணிக்கடைத் தெருவில் வைக்கப்பட்டிருந்தது.

22
நிறைக் கோல் துலாத்தர்பறைக் கண் பராரையர்,
அம்பண அளவையர்எங்கணும் திரிதர,
காலம் அன்றியும்கருங் கறி மூடையொடு
கூலம் குவித்த கூல விதியும்-
விளக்கம்

அரிசிபருப்பு முதலானவை விற்கும் தெரு கூல வீதி. 

சிலர் சிலவற்றை நிறுத்து விற்றனர்.

சிலர் சிலவற்றைப் கும்பல் கும்பலாகக் குவித்து கும்பலை விலை பேசி விற்றனர்.

சிலர் சிலவற்றைப் படிஉழக்கு போன்றவற்றால் அளந்து விற்றனர்.

விளையும் காலம் இல்லாவிட்டாலும் மிளகு மூட்டைகள் குவிந்து கிடந்தன.

23
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
அந்தியும்சதுக்கமும்ஆவண வீதியும்,
மன்றமும்கவலையும்மறுகும்-திரிந்து,
விசும்பு அகடு திருகிய வெங் கதிர் நுழையாப்
பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல்,
காவலன் பேர் ஊர் கண்டுமகிழ்வு எய்தி,
கோவலன் பெயர்ந்தனன்கொடி மதில் புறத்து-என்.

விளக்கம்

பகுதி பகுதியாகப் பிரிந்து கிடந்த நான்கு திசை வீதிகளிலும் அந்தி என்னும் தெருச் 

சந்துகள்சதுக்கம் என்னும் நான்கு தெருக்கள் கூடும் இடங்கள்ஆவணங்கள் 

பாதுகாக்கப்படும் தெருபொதுமக்கள் கூடும் மன்றம்தெருக்கள் பிரியும் கவலை

வளைந்து செல்லும் மறுகுத் தெருக்கள் -  இப்படி எங்கும் கோவலன் கண்டு திரிந்து 

பலவற்றையும் கண்டான். தெருவில் போடப்பட்டிருந்த பந்தல் நிழலில் திரிந்நதான்.  

மகிழ்ந்தான். கொடி பறக்கும் மதிலுக்குப் புறத்தே வந்தடைந்தான்.

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்