வட்டக் கண்ணாடி-தோப்பில் முஹம்மது மீரான்

                                           வட்டக் கண்ணாடி

                             தோப்பில் முஹம்மது மீரான்


தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டில் சாய்வு

நாற்காலி என்ற நாவலுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். 

பாரம்பரியவீட்டின்மீதும் பொருட்கள் மீதும் கொண்டிருந்த ஈடுபாட்டை இந்தச் 

சிறுகதை விளக்குகின்றன.


                                     வட்டக்கண்ணாடி


நான் தங்கி வருவது, பழைய ஒரு நாலு கட்டு வீட்டின் இடிக்கப்படாத வட

பகுதியில். நாலு கட்டு வீட்டை எங்களுக்குள் பங்கு போட்டபின் தம்பிக்குக்

கிடைத்த தென் பகுதியை இடித்துவிட்டு அதே இடத்தில் காலத்திற்கேற்றபடி

புதியதொரு கான்கிரீட் வீட்டை -‘தாருல் ஸமானை’ எழுப்பினான் தம்பி.

இரண்டு அறைகள், சிறிய கண்ணாடித் திண்ணை, நடுத்தளம், அடுக்களை,

இவை என் பங்கிற்குக் கிடைத்தன. உப்பா – பாட்டனார் – உறங்கிக்

கொண்டிருந்தது, என் பங்கிற்குக் கிடைத்த கண்ணாடித் திண்ணையில் 

கிடக்கும்உடம்பறையில் உப்பாவின் வியர்வை உலர்ந்து ஒட்டிய 

உடம்பறையில்.(உடம்பறை – கட்டில் போன்றது) உப்பாவிற்குப் பிறகு வாப்பா

படுத்துறங்கிக் கொண்டிருந்தார். வாப்பாவிற்குப் பிறகு, நான் படுத்துறங்கி

வந்தேன். இப்போது அதில் படுத்துறங்காததால் எனக்கு இரவு உறக்கம் 

வருவதே இல்லை. உடம்பறை கிடக்கும் கண்ணாடித் திண்ணைக்குள் 

இப்பொழுது நான் நுழைவதுமில்லை. நுழைந்தால், கிரிக்கெட் மட்டையை என் 

நெஞ்சிற்கு நேராக ஓங்கிக்கொண்டு ஒருவன் பாய்கின்றான். புராதனத்தின 

குறியீடான உடம்பறை, கண்ணாடித் திண்ணையில் கிடந்து கொண்டிருப்பது 

வீட்டிற்குள் எரிச்சலை ஊட்டிக் கெண்டிருந்தது.

வார்னீஷ் தேய்க்காமல் வெளிறிப் போன பலகைச் சுவரில் உப்பா அன்று

அறைந்த இரும்பு ஆணி துரு பிடித்திருந்தது. வெள்ளைத் தாடியுள்ள உப்பா, 

அன்று தன் கையால் தொங்கவிட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி 

தொங்கிக் கொண்டிருந்தது. கட்டிய தலைப்பாகையின் மேல் நோக்கி நிற்கும் 

குஞ்சரத்தைஉப்பா சரி செய்வது அந்தக் கண்ணாடியைப் பார்த்து. அது 

பெல்ஜியம் கண்ணாடிஎன்று வாப்பா அடிக்கடி புகலிப்புப் பேசுவதுண்டு. 

உப்பா பர்மாவை விட்டுவரும்போது கொண்டு வந்த கண்ணாடி.

முற்றத்தில் நிற்கும் மாமரத்தின் மூட்டில் உட்கார்ந்து, வெள்ளிக்கிழமைகளில்

ஓசா (நாவிதன்) வெட்டி ஒதுக்கிக் கொடுக்கும் தாடியின் வடிவை வாப்பா

இரசித்ததும் இதே கண்ணாடியைப் பார்த்து.


காதில் பாம்படம் தொங்கும் வாப்பும்மா (பாட்டி) ஒரு வெற்றிலைக்

கோளாம்பி. எப்பவும் வாப்பும்மாவின் வாய் நிரம்ப வெற்றிலை கிடந்து 

அரைபடும்.அவ்வப்போது எழும்பிப் போய் வெற்றிலைச் சிவப்பு உதட்டின் 

அழகைப்பார்ப்பதும் அதே கண்ணாடியில்தான்.

உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்னுடைய தலை

மொட்டையாக இருந்தது. சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வார்கள் –

“மொட்ட துலுக்கா” என்று. அப்படிக் கேலி செய்வதோடு நின்றுவிட்டால்

பரவாயில்லை, கைதட்டிச் சிரிக்கவும் செய்வார்கள். இதை என்னால் தாங்கிக்

கொள்ள முடியவில்லை. ஒரு தடவை மலையாளம் முன்ஷி (மலையாளம் 

ஆசிரியர்) ‘வாழக்குலை’ என்ற கவிதையில் பத்து வரிகளை பாராமல் படித்து 

வரச்சொன்னார். நான் படிக்கவில்லை. ஊரிலுள்ள முத்தாரம்மன் கோவிலில் 

அன்றுகொடை. பிருஷ்டம் பருத்த ஒருத்தியும், ஒரு நோஞ்சானும் தலையில் 

குடம் வைத்துபெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் செண்டை மேளத்துடன் தெருத் 

தெருவாக ஆடிதூள் கிளப்பிய இரவு அது. ஆண்டிற்கு ஒரு முறை ஊருக்குள் 

நடக்கும் கொடை.

மேளதாளம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை.

மறுநாள் பள்ளிக்கூடம் சென்றேன். மலையாளம் முன்ஷி, கவிதை

வரிகளைப் பாராமல் பாடச் சொன்னார்.

“படிக்கலை சார்.”

“வாடா மெபாட்டையா” – முன்ஷி கோபத்தோடு அவர் பக்கம் அழைததார்.

சென்றேன்.

அன்று காலையில்தான் கிழவன் சேமது ஓசாவின் மழுங்கிய கத்தி என்

தலையை மழித்து விட்டிருந்தது. எண்ணை தேய்த்து தருவது போல் முன்ஷி

முதலில் என் மொட்டைத் தலையைத் தடவினார். பிறகு சாக்குத் துண்டால்

தலையில் எழுதிவிட்டார். “நாளை கவிதை படித்துக் கொண்டு வர வேண்டும்.”

வகுப்பிலுள்ள பெண் பிசுறுகள் கிலுகிலுவென்று கிலுக்காம்பெட்டியைக்

கிலுக்கினர். அதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த

நிமிடிமே முடிவு செய்தேன் – “கிராப்பு வைக்க வேண்டும்.”

முடி ஓரளவு வளர்ந்தது. மம்மேலியைத் தேடினேன். புளிய மரத்தின் நிழலில்

வைத்து மம்மேலியின் கையில் அரை ரூபாய்க்கு ஒரு துட்டைத் திணித்தேன்.

அன்று மம்மேலி வெட்டித் தந்த கிராப்புத் தலையை முதன்முதலாகப் 

பார்த்ததும் அதே வட்டக் கண்ணாடியில். வாஸ்லின் தேய்த்து வட்டக் 

கண்ணாடியின் முன்நின்று முடியை வகுந்து சீவி ஒதுக்கிய காலம் 

மலையேறிவிட்டது. இப்பொழுதுமுடி சீவுவதற்கு எனக்குக் கண்ணாடி 

தேவைப்படுவதில்லை. இருந்தாலும்கண்ணாடித் திண்ணையில் பண்டு 

உப்பா தொங்கவிட்டிருந்த வட்டக் கண்ணாடிஅதே ஆணியில் தொங்கிக் 

கொண்டிருப்பது நினைவுகளைப் பெருமையுடன் அசைபோட ஒரு நிர்ப்பந்தத் 

தேவையாகப் பட்டது.


சமீபத்தில் ‘மகாநதி ஸ்டைலில்’ கிராப்பு வைத்துக் கொண்டு வந்த மகனுக்கு,

அவனுடைய முழு உருவத்தை வட்டக் கண்ணாடி காட்டாத கோபம். ஒவ்வொரு

பொருளையும் தூக்கி வீசியும், கிரிக்கெட் மட்டையை ஓங்கி காற்றில் அடித்தும,

அவன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

“இந்த எளவு கண்ணாடியை ஒடச்சாத்தான் வாப்பா ஒரு நிலைக்கண்ணாடி

வாங்கும்.” அவன் உம்மாவிடம் கோய் கத்தினான். என் காதில் விழும்படி. 

ஆனால் கோபம் உம்மாவோடல்ல; என்னோடுதான் என்று எனக்கு 

தெரியா மலில்லை.

நான் என் வாப்பாவிடம் கோபமாகப் பேசியதில்லை. வாப்பா என்னைத்

தூக்கிப் போட்டு உதைக்கும் போதெல்லாம், நான் கோபமாக அவரைப்

பார்த்ததில்லை. பாடப் புத்தகங்கள் வாங்கி கேட்டு அழுதாலும வாங்கித் தராத

வாப்பாவைக் கோபத்தோடு நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. பேண்ட்

அணிந்துகொண்டு சட்டை ‘இன்’ செய்து பெல்ட் மாட்டும்போது பெல்ட் பக்கில்

நேர்க்கோட்டில் வந்திருக்கிறதா என்று பார்க்கவும், அனுடைய முழு 

உருவத்தைப் பார்க்கவும், அவனுக்கு ஒரு நிலைக்கண்ணாடி தேவை. 

அதற்காக என்னைப்படுத்தாத பாடில்லை. அவனுடைய காலத்திலிருந்து 

பின்தங்கிய காலத்தில்வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு

 நிலைக்கண்ணாடி அவசியமெனத்தெரியவில்லை.உப்பா சட்டை 

அணிவதில்லை. வாப்பாவிற்கு கையுள்ள ஒரு வாயில் பாடி

உண்டு. எனக்கானால் ஜிப்பாச் சட்டை. எங்களுக்கு எதற்கு 

நிலைக்கண்ணாடி….?உப்பாவைப் பார்த்திருக்கிறேன். வாப்பாவைப் 

பார்த்திருக்கிறேன். என்னை அந்தக்

கண்ணாடியில் பார்த்திருக்கிறேன். மகனைப் பார்க்கின்றேன். ஆயுளுக்கு

நீளமிருக்குமேயானால் மகனுடைய குழந்தைகளையிம் பார்ப்பேன். முன்னும்

பின்னும் இரண்டு தலைமுறைகளின் முகங்களைக் காட்டும் ஒரு கண்ணாடி

எனக்குள் இருப்பதை மகன் அறியவில்லை. என்னை மட்டுமே அவன்

பார்க்கின்றான். மகனுக்கு என் முகச் சாயல். என் வாப்பாவின் இரத்தத்திற்குள்

நுழைந்தேறி உப்பா என் முகத்தில குடி புகுந்திருப்பதை மகன் அறிய

வாய்ப்பில்லை.

“மோனே“ கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு வெளியே கிளம்ப

ஆயத்தமான மகனைக் கூப்பிட்டேன்.

“என்ன ?” குரலில் இவ்வளவு கடுமை இருக்குமென்று கருதவில்லை.

என் வாப்பாவின் முன் நான் நிற்பது போலல்ல, அவன் என்முன்

நின்றுகொண்டிருந்தது. வாப்பாவின் முன் பவ்யமாக நின்றுகொண்டிருந்த

என்.னடைய இளமைப் பருவத்தைப் பற்றிச் சற்று சுருள் நிமிர்த்த நான்

எடுத்துக்கொண்ட நிமிடங்கள் அவனுக்கு இழப்பு ஏற்பட்டுப் போன 

நிலைமதிப்பு வாய்ந்த நிமிடங்களாக இருந்தன , அப்போது.

“எனக்கு கிரிக்கெட் மேச்சு இருக்கு. போவணும். சொல்லுங்கோ,”


வாப்பாவோடு இப்படிக் கடிந்து பேசும்படியான சூழ்நிலை உருவாக்காத,

பின்னடைந்து போன அந்தக் காலகட்டத்தை ஓர் இழப்பு உணர்வோடு 

நினைத்துப்  பார்த்தேன். இன்று மகன் என்னைக் கவ்விக் குதறும்படி 

பேசுகிறான். குற்றம் அவனுடையதா? என்ற கேள்விக்கு பதில் தேடும் முன்னரே 

அவன் வெடித்துச் சிதறினான்.

“கூப்பட்டது எதுக்குணு சொல்லீளா இல்லியா…..?”

குரலில் ஓர் எச்சரிக்கையின் தொனி முழக்கமிருந்தது.

“டேய், ஒனக்கெ உப்பாயெ பாத்திருக்கியாலெ?”

“தொடங்கியாச்சா புராணம்… உப்பா, வாப்பா, உப்பா கொண்டு வந்த

கண்ணாடி…. எப்பவும் இதே பேச்சுதான். இந்தக் கண்ணாடியை ஒடச்சு

எறிஞ்சாதான் ஒங்கே பழம் புராணப் பேச்சு நிக்கும். தாருல் ஸ்மானிலே 

போய்ப் பாருங்கோ. எத்திரெ எத்திரெ நிலக்கண்ணாடி கெடக்குது. அது ஒங்கே 

தம்பி ஊடுதானே…..?”“டேய் அது புதிய வீடு, அது பழைய வீடு.”

“அதனாலத்தான் அந்தப் பழடைஞ்ச வீட்டை ஒடச்சுட்டு ஒரு புதிய டெரஸ்

ஊடு கட்டச் சொல்லிட்டே இருக்கேன். இந்தத் தாந்த தட்டுலெ ஒரு சீலிங் ஃபேன்

போட முடியுமோ? சொன்னா, மாமரத்திலெ இருந்து காகபா காற்று 

வருதில்லியா  எண்ணு சொல்லிவியோ.”

“இந்தப் பழைய ஊட்டுக்கெ சொகம் உனக்குத் தெரியுமாலே….”

“ஆமா. எரிய ஏஸி உடு..”

கிரிக்கெட் மட்டையை வீசி அடித்துக் கொண்டு இறங்கிப் போனான்.

நான் வெளிறிய பலகை சுவரில் தொங்கும் வட்டக் கண்ணாடியை உற்று

நோக்கிக் கொண்டிருந்தேன், காலங்களின் தலைமுறைகளின் முகங்களை

எதிரொலிக்கச் செய்து கொண்டிருக்கும் வட்டக கண்ணாடியில். குள்ளமான,

கறுப்பான உப்பாவின் தலைப்பாகையை அதில் கண்டேன். அவருடைய வட்ட

முகத்திலுள்ள ஒளி மங்கிய கண்கள் என்னை நோக்கின – “பேரப்புள்ளே” என்று

அழைப்பது போல். வட்டத் தாடியும், நெற்றியில் தொழுகைத் தழும்புமுள்ள

வாப்பாவும் உப்பாவின் தோறுக்குப் பின்னால் நின்று கூப்பிட்டார் – “மோனே!”

அவர்கள் இருவரும் கண்ணாடிக்குள் ஏதோ வன இருளின் பகுங்கிக்

கொண்டிருக்கின்றனர்.

சூடு வெயிலை உள்ளிறங்கவிடாமல் வீட்டின் பழைய கூரை ஓட்டிற்கு மேல்

கொப்புகள் நீட்டி முற்றத்தில் நின்று கொண்டிருக்கும் மாமரம். அதன் குளிர்

சுகத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு பின்னிட்டுப் போன 

பாதைக்கு நேராக முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தேன். அம்மணத்தோடு 

அதன் முட்டில் சுட்டிக்கல்லு விளையாடியது. மணல் கூட்டி அதில் காரலப் 

புதைத்து கோழிக்கூடு கட்டியது. ஏராளம் மாம்பழம் காய்த்து 

குலைகுலையாகத் தொங்குவதற்காக  அவ்வப்போது ஓடிப்போய் அதன் 

மூட்டில் மூத்திரம் பெய்து தண்ணீர் விட்டது.


தேங்காய்ச் சிரட்டையில் மணல் அள்ளி தலை வழியாக விட்டுக் குளித்தது.

இப்படிப்பட்ட குழந்தை அறிவை நினைத்த போது, ஒரு சிரிப்பொலி என்

நெஞ்சிற்குள் ஒலிப்பது போல் இருந்தது. மகன் தலையெடுத்தபின் வீட்டிற்குள்

நாளடைவில் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளில் 

சிரிப்பின் பாணதீர்த்தம் வரண்டுவிட்டது. எப்போதாவது சில நினைவுகள் 

நரம்புகளைமீட்டும்போது எழும் சிரிப்பு ஒலி, எனக்குள்ளேயே எழுந்து அப்படியே  அடங்கிவிடும்.

மாமரத்தையும் வெட்டி எறிய வேண்டுமென்ற குரல், வீட்டிற்குள்ளேயே

மோதி திரண்டு வருகிறது. மாமரம் முற்றத்தில் பொழிக்கும் சருகு

இலைகள்,அசிங்கமாகத் தெரிந்தது அவர்களுக்கு. அங்கு நிற்கும் காய்ப்புக்கு 

வரத் துவங்கிய நாலைய்ந்து தைப் பருவத் (தைப் பருவம் - இளம்பருவம்)

தென்னைகளையும் பிடுங்கி வீசிவிட்டு, முற்றத்தை சிமெண்டு போட்டு 

மினுசப் படுத்த வேண்டுமென்று நிர்ப்பந்தம் செலுத்தும் வறட்சி உள்ளங்கள் 

எனக்குச் சுற்றுமுற்றும்.

வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள ஆழ்கிணற்றிலிருந்து தண்ணீர்

இறைத்து மாமரத்தை நட்டு வளர்த்திய மூலாதார உழைப்பு, யாருடையது 

என்று தெரியவில்லை. பிடுங்கி வீச வேண்டுமென்று மகன் அடம்பிடிக்கும் 

தைப் பருவத் தென்னைகளை நட்டதும், நீர் ஊற்றிப் பேணியதும் நான். 

வேனிற்காலங்களில் கிணற்றில் நீர்மட்டம் தாழும்போது அரை மைல் 

தொலைவிலுள்ள சுடுகாட்டு ஆற்றிலிருந்து ‘காக்கோட்டையில்’ தண்ணீர் 

எடுத்துத் தோளில் சுமந்து வந்து, வாடவிடாமல் வளர்த்தேன். அடுத்த 

தலைமுறை பயன்பெற உழைத்துக் கொட்டிய

வியர்வை, துச்சப்படுத்தப்படுகிறது. முகம் அலம்பக் கூட ஒரு குவளை 

தண்ணீர் கிணற்றிலிருந்து கோராத மகன் கூறுகிறான்:

“புடுங்கி எறியிங்கோ.”

சில செயல்பாடுகளின் பின்னணியில் இயங்கும் இரகசியக் கரங்களைத்

தேடும் சிந்தனையில் என் மூளை கலங்கிச் சூடானது. எப்படியோ விரிசல்

விழந்துவிட்டது. அகலம் கூடிவரும் விரிசல். அதன் இரு விளிம்பிலும் சுழன்று

கொண்டிருக்கும் காலம், என்னை எழுந்து ஓடாவிடாமல் தள்ளி விட்டிருக்கின்ற

இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்ற உணர்வு எனக்கு.

உப்பாவின் வட்டக் கண்ணாடியை உடைக்க வேண்டும். தேக்கு

மரங்களிலும், ஈட்டி மரங்களிலும உளி கொண்டு கவிதை எழுதிய நாலுகட்டின்

எஞ்சிய பகுதியை இடிக்க வேண்டும். தலைமுறைகளின் பார்வை சாட்சியான

மாமரத்தை முறிக்க வேண்டும். என் உணர்ச்சியை மரக்க வைத்து என்னை ஒரு

மௌன பிராணியாக்கிவிட நடக்கும் திட்டங்களை எண்ணியபடி மர உச்சியை

நோக்கி இருந்தேன்.

மகன் வந்தது அவனுடைய கையிலிருந்த கிரிக்கெட் மட்டையால் மாமரத்தில்

ஓங்கி அறைந்து எழுப்பிய சப்தம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.


நுழைந்ததும் கேட்டான் –

“எனக்கு ஒரு பாட்டா ஷூஸ் வேணும். 899.95”

என் ஈரல் குலை அற்று விழுந்தது.

“900 ரூபாய்க்கு ஷூஸா..?”

“ஒங்களுக்கு என்ன தெரியும்? 1999 -95 –க்கும் ஷூஸ் உண்டு. அதையா

வாண்டி கேக்குதேன்.”

என் மார்போடு ஒட்டி வெள்ளைக் குட்டி பூனை ஒன்று உறங்கிக்

கொண்டிருந்தது. மார்பிலுள்ள கறுப்பு உரோமங்களுக்கு மேல் பகுதியிலுள்ள

அந்தக் குட்டிப் பூனை உரோமமங்களுக்கிடையில், விரல் முனைகள் ஓடின. 

மூச்சு நின்றுவிடுமோ என்று தோன்றிது, தொகையைக் கேட்டபோது.

ஏழேட்டு மாதங்களுக்கு முன் நெறல்லையப்பர் நேடுங்சாலை ஓரத்துச்

செருப்புக் கடைகளில் ஏறி இறங்கிய வெப்பப் பகலின் நினையில் 

அமிழ்ந்தேன். சித்திரை வெப்பத்தின் திமிர் அடங்கிய அன்று மாலையில் 

நடைபாதைக் கடையொன்றில் பேரம் வேசியதால் தொண்டைத் தண்ணி 

வற்றிப் போனது.

அந்தக் கடைக்காரனிடமிருந்து ரூபாய் 13.50-க்கு வாங்கி ரப்பர் செருப்பை, 

கால் விரல் இடுக்கு இறுக்கிக் கொண்டிருந்தது.

“கிரிக்கெட் வௌயாட வந்த எனக்கெ பிரண்ட போட்டிருக்கான்.”

என் செவிகளிர் அது குரலாக ஒலிக்கவில்லை. நெஞ்சைத் துளைத்தேறும்

முள் முனையாக இருந்தது.

“எப்போ வாண்டித் தருவியோ” பணிவான கேள்வியாக இல்லை; ஓர்

அதட்டலாகயிருந்தது.

என் நாவின் ஆணி நரம்பு கழன்று தொங்கிவிட்டது. ரூபாய் ஒன்று

இரண்டல்ல; 900! குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு இரு தூண்களில்

கட்டப்பட்ட கம்பிமீது அடி சறுக்காமல் நடக்கும் சர்க்கஸ்காரியைவிட, 

நாட்களை நுட்பமாக நகர்த்தும் நான் ஒரு சாகசக்காரன்.

“ஒரு நிலக்கண்ணாடியும் வாங்கணும்.”

தொங்கிக் கொண்டிருந்தது என் நா.

இனி இளைய மகன் என்னவெல்லாம் தேவைகளை அலகில் ஒதுக்கிக்

கொண்டிருக்கிறானோ?

“ஒடனெ வாங்கித் தாருங்கொ, எப்பவும் தாருல் ஸ்மானில் போய் கண்ணாடி

பாக்க முடியுமா ?”

வீட்டிற்குள் வெடுக்கென்று பாய்ந்த மகன், உம்மாவிடம் நிலக்கண்ணாடி

வாங்கும் விஷயம் சொல்வதை என் காதுகள் ஈர்த்தன.

உப்பா பர்மாவிலிருந்து ஏராளம் பண்டங்கள் கொண்டுவந்து குவித்தார்.

அவற்றில் எனக்கு விருப்பப்பட்டது, அந்த வட்டக் கண்ணாடி. ஒரு சிறு

கூட்டிற்குள்ளிலிருந்து உப்பா கண்ணாடியை வெளியே எடுத்து எனக்கு நேராக

நீட்டினார்.


“பாரு மக்கா … ”

கண்ணாடியைப் பார்த்தேன். அதனுள் ஒரு முகம் தெரிந்தது. அது

என்னுடைய முகம்தான் என்று அறிந்ததும் மனசிற்குள் சிரிப்பு படரிந்தது. என்

முகத்திலுள்ள தழும்புகளையும், மச்சங்களையும் அன்றுதான் முதன்முதலாகப்

பார்த்தேன். பல்லை இளித்துக் காட்டினேன். கண்ணாடிக்குள் நுழைந்திருந்த

நானும் பதிலுக்கு பல்லை இளித்துக் காட்டுவதைக் கண்டேன்/ பல கோட்டிகள்

காட்டிப் பார்த்து இரசித்தேன்.

சிந்தனைகள் சிதறித் திரிந்தன. வாப்பாவின் காலத்தைப் பற்றி, என்

காலத்தைப் பற்றி, மகன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தை பற்றி,

“பிள்ளைகளுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் குடுங்கொ. இந்தப்

பாண்ட ஊடெ ஒடச்சு தள்ளுங்கோ” சொன்னது என்னுடைய அவள். என்

பிள்ளைகளின் உம்மா. என் மனைவி என்று கூறுவதைவிட இதுதான்

பொருத்தமான வார்த்தை. அவளுடைய துணையும் கிடைக்காது 

என்றானபோது நான் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் உணர்வு என்னை

மழைமேகம் போல் சூழ்ந்தது.

“என்ன வாங்கி குடுக்கல்லெ? கண்ணாடிக்கு கண்ணாடி கெடக்குது. ஷூஸ்

வாங்கிக் குடுத்தது கெடக்குது. வேற என்னதான் இல்லே?”

”இது ஒரு கண்ணாடியா? தூக்கி தூரெ எறிஞ்சு போடுவேன். கிரிக்கெட்

வௌயாடும்போது ஷூஸிலெ உள்ள கயிர் அற்றுப்போச்சு. அன்னா 

கெடக்குது.” மகன் வீட்டிற்குள்ளிலிருந்து குதித்து வந்து என் முன் நின்றான்.

இது ஒரு கண்ணாடியா? அவன் என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டான்.

அவனுடைய உம்மாவை கட்டப் போகும்போது என்னை மாப்பிள்ளை ஜோடித்து

என் முகத்தை காட்டித் தந்த கண்ணாடி அது. அவனுடைய உம்மா கண்ணில்

சுறுமா போட்டது அதே கண்ணாடியைப் பார்த்து. அன்று அவன் ஒரு ஆண்

அணுவாக மறைந்திருந்த சூட்சும இடத்தை மறந்து விட்டிருந்தான்.

இப்போது என் தலை நரைத்துவிட்டது. கண் தடங்களில் குழிகள்

தெரிந்துவிட்டன. கன்னத்திற்கு பளபளப்பு ஊட்டிய கதுப்பு சுருங்கி 

வற்றிப்போய், கன்னத்தோலில் சுருக்கங்கள் விழுந்துவிட்டன. எப்பா 

காலத்திலுள்ள வட்டக் கண்ணாடி நரைக்கவில்லை. அதன் முகத்தில் 

சுருக்கங்கள் இல்லை. முகங்களை

எதிரொலிக்கச் செய்ம் அதன் தன்மைக்கு எந்த ஊனமும் தட்டவில்லை.  

இருந்தும்,அதை உடைத்துவிட்டு புதிய நிலைக்கண்ணாடி வாங்க 

வேண்டுமென்று அடம்பிடிப்பவன் கன்னத்தோலில் சுருக்கங்கள் விழுந்த 

என்னை, என்ன செய்யப்

போகிறான்?

சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கும்போது என்

காலிலுள்ள ரப்பர் செருப்பின் அறுந்துபோன வாரை செருப்பின் 

அடிப்பகுதியோடு இணைக்க அறைந்த குண்டூசியின் குடை என் பாதத்தில் 

தட்டியது. எங்கேயோ

வீசப்பட்டுக் கிடக்கும் ஷூஸ், கடந்த மாதம் மூன்றாம் தேதி அறுநூற்றி 

சில்வானம் ரூபாவுக்கு வாங்கியது.


“அவனுக்கு ஒரு புதிய ஷூஸ் வாங்கிக் குடுங்கோ” அவளும் என்

தடத்தைவிட்டு விலகிச் செல்கின்ற எரிச்சலில் என் பார்வை அவளைத் தகனம்

செய்தது.

“அற்றுப்போன நாடாவெ வாங்கி கட்டினா என்னவாம்? இவன் என்ன

பெரிய மந்திரி மொவனா?”

“ஒங்கெ காலம் போலயா அவனுவளுக்கெ காலம்?”

தலையைக் குனிந்தேன். பகலிரவு உழைத்து தளர்ந்துவரும் உடலில்

முன்போல் வியர்வை கொட்டுவதில்லை. காலத்திற்கு ஒவ்வாத ஓர் உயிர் 

பிராணி நான் என்ற உணர்வு எனக்கு. காலத்தின் பின்னால் ஓடி 

எட்ட இயலாத எலும்பு துருத்திய ஒரு கிழட்டு மாடுபோல் களைத்து 

உட்கார்ந்தேன். இந்த பின்னடைவு

வீட்டிற்குள் சுவர்கள் வளர்த்தன. அப்போது அங்கு கேட்ட குரலில் தலையை

உயர்த்தினேன்.

இளைய மகன்!

“வாப்பா எனக்கு நிலைக்கண்ணாடி வச்ச ஒரு ஸ்டீல் பீரோ வாங்கித் தர1ம்ம.

அண்ணன் வச்சுப் பூட்டுதூல நான் வய்க்க மாட்டேன். அவன் முகம் பாக்குத

கண்ணாடியிலெ, நான் முகம் பாக்கவே மாட்டேன். எங்களுக்குள்ளே ஒத்துப்

போகாது.”

நிலைக்கண்ணாடியுள்ள ஸ்டீல் பீரோவா? நேற்று சலவை செய்துவந்த

என்னுடைய ஜிப்பா சட்டையும், கைத்தறி வேட்டியும் வைத்திருக்கும் 

துருப்பிடத்த டிரங்குப் பெட்டியை அவள் காலால் கட்டிலுக்கடியில் தள்ளும் 

ஓசை கேட்டது.

இளைய மகனைப் பார்த்தேன், உணர்ச்சியற்ற நிலையில்,

“ஆளுக்கு ஒரு நிலைக்கண்ணாடி வாங்கிக் குடுங்கொ. கஷ்டத்தோடு

கஷ்டம். எனக்கு ஒரு டிரஸ்ஸிங் டேபிள் வாங்கித் தாருங்கொ. தாருல் 

ஸ்மானிலெ கொளுந்தன், பெண்டாட்டிக்கு ரண்டு டிரஸ்ஸிங் டேபிள் வாங்கிக் 

குடுத்திருக்கு.நானும் அவளெப்போல ஒருத்திதானே. ”

முகத்தை அவளுக்கு நேராக எந்திர இயக்கமாக திருப்பினேன்.

சுட்டெரிக்கும்படி பார்க்கவில்லை. தனிமைப்பட்ட ஒருவனுடைய உதவுவாரற்ற

பார்வையாகயிருந்தது. கடந்த மாதம் மின்சாரக் கட்டணம் செலுத்த கடன் 

பெற்ற பணம் திருப்பிக் கொடுக்க முடியாத செலவு பாரம் தோள்பட்டைய 

அழுத்திக் கொண்டிருந்தது.

ஆறு கண்களிலிருந்து பாய்ந்த உக்ரமான பார்வைகள் என்னைச் சுற்றி

வளைத்து ஒரு வலைக்கூடு பின்னி என்னைச் சிக்க வைத்தன. ஒவ்வொரு

பார்வையும் என் விலா எலும்புகளுக்கிடையில் முனை இறக்கி நின்றது. சாய்வு

நாற்காலியிலிருந்துமு எழுழம்பவிடாமல் ஒரு கட்டு என்னை நாற்காலியுடன்

சேர்த்து இறுக்கிக் கொண்டிருந்தமு. பர்ணபாஸின் வீட்டுச் சுவரில்

தொங்கவிட்டிருந்த சித்திரத்தில் கட்டிலிருந்து விடுபட்ட மனம் போய் நின்றது.

முள்கிரீடம் அணிவித்து சிலுவையில் அறையப்பட்ட “மனிதனின்” உடலில்


அம்புகள் குத்தி ஏறி நிற்குமிடங்களிலிருந்து வடிந்துகொண்டிருந்த இரத்தம்,

என்காயங்களிலிருந்து வடிவதாகத் தோன்றியது.

ஆறு கண்களும் பின்வாங்கிய தருணத்தில் சிலுவையிலிருந்து கீழே

இறக்கப்பட்ட மன ஆறுதல் எனக்கு. முற்றத்தில் இறங்கினேன். மாமரத்தின்

உலையும் கிளைகளிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த பழுத்த இலைகள் 

சிதறிக்கிடக்கும் முற்றத்து மணலை பெருவிரல் முனையால் கீச்சிக் 

கொண்டிருந்தேன்.

குருத்தோலைகள் குலுங்கும் தைப்பருவத் தென்னைகளின் முகமலர்ச்சி 

இப்போது என் இதயத்தில் எங்கேயோ கிள்ளி வலி ஏற்படுத்திக் 

கொண்டிருக்கிறம் . நினைவுகளை உசுப்புக் கொண்டிருக்கும் மாமரம், 

உப்பாவின் காலத்திலிருந்தே முற்றத்தில் – தலைமுறை சாட்சியாக 

நின்றுகொண்டிருக்கிறது. இப்போது

வெறுப்புப் பார்வைகள், அதை வலம் வந்து கொலைக் கூப்பாடு 

எழுப்புகின்றன.அந்த முற்றத்தில் என்னால் நின்றுகொண்டிருக்க 

முடியவில்லை. குமிழ் விட்டுயரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்துவிட 

வெளியே சற்று நடந்துவிட்டடு மீண்டும் முற்றத்தில் வந்து நின்றேன், 

மாமரத்தின் உச்சியுல் திடீரென துளிர்த்துத்தெரிந்தது தளிர் இலைகள் அல்ல; 

போக்கு வெளில் என்றுபுரிய சற்று நேரமெடுத்து. நெஞ்சிற்கு நேராக பாயும் 

ஏவுகணைகளைத் தாங்கிக்

கொள்ள வீட்டிற்குள் செல்லும் முன் கவசம் அணிவதற்காக சற்று நேரம்

முற்றத்திலேயே நின்று கொண்டிருந்தேன்.

‘கண்ணாடித் திண்ணையில் ஏறினேன். வெடிப்புக்கள் விழுந்த பழங்காலத்து

மெண்டுத் தரையில் என் எலும்புகள் நொறுங்கிச் சிதறிக் கிடப்பதைக் கண்டு

திடுக்கிட்டுப் போனேன். உப்பாவின் முகமும் வாப்பாவின் முகமும் சிதைந்து

உருமாறிக் கிடக்கின்றன. கண்ணிகள் அறுபட்டுப் போன அந்தச் சபிக்கப்பட்ட

நிமிடம், என் நெட்டி நரம்பை ஒடித்துவிட்டது.

வெளிறிய பலகைச் சுவரைப் பார்த்தேன். அதில் துருப்பிடித்த ஆணியைக்

காணவில்லை. அதே ஓட்டையில் அறையப்பட்ட ஒரு புதிய ஆணியில் 

தொங்கிக் கொண்டிருந்த ஒருவன், கிரிக்கெட் மட்டையை என் நெஞ்சுக்கு 

நேராக ஓங்கிக் கொண்டு நின்றான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்